வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6369
8
ஒன்றிரண்டு வாய்தாக்களில் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முதல்கட்ட விசாரணை முடிவடைந்துவிடும். பிறகு வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். அத்துடன் அவளை ஆலப்புழை சப் ஜெயிலுக்கு மாற்றுவார்கள். என்ன காரணத்தாலோ என்னவோ குட்டியின் வழக்கில் இவ்வளவு நாட்கள் ஆகியும் சாட்சி விசாரணையே ஆரம்பமாகவில்லை. ஒவ்வொரு வாய்தாக்களும் நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தன. குட்டி எல்லா வாய்தாவின்போதும் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தாள். எதிர்தரப்பு போலீஸைக் கைக்குள் போட்டுக் கொண்டு எந்தவொரு காரணமும் இல்லாமல் வழக்கை இழுத்தடிப்பதாக அவள் குற்றம் சாட்டினாள். ஆனால், ஒரு அசைவும் இல்லை. சில நாட்கள் தாண்டி விட்டால் கவுரி போய்விடுவாள். பிறகு குட்டி தனியாகி விடுவாள்.
மழைக்காலம். நிற்காமல் நாட்கணக்கில் மழை பெய்து கொண்டே இருந்தது. பலமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இரும்புக் கம்பிகளால் ஆன கதவின் வழியாக வெளியே தெரிந்து கொண்டிருந்த உலகம் குளிரில் விறைத்துப் போய்விட்டிருந்தது. வெறும் தரையில் தான் குட்டியும் கவுரியும் படுத்திருந்தார்கள். கோடை காலத்தில் லாக் அப்பிற்குள் புழுங்குவதைப் போல மழைக்காலத்தில் நடுங்க வைக்கும் குளிர் இருந்தது. ஒரு கிழிந்த பாய்கூட இல்லை. ஆளுக்கொரு முண்டு மட்டுமே இருந்தது. அந்தக் குளிரில் எப்படி இருக்க முடியும்?
இரத்தம் மரத்துப் போனது. தோல் சுருங்கிப் போனது. தாடையும் பற்களும் நடுங்கின. வெப்பம் எங்கே கிடைக்கும்? உடலுக்கு ஒரு குணம் உண்டு. சதையும் சதையும் சேர்ந்து, உடலும் உடலும் ஒன்று சேர்ந்தால் வெப்பம் உண்டாகும். அடுத்தடுத்து படுத்திருக்கும் கவுரியும் குட்டியும் ஒன்றாகச் சேர்ந்தார்கள். குட்டி கவுரியையும் கவுரி குட்டியை நெருங்கி நகர்ந்து சேர்ந்தார்கள்.
வெளியே மரத்துப் போகச் செய்யும் காற்று சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழை என்னவோ புலம்பிக் கொண்டிருந்தது. இரண்டு முண்டுகளையும் ஒன்றின்மீது ஒன்றைப் போட்டு இரண்டு பேரும் போர்த்திக் கொண்டார்கள். அப்படி ஒவ்வொருவரும் இரண்டு முண்டுகளைப் போர்த்தியிருந்தார்கள். சதை சதையுடன் சேர்ந்தது. அது போதாது என்று நெருங்கிச் சேர்ந்தது. அதற்குப் பிறகும் போதாது என்று இன்னும் நெருக்கமாகச் சேர்ந்தது. அப்படியும் போதும் என்று தோன்றவில்லை. குட்டியின் கை கவுரியைச் சுற்றி வளைத்தது. கவுரியின் கை குட்டியை வளைத்தது. அனைத்து பலங்களையும் பயன்படுத்தி குட்டி கவுரியையும் கவுரி குட்டியையும் அவரவர்களின் உடலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்கள். அப்படி அணைத்துக் கொண்டே நீண்ட நேரம் படுத்திருக்க முடியுமா? கவுரியின் கை குட்டியின் முதுகைத் தடவியவாறு கீழ்நோக்கிப் பயணித்தது. ஒரு சிலிர்ப்புடன் குட்டி கவுரியின் பின் பகுதியை கையால் வளைத்தாள். மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். பற்களைக் கடித்துக் கொண்டே குட்டி என்னவோ சொன்னாள். கவுரி அவள் கூறியதற்கு சம்மதித்தாள்.
வெப்பம் இருந்தது. ரத்தத்திற்கு வெப்பம் இருந்தது. அன்புடன் செல்லப் பெயர்களைக் கூறி யாரோ யாரையோ அழைக்கிறார்கள். அழைப்பது கேட்கிறது. யாரோ யாரையோ கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். அழுத்தமான தொடர்ந்துள்ள முத்தங்களின் சத்தம் காதுகளில் விழுந்தது. இறுக்கமான அணைப்பின் சத்தமும். யாரோ எல்லையற்ற தன்மைக்குள் இரண்டறக் கலக்கிறார்கள்.
இரவு முழுவதும் மழை எதையோ மறைக்க முயல்வதைப் போல ஆரவாரித்துப் பெய்து கொண்டேயிருந்தது. பொழுது புலர்ந்த பிறகு தான் குட்டியும் கவுரியும் கண் விழித்தார்கள். இருவரும் பதை பதைப்புடன் தங்களின் முண்டுகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக எழுந்தார்கள். கண்காணிப்பாளனோ வேறு யாருமோ தாங்கள் படுத்திருந்ததைப் பார்த்திருப்பார்களோ என்பது அவர்களின் பயமாக இருந்தது. அந்த அளவிற்கு சுகமாக- ஆழமாக அந்த லாக் அப்பிற்குள் வந்த பிறகு இரண்டு பேரும் உறங்கியதேயில்லை.
குட்டிக்கும் கவுரிக்கும் இடையே தனிப்பட்ட ஒரு நெருக்கம் உண்டானது. காலையில் குட்டிக்கு கொடுத்த இரண்டு இட்லிகளில், ஒன்றை மட்டுமே அவள் சாப்பிட்டாள். ஒன்றை கவுரிக்கு கொடுத்துவிட்டாள். அவளுக்கு தன்னுடைய பங்கே போதும் என்று இருந்தது. எனினும், குட்டி சம்மதிக்கவில்லை. குட்டி கவுரியின் தலை முடியை வாரிக் கட்டிவிட்டாள்.
குட்டி சொன்னாள்:
"இந்த தலைமுடி அவ்வளவும் உதிர்ந்திருச்சே!''
"குளிக்காமலும் எண்ணெய் தேய்க்காமலும் இருந்ததுதான் காரணம். எனக்கு எவ்வளவோ தலைமுடிகள் இருந்தன!''
மதியம் உணவு சாப்பிட்டு முடித்த பிறகு, கவுரி குட்டியின் மடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்துத் தூங்கினாள். குட்டி அசையவே இல்லை. ஒரு அன்னை குழந்தையை மடியில் வைத்திருப்பதைப் போல அவள் உட்கார்ந்திருந்தாள். பறந்து வந்து முகத்தில் அமர முயற்சித்த ஈயை அவள் விரட்டிக் கொண்டிருந்தாள். ஒரு திருப்தி!
கவுரிக்கு அரவணைப்பு தேவைப்பட்டது. அவளைவிட தைரியம் கொண்ட யாராவது அவளை அரவணைப்பதற்குத் தேவைப்பட்டார்கள். படர்ந்து ஏறுவதற்கு கொம்பு ஏதாவது இருக்காதா என்று தேடும் சில கொடிகள் இல்லையா? அவற்றைப் போல, அவளால் மட்டுமே வாழ முடியாது. அந்த அளவிற்கு சுகமாக பாதுகாப்பு இருக்கிறது என்ற உணர்வுடன் எந்தச் சமயத்திலும் அவள் தூங்கியதில்லை. ஆழமான தூக்கம்! அந்த உறக்கத்தில் நடுங்கிக் கண் விழிக்கவில்லை. கெட்ட கனவுகள் காணவில்லை. கண் விழித்து பயந்து நடுங்கவில்லை.
முகத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்த குட்டியின் முகம் மெதுவாகத் தாழ்ந்தது. கவுரி, குட்டி இருவரின் முகங்களும் ஒரு முத்தத்தில் இணைந்தன. கவுரி கண் விழித்தாள். அவளுடைய தலையை குட்டி மடியில் தாழ்த்தினாள். குட்டி கவுரியை வருடினாள். முத்தமிட்டாள்.
அடுத்த விசாரணையின்போது குட்டியின் வழக்கில் ஒரு சாட்சி ஆஜரானான். அன்று குட்டியின் கெட்ட எண்ணம் கொண்ட மருமகனும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தான். குட்டி அவனைக் காட்டிக் கொடுத்தாள்.
போலீஸ்காரர்களுக்கு உதவியாக இருப்பதற்குத்தான் அவன் வந்திருந்தான். அந்த சாட்சியை அவன்தான் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். குட்டி இருந்த இடத்திற்கு அவன் வரவில்லை. அவர்களுடன் இருந்த ஒரு போலீஸ்காரர் கையை நீட்டி அவனை அழைத்தார். அவன் வரவில்லை. அப்போது குட்டி போலீஸ்காரர் ளிடம் சொன்னாள்: "நான் இருக்கிற பக்கம் அவன் வருவானா? சரிதான்... அவனுக்கு நிறையவே பயம் இருக்கு!''
அன்று குட்டி நீதிமன்றத்தில் சில ஆர்ப்பாட்டங்களைச் செய்து, சாட்சிகளிடம் சில கேள்விகளைக் கேட்டாள். கொஞ்சம் குற்றச்சாட்டுகளையும் கூறினாள்.
திரும்பி லாக் அப்பிற்கு வந்தபோது, குட்டி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டமே இல்லாதவள் அவள்தான். நீளமான சில வருடங்களின் வரலாற்றை குட்டி நினைவுபடுத்திப் பார்த்தாள்.