சிலையும் ராஜகுமாரியும் - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7095
சிறிய நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்ச்சியாக இருந்ததால், தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல், சாதாரண பெண்ணின் தோற்றத்தில் ராஜகுமாரி வந்திருந்தாள். அதன் காரணமாக அவள் மீது யாருடைய தனிப்பட்ட கவனமும் விழவில்லை. அவளுடன் பி.ஏ. என்று அழைக்கப்படும் அந்த இளம் பெண் மட்டுமே இருந்தாள்.
ட்ரப்பீஸிலும் மோட்டார் பைக்கிலும் ஜீப்பிலும் அவன் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றில்கூட ராஜகுமாரியின் கவனம் செல்லவில்லை. அவற்றையும் அவற்றைத் தாண்டியும் உள்ள என்னென்னவோ உடல் வித்தைகளை எங்கெல்லாமோ ராஜகுமாரி பார்த்திருக்கிறாள்.
ஒவ்வொரு வித்தைக்கும் பார்வையாளர்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இடையில் வேறு சில சிறிய வேலைகளுடன் சர்க்கஸில் இருக்கும் கோமாளிகளும் அழகியும் அங்கு வந்தபோது, பார்வையாளர்கள் கோவிந்திற்காக சத்தம் போடுவதை அவள் கவனித்தாள்.
அவன் நெருப்பிற்கு மத்தியில் நடக்க ஆரம்பித்தபோதுதான், ராஜகுமாரி உண்மையாகவே அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
நெருப்பு ஜுவாலைகளின் பிரகாசத்தில், அந்த முகத்தில், ராஜகுமாரி தன்னுடைய சிலையை அடையாளம் தெரிந்து கொண்டாள். அத்துடன் நிரந்தரமாக இழந்துவிட்டோம் என்று பயந்திருந்த இனம் புரியாத அந்த தனித்துவமான மயக்கம் அவளுடைய கைகளையும் கால்களையும் பலம் இழக்கச் செய்தது.
தன்னுடைய கண்டுபிடிப்பால் உண்டான அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் காட்சி முடியும் வரை அங்கேயே இருந்தாள். அடையாளம் கண்டுபிடித்த பிறகு இருந்த அவனுடைய வித்தைகளில் அவள் முழுமையாகக் கலந்துவிட்டவளாக ஆனாள். அவன் வைக்கும் ஆபத்து நிறைந்த சுவடுகள் அவளுடைய சுவாச முறையைத் தவறச் செய்தது. தனக்கு பைத்தியக்காரத்தனமாக எதுவும் தோன்றவில்லை என்று தன்னைத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, அடிக்கொருத்தரம் எதையும் பார்க்காமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஒவ்வொரு வித்தையும் முடிய முடிய தன்னுடைய முடிவு மேலும் மேலும் சரியாகிக் கொண்டு வருவதைப் பார்த்து, அவள் சந்தோஷத்தால் உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள். இறுதி வித்தை - உயரத்திலிருந்து குதிப்பது. நிகழ்ச்சியில் நட்சத்திர வித்தை அது என்பதால், வைரம் அந்த வித்தைக்கு நல்ல தொகையைச் செலவழித்திருந்தான்.
அதற்கான ஏற்பாடுகளாக நிகழ்ச்சி நடைபெறும் பந்தலின் மேற்கூரையின் நடுப்பகுதியை சற்று அகலமாக இருக்கும் வண்ணம் நான்கு பக்கங்களிலும் இழுத்துவிட்டு, மேற்கூரையையும் தாண்டி வானத்தை நோக்கிச் செல்லும் ஒரு உலோகத் தூண், பெரிய ஸ்பிரிங்குகள் மூலம் நிமிரத் தொங்கியது. ஒன்றோ இரண்டோ தென்னை மரங்களின் உயரத்தை அடைந்த அது, அங்கேயே தலையை உயர்த்தி நின்றது. சமமான நிலையில் அமைக்கப்பட்டிருந்த இன்னொரு அலுமினியத்தால் ஆன ஏணியைப் பிடித்துக் கொண்டு கோவிந்த் அதன் உச்சிக்கு ஏறிச் சென்றான்.
சிறிது தூரம் ஏறியவுடன், அவன் சிறு புள்ளியைப் போல ஆனான். பார்வையாளர்கள் மூச்சை அடக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முற்றிலும் காணாமல் போனான். தொடர்ந்து தூணின் நுனியில் ஒரு விளக்கு எரிந்தபோது, கோவிந்த் அங்கு நின்றிருந்தான்.
அந்த உயரத்திலிருந்துதான் அவன் குதிக்கப் போகிறான் என்பதை நினைத்தபோது, யாரும் கைகளைத் தட்டவில்லை.
அவ்வளவு உயரத்திலிருந்து கோவிந்த் இதுவரை குதித்ததில்லை என்று அறிவித்து விளம்பரப் பிரிவு அந்த வித்தைக்கு தனிப்பட்ட பெருமையை அளித்துக் கொண்டிருந்தது. இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள் பதைபதைப்பையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கச் செய்யும் இசையை ஒலிக்கச் செய்தார்கள்.
குதிப்பதற்கான நேரம் வந்ததும், இசை திடீரென்று நின்றது. தூணின் உச்சியில் இருந்த சிறிய புள்ளியின்மீது நிறங்கள் மாறி மாறி விழுந்தன. அதன் நுனியில் நிறங்களின் விளையாட்டு நின்று பிரகாசமாகத் தெரிந்தபோது, கோவிந்த் கைகளைக் காற்றில் பரவவிட்டவாறு குதித்தான்.
வானத்திலிருந்து தலைக்குப்புற பறந்து கீழே வந்து கொண்டிருக்கும் ஒரு கிளியைப் போல அப்போது அவன் இருந்தான். இடையில் அவன் பார்வையாளர்களை சந்தோஷப்படுத்துவதற்காக காற்றில் பல்டி அடிப்பதையும் மெதுவாக வருவதையும் இதயம் துடிக்க ராஜகுமாரி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சாதாரணமாக அந்த நேரத்தில்தான் கோவிந்த் அன்று வந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்ப்பான். உயரத்திலிருந்து அந்தக் காட்சியைப் பார்க்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். எல்லா கழுத்துகளும் மேல் நோக்கி வளைந்து, எல்லா முகங்களும் உயரத்தை நோக்கித் திரும்பி இருக்கும் அந்த நிமிடங்களில் அவனுக்கு மிகுந்த தன்னம்பிக்கை தோன்றுவது உண்டு.
அப்படிப் பரவலாக பார்ப்பதற்கு மத்தியில் அவன் ராஜ குமாரியையும் பார்த்தான்.
ஒரு பல்டி அடிப்பதற்கு மத்தியில் எப்போதோதான் அவளுடைய முகம் அவனுடைய நினைவில் வந்து விழுந்தது. ஆனால் அது அவள்தான் என்று சந்தேகமே இல்லாமல் அவனுக்குத் தெரிந்தது.
கோவிந்த் இறுதியாக தரையில் வந்து நின்றதும், அது இறுதி நிகழ்ச்சி என்பதைத் தெரிந்திருந்த மக்கள் கூட்டம் ஆரவாரத்துடனும் கைத்தட்டல்களுடனும் எழுந்து நின்றது. அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் அவனால் ராஜகுமாரியைப் பார்க்க முடியவில்லை.
மீண்டுமொருமுறை அவள் காணாமல் போகிறாளோ என்ற சிந்தனை அவனைப் பொறுத்தவரை வேதனையுடன் தோன்றியது. அதனால் எப்போதும் இருப்பதற்கு மாறாக அவன் அங்கேயே நின்று கொண்டு மக்களின் பாராட்டை வாங்கிக் கொண்டிருக்கும் சாக்கில், அவளை அவன் தேடினான். ஆனால், அப்போது அவள் போய்விட்டிருந்தாள்.
அன்று ஓய்வு எடுப்பதற்காகத் தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பிப் போகத் தொடங்கிய கோவிந்த்தைச் சூழ்ந்த அழகிகளில் ஒருத்தியாக அருந்ததியின் பி.ஏ.வும் இருந்தாள்.
ஆரவாரத்திற்கு மத்தியில், புத்திசாலியான அவள், அவனுடைய ஹோட்டல் அறை, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டாள்.
11. கோவிந்தும் ராஜகுமாரியும்
அன்று இரவு ஹோட்டல் அறைக்குத் திரும்பி வந்த கோவிந்திற்கு சிறிதும் அமைதியாக இருக்க முடியவில்லை. வந்தவுடன் ஆடைகளை மாற்றினான். அவன் சிறிது நேரம் மல்லாந்து படுத்து சிந்தித்தான். ராஜகுமாரிக்கு தன்னை யார் என்று தெரியவில்லை என்றும், தெரிந்திருந்தால் அவள் ஓடி வந்திருப்பாள் என்றும் அவனுக்கு வெறுமனே தோன்றியது. இப்போது அவள் இந்த நகரத்தில் எங்கேயாவது இருப்பாள் என்பதை நினைத்தபோது கையில் வந்து சிக்கிய இந்த சந்தர்ப்பத்தை வீணாக்கி விடாமல், எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளைக் கண்டுபிடிப்பதற்கான வழியைப் பற்றிச் சிந்திப்பதுதான் இப்போது செய்ய வேண்டிய விஷயம் என்று அவனுக்குத் தோன்றியது. தொடர்ந்து நேரத்தை வீணாக்காமல் புதிய ஆடைகளை எடுத்து அணிந்து, கம்பெனிக்குச் சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அவன் தெருக்களை நோக்கிப் புறப்பட்டான்.