சிலையும் ராஜகுமாரியும் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7096
9. கோவிந்த் நாராயண்
நகரத்தை அடைந்ததும், சுப்பனும் வைரமும் முதலில் செய்த காரியம் - நேராக சவரக் கடைக்குச் சென்று முடி வெட்டியதுதான். முடி வெட்டியவுடன், அவர்களுக்கு உண்டான உருவ வேறுபாடு ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது. குறிப்பாக சுப்பனிடம். அவன் வேறு ஒரு ஆளைப் போலத் தோன்றினான். அதைப் பார்த்ததும் வைரம் சிறிது பணத்தைச் செலவழித்து புதிய வகையான ஆடைகளையும் ஷுக்களையும் வாங்கிக் கொடுத்தான். பால்காரனைப் பார்த்தவர்களுக்கு சிலையைத் தெரியாமல் போனதைப் போல, சிலையையும் பால்காரனையும் பார்த்தவர்களுக்கு இந்த புதிய இளைஞனையும் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு சிரமமாகவே இருக்கும்.
புதைத்து வைத்திருந்த செல்வத்தை யாரோ கடத்திக் கொண்டுபோய் விட்டார்கள் என்று உறுதியாக நினைக்கும் தீருலால், அதற்குப் பின்னால் விசாரணையை அவிழ்த்துவிடுவார் என்பது மட்டும் நிச்சயம். அதனால் உருவமாறுதல் அவர்களுக்கு- குறிப்பாக சுப்பனுக்கு அவசியத் தேவை என்றானது.
வைரம் அவனுக்கு கோவிந்த் நாராயண் என்று பெயரிட்டான். அவனுடைய இறந்துபோன ஒரு தம்பியின் பெயர் அது. "கோவிந்த் பாயி" என்றோ "பாயி" என்றோ அழைப்பார்கள். அவன் சுப்பனை "மாஸ்டர்" என்று அழைப்பான்.
அந்த வகையில் புதிய பெயர்களுடனும் புதிய தோற்றங்களுடனும் அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்கள்.
ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்கு என்னவெல்லாம் விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர்களுக்கிடையே சிந்தித்துப் பார்த்தார்கள். கொஞ்சம் சைக்கிள் வேலைகளும் தரையில் செய்யும் தலை கீழான வேலைகளும் கோவிந்த்துக்கு நன்கு தெரியும். வேறு எப்படிப்பட்ட வித்தைகளையும் கற்பித்தால் கற்றுக் கொள்ள அவன் தயாராக இருந்தான்.
செய்ய இயலும் இன்னொரு விஷயத்தை கோவிந்த் சற்று தயக்கத்துடன் சொன்னான். மிகவும் உயரத்திலிருந்து கீழே குதிப்பதற்கு அவனால் முடியும். உயரம் எவ்வளவு இருந்தாலும், தன்னால் குதிக்க முடியும் என்று அவன் தன்னம்பிக்கையுடன் சொன்னான்.
சோதித்துப் பார்ப்பதற்காக அன்று பகல் முழுவதும் கோவிந்தும் வைரமும் சேர்ந்து நகரத்தின் உயரமாக இருந்த பகுதிகளையும் உயரமான சுவர்களையும் தேடி அலைந்தார்கள். பழைய சுடுகாட்டைச் சுற்றி இருந்த இடிந்த சுவரில் மிகவும் உயரமான ஒரு பகுதியை அவர்கள் அதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆட்கள் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து கோவிந்த் அதன் மேலே இருந்து குதித்துக் காட்டினான். அவனுக்கு ஒரு ஆபத்தும் உண்டாகவில்லை என்ற விஷயம் வைரத்தை ஆச்சரியப்பட வைத்தது. சாதாரணமாக ஒரு மனிதனால் அவ்வளவு உயரத்திலிருந்து குதிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமே. அதையும்விட உயரத்திலிருந்து வேண்டுமானாலும் குதித்துக் காட்ட முடியும் என்று அவன் சொன்னபோது, வைரத்திற்கு அதிகமான சந்தோஷம் உண்டானது.
வேறு எதுவுமே இல்லையென்றாலும் இந்த ஒரே விஷயத்தை மட்டும் வைத்து கட்டாயம் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அசத்திவிட முடியும் என்று அவன் கணக்குப் போட்டான்.
எனினும், நேரம் போவதற்காக வேறு சில சிறிய வித்தைகளும் தேவை என்பதால் அவற்றையும் ஏற்பாடு பண்ணி விட்டு, அதற்குப் பிறகு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
சில சாதாரண கண்கட்டு வித்தைகளும் அவசியமான எடை தூக்கலும் சைக்கிள் வேலைகளும் இல்லாமல், நீண்ட நேரம் மக்களைப் பிடித்து நிறுத்தக்கூடிய அளவிற்கு தன் கையில் பெரிய விஷயம் எதுவும் இல்லையென்ற விஷயத்தை வைரம் மனம் திறந்து ஒப்புக்கொண்டான். கோவிந்த் பாயியின் வித்தை பலமும் இளமையின் மன தைரியமும் தடங்கலே இல்லாமல் வெளிப்பட்டால் மட்டுமே திட்டம் வெற்றி பெறும். ஒரு விஷயத்தில் வைரத்திற்கு நல்ல நம்பிக்கை இருந்தது. கோவிந்த் பாயி என்ன செய்தாலும், அதைப் பார்ப்பதற்கு ஆட்கள் கூடுவார்கள். எதுவும் செய்யாமல் நின்று கொண்டே இவ்வளவு பார்வையாளர்கள்! அப்படி இருக்கும்போது ஏதாவதொன்றைச் செய்தாலோ? மறுநாளே பழைய மைதானத்தின் ஒரு மூலையில் பயிற்சி ஆரம்பமானது. சிதிலமடைந்த நிலைமையில் இருந்த மைதானத்தில் ஆட்கள் முற்றிலும் இருப்பதில்லை. ஏதாவது சமூக விரோதிகளோ ஊர் சுற்றும் பசுக்களோ எப்போதாவது கடந்து வந்தால் உண்டு.
பயிற்சிக்குத் தேவையான கொஞ்சம் கம்பிகள், கயிறுகள், வளையங்கள், தூண்கள் ஆகியவற்றை வைரம் வாங்கியிருந்தான். அவற்றை அந்தந்த இடங்களில் கொண்டு போய் வைத்தான். சம்பிரதாயப்படி தட்சிணை வைத்து பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
தன்னுடைய சாதாரண நீண்டகால வித்தைகளடங்கிய வாழ்க்கைக்கு மத்தியில் பல சிறுவர்களுக்கும் பயிற்சி தந்திருக்கும் வைரம், சுப்பனை பயிற்சியின் ஆரம்பப் படிகளுக்கு கையைப் பிடித்து ஏற்றியதும், ஆச்சரியப்பட்டுத் துள்ளிக் குதித்து விட்டான்.
சுப்பனுக்கு எந்த விஷயத்திற்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சிக்கான அவசியமே இல்லை. எந்த வித்தையைக் கூறினாலும் அதை அப்படியே அவன் செய்வான். கம்பியைக் கட்டிவிட்டு, அதன்மீது நடக்கச் சொன்னால், ஒரு முறை முயற்சி பண்ணி பார்த்து விட்டு இரண்டாவது முறை அவன் அதில் நடந்தான். கையை ஊன்றி, தலை கீழாக நிற்கச் சொன்னால், அப்படியே நிற்பான். அதே கோணத்தில் நடக்கச் சொன்னால் நடப்பான்- எல்லாவற்றையும் முன் கூட்டியே படித்துத் தெரிந்துகொண்டிருப்பதைப் போல. ஒவ்வொரு வித்தையைச் செய்து காட்டும்போதும், "நீ இதை முன்பு செய்திருக்கிறாயா?" என்று வைரம் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இல்லை என்று எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான்.
கோவிந்தைப் பற்றி தான் முன்கூட்டியே தீர்மானித்திருந்தது தவறாக அமையவில்லை என்பதை அறிந்து அவன் தெய்வத்திற்கு நன்றி சொன்னான்.
மறுநாளே அவன் சர்க்கஸ்காரர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு மோட்டார் சைக்கிளை உண்டாக்கினான். முன்பு எந்தச் சமயத்திலும் மோட்டார் சைக்கிளில் ஏறியதில்லை என்று கூறினாலும், க்ளட்ச், கியர், ப்ரேக் ஆகியவற்றைக் காட்டி ஒரே ஒருமுறை தன்னுடன் உட்கார வைத்து ஓட்டினான். அவ்வளவுதான். கோவிந்த் அந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
பிறகு அதன்மீது வைரம் சொல்லிய எந்த வித்தையாக இருந்தாலும், அவன் செய்து காட்ட ஆரம்பித்தான்.
கையில் கிடைத்திருப்பது ஒரு சாதாரண மனிதப் பிறவி இல்லை என்ற வைரத்தின் முடிவு நாட்கள் செல்லச் செல்ல உறுதியாகிக் கொண்டேயிருந்தது. அதற்கேற்றபடி அவன் நிகழ்ச்சியின் செயல்பாட்டில் மேலும் முன்னேற்றங்களை உண்டாக்கினான்.
ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்த பிறகு, ஒரு நாள் மதிய நேரம் நகரத்தின் மூலையில் இருந்த மைதானத்தில் மறைத்து உண்டாக்கப்பட்ட கூடாரத்திற்குள் கோவிந்த் பாயியின் விளையாட்டு வெளிப்பாடுகள் ஆரம்பமாயின. கூடாரத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் கோவிந்த் பாயின் ஒரு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.