வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
கையில் செப்புக்காசை வைத்து உருட்டியபடி பலகாரக்கடையை நோக்கிப் பையன் ஓடினான். அப்போது அவனுடைய கையிலிருந்த காசு தவறி அருகிலிருந்த சாக்கடையில் உருண்டு விழுந்துவிட்டது. பையனையே இளைஞன் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அரையணாதான். அதைப் பையன் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தான். இரண்டு கைகளாலும் கண்களைக் கசக்கிக் கொண்டே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். காசு கிடைக்காமல் போகவே வீடு நோக்கிச் சிறிது நேரத்தில் திரும்பி ஓடினான். ஆவலுடன் எழுந்து சென்ற இளைஞன் அந்த அரையணாவைக் கண்டுபிடித்து எடுத்தான். "ஏதாவது கடலை வாங்கிச் சாப்பிடலாம்" என்று மனதுக்குள் நினைத்தபடி நடக்கலானான்.
"ஏய்...''
யாரோ அழைத்தார்கள். பின்னால் அவன் திரும்பிப் பார்த்தான். காக்கி உடை அணிந்த போலீஸ்காரன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான்.
முகம் வெளிறி ஸ்தம்பித்துப்போய் நின்றான் இளைஞன்.
போலீஸ்காரனின் காக்கிச் சட்டையையும் அரைக்கால் நிஜாரையும் கையிலிருந்த குண்டாந்தடியையும் பார்த்தபோது இளைஞனுக்குப் புளியைக் கரைத்து ஊற்றுவதுபோல் இருந்தது.
இளைஞனின் பிடரியைப் பற்றி, போலீஸ் ஸ்டேஷனை நோக்கி இழுத்துக்கொண்டு போனான் போலீஸ்காரன். போலீஸ்காரன் சொன்னதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் பல்லைக் கடிக்க ஆரம்பித்தார்.
"உன் பேரு என்னடா?''
"முஹம்மது அப்பாஸ்'' என்றான் இளைஞன்.
"இதே மாதிரி எத்தனை தடவை திருடியிருப்பே?''
அவனுடைய இரண்டு கண்களிலிருந்தும் நீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.
"நான் இதுவரை திருடணும்னு என் வாழ்க்கையில் ஒரு தடவை கூட நினைச்சது இல்லே. பசியின் கொடுமையினாலேதான் இப்படி!''
இதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் "கடகட"வெனச் சிரித்தார்.
"ஏண்டா 217, இவன என்னன்னு கேளு!''
217 சுமார் அரை மணி நேரம் விசாரணை செய்தான். இளைஞனிடமிருந்து வேறு எந்தவிதமான பதிலும் வராமல் போகவே சலிப்படைந்த போலீஸ்காரன் இன்ஸ்பெக்டரிடம் கூறினான்:
"இவன் பாவப்பட்டவன்னு தோணுது சார்!''
அப்பாஸை இன்ஸ்பெக்டரின் முன் கொண்டு வந்து நிறுத்தினான் 217. அவனைக் கால் முதல் தலை வரை ஆராய்ந்த இன்ஸ்பெக்டர் கோபம் ஜ்வலிக்கக் கூறினார்:
"போடா! இந்தப் பக்கம் இனிமேல் தலைகாட்டவே கூடாது. தெரியுதா?''
பாதி இரவு கழிந்துவிட்டிருந்தது. பூங்காவில் இருந்த பெஞ்சில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த அவனைத் தட்டி எழுப்பினான் ரோந்து சுற்றி வந்த போலீஸ்காரன். மனிதாபிமானம் இன்னும் கொஞ்சம் குடிகொண்டிருக்கவே, அருகிலிருந்த மசூதியை நோக்கிப் போகும்படி அவனே ஆலோசனையும் கூறினான். ஏற்கெனவே தளர்ந்து போயிருந்த இளைஞன் மசூதித் திண்ணையில் போய் தன் உடம்பைக் கிடத்திக் கொண்டான்.
தன்னை யாரோ தட்டி எழுப்புவதை அறிந்த இளைஞன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தான். பொழுது நன்றாக விடிந்திருந்தது. அவனைச் சுற்றிலும் ஒரு சிறு
கூட்டமே குழுமியிருந்தது. ஒவ்வொருவர் முகத்திலும் அர்த்தம் புரியாத ஒரு கடுகடுப்பு. இவன் முஸ்லிம் அல்லாதவன்- காஃபிர் என்று தோன்றவே அவனை நோக்கி ஒருவன் கேட்டான்:
"நீ யாருடா?''
அப்பாஸ் மெல்ல எழுந்து நின்றான்.
"நான் ஒரு வெளியூர்க்காரன்.''
"வெளியூர்க்காரனா? அப்படின்னா, ஜாதி?''
"முஸ்லிம்.''
ஜனக்கூட்டம் அவன் சொன்னதை நம்புகிற மாதிரி தெரியவில்லை. தங்களுக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முணுமுணுத்துக் கொண்டார்கள்.
"முஸ்லிமா? பொய்! மரியாதையா உண்மை சொல்றியா, இல்லையாடா?''
"லா இலாஹி, இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூல்லாஹ்'' நாக்குழற இளைஞன் கூறினான்.
இப்போதுதான் அவன்மீது அவர்களுக்கு ஓரளவுக்காவது நம்பிக்கை வந்தது. அவன் தன்னுடைய துயரம் நிறைந்த வாழ்க்கையை அவர்களிடம் சுருக்கமாகக் கூறினான். அவர்களுள் ஒருவன் ஆச்சரியம் தொணிக்கக் கூறினான்:
"நான் முதல்லே காஃபிராத்தான் இருக்கும்னு நினைச்சேன். ம்... எல்லாம் காலம் செய்யற கோலம்!''
"சரி சரி எழுந்திரு. இது என்ன தூங்கறதுக்காகவா கட்டிப்போட்டிருக்கு?'' இன்னொரு ஆள் கேட்டான்.
இளைஞன் தட்டுத் தடுமாறி எழுந்து நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். யாரோ தன்னை அழைப்பதுபோல் தோன்றவே பின்னால் திரும்பிப் பார்த்தான். மசூதியில் இருந்த ஒரு முதியவர். வெள்ளை வெளேரென்ற தாடியும், கருணை தவழும் கண்களுமாய் நின்று கொண்டிருந்தார்.
ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை அவனிடம் நீட்டியவாறு கூறினார்.
"மகனே! இந்தா இதை வச்சுக்கோ.''
அவன் அந்த ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டான். அப்போது அவன் கண்களில் நீர் நிரம்பிவிட்டது. அவனால் அதற்குமேல் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. கண்ணீரைத் துடைத்துவிட்டு நன்றி சொல்வதற்காகத் தலையைத் தூக்கியபோது தான் தெரிந்தது, அந்த முதியவர் அந்த இடத்தை விட்டு ஏற்கெனவே போய்விட்டாரென்று. என்ன செய்வது என்றே தெரியாமல் அவன் ஒரு நிமிடம் செயலற்று நின்றுவிட்டான். அவன் கண்களிலிருந்து வழிந்த நீர் சொட்டுச் சொட்டென்று சாலையில் விழுந்து அதை நனைத்துக் கொண்டிருந்தது. "யாரப்புல் ஆலமீன்." அவன் மனதுக்குள் கூறிக்கொண்டான்.
பின்பு ஏதோ ஓர் எண்ணத்துடன் வேகமாக நடக்கலானான்.
ஹோட்டல் ஒன்றில் கால் வைத்த அவன், குளிர்ந்த நீரில் கை, கால், முகம் ஒவ்வொன்றையும் கழுவினான். இரண்டு அணாவுக்குச் சாப்பிட்டான். தண்ணீரைக் கொஞ்சம் அதிகமாகவே குடித்தான். பின்பு வெளியே இறங்கி நடந்தான். பாக்கெட்டில் பாக்கி பதினான்கு அணாக்கள் இருந்தன. மனம் பாரம் நீங்கி அமைதியாக இருந்தது. காற்றில் பறக்கும் பஞ்சு மாதிரி கால்போன இடமெல்லாம் அவன் தன் விருப்பப்படி ஒவ்வொரு தெருவாக அலைந்து திரிந்தான்.
மணி நான்கு. பகலின் வெப்பம் ஓரளவுக்குத் தணிந்துவிட்டிருந்தது. தெருக்களில் ஜன சந்தடி அதிகரிக்கத் தொடங்கியது. அவனை ஒருவன் தடுத்து நிறுத்தினான். நடு வயதுக்காரன். கறுப்புக் கோட்டும் கறுப்புத் தொப்பியும் போட்டிருந்தான் அந்த ஆள். கோட்டுக்குமேலே ரோமத்தாலான சிவப்பு வண்ணப் போர்வை.
"ம்... என்ன வேணும்?'' அப்பாஸ் கேட்டான்.
அவனையே பார்த்தபடி நின்றிருந்த அந்த மனிதன் அவனை நோக்கித் தொழுதபடி, "தம்பீ... நான் வெளியூர்க்காரன். சாப்பிட்டு மூணு நாளாயிடுச்சு. இந்தப் போர்வையை விற்கலாம்னு பார்த்தா யாரும் வாங்க மாட்டேங்கறாங்க'' என்றான்.
இதைக் கேட்டதும் அப்பாஸின் கண்கள் நீரினால் நிரம்பிவிட்டன. வந்தவனுக்கு உதவி செய்ய வேண்டியது தன் கடமை என்று நினைத்த அவன் பாக்கெட்டினுள் கைவிட்டு நாலணா எடுத்துக் கொடுத்தான்.
அந்த மனிதன் அதை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டு அப்பாஸைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு நடந்தான்.
பூங்காவில் பாட்டொலி கேட்டது. இதயத்தைப் பிழிய வைக்கும் சோகம் நிரம்பிய பாடல் அது. பூங்காவின் மூலையில் அப்பாஸ் இடம் பிடித்தான். பலவிதமான வண்ண மலர்கள் கொண்டு மனதைக் கவரக்கூடிய புல்வெளி.