வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
எது குறைந்தாலும் குறையாவிட்டாலும் அவன் பிடித்துப்போட்ட சிகரெட் துண்டுகள் மட்டும் அறையெங்கும் சிதறிக்கிடந்தன. அவைகூட பிறர் பிடித்துப் போட்ட சிகரெட் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துப் பிடித்தவைதாம்.
அவனிடமிருந்த சுறுசுறுப்பெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. திறந்து கிடக்கும் ஜன்னல் ஓரம் நின்று தெருவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான். தெருவின் ஆரவாரம், மக்களின் மகிழ்ச்சிக்குரல், கும்மாளம் எதுவுமே அவனது இதயத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மனதின் ஆழத்தில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று கேட்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது. அப்படி என்றால் ஒரே இருட்டு. ஆம், ஒரே இருட்டு. தன்னை நினைத்தபோது அவனுக்கே வெறுப்பாக இருந்தது.
யாரோ கதவைத் தட்டினார்கள். சாதாரணமாக நடந்து சென்று கதவைத் திறந்தான் அவன். வெளியே ஒரு கடிதத்துடன் ஹோட்டல் பையன்
நின்று கொண்டிருந்தான். அதை வாங்கிப் பிரித்துப் படித்தான் இளைஞன்.
"பணம் அவசரமா தேவைப்படுகிறது. நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்புங்கள். அசவுகரியத்துக்கு மன்னித்திடுக.
-மானேஜர்!"
இளைஞன் உண்மையிலேயே நடுங்கிப் போனான். நடுங்கும் விரல்களால் பதில் எழுதினான்.
"இன்னும் இரண்டு நாள் கழித்துத் தருகிறேன். "
இந்தக் குறிப்புடன் திரும்பிப்போன பையன் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தான், இன்னொரு கடிதத்துடன்.
"இன்றுவரை உங்கள் கணக்கில் பாக்கியிருக்கிற 140 ரூபாயை உடனே கொடுத்தனுப்புங்கள். மிகவும் அவசரத் தேவை. "
கையில் பிடித்திருந்த கடிதம் லேசாக நடுங்கியது. மணி பர்ஸைத் திறந்து பார்த்தான். இரண்டு ரூபாயும் சில்லரையும் இருந்தன. கீழே இறங்கிப் போனான். நிர்வாகி அசையாமல் உட்கார்ந்திருந்தார். குற்றம் செய்த கைதி மாதிரி அவர் முன் போய் நின்றான்.
"எங்கிட்டே ரெண்டே ரெண்டு ரூபாய்தான் இருக்கு. சீக்கிரம் வேலை கிடைச்சிடும். அதுவரை நீங்கதான் பொறுத்துக்கணும்.'' அவன் கெஞ்சுகிற பாவனையில் கேட்டான்.
மேஜைமேல் திறந்து கிடந்த கணக்குப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியபடி பேசினார் அவர்:
"வேறு வழியே இல்லை. எல்லாப் பணத்தையும் கொடுத்திட்டு கணக்கை முடிச்சிக்குங்க.''
"அதுதான் சொல்லிட்டேனே என்கிட்டே பணம் இல்லைன்னு. இப்பவே தீருன்னா நான் எங்கே போறது?''
"வீட்டுக்குத் தந்தி கொடுக்கலாமில்லே?''
வீட்டுக்குத் தந்தி கொடுப்பதா? தன்னை நினைத்து அவனே நொந்து கொண்டான். தந்தி அடித்துப் பணம் வரக்கூடிய நிலையிலா அவன் இருக்கிறான்.
"மன்னிக்கணும், அது சாத்தியமில்லை.''
ஹோட்டல் மானேஜர் வேறு வழி உண்டாக்காமல் இல்லை. அவன் வைத்திருந்த பொருட்களில் கொஞ்சம் விலை உயர்ந்ததை அவன் கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஈடாக அவர் எடுத்துக்கொண்டார். உண்மையிலேயே அவன் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. போர்வை ஒன்றை மட்டும் நான்காக மடித்து கையிடுக்கில் வைத்துக்கொண்டு வெளிறிப்போன முகத்துடன், வியர்வை ஆறாய் வழியும் உடலுடன், துடிக்கும் இதயத்துடன் வீதியில் நடந்து போனான். உள்ளத்தில் பெரும் பாரம்.
நகரம் ஆரவாரித்துக்கொண்டிருந்தது. பசி காதை அடைத்தது. கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரே இருட்டு!
தெருவுக்குப் பின்னால் ஒரு மூலையில் ஒதுங்கிப்போய் காணப்பட்ட, சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அறை. அதுதான் அவனது தற்போதைய உறைவிடம்.
சாலையையொட்டிக் காணப்படும் வரிசை வரிசையான வீடுகள். அவற்றிலும் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையே அதிகம். பலவகைப் பெண்கள். பல்வேறு வயதினர்.
பல்வேறு தோற்றத்தினர். பல்வேறு மொழியினர். பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.
முல்லைப் பூ பரப்பும் நறுமணம் காற்றில் கலந்து அந்தப் பகுதி முழுவதிலும் இனிமையான சூழ்நிலை.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. செவ்விதழ்கள் அவன் முகம் சுண்டு மலர்ந்தன. வெண்பற்கள் அவனுக்காக நகைத்தன. பல்வேறு கண்கள் அவனைக் கண்டு ஒளிர்ந்தன. சதைப்பிடிப்பான பல கைகள் அவனைத் தங்களை நோக்கி அன்புடன் அழைத்தன. அப்பப்பா! வாழ்க்கை என்பதே இதுதானா?
தீப்பெட்டி ஒன்றின்மேல் சன்னமாக எரியும் மெழுகுவர்த்தி அறையின் நான்கு பக்கங்களிலும் மங்கலான ஒளியைப் பரவவிட்டுக் கொண்டிருந்தது. இரண்டு கைகளையும் இணைத்துக் கழுத்துக்குக் கீழே கொடுத்தபடி தரையில் அவன் எந்தவிதமான சிறு சலனமுமின்றிப் படுத்துக் கிடந்தான். அழுக்கு பிடித்த பழமையான அறையின் சுவர்களில் இங்கும் அங்குமாய்த் தொங்கிக் கொண்டிருந்த ஒட்டடை. என்றோ அடுப்பு ஒன்று இருந்ததற்கு அடையாளமாகச் சுவரின் ஒரு பாகத்தில் கரி பிடித்திருந்த இடம். ஒவ்வொன்றையும் அவனுடைய கண்கள் ஒரு நிமிஷம் மேய்ந்துவிட்டு வந்தன. பீடித்துண்டுகளும் தீக்குச்சிகளும் கொஞ்சம் அதிகமாகவே ஈரம் தோய்ந்த அந்தத் திண்ணைமேல் சிதறிக் கிடந்தன. யாரோ புகைத்து தூக்கி எறிந்துவிட்டுப் போயிருந்த ஒரு சிகரெட் துண்டை அவன் சிறிது தயக்கத்துடன் கையில் எடுத்தான். சிகரெட் துண்டு வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி ஜ்வாலையில் பொருத்தி இரண்டு முறை இழுத்தான். அப்பா என்ன சுகம்! அதற்குள் மெழுகுவர்த்தி தன் கடைசி நிமிஷத்தை உறிஞ்சி அனுபவித்துக் கொண்டிருந்தது. அதற்கு அவ்வளவுதான் உயிர்போல் இருக்கிறது. பிறகு அறையில் ஒரே இருள். அந்த இருளில் அவன் உதட்டில் பொருத்தியிருந்த சிகரெட் துண்டு மட்டும் சிவப்பாகக் கனன்றது நன்றாகத் தெரிந்தது. வாழ்க்கையை விழுங்க வந்த இருள் அரக்கனின் சிவந்த கண்கள்போல் அது பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. பெண்களின் கலகலச் சிரிப்பு, பேச்சு, குரல் ஒவ்வொன்றும் அவன் காதுகளில் தெளிவாகக் கேட்டன. கொஞ்ச நேரத்தில் சிகரெட்டும் தீர்ந்துவிட்டது. சிறிது நேரத்தில் தன்னையும் மறந்து அவன் நித்திரையில் லயித்தான்.
காலை படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டிருந்தது. உடம்பு பனிக்கட்டியாகக் குளிர்ந்து கொண்டிருந்தது. புழக்கடைப் பக்கம் போகலாமென்று போனவன் என்ன நினைத்தானோ, பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று திரும்பிவிட்டான். குளிப்பதற்காகக் குழாயோரம் போனான். அங்கு ஒரே பெண்கள் மயம். பருமனான பெண்கள், உடல் மெலிந்த பெண்கள்- கன்னம் ஒட்டிப்போன பெண்கள், மொட்டையடித்த பெண்கள் இப்படிப் பல்வேறு தோற்றங்களையுடைய பெண்களும் அங்கே கூடியிருந்தார்கள்.
சிலர் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் வேண்டுமென்றே விரலை வாயினுள் விட்டுக்கொண்டு வாந்தி எடுக்க முயன்று கொண்டிருந்தார்கள். சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். பெண்களில் சிலர் அவனை ஓரக்கண்னால் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.