வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
எல்லாம் சூனியம்! ஒரே சூனியம்! அப்பப்பா! இந்த உலகில் வாழ ஒருவன் எத்தனை கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பசியின் கொடுமை தாங்காமல் அவன் துடித்துக் கொண்டிருந்தான். அவனது இளமைப் பருவம் எவ்வளவு உல்லாசம் நிரம்பியதாய் இருந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக இருந்தது. இதுவரை அவன் எத்தனை ரூபாய் செலவிட்டிருப்பான். எத்தனை ஆசைகளை மனதின் அடித்தளத்தில் போற்றிப் பாதுகாத்திருப்பான். ஹும்! அதெல்லாம் கடந்த காலம். மீண்டும் ஒருமுறை அது வரவா போகிறது? நல்ல உணவு, கவர்ச்சிகரமான ஆடைகள் எல்லாமே கடந்த காலத்தின் நினைவுச் சின்னங்கள். இன்று இதோ இந்த வாலிபப் பிராயத்தில் கடுமையான வெப்பத்தில் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறான். உண்ண உணவில்லை. படுக்க இடமில்லை. குடிக்க நீரில்லை. அவனை வளர்க்க அவன் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். எவ்வளவு தியாகங்கள் செய்திருப்பார்கள். எப்படியெல்லாம் உருக்குலைந்திருப்பார்கள். தங்கள் மகனுடைய எதிர்காலம் குறித்து என்னவெல்லாம் கனவு கண்டிருப்பார்கள். எல்லாமே காற்றில் பறந்த சருகாய்ப் போய்விட்டன. உயர்ந்த குறிக்கோள் கொண்ட வாழ்வுக்கு மாறாக வெறிச்சென்ற பாலை வெளியே அவன் கண்ணில் பட்டது.
யாரும் காணாதபடி சாலையின் ஓரத்தில் பொறுக்கியெடுத்த சிகரெட் துண்டு அவனது கைவிரல் வியர்வை பட்டு நனைந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு வகையான வெறுப்புடன் அதை அவன் தூக்கி எறிந்தான். பிற்பகல் நான்கு மணிக்குமேல் ஆகிவிட்டது. நிழல்கள் மெல்ல மெல்ல நீண்டு கொண்டிருந்தன. இருந்தாலும் வெப்பம் என்னவோ கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. ஆற்றுமணல்கூடச்
சிறிது சூடாகவே இருந்தது. ஆற்றின் கரையில் இருந்த செடிகள் எவ்விதச் சலனமுமின்றி அசையாமல் நின்று கொண்டிருந்தன. நதியின்மேல் இருந்த பாலத்தின்கீழ் உள்ள கல்தூணை ஒட்டி அமர்ந்து நாலைந்து பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ஆற்றுமணலில் தோண்டிய குழியிலிருந்து நீரெடுத்துத் துணி துவைப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். பல வண்ணங்களில் துணிகள் ஆற்று மணலில் காய்ந்து கொண்டிருந்தன. யாரோ இருமுவது கேட்டு அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு மிகவும் நெருக்கமாகப் பிச்சைக்காரன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். கந்தல் கந்தலாய்க் கிழிந்து தொங்கும் ஆடைகள், கிழிந்துபோன துருக்கித் தொப்பி. தன்னைச் சுற்றிலும் அந்தப் பிச்சைக்காரன் ஒருமுறை கண்ணோட்டமிட்டான். யாரும் இருப்பதுபோல் தெரியவில்லை. புளியமரத்தை லட்சியமாக வைத்து நடந்து வந்தான். மரத்தின் கீழ்ப்பகுதியை அடைந்ததும் தோளில் இருந்த மூட்டையைக் கீழே இறக்கினான். சிறிது நேரத்தில் அதை அவிழ்த்து இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகள், கெட்டுப்போன ஊறுகாய், பழங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துச் சாப்பிடலானான்.
சுவர்மேல் அமர்ந்து கீழ்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனின் வாயில் எச்சில் ஊறியது. பிச்சைக்காரனையே வைத்த கண் எடுக்காமல் அவன் நோக்கலானான். பசி முற்றும் அடங்கிய மாதிரி ஏப்பம் விட்டபடி சாப்பிட்ட கையைப் பழைய துணி ஒன்றில் துடைத்துக்கொண்ட பிச்சைக்காரன், பீடித் துண்டு ஒன்றை வாயில் வைத்து சுகமாகப் பிடிக்கலானான். புளியமரத்தின்மேல் மெல்லச் சாய்ந்தபடி பீடி பிடித்துக்கொண்டிருந்த அவனது சிந்தனை அப்போது வேறு எதையோ சுற்றி லயித்துக்கொண்டிருந்தது. நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து போய்க்கொண்டிருந்தது. பீடியை அணைத்த அவன், எஞ்சிய பகுதியை காது இடுக்கில் செருகிக்கொண்டான்.
கோட்டு பாக்கெட்டில் கைவிட்டுச் சிறு துணி முடிச்சு ஒன்றை எடுத்த அவன், சுற்றிலும் ஒருமுறை பார்த்தபடி அதை அவிழ்க்கத் தொடங்கினான். வெள்ளி ரூபாய்களும், செப்பு நாணயங்களும் அடுத்த நிமிடம் சலசலக்க ஆரம்பித்தன.
இளைஞனது இதயத்தில் திடீரென்று ஒரு மின்னல். பிச்சைக்காரன் ஒவ்வொரு நாணயமாக எடுத்து எண்ணினான். "கணீர் கணீர்" என்று காசுகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. பதினோரு முறை. பதினோரு வெள்ளி ரூபாயும், சில்லரையாக இரண்டு ரூபாயும் இருந்தன. அவற்றுடன் தன் பாக்கெட்டில் இருந்த வேறு சில செப்புக் காசுகளையும் சேர்த்து அவன் அவற்றை ஒரே பொதியாகக் கெட்டியான பையொன்றினுள் பத்திரமாக வைத்தான்.
இளைஞன் உண்மையிலேயே அயர்ந்து போனான். உலகமே இவன் கண்முன் பல்லை இளித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது அப்போது. கந்தல் ஆடைகளை மேனியில் சுற்றி எந்தவிதமான கவலையுமின்றி ஏகாங்கியாய் நடந்து திரியும் ஒரு மனிதனிடம் பதின்மூன்று ரூபாய். "அவனிடம் கேட்டுப்பார்த்தால் என்ன?" இளைஞனுடைய இதயம் பக்பக்கென்று இனம் புரியாமல் அடித்துக்கொண்டது. அப்போது இவன் தன்னைக் குறித்து ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்துக்கொண்டான். நிறைய படித்தவன், இளைஞன், உலகின் கண்களுக்கு உயர்ந்தவன். இருந்தும் ஒரு சாண் வயிற்றுக்கு உணவின்றி வாடிக்கொண்டிருக்கிறான். என்னவோ நினைத்து இவன் சிலிர்த்துக்கொண்டான். இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மின்வெட்டு. பிச்சைக்காரனின்மீது பாய்ந்து அவனிடமுள்ள காசையெல்லாம் தட்டிப்பறித்தால் என்ன? உண்மைதான். யார் பார்க்கப்போகிறார்கள்? பிச்சைக்காரனின்மேல் பாய்ந்தால் துக்கமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இளைஞனுடைய இதயம் "பட்பட்" என அடித்தது. மூச்சே நின்றுவிடும்
போல் இருந்தது. ஒரே நிமிடம். யாரும் இல்லை அவர்களைச் சுற்றி. இதுதான் நல்ல நேரம். ஆனாலும் ஒரு தயக்கம்.
சே! சே! பிச்சைக்காரனிடமிருந்து தட்டிப் பறிப்பதா? எவ்வளவு இழிவான செயல்! அந்தப் பிச்சைக்காரன் இந்தப் பணம் சம்பாதிக்க எப்படியெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்திருப்பான். எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருப்பான். எத்தனை பேர்களிடம் வசவும் திட்டும் கேட்டிருப்பான்.
இளைஞனால் அதற்கு மேலும் சிந்தித்துக்கொண்டிருக்க முடியவில்லை. என்ன நினைத்தானோ, அடுத்த நிமிடம் சாலையில் இறங்கி நடந்தான். எங்கே போகிறோம் என்பதுகூடத் தெரியாமல் நடந்தான். மரங்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.
திடீரென்று குளிர்காற்று வீசியது. "உஸ்" என்று பெரிதாக மூச்சுவிட்டபடி இளைஞன் நடையைக் கட்டினான்.
வஞ்சனை, சதி, துரோகம்- உலகமே இவற்றால்தான் இயங்கிக் கொண்டிருந்தது. உண்மை, நீதி, கருணை, மனிதாபிமானம் எல்லாவற்றிலுமே இப்போதெல்லாம் வஞ்சனை கலந்துவிட்டது என்றுதான் பட்டது அவனுக்கு. வஞ்சனை கலந்த மகாசமுத்திரத்தில் சிக்கிக் கரையை அடைய முடியாமல் அவன் அல்லல்பட்டுக் கொண்டிருந்தான். எந்தவிதமான லட்சியமுமின்றி நடந்து சென்ற அவனுடைய கால்கள், நகரின் சந்தடி குறைந்த ஒரு தெருவை அடைந்ததும் நின்றன. களைப்பு மிகுதியால் அருகில் இருந்த வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்தான். பசி வயிற்றைப் பிடுங்கி எடுத்தது. எதையாவது இப்போது உள்ளே தள்ளியே ஆக வேண்டும். ஆனால் அதற்கு அவன் எங்கே போவான்? முன்பக்கம் இருந்த வீட்டின் உள்ளிருந்து ஒரு பையன் இறங்கி வந்து கொண்டிருந்தான்.