வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
"நீங்க இந்த ஒரு தடவை தயவு செஞ்சு பொறுத்துக்கணும். சாப்பிட்டே மூணு நாளாச்சு. எந்திருச்சி நிக்கக்கூட உடம்பிலே தெம்பு இல்லே.''
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. சாயங்காலத்துக்குள் வாடகை என் கைக்கு வரணும். இல்லாட்டி.''
அவள் என்ன செய்வதென்றே அறியாமல் செயலாற்று நின்று கொண்டிருந்தாள். கடுகடுத்த முகத்துடன் வீட்டின் சொந்தக்காரன் அவளைக் கடந்துபோகும்போது அவனிடம் என்னவோ "குசுகுசு"வென்று காதில் கூறினாள். "சரி சரி" என்று தலையாட்டிய அவன் மலர்ந்த முகத்துடன் நடந்துபோனான்.
மெல்ல மெல்லத் தயங்கியபடி நடந்து வந்த அவள், கதவின் இடுக்கு வழியே உள்ளே பார்த்தாள். அவளுடைய உள்ளம் "பக் பக்"கென்று அடித்துக் கொண்டிருந்தது அப்போது. பிறகு என்ன நினைத்தாளோ, திரும்பிவிட்டாள்.
முல்லைப் பூவின் மணம் அந்த இடத்தைச் சுற்றிலும் பரவியிருந்தது. திடுக்கிட்டு அவன் கண் விழித்துப் பார்த்தான்.
அவள்!
இடது கையில் பாத்திரம் ஒன்று; வலது கையில் தேநீர். எந்தவிதமான தயக்கமும் முகத்தில் இல்லாமல் அவள் நின்று கொண்டிருந்தாள். அவன் படுக்கையை விட்டு எழுந்து அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். அவளுடைய கண்களில் அர்த்தம் புரியாத ஒரு மலர்ச்சி தென்பட்டது. முகத்திலுங்கூடத்தான். பாத்திரத்தைக் கீழே வைத்தாள்.
"மன்னிக்கணும். கொஞ்சம் டீயும், பலகாரமும் இருக்கு.''
ரத்தம் முகம் முழுமைக்கும் ஏறியது அவனுக்கு. கண்கள் இருட்டிக் கொண்டு வரும்போல் இருந்தன. தலைக்குள் ஒரே புகைச்சல். கௌரவப் பிரச்சினை அப்போது திடீரென்று தன் முகம் காட்டியது. "ஒரு விபச்சாரி! இப்போதுகூடவா ஆளை மயக்கும் முயற்சியில் இவள் ஈடுபட வேண்டும்?" கோபம் பொத்துக்கொண்டு வரக் கேட்டான்:
"இது எதுக்கு?''
அவளுடைய முகம் வாடி விட்டது. அவன் இப்படிக் கேட்டதும் கண்களில் ஒரு கலக்கம். இதயம் படபடக்கக் கேட்டாள்:
"ஏன், இதைச் சாப்பிடக்கூடாதா?''
"சாப்பிடறதா? நல்லா இருக்கு நீ சொல்றது. என்கிட்ட காசும் இல்லே, ஒண்ணும் இல்லே. பரதேசிப் பயல் நான். இப்படிப்பட்ட நிலையில் கூடவா மனுஷனைச் சும்மா விட்டு வைக்க முடியவில்லை உனக்கு? தயவு செய்து இங்கேயிருந்து போயிடு. எனக்குப் பலகாரமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்!''
அவளுடைய முகத்தில் ஏமாற்றத்தின் சாயல்கள். மெல்லிய குரலில் கூறினாள்: "நான் உங்கக்கிட்டே பணத்துக்காக வரல்லே. உங்க பணம் எனக்கு எதுக்கு?''
கால் பெருவிரலால் அவள் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று தோன்றாமல் தூணோடு சேர்ந்து நின்று கொண்டாள். அவனது கோபம் அவளுக்குக் கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. கோபத்தால் சிவந்த தன் கண்களால் அவளையே வெறித்துப் பார்த்தான் அவன்.
"பணத்துக்காக வரல்லேன்னா, பின்னே எதுக்காக வந்தே? ஆளை மயக்கிட்டுப் போகலாம்னா? பணம் சம்பாதிக்கிற நேரத்துலே சுருட்டிக்கிட்டுப் போயிடலாம்னா? மரியாதையா இங்கேயிருந்து போயிடு!''
அவன் வாசல் பக்கமாய் விரலை நீட்டியபடி கூறினான். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. கண்களிலிருந்து நீர் "பொல பொல"வென்று வந்தது.
"வசந்தகுமாரி... வசந்தகுமாரி...''
வெளியேயிருந்து யாரோ அழைக்கும் சப்தம். சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்தபடி அவள் மெதுவான குரலில் கூறினாள்: "என்னைக் கூப்பிடறாங்க. என்னைப் பத்தி தயவு செய்து தப்பா நினைக்காதீங்க. நான் அப்புறம் வர்றேன்.''
மெல்ல நடந்து சென்ற அவள் கொஞ்ச நேரத்தில் மறைந்தும் விட்டாள்.
பசியும் தாகமும் கோபமும் வெறியும் ஏமாற்றமும் அவனை வருத்திக் கொண்டிருந்தன. "பெரிய தர்மசங்கடமா இல்லே போச்சு இதிலிருந்து தப்பாவிட்டால் பேராபத்தாகத்தானே போயிடும்?" என்று மனதில் கூறிக்கொண்ட அவன், தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான். கொஞ்ச நேரத்தில் ஆடைகளை மாற்றிக்கொண்டு கதவைப் பூட்டிவிட்டு, தெருவில் இறங்கி ஏதோ ஒரு திசையை நோக்கி நடந்தான்.
வானம் மேகப் படலம் சிறிதுமின்றி நிர்மலமாய்க் காட்சியளித்தது. கதிரவன் தன் பொற் கிரணங்களை வானின் மையத்தில் நின்று பரப்பிக் கொண்டிருந்தான். ஒரே மயான அமைதி. மரக்கிளைகளின் அசைவு இருக்க வேண்டுமே! ஊஹும்! ஆடுகள் மரநிழல்களில் வாயை அசை போட்டபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.
வெயிலின் வெப்பம் தாங்காமல் உருகிக் கொண்டிருந்த தார் போட்ட சாலை வழியே அவன் தலையைத் தொங்கபோட்டபடி நடந்து போய்க் கொண்டிருந்தான். கொடுமையான பசியின் முன் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டிருந்தன. பெரிய படிப்பு, இளமை, பண்பு எல்லாமே அதன்முன் எங்கே போயினவோ தெரியவில்லை. அவனால் அதற்கு மேலும் நடக்க முடியாது என்ற அவலநிலை. ஒரு வேளை உணவு வேண்டிப் பலரிடமும் கையேந்திப் பார்த்துவிட்டான். குழிந்துபோன வயிற்றை ஒரு கையால் தடவி விட்டுக்கொண்டு, கிறங்கிப்போன கண்களை உயர்த்தியபடி வறண்டுபோன தொண்டையிலிருந்து கிளம்பும் நடுங்கிய குரலில் கெஞ்சினான்:
"ஏதாவது தாங்க, ஐயா பசிக்குது!''
வெறுப்புடன் அவனை விரட்டியடித்தார்கள் மக்கள். மக்களா அவர்கள்?
"உடம்பைக் கொழுக்க வச்சிக்கிட்டு பிச்சையா எடுக்க வர்றே? நல்லாத்தான் இருக்கு. இந்த நாடே கெட்டுப் போச்சுப்பா! எங்காவது போயி ஒரு வேலை தேடறதுக்கென்ன?''
வேலை! அதைக் கேட்டுக் கேட்டு அவனுடைய தொண்டைத் தண்ணீரே வற்றிவிட்டது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கானல்நீரை வேண்டிப் பாலைநிலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். தலையை நிமிர்த்தி நடக்கக்கூட உடம்பில் தெம்பு இல்லை. கால்கள் சோர்ந்து போய் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன.
என்றோ ஓடி வற்றி வறண்டு போயிருந்த ஆற்றின் கரையில் இருந்த மரத்தின்மேல் சாய்ந்தபடி அவன் நின்று கொண்டிருந்தான். நகரத்தின் ஆரவாரம், மனிதர்களின் உற்சாகக் குரல்கள் அப்போதும் அவனுடைய செவிகளில் விழுந்துகொண்டிருந்தன. அருகிலிருந்த சுடுகாட்டை நோக்கி அவன் கண்கள் சென்றன. அதைப் பார்க்கும்போது அவனுடைய மனதில் சிறிது அமைதி ஏற்பட்ட மாதிரி இருந்தது.
தன் தலைவிதியை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே வருத்தமாக இருந்தது. இந்த உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மனிதர்கள் எத்தனை எத்தனை விதத்தில் சுவையான தின்பண்டங்கள் தயாரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில விருந்துகளில் சாப்பிட்டது போக மீதியை... ஏன் நல்ல நல்ல பழங்களைக் கூட பாதி கடித்துவிட்டுக் குப்பைத் தொட்டியில் எறிகிறார்கள். ஆனால் அவனுக்கோ ஒரு சாண் வயிற்றைக் காப்பாற்ற ஒன்றும் கிடைக்கமாட்டேன் என்கிறது. மழை வேண்டி ஏங்கி நிற்கும் ஆம்பல்
மலர்போல் அவனுடைய கண்கள் வானின் மையத்தை நோக்கி நிமிர்ந்தன.