வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
அதில் கைகோர்த்து நடந்து செல்லும் காதலர்களின் சிரிப்பு, கொஞ்சல்கள். வட்டமாக அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் பள்ளி மாணவிகள். பூங்காவின் காட்சி ஒன்றிலும் அவன் கவனம் பதியவில்லை. எங்கிருந்தோ மிதந்து வரும் அந்தச் சோக கானத்தில் அவன் தன்னை முழுமையாக இழந்து லயித்துப் போயிருந்தான். அவனது சிந்தனை, கடந்து வந்த பாதையை நோக்கித் திரும்பியது. உணவின்றி அறையினுள் தளர்ந்து கிடந்தபோது உணவு கொண்டு வந்த அந்தப் பெண்ணின் நினைவு அப்போது வந்தது.
வசந்தகுமாரியின் அழகிய முகம் அவன் மனக் கண்ணின் முன் விசுவரூபம் எடுத்து நின்றது. அவளது நாணம்- தயக்கம் ஒவ்வொன்றையும் அவன் நினைத்துப் பார்த்தான்.
தன்னையே இரண்டு விழிகள் தொடர்ந்து ஆரம்பத்திலிருந்து பார்த்து வந்திருப்பதுபோல் உணர்ந்தான் அவன். அன்பு ததும்பும் விழிகள், மலர்ந்த அதரங்கள், வெண்பற்கள், புன்னகை ததும்பிய முகம். உறங்கிக் கிடந்த அவனது மனம் இப்போதுதான் விழிப்படைந்தது. அந்த இரு விழிகளை நோக்கிச் செல்ல வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. அவன் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். உடம்பு முழுவதும் வியர்வை முத்து முத்தாய் அரும்பியிருந்தது. இதயம் லேசானதுபோல் தோன்றியது அவனுக்கு.
இப்போது அந்தப் பாட்டு முடிந்து ரேடியோவில் வேறொரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. சுருட்டின் புகை அந்த இடத்தை அப்பிக்கொண்டது.
யாரோ ஒரு மனிதன் பெஞ்சில் வந்து அமர்ந்தான். மழிக்காத முகம். கசங்கிப்போன ஆடைகள். அப்பாஸுக்கு அந்த மனிதனின் தோற்றம் வெறுப்பைத் தந்தது.
வந்த ஆள் அவனையே பார்த்தான்.
"நீ இந்த ஊர்தானா?'' அந்த ஆள் கேட்டான்.
"இல்லை.''
அதற்குமேல் அந்த ஆள் ஒன்றும் பேசவில்லை. அப்பாஸ் பூங்காவின் காட்சி ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தான். கையோடு கை சேர்ந்துக்கொண்டு சிரித்தபடி நடந்துபோகும் ஆங்கிலோ- இந்தியக் காதலர்களையும், நடந்து செல்லும் இளைஞர்களை ஓரக் கண்களால் பார்க்கும் இளம் பெண்களையும், கூவிக் கூவித் தங்கள்
ஒரு சாண் வயிற்றுக்காக வேண்டிப் போராடும் பத்திரிகை விற்கும் சிறுவர்களையும் அப்பாஸ் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று அதிர்ந்து போய் நின்றான். கேட்டின் அருகே அவனிடம் நாலணா பெற்றுக்கொண்ட அந்த மனிதன் ஓர் இளைஞனுடன் ஏதோ பேசியபடி நின்று கொண்டிருந்தான். இப்போதும் அதே கறுப்புத் தொப்பி. கறுப்புக் கோட்டின் மேல் ரோமத்தாலான சிவந்த போர்வையைத்தான் அந்த ஆள் போர்த்தியிருந்தான். அடுத்து உட்கார்ந்திருந்த மனிதரிடம் மெதுவாகக் கேட்டான் அப்பாஸ்.
"ஏங்க, உங்களுக்கு அந்த ஆளைத் தெரியுமா?''
"தெரியுமாவா? ஏன் அந்த ஆள் உன்னையும் ஏமாத்திட்டானா?''
"ஏமாத்திட்டானா! என்ன சொல்றீங்க?''
"உனக்குத் தெரியாதுபோல் இருக்கு. ஏமாத்திப் பொழைக்கிறது தான் அந்த ஆளு தொழிலே! கள்ளு குடிக்கணும், கஞ்சா இழுக்கணும். இதுக்காக அவன் யாரையும் ஏமாத்தத் தயங்க மாட்டான். இங்கே பாரு. அதோ அங்கே இருக்கு பாரு "அம்பிகா மில்"னு. அங்க வேலை பார்க்கிற ஒரு தொழிலாளி நான். என் பேர் ஜப்பார். அந்த ஆளு பொண்டாட்டி நான் வேலை செய்யற மில்லிலேதான் வேலை செய்யறா. ஒரு நாளைக்கு ஆறு அணா கூலி அவளுக்கு. அதிலே பாதியையும் அவனே புடுங்கிக்குவான். கள்ளுக்கும் கஞ்சாவுக்கும் அதுபோதுமா? அதனாலே...''
"ஓஹோ! அப்படியா விஷயம்!''
தன்னை யாரோ வாளால் வெட்டுவதுபோல் இருந்தது அப்பாஸுக்கு. பெரிய தியாகம் செய்வதாக நினைத்துப் பண்ணிய காரியத்தின் பயன் இதுதானா?
"நீ...'' அப்பாஸை நோக்கிக் கேட்டான் அந்த மனிதன்.
அப்பாஸ் தன் கதையை ஒன்றுவிடாமல் கூறினான். அவன்மேல் இரக்கம் கொண்ட அந்த மனிதன், "நான் வேலை செய்யற மில்லில் உனக்கு ஒரு வேலை வாங்கித் தர்றேன். வா போவோம் வீட்டுக்கு'' என்றான்.
இவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடிய பதில் அந்த ஆளிடமிருந்து வரும் என்று அப்பாஸ் எதிர்பார்க்கவில்லை. அதை அவன் எப்படி மறுப்பான்?
"சரி. போவோம்.''
இருவரும் தெருவில் இறங்கி நடந்தார்கள். தெரு மின்விளக்குகள் ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. அப்பாஸின் வாழ்க்கை இனி ஒளிமயமாக இருக்கும் என்று அவை அறிவித்தனவோ?
வெகு நாளைய நண்பர்கள் மாதிரி அத்தனை நெருக்கமாக அவர்கள் இருவரும் நடந்து போனார்கள்.
கஷ்டங்கள் மறைந்து அப்பாஸின் வாழ்க்கையில் ஓரளவுக்கு நம்பிக்கை ரேகைகள் கிளை விடலாயின. அவனுடைய முகத்தில்கூட ஒளி படர்ந்தது. இந்த மனித சமுதாயத்தில் அவனும் ஓர் அங்கம். உலகுக்கே உணவு அளித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களில் அவனும் ஒருவன். அவனிடம் இப்போதெல்லாம் தைரியம் சற்று அதிகமாகவே குடிகொண்டிருக்கிறது. உலகை வாழ வைக்க உழைக்கும் இனத்தில் அவன் ஒரு துளி.
இரண்டு மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன. அவன் அவர்களுடைய ஆலையின் ஊழியர் சங்கத்தில் செயலாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை என்றாலும் ஒரு வெறுமை உணர்வு. எப்போது பார்த்தாலும் அவன் மனதில் அந்த வெறுமை குடிகொண்டு துன்பத்தை விளைவித்தது. தனியே அமர்ந்திருக்கும் வேளையில் வசந்தகுமாரியின் இரு விழிகள் அவனையே வைத்த கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவனது முகத்தில் சோகம் இழையோடியது. அவனது இதயம் ஏதோ ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டிருந்தது.
"என்ன, என்னவோ மாதிரி இருக்கே? வீட்டுக்கு ஏதாவது அனுப்பினியா?'' ஜப்பார் கேட்டான்.
"அனுப்பினேன்.'' அப்பாஸின் பதிலில் உணர்வே இல்லை.
"பிறகு என்ன?'' தன்னிடமிருந்து எதையோ அப்பாஸ் மறைக்க முயல்கிறான் என்பதை ஜப்பார் புரிந்துகொள்ளாமல் இல்லை.
"சொல்லு அப்பாஸ்! ஏன் என்னவோபோல் இருக்கே?''
மாலை நேரம். வானத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. எங்கிருந்தோ மிதந்து வந்த குளிர்மென் காற்று உடம்பைத் தொட்டுவிட்டுப் போயிற்று. ஊழியர் சங்க அலுவலகத்தின் மாடியில் இரண்டு ஈஸி சேர்களைப் போட்டு நண்பர்கள் இருவரும் அவற்றில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டு அப்பாஸ், "ஒரு நிகழ்ச்சி. அது என்னை இன்னமும் வேதனைப்படுத்திக்கிட்டிருக்கு. அன்பு ததும்பும் இரு விழிகள்...'' என்று இழுத்தான்.
ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த ஜப்பார் மெல்லப் புன்முறுவல் பூத்தபடி கேட்டான்:
"யாருடைய விழிகள்?''
அப்பாஸ் தயங்கியபடி இருந்தான். அந்த அளவுக்கு அவனுக்குக் கூச்சம் இருந்தாலும் ஜப்பார் வற்புறுத்தவே கூறினான். "எனக்கென்னவோ அவள் ஒரு மாதிரியான நடத்தையுள்ளவள் என்று பட்டது.''
அப்பாஸ் முழுக்கதையையும் விவரமாகக் கூறினான். எல்லாவற்றையும் கேட்ட ஜப்பார் கடைசியில் சொன்னான்: "அப்படி ஒரேயடியாக எண்ணிவிடாதே! பார்ப்போம்; அவளையே மனைவியாக ஏற்றுக்கொள்.''