வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
அர்த்தம் புரியாத ஒரு மலர்ச்சி அவர்களின் நயனங்களில் அப்போது நடமாடிக் கொண்டிருந்தது. அவன் வேறு வழியின்றி அறைக்கே திரும்பிவிட்டான்.
சுமார் அரை மணி நேரம் அறைக்குள்ளேயே இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருந்த அவன் குழாயடியில் சந்தடி கொஞ்சம் ஓய்ந்தபிறகுதான் அறையைவிட்டு வெளியே வந்தான். ஒரே ஒரு
பெண் மட்டும் குழாயடியில் நின்று அவனையே ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்கி வரக்கண்டதும் சிறிது நகர்ந்து நின்று அவன் போவதற்கு வசதியாக வழி மாறிக் கொடுத்தாள். தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைக் கண்டபோது அவனுக்கே கூச்சமாக இருந்தது. குழாயையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான். அடுத்த நிமிஷம் என்ன நினைத்தாளோ, குலுங்கிச் சிரித்தபடி அவள் ஓடி விட்டாள்.
குளித்து முடித்ததும் அவன் அறையைப் பூட்டி வெளியே நடக்கலானான். சாலையின் திருப்பத்தில் செல்லும்போது பின்னால் திரும்பிப் பார்த்தான். அவனையே வைத்த கண் எடுக்காமல் நோக்கியபடி தூரத்தில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள்.
அவள் ஏன் அவனையே அப்படிப் பார்க்க வேண்டும்?
அவன் திரும்பி வரும்போது சாயங்காலம் ஆகிவிட்டது. தெருவில் அதிக ஜன நடமாட்டம். தெருவில் இரு பக்கங்களிலும் வரிசையாக உள்ள வீடுகளில் விளக்குகள் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்தன. அந்த விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னே அந்த ஒரு ஜோடிக் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. முறையாக சீவி முடித்த கூந்தல்கள், பவுடர் பூசிய முகங்கள், கவிதை பாடும் கண்கள், சிவந்த அதரங்கள், உருண்டுத் திரண்ட உடற்கட்டு- இப்படி எத்தனை எத்தனையோ அவன் பார்வையில் விழுந்தன. அப்போது முல்லை, பிச்சி, ரோஜா மலர்களின் நறுமணம் அந்தத் தெருவையே கிறங்க வைத்துக்கொண்டிருந்தது. மிகவும் நவநாகரிகமாக உடையணிந்து ஸ்டைல் காட்டியபடி நடந்து போய்க் கொண்டிருக்கும் இளைஞர்களும் முடி நரைத்த கிழவர்களும் தெருவில் கொஞ்சம் அதிக அளவிலேயே தென்பட்டார்கள். நேரம் செல்லச் செல்ல சிரிப்பும் கும்மாளமும் கேலியும் அதிகரித்துக் கொண்டிருந்தன. தலையில் முக்காடு போட்டுக்கொண்டிருக்கும் யாரோ ஒருசிலர் தெருவின் பின்பக்கமாய்
உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ எந்தவிதமான தயக்கமுமின்றி முன் பக்க வாசல் வழியே போகிறார்கள். சிலர் ஏதோ தங்களுக்குள் மெல்ல முணுமுணுத்தபடி திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் உரத்த குரலில் என்ன என்னவோ பேசித் தெருவில் போவோர் வருவோரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வாழ்க்கை எப்போதும் இருளின் போர்வையிலேயே நடக்கும். அங்குள்ள ஒவ்வொருவரும் வாழ்க்கையை உல்லாசமாய் அனுபவிக்கிறார்கள் போலும். தயக்கத்துடன் மனதில் எதையெதையெல்லாமோ நினைத்து அசை போட்டபடி நடந்த அவன் அறையினுள் நுழைந்ததும் கதவை உள்பக்கமாய்த் தாழிட்டான். இரவு சுமார் இரண்டு மணி வரை அந்த ஆர்ப்பாட்டமும் சந்தடியும் நீடித்துக்கொண்டிருந்தன. போலீஸின் வருகையோடு எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது. இந்த உலகம் இப்போது மிகவும் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மட்டும் தூக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாய் வெகுநேரம் வரை படுக்கையில் புரண்டு கொண்டேயிருந்தான்.
பொழுது விடிந்தது. வழக்கம்போல் தண்ணீர்க் குழாயைச் சுற்றிலும் ஒரே கூட்டம். அதே பெண் கண்களிலிருந்து நீர் அருவியெனக் கன்னத்தில் வழியே குடல் குமட்டும் நிலையில் நின்று கொண்டிருந்தாள். நெற்றியில் வியர்வை அரும்பிக் கொண்டிருந்தது. நிற்க மாட்டாமல் மெல்லத் தள்ளாடியவாறே அருகிலிருந்த மேடையில் போய் அமர்ந்தாள். அவளைக் கண்ட மற்றவர்கள் தமக்குள் கேலிப்புன்னகை புரிந்தார்கள். அதற்கு மேலும் அங்கே நிற்க அவனுக்குப் பிடிக்கவில்லை. உள்ளத்தில் வெறுப்பு அதிகமாகக் குடிகொள்ள, அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டினான். அவனது முகபாவத்தை அவளும் கவனிக்கத்தான் செய்தாள். அவளுடைய கண்களில் இனம் புரியாத ஒரு கலக்கம். "உஸ்" என்று பெரிதாக ஏக்கப்
பெருமூச்சு ஒன்றைவிட்டாள். கண்ணாடி ஜன்னல்களின் மறைவில் தம் அழகைக் காட்டி, பணத்துக்காக எதையும் இழக்கத் தயாராகும் பெண் பிறவிகளைக் கண்டாலே அவனுக்குப் பயம். ஏன், வெறுப்புகூட! கொஞ்சமும் இதயமில்லாத அரக்கிகள்! அன்பு, காதல், நம்பிக்கை எதுவுமே அவர்களைத் தீண்டியதாகத் தெரியவில்லை. அடக்கம், பணிவு, மேன்மை எல்லாம் அவர்களை விட்டு ஒரேயடியாக ஓடிவிட்டன என்றுதான் தோன்றியது. கொலை, வஞ்சனை- அப்பப்பா! எத்தனை எத்தனை கொடுமைகள்! பயங்கரமான நோய்களை உலகம் முழுமைக்கும் பரப்பி வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் பாவப் பிறவிகள்.
நெருப்பில் விழுந்துவிட்ட புழுவைப்போல் அவன் துடித்தான். அடித்தளமற்ற அந்தரத்தில் இனிமேலும் வாழ அவனுக்கு விருப்பமில்லை. பாவம், அவன் என்ன செய்வான். தினமும் அவளை அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்... அவளிடம் அர்த்தம் புரியாத ஒரு சோகத்தின் சாயல்... ஓர் ஏக்கம்... அவனைக் காணும் தருணங்களில் அவளுடைய கண்களில் ஒரு மலர்ச்சி... முகத்தில் ஒரு பிரகாசம்... அவள் ஏதோ கூற வாயெடுப்பாள். அதற்குள் அவன் வெறுப்புடன் அந்த இடத்தைவிட்டுப் போயிருப்பான்.
அவனையே ஏக்கத்துடன் பார்த்தபடி அவள் நின்றிருப்பாள். புன்சிரிப்பு அதரங்களில் தவழ, அவன் போவதையே கவனித்தபடி இருப்பாள். அவனது உள்ளத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஒரு புத்துணர்வு எழும். அப்போது இதுமாதிரி எத்தனை பேரைப் பார்த்து இவள் சிரித்திருப்பாளோ, எத்தனை பேருடன் பழகியிருப்பாளோ என்று எண்ணமிட்டபடி கண்களை மூடியவாறு அவன் வேகமாக நடையைக் கட்டுவான்.
அவனுடைய துணிகள் நைந்து போக ஆரம்பித்தன. சில இடங்களில் கிழிசல்களும் இருந்தன. எதிலுமே இப்போதெல்லாம் ஒரு
கவனமின்மை. வெறிச்சென்றிருந்த பகல் நேரமும் இருண்ட இரவுகளுமாய்க் காலம் சுழன்று கொண்டிருந்தது. சிறகொடிந்த பறவையாய் வாழ்க்கையில் ஒரு பிடிப்புமின்றித் துடித்துக் கொண்டிருந்தான் அவன்.
கொஞ்ச நாட்களாகவே அவனை அங்கே காண முடியவில்லை. அடிக்கொருதரம் அவள் அவனது அறையை நோக்கிக் கண்களைச் செலுத்துவாள். கதவு சாத்தப்பட்டிருந்தது. சூரியன் வானின் மையத்தில் சிரித்துக்கொண்டிருந்தான். தூணில் சாய்ந்தபடி அவள் நின்றுகொண்டிருந்தாள்.
கோபத்துடன் அப்போது வீட்டின் சொந்தக்காரன் அந்த அறையின்முன் வந்து நின்றான். அவன் சப்தம் போடுவது அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.
"என்னப்பா இன்னும் வாடகை தரலை?''
"வேலை ஒண்ணும் கெடைக்கலீங்க. ஏதாவது விக்கலாம்னா விக்கிறதுக்கு என்கிட்ட என்ன இருக்கு?''
"நான் அப்பவே நினைச்சேன். இப்படியெல்லாம் நடக்கும்னு. போய் அலை. வேலை ஏதாவது கூரையைப் பிச்சுக்கிட்டு வருமா? இன்னிக்கே வாடகை வராட்டா வெளியே படுக்க வேண்டியதுதான். என்ன தெரியுதா?''