
உண்மையிலேயே அப்பாஸ் இதைக் கேட்டதும் நடுங்கிப்போனான். தான் "நடத்தை கெட்டவள்" என்று நம்பும் ஒருத்தியை மனைவியாக ஏற்றுக்கொள்வதா? அது எப்படி முடியும்?
ஆனாலும் ஜப்பார், "அவள் அப்படி இருந்தாள் என்று என்ன நிச்சயம்? வாழறதுக்கு வேற வழி இருக்கிறது என்று தெரிந்தால் ஒரு பெண் ஏன் கெட்ட வழியில் போகிறாள்?'' என்று கேட்டான்.
அவனே தொடர்ந்தான்:
"பசி, வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் சேர்ந்து ஒருத்தியை அந்த மாதிரி சூழ்நிலையில் கொண்டு விடலாம். இருந்தாலும் இதயமுன்னு ஒண்ணு இருக்கு. அது நிச்சயம் அன்புக்காக ஏங்கும். எனக்குத் தெரியும். நீயே யோசித்து பாரு. சொந்த பந்தம் யாருமே இல்லாம, அநாதையா சாப்பிடறதுக்கு ஒண்ணுமில்லாம ரூமுக்குள் நீ சுருண்டு பிணம் மாதிரி சாகப்பொழைக்கக் கெடக்கிறப்போ அவள் ஏன் உனக்கு உதவ வரணும்? உன்னை அவள் மயக்க உன்கிட்ட என்ன இருக்கு? இதைக்கூடவா உன்னாலே புரிஞ்சுக்க முடியலே? அன்புக்காக அவள் உன்னைத் தேடி வந்திருக்கா. நீயோ அவளை விரட்டினே!''
"சரி. நான் இப்ப என்ன செய்யணும்ன்றே?'' அப்பாஸ் குழந்தை மாதிரி கேட்டான்.
"நாம முதல்லே அவளைப் பார்ப்போம். பிறகு...''
ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவருமே, என்றோ அவன் தங்கியிருந்த அந்த இடத்துக்குப் போனார்கள். அப்பாஸ் வெளியிலேயே நின்றுவிட்டான். அவன் சுட்டிக்காட்டிய வீட்டினுள் போனான் ஜப்பார்.
உள்ளே ஒரே இருட்டு. வாடித் தளர்ந்த வாழைத் தண்டாய் நார்க் கட்டிலின்மேல் கிடந்தாள் வசந்தகுமாரி. கைவிசிறியால் விசிறியபடி அவளருகே அமர்ந்திருந்தாள் ஒரு கிழவி. ஜப்பாரைக் கண்டதும் அவள் எழுந்து நின்றாள்.
"நான் வந்தது முன்னாலே இங்கே தங்கியிருந்த ஒரு பையன் விஷயமா...''
அவன் சரியாகக்கூட கூறி முடிக்கவில்லை. அதற்குள் குமுறிக் குமுறி அழுதாள் வசந்தகுமாரி. அவளைத் தேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் அந்தக் கிழவி. அப்போதும் அவள் தன் அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவளையே பரிதாபமாகப் பார்த்தான் ஜப்பார். பின்பு கதவைத் திறந்து கிழவி வெளியே நடந்து போனாள். அவளைப் பின்பற்றி நடந்தான் ஜப்பார். பூட்டியிருந்த ஓர் அறையைத் திறந்து கிழவி உள்ளே போனாள். ஜப்பாரும் போனான். சிறிய அறை என்றாலும் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது.
"இங்கே பாருங்க. இந்த ரூமுக்கு இப்போதும் அவள் வாடகை கொடுக்கிறா. அந்தப் பிள்ளையாண்டான் போனதிலிருந்தே அவளுக்கு உடம்புக்கு நல்லா இல்லாமல் போச்சு. அவள் என்கிட்டே முதல்லே ஒண்ணுமே சொல்லலே. பிறகுதான் தெரியுது எல்லாச் சங்கதியும். இன்னைக்கு வருவான், நாளைக்கு வருவான்னு நான்தான் அவளை இத்தனை நாளும் சமாதானப் படுத்திக்கிட்டிருந்தேன்.'' கிழவி கூறினாள்.
"இந்தப் பெண் உங்க மகளா?''
கிழவி பதில் சொல்ல முதலில் தயங்கினாள். ஜப்பார் வற்புறுத்தவே, "இல்லை. என் வளர்ப்புப் பெண் இவள். ஆஸ்பத்திரியில் எனக்கு இவள் கெடைச்சா'' என்றாள் தயங்கிய குரலில்.
"கொஞ்சம் இங்கே நில்லுங்க. இதோ வர்றேன் அவனையும் கூட்டிக்கிட்டு.''
அப்பாஸிடம் எல்லா விவரத்தையும் கூறினான் ஜப்பார்.
"சரி... நீங்க போய்வாங்க. நான் என் பழைய அறைக்கே வாசம் போறேன் மறுபடியும்.'' "சிரித்தபடி கூறினான் அப்பாஸ், ஜப்பாரிடம் விடை பெறும் சாக்கில்.''
அவனது இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. கால்கள் அவனையும் மீறி வேகமாக அறையினுள் நுழைந்தன. காலடிச் சப்தம் கேட்டு அவள் எழுந்து தன் தலையை உயர்த்தினாள். அடுத்த நிமிஷம் கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டாள். இடுப்பில் சக்தியில்லாமல் சாயத் தொடங்கினாள். உடனே அவளைத் தாங்கிக்கொண்டான் அப்பாஸ்.
அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுந்தான். இருவருடைய முகத்திலும் ஒரு மலர்ச்சி. அதரங்களில் புன்முறுவல்.
"வசந்தகுமாரி, என்னை மன்னிப்பாயா?'' மெல்லக் கேட்டான்.
அப்போதும் அவள் அன்பு ததும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook