வாழ்வின் நிழல் சுவடுகள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
நகரத்தின் ஆரவாரத்துக்கிடையே ஆவல்கள் மனதின் அடித்தளத்திலிருந்து பொங்கி வழிந்து கொண்டிருந்தன. அப்போது அவனுடைய இதயத்தில் இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி, முகத்தில் ஒரு பிரகாசம். அப்படி ஒன்றும் மார்தட்டிக் கூறிக்கொள்கிற அளவுக்குப் பிரபலம் பெற்றிராத அந்த ஹோட்டலில் தங்கியிருப்பது தன் கவுரவத்துக்கு இழுக்கு என்று அப்போது அவன் நினைக்காமல் இல்லை. என்ன இருந்தாலும் பெரிய நகரம் இல்லையா? இதயத்து ஆசைகளுக்கேற்றபடியாவது இருந்தால்தானே நல்லது... அவன் கதவை இழுத்துப் பூட்டினான்.
"தட் தட்" என்று படிகளில் ஓசை எழுப்பியபடி அவன் இறங்கிப் போவதையே எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உதடுகளில் புன்சிரிப்புத் தவழ அவனது முகத்தையே பணிவுடன் பார்த்தார் ஹோட்டல் நிர்வாகி.
"எங்கே போறாப்பலே?''
அலட்சியமாக நான்கு பக்கமும் பார்த்தபடி இளைஞன், சிகரெட் ஒன்றை உதட்டில் பொருத்திய வண்ணம் மெல்லிய குரலில், "சினிமாவுக்குப் போயிட்டு வரலாம்னு தோணித்து'' என்றான்.
அடுத்த ஒருசில நிமிடங்களிலேயே தன் வாழ்வின் அத்தியாயத்தை அவன் தொடங்கிவிட்டான். பெட் காபி, முகம் வழித்தல், குளியல், துணி மாற்றுதல், தேநீர் பருகுதல், பத்திரிகை படித்தல், சாப்பாடு, தூக்கம், விளையாட்டு, மாலை நேரச் சவாரி, சினிமா- இப்படிப் பொழுது போயிற்று.
தினமும் காலையில் எழுந்ததும் அவன் பார்க்கும் முதல் வேலை பத்திரிகையில் வந்திருக்கும் "வேண்டும்" (வான்டெட்) என்ற பத்திதான். கல்வித் தகுதியையும் மற்ற தகுதிகளையும் விவரமாக, கவர்ச்சியாக எழுதி ஒரு அடி நீளத்துக்குள்ள கவரினுள் அடைத்து வேலைக்கு விண்ணப்பம் செய்துகொள்ளும் தாளை அனுப்பி வைப்பான். ஒருமுறை இருமுறை இல்லை; இது ஏதோ தினக்கடன் என்பதுபோல தினமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எதிர்காலத்தில், தான் ஏதோ பெரிய பதவியில் அமரப் போகிற ஆவலுடன் அவனுடைய நாட்கள் ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டிருந்தன. மாதங்கள் இரண்டு ஓடிவிட்டன, மின்னல் வேகத்தில். மனுப் போட்ட இடங்களிலிருந்து பதில் இன்று வரும், நாளை வரும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, ஒன்றன்பின் ஒன்றாக நாள் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சம். அந்த இரண்டாம் மாடிக்கு ஒருவராவது ஏறி வர வேண்டுமே! எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனுக்கு மனதில் சலிப்பே ஏற்பட்டுவிட்டது. நாளாக ஆக மணிபர்ஸின் கனமும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. இதயத்தின் அடித்தளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துயர் ஆட்கொண்டது. சில சமயங்களில் அவன் தன்னையே மறந்து போய், சங்கடக் கடலில் மூழ்கிப் போவதும் உண்டு.
மனநிலை மிகவும் மோசமாகி வந்தது. உயர்ந்த கல்வித்தகுதிகள் இருந்தால்கூட வேலை கிடைக்கவில்லை என்ற நிலை நாட்டில். அரை மனதுடன் படியிறங்கிக் கீழே போனான் அவன். மனிதச் சந்தடி நிறைந்த தெரு. சிறந்த கல்வியறிவும். கௌரவமும் உள்ள அவன் ஒவ்வோர் இடமாக வேலை வேண்டி ஏறி இறங்குவதா? ஹோட்டல் நிர்வாகி அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். அவரது பார்வையும் முகபாவனையும் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை அவனுக்கு. எரிச்சலுடன் பல்லைக் கடித்தபடி தெருவில் இறங்கினான்.
ஜன சமுத்திரத்துக்கிடையில் கலந்து, பெரிய நம்பிக்கையுடன் நடக்கலானான்.
பெரிய அலுவலகம் அது.
வெளியே நின்றபடி, உள்ளே போகலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் அவன் இருந்தான்.
"ஏய், யாரப்பா அது?''
அவன் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனான். கூர்க்கா பெரிய கம்புடன் கண்களை உருட்டி அவனை உள்ளே போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய கோலத்தைக் கால் முதல் தலைவரை ஆராய்ந்த கூர்க்காவின் முகபாவனையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. தலையை மெல்ல ஆட்டியபடி கூர்க்கா உரக்கக் கத்தினான்.
"போகக்கூடாதுன்னா போகக்கூடாது!''
அவனுக்கே கூர்க்கா அப்படிக் கூறியது வியப்பாயிருந்தது. தன்னை ஒருவன் உள்ளே போகவிடாமல் தடுப்பதா? துணிவான குரலில் கூறினான். "ம்... மானேஜரைப் பார்க்கணும்.''
கூர்க்கா சுட்டு விரலை நீட்டி வாசலில் தொங்கிக் கொண்டிருந்த பலகையைக் காட்டினான்.
"நோ வேக்கன்ஸின்னு அங்கே எழுதியிருக்கிறதே பார்க்கலையா?'' இளைஞன் திரும்பிப் பார்த்தான். பெரிய கொட்டை எழுத்தில் "நோ வேக்கன்ஸி" என்று எழுதப்பட்டுத்தான் இருந்தது. அப்படி என்றால் அவனுக்கு அங்கே வேலை இல்லை. இதயத்தில் துக்கம் கவிந்து இருளைப் பரப்பிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் முகமே இருட்டாகிப் போனது.
அதன்பிறகு அவன் எத்தனையோ கம்பெனிகளின் படியில் ஏறி இறங்கினான். எல்லா இடங்களிலும் அவன் சந்தித்தது என்னவோ ஏமாற்றம் ஒன்றுதான். நடக்க முடியாத அளவுக்கு உடம்பு முழுவதும் ஒரு தளர்ச்சி.
கடைசியாக ஒரு கம்பெனி.
கூர்க்கா குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.
யாருக்கும் தெரியாமல் பூனை மாதிரி எந்தவிதமான சந்தடியுமின்றி அவன் விருக்கென்று உள்ளே நுழைந்துவிட்டான். மானேஜரின் முன் போய் பணிவுடன் நின்ற அவனை நோக்கி மானேஜர் கத்த ஆரம்பித்துவிட்டார். "சே... சே... ஒரே இழவாப் போச்சய்யா. காலையிலே எந்திரிச்சா சாயங்காலம் வரை இதே வேலையாப் போச்சு தினமும். வேலை காலி இல்லை, காலி இல்லைன்னு எத்தனை தடவைதான் சொல்றது. நீங்கள்லாம் ஏம்பா தூக்குப்போட்டுச் செத்துத் தொலைக்காம இப்படி மனுஷங்களைப் போட்டு வாட்டி எடுத்துக்கிட்டிருக்கீங்க?''
இப்படி அவர் கத்திய பின்னுங்கூட அவன் நகருவதாயில்லை. அவனது அந்த நிலை அவருடைய மனதில் கொஞ்சம் இரக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சற்றே தாழ்ந்த குரலில் சமாதானம் சொல்வதுபோலச் சொன்னார்: "இங்க பாருங்க மிஸ்டர்! உண்மையாகவே சொல்றேன். வேலை காலி இல்லை. இங்கே ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன்ஸ் குவிந்து கிடக்கு. நிலைமை இப்படி இருக்கிறப்போ நான் என்ன செய்யறது சொல்லுங்கோ?'' என்றார்.
அவனது தலைக்குள் உண்மையாகவே போராட்டம் நடக்கலாயிற்று. நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி ஹோட்டலை நோக்கி நடையைக் கட்டினான். முகத்தில் ஏமாற்றத்தால் விளைந்த அறிகுறிகள்
நன்றாகவே தெரிந்தன. அவனது முகத்தையே வெறித்து நோக்கினார் ஹோட்டல் நிர்வாகி. அவருடைய முட்டைக் கண்கள் மேலும் கொஞ்சம் பெரிதாயிற்று. அப்போது நகத்தை வாயில் வைத்துக் கடித்தபடி ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் அவர்.
இப்போது பார்த்த மாதிரி இருந்தது. அதற்குள் எத்தனையோ நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடி மறைந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலந்தான் அந்த இளைஞனிடம் எந்த அளவுக்கு மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. அவன் இப்போதெல்லாம் முகம் மழித்துக் கொள்வதில்லை. ஆடை மாற்றுவதில்கூட அப்படி ஒன்றும் அவன் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. பத்திரிகை வாசிப்பதுகூட முற்றும் நின்றுவிட்டது. எல்லாவற்றுக்குமே அவன் ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.