வாழ்வின் நிழல் சுவடுகள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6409
ஜட்காவிலிருந்து இறங்கியதுதான் தாமதம், சற்று உரக்க அதிகாரத் தோரணையில் கேட்டான் அந்த நவநாகரிக இளைஞன்: "மிஸ்டர், இங்கே தங்குறதுக்கு இடம் இருக்குதா?''
முதுகுப் பக்கம் கையைக் கட்டி, மனசுக்குள் ஏதோ கணக்குக் கூட்டிக் கொண்டே உலாவியபடி இருந்த ஹோட்டல் நிர்வாகி, யார் தம்மை அழைப்பதென்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தார். அங்கே அவருக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். நிர்வாகியின் முகத்தில் எதிர்பாராத ஒரு மலர்ச்சி. உதடுகளில் ஒரு விநோதமான புன்சிரிப்பு.
தெருவில்- ஹோட்டலுக்கு முன் பக்கம் வண்டியில் இருந்த ட்ரங்குப் பெட்டியையும் பெரிய படுக்கையையும் பார்த்தபோது அவருடைய மனதின் அடித்தளத்தில் என்னவோ ஆனந்தம் உண்டாகத்தான் செய்தது.
"இருக்கு, சார்! நல்ல ரூம். எல்லா வசதிகளும் உண்டு. வாங்க சார் உள்ளே!''
நெருப்புக்கோழி மாதிரி பரபரத்தார் அவர். அங்கு எலும்பும் தோலுமாய் நின்றுகொண்டிருந்த கூலியாளை அதிகாரத் தொனியில் ஆணையிட்டார் நிர்வாகி.
"டேய், அந்தப் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கிட்டு சீக்கிரம் மேலே கொண்டு வா.''
அந்த இளைஞனுக்கு முன்னால் நடந்து போனார் நிர்வாகி. ஏதோ புகைவண்டித் தொடர்போல் ஒருவருக்குப்பின் ஒருவராய் நடந்து போனார்கள் மூவரும். மாடியில் தெருப்பக்கமாய் பார்த்த ஓர் அறை. மூவரும் அறையினுள் நுழைந்தனர். நிர்வாகி, தூசு படிந்து காணப்பட்ட ஜன்னல் ஒவ்வொன்றையும் திறந்துவிட்டவுடன், ஏதோ போர்க்களத்தில் எதிரிகளையெல்லாம் கொன்று தீர்ந்துவிட்ட வீரன் மாதிரி வெற்றிப்
பெருமிதத்துடன் மார்பை நிமிர்த்தி வைத்துக்கொண்டு இளைஞனின் முகத்தைப் பார்க்கலானார்.
அந்த இளைஞனுக்கு உண்மையாகவே அந்த அறை மிகவும் பிடித்தது. ஜன்னல் வழியே காற்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வானத்தை முட்டுவதுபோல் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், ஆயிரக்கணக்கில் மக்கள் நிறைந்து திக்கித் திணறிப் போய்க்கொண்டிருக்கும் சாலைகள், பொதுமக்களுக்கென்று கட்டப்பட்ட பூங்கா, புகையை "குபு குபு"வென்று ஊதித் தள்ளிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளின் புகைக்குழாய்கள் தார் போட்ட பளபளப்பான சாலை, ஒன்றுக்குப்பின் ஒன்றாய்ச் சாலையில் போய்கொண்டிருக்கும் கார் வரிசை, மனிதர்களை ஏற்றிக்கொண்டு "சர் சர்" என்று இரைச்சல் எழுப்பிப் போய்க்கொண்டிருக்கும் டிராம் வண்டிகள், ஏதோ ஆபத்திலிருந்து தப்பிப் போகிற மாதிரி ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டு யந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் மனித வெள்ளம்... எல்லாமே ஜன்னல் வழியே நோக்கும்போது தெரிந்தன, இளைஞனின் கண்களுக்கு. நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை, கடல் அலைகளையொத்த பேரிரைச்சல், அவனுடைய மனதில் புத்துணர்ச்சி உண்டாக ஆரம்பித்தது. முகத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் ஒளி பரவிக் கொண்டிருந்தது. நாற்காலியைப் பின் பக்கமாய் இழுத்துப் போட்டுக்கொண்டு சௌகரியமாய் உட்கார்ந்து கொண்டான்.
"இது போதும்!''
ஹோட்டல் நிர்வாகிக்கு இதைக் கேட்டதும் தலை கால் புரியவில்லை. அந்த இளைஞன் உள்ளுக்குள் ஆனந்தம் பொங்கி வழிய, அங்கே தலையைச் சொறிந்தபடி நின்றிருந்த கூலியாளிடம் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை வீசி எறிந்தான். அதைக் கண்டதும் கூலியாளின் முகம் பிரகாசமடைந்தது. அதைக் கண்டு ஹோட்டல் நிர்வாகியின் முகத்திலும் மலர்ச்சி. இந்த இளைஞன் பெரிய பணக்கார வீட்டுப்
பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருடைய மனம் அப்போது அசை போட்டுக் கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ மேலும் கொஞ்சம் முதுகை வளைத்துக் கொண்டு பணிவான குரலில் கேட்டார். "கூல் ட்ரிங்க்ஸ் ஏதாவது வேணுமா சார்?''
"ஒரு டீ போதும்- ஸ்ட்ராங்கா!''
சுவரில் இருந்த பட்டனை அழுத்தினார் நிர்வாகி. கீழே தெளிவில்லாமல் மின்சார மணி அலறிக்கொண்டிருந்தது. அடுத்த நிமிஷம் மெலிந்துபோய் வற்றல் மாதிரி இருந்த பையன் ஒருவன் அவர் முன் வந்து நின்றான்.
"சீக்கிரம் ஒரு டீ கொண்டு வா!''
மணவறையில் மாப்பிள்ளைமுன் பணிவாகத் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கும் மணப்பெண் மாதிரி அந்த இளைஞனின் முன் நின்றிருந்தார் நிர்வாகி.
நாடக அரங்குகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா மாளிகை, பார்க்க வேண்டிய காட்சிகள், போக வேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் கூறி வர்ணனை செய்ய ஆரம்பித்து விட்டார் அவர். அவர் கூறும் ஒவ்வொன்றையும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான் இளைஞன். பையன் கொண்டு வந்து கொடுத்த டீயைக் குடித்து கிளாஸை மேஜைமேல் வைத்தான் இளைஞன். சிகரெட் டப்பாவிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து அதரங்களில் வைத்துப் பொருத்தி டப்பாவை ஹோட்டல் நிர்வாகியை நோக்கி நீட்டினான். நிர்வாகி தயங்கியவாறே தம் கருநிற விரல்களால் ஒரு சிகரெட்டை உருவி எடுத்தார். எழுத்து எழுத்தாகக் கூட்டிச் சிகரெட்டின் பெயரை வாசித்தபடி ஆனந்தமாக அந்தச் சிகரெட்டைப் பற்ற வைத்தார். புகையை வளையம் வளையமாக விட்டுக்கொண்டே கால் முதல்
தலை வரை இளைஞனை ஒரு சிறிய ஆராய்ச்சி செய்தார். ஆக்ஸ்போர்டு முடி வெட்டு, சிவந்த முகம், சற்று அகன்ற நெற்றி, பளபளப்பான கண்கள்...
"இந்தாங்க, இதை எடுத்துக்கிட்டு பாக்கியைத் தாங்க.''
மேஜைமேல் விழுந்த பத்து ரூபாய் நோட்டை நோக்கிய நிர்வாகி மெதுவான குரலில், "வேண்டாம் சார். அதுக்கென்ன, மெதுவாக கொடுத்தால் போதும்'' என்றார்.
முகத்தில் புன்னகை அரும்ப நோட்டை எடுத்துச் சட்டைப் பையினுள் வைத்துக்கொண்டான் இளைஞன். நிர்வாகி மன நிம்மதியுடன் அவனைப் பார்த்துப் புன்னகையுடன், "அப்போ... நான் வர்றேன் சார்! ஏதாவது வேணும்னா பட்டனை அழுத்துங்க போதும். ஏதாவது அசவுகரியம் இருந்தா தயங்காமல் சொல்லுங்க!'' என்றார்.
பானையைப்போன்று வீங்கிப்போய் முன்பக்கம் தொங்கிக் கொண்டிருந்த தொந்தியைத் தூக்கவும் சிரமப்பட்டுக் கொண்டு படி வழியே நடந்து போனார் நிர்வாகி.
சிகரெட்டை வாயில் வைத்துப் புகையை ஸ்டைலாக ஊதிவிட்டபடி, கைகள் இரண்டையும் கால்சட்டை ஜேபியினுள் நுழைத்தபடி தெருவில் போவோர் வருவோரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன். தெருவில் இருந்த மணிக்கூண்டிலிருந்து "டங் டங்" என்று மணி அடித்தது. இடது கையைச் சற்று உயர்த்திப் பார்த்தான் அவன். மணி நான்கு ஆகிவிட்டது.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டுப் பெட்டியைத் திறந்து வெளுத்த ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டான். ஏற்கெனவே அணிந்திருந்த அழுக்கடைந்து போன ஆடைகளை அறையின் மூலையில் வீசி
எறிந்துவிட்டு நிலைக் கண்ணாடியின்முன் வந்து நின்றான். கோட்டுக்குப் பட்டன் பொருத்தினான். சீவி முடித்தான் முகத்தில் பவுடர் பூசி இரண்டு கைகளாலும் மெல்ல தலைமுடியைப் பளபளவென்று சீவி முடித்தான். முகத்தில் பவுடர் பூசி இரண்டு கைகளாலும் மெல்ல நீவிவிட்டான்.