மரணத்தின் நிழலில்...
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
அன்புள்ள நண்பரே,
நினைத்துப் பார்க்கிறபோது நகைச் சுவையாகத்தான் இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது. அதேசமயம், அழவேண்டும் போலவும் இருக்கிறது. சில நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் எழுத முடியவில்லை. எழுதாமலும் இருக்க முடியவில்லை. இரண்டு வித எண்ணங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறேன் நான்.
மரணத்திறகும் வாழ்வுக்கும் இடையில் இருந்து கொண்டு என்று கூறுவதைவிட மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் மத்தியில் சிக்கிக் கொண்டு நான் இருக்கிறேன் என்று கூறுவதே பொருத்தமானது. ஆனால் அதுகூட உண்மையில்லை. அழிவின் எல்லையில் என்பதே உண்மை. தமாஷான ஒரு விஷயம் சொல்கிறேன். மரணத்தின் நிழலில் இந்த உலகம் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?
உண்மை என்னவென்றால் நீங்களும் நானும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பொருட்களும் எப்போதும் இருப்பது மரணத்தின் நிழலில்தான். இதில் பயப்பட ஒன்றுமே இல்லை, தெரியுமா? வேண்டுமானால் சிரிக்கலாம். இல்லாவிட்டால் கண்ணீர்விட்டு அழலாம். இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைக்கிறபோது ஒருவேளை நான் இறந்துபோய் கற்பனை செய்ய முடியாத பல கோடி யுகங்களின் நிழலில் கரைந்து சங்கமித்திருக்கலாம். அதனால் மிகவும் கவனமாக இதை வாசிக்கவும். இது ஒரு சாதாரண நகைச்சுவைக் கதைதான். கதை படிப்பது என்பது உங்களுக்கு விருப்பமான ஒன்றுதானே! இதில் கதாபாத்திரங்கள் அப்படி ஒன்றும் அதிகமாகக் கிடையாது. நான் மதிக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், ஒரு திரைப்பட நடிகர், ஒரு நடன மங்கை, ஒரு தொழிலாளர்கள் தலைவன்- இவர்கள் ஒரு சிறிதாவது என்மீது பிரியம் கொண்டவர்கள்.
இவர்கள் தவிர, மீதியுள்ளது பால்காரி குஞ்ஞம்மா. அவளை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறேன். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஒரு விஷயம். இதை என்னால் முழுமையாக முடிக்க முடியுமா தெரியவில்லை. நான் பிறந்த நிமிடத்திலிருந்தே மரணம் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எப்போதும்- இப்போதும்கூட. அன்பு நண்பரே, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அதோடு துயரமும். இப்போது சிரிக்க வேண்டும் என்ற உணர்வும் உண்டாகிறது. இதை முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டால்.. உங்களுக்கொரு செய்தி சொல்ல விரும்புகிறேன். நல்ல செயல் எதுவாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் துன்பம் தராத செயல் எதுவாக இருந்தாலும் கட்டாயம் செய்யுங்கள். மரணம் நம் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் இந்த உலகத்தை மிகவும் விரும்புகிறேன் என்பதை உண்மையாகவே நம்புங்கள். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும், எல்லா பிரபஞ்சங்களையும் நான் சினேகிதத்துடன் பார்க்கிறேன். இப்போது நான் தண்ணீர்மேல் சினேகம் கொள்கிறேன். காரணம் தெரியுமா?
எனக்கு இப்போது ஒரே தாகம். வறண்டுபோன பாலைவனம்போல் இருக்கிறது இதயம். தாங்கமுடியாத தாகம். கட்டாயம் நீர் வேண்டும். "தண்ணீ... தண்ணீ..." என் குரலைக்கேட்க யாருமே இல்லை. தனிமையும் பயங்கரமும் மட்டுமே எங்கும்... நான் மட்டும் தனியே இருக்கிறேன். தனிமை... வந்ததும் போவதும் எல்லாம் அங்குலம் அங்குலமாக... ஓ... என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நான் மதிக்கும் அந்த மனிதர்... அவர் இப்போது இங்கு வந்தால்... இல்லாவிட்டால் அந்த குஞ்ஞம்மா. இல்லை. நேரம் ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை. நான்கு மணியாக இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?
சிறிது பொறுமையோடு கேளுங்கள்.
அது- அல்லது- இது- ஒரு நகைச்சுவை கதை என்று கூறினேன் அல்லவா? நினைத்துப் பார்க்கிறபோது சிரிப்புதான் வருகிறது. அழக்கூடத்தான் தோன்றுகிறது. ஆனால் அதைக் கேட்க இங்கு யார் இருக்கிறார்கள்? இது வெறும் கேள்வி மட்டும்தான். பதிலே இல்லாத கேள்விகள் இருக்கின்றன அல்லவா? வெறும் கேள்விகள் மட்டும்... அதாவது, என்னால் தனியாக அமர்ந்து அழவும் சிரிக்கவும் முடியும். பயங்கரமான முடிவற்ற வெளிப்பரப்பில் தூக்கி எறியப்பட்ட ஒரு குழந்தை நான் என்று கருதிக் கொள்ளுங்கள். இதுவரை நான் எப்படி உயிர் வாழ்ந்தேன்? சாப்பிட உணவு வேண்டாமா? உறங்க இடம் வேண்டாமா? இரவும் பகலும் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா? இருந்தாலும் எதுவுமே பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை. கவனமாக என்னை மட்டும் நினைத்துப் பார்த்தேன். "தெய்வமே" என்று அழைத்துப் பார்த்தேன். வேண்டாம்... எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் அந்த மாதிரி வளர்ந்த ஆளில்லை.
ஆனால் பதினெட்டாவது வயதில் கையில் ஒரு பேனாவை வைத்துக் கொண்டு பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறினேன் என்பது மட்டும் உண்மை. அப்படி எங்கு கிளம்பினேன்? எனக்கு கொஞ்சம்கூட அதற்கு முன்பு அறிமுகமே இல்லாத, விந்தையான, அழகான, பயங்கரமான இந்த பெரிய உலகத்தை நோக்கித்தான். அப்படி என்றால் இப்போது எனக்கு எத்தனை வயது ஆகிவிட்டது என்கிறீர்களா? தெரியாது... குஞ்ஞம்மாவிடம் நான் கூறுவதுண்டு, எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகிவிட்டது என்று. அவளுக்கு எட்டே வயதுதான் ஆகிறது. அவளை நான் திருமணம் செய்து கொள்வது குறித்து அவளுக்கு மிகவும் விருப்பம். அதாவது... என்மீது அவளுக்கு அதிகமாகவே இஷ்டம். இருந்தாலும் அங்கும் ஒரு குழப்பம் இருக்கவே செய்தது. தந்தையும், தாயும் இதற்குச் சம்மதிக்க வேண்டுமே! இது குறித்து அவளுக்கு வேதனையும், ஏக்கமும் நிறையவே உண்டு. அவள் கேட்டாள்.
"நீங்க வந்து சொல்லலாம்ல..."
நான் கூறினேன்:
"சொல்லலாம்டி... இந்தப் போர் முடியட்டும்."
"முடியவே இல்லைன்னா...?"
அவள் கேட்டது சரிதான். போர்தான் இப்போது சர்வ சாதாரண ஒன்றாகிவிட்டதே! அதனால் நான் பதிலொன்றும் கூறவில்லை. நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பரவாயில்லை.
இப்போது வெயில் "சுள்"ளென்று காய்ந்து கொண்டிருக்கிறது. நெருப்புக்கு அருகில் இருப்பது மாதிரி சூடான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. கொழுந்துவிட்டு எரிகின்ற பெரும் நகரங்களில் இருந்து வீசுகின்ற சூடான காற்றா அது? அதோடு சேர்ந்து குளிர்ந்த மென்காற்றும். வராந்தாவுக்குப் பக்கத்தில் வளர்ந்திருக்கும் என் ரோஜாவிலிருந்தும் முல்லையிலிருந்தும் வீசிய காற்றே அது. இளம் சிவப்பாகவும் தூய வெள்ளையாகவும் மலர்ந்து அழகு செய்யும் மலர்கள்! இந்த மலர்கள் எங்கிருந்து வந்தன என்பது எனக்குத் தெரியாது. இதில்தான் எத்தனை எத்தனை மலர்கள் பூத்தன! இலையோ கூர்மையான முனையோ இல்லாத வெறும் நான்கு குச்சிகளே அவை.