Lekha Books

A+ A A-

மரணத்தின் நிழலில்... - Page 5

maranaththin-nizhalil

அவற்றில் ஒன்று மது அருந்துவது விஷம் சாப்பிடுவது மாதிரி என்பது. மது தயாரித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய மனிதக்கூட்டமும் இருக்கிறதே! அவர்களின் பிழைப்பைக் கெடுப்பது நல்லதல்லவே! அதனால் மது தயாரிப்பவர்களின் மனதை மாற்ற வேண்டும். நான் அன்று ஒரு செயல்வீரனாக இருந்தேன். எல்லா மதுக்கடைகளுக்கும் இளைஞர்களை அனுப்ப வேண்டும். மத சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப்போல மெல்லிய குரலில் குடிகாரர்களிடம் நாங்கள் கூறுவோம்: "சகோதரனே, இது அழிவை உண்டாக்கக் கூடியது. கெட்டது. சுருக்கமாகச் சொன்னால்- விஷம்." இதைக் கூறுவதற்கு இடையிலேயே தலைவர்களுக்கு ஜே கூறுவதும் நடக்கும். இப்படி நானும் ஒரு பெரிய மதுக்கடைக்கு முன்னால் நின்று மறியல் நடத்தினேன். ஒரு குடிகாரன் ருசி பார்த்துவிட்டு கருத்து கூறுவதற்கோ என்னவோ என்னை நோக்கி ஒரு பாட்டிலை எறிந்தான். காலின்மேல் சரியாக பாட்டில் வந்து விழுந்தது. பாட்டில் உடைந்து ஒரு துண்டு காலில் குத்தியது. ஒரே ரத்த ஓட்டம். காயம் ஆற நீண்ட நாட்கள் ஆனது. அதன் தழும்பு இப்போதும் என் வலது காலில் உண்டு. அப்போது நான் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். மக்கள் நடமாடக் கூடிய பொது சாலையில் அந்தக் கடையின் முன்பிலேயே இது நடந்தது. அன்று என்னைப் பார்க்கக் கூடியிருந்த மக்கள் கூட்டம் எவ்வளவு என்கிறீர்கள்! இரண்டாவது தடவை உண்ணாவிரதம் இருந்தது ஒரு போலீஸ்காரரின் மனதை நல்ல திசை நோக்கித் திருப்புவதற்காக. பின்னால்தான் தெரிந்தது போலீஸ்காரர்களின் மனது அப்படி ஒன்றும் கெட்டதில்லை என்று. கெட்ட மனம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? இந்த பூமியில் மனிதர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? பெண்கள், ஆண்கள், அவர்களின் மனங்கள்... எப்படி?  போர்கள், கொலைச் செயல்கள், கொழுந்துவிட்டு எரிந்து சுக்குநூறாக நொறுங்கிப்போகும் பெரும் நகரங்கள், பூகம்பங்கள், கொடுங்காற்று, பெரும் மழை, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், குளிர்காற்று, சந்திரோதயம், போலீஸ் லாக்கப்பில்... இரும்புக் கம்பிகளுக்கு இடையில்... சந்திரோதயம். அடிக்கும் போலீஸ்காரர்களும் அடிக்காத போலீஸ்காரர்களும்.. மனம் எப்படிக் கெட்டதாக ஆகிறது?

4

ன்று நாங்கள் பதினான்கு பேர் ஒன்றாக போலீஸ் காவலில் கிடந்து எட்டரை நாட்கள் எந்தவித உணவும் இல்லாமல் விரதம் இருந்தோம். காரணம்- ஒரு சமூக சேவகி. அவளைத் திருமணம் ஆகாத இளம் போலீஸ்காரன் லாக்-அப்பில் வைத்துக் கற்பழிக்க முயற்சித்திருக்கிறான். பெண்ணை அருகில் பார்க்க நேர்ந்த நிமிடத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்த மனிதனால் முடியவில்லை போலிருக்கிறது. மூன்றாவது உண்ணாவிரதம் சிறையில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் போக்கைக் கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரதம் அது. அப்போது நாங்கள் அறுநூறு பேர் ஒன்றாகச் சேர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். எதற்காக? ஒரு பெண் போராளியை அரசாங்கம் தூக்கில் தொங்கவிட்டது! அடுத்தது- நான்காவது!

இதில் ஒரு சுவையான விஷயம் இருக்கிறது. மரணம் வரை இந்த உண்ணாவிரதம்! ஒன்று என்னை விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் என்மீது உள்ள வழக்கு என்ன என்று விசாரிக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல் வெறுமனே என்னை போலீஸ் லாக்-அப்பில் வைத்திருந்தால் என்ன அர்த்தம்?

நான் மட்டும் தனியே இருக்கிறேன். தலைவர்களெல்லாம் என்னைக் கைகழுவி விட்டார்கள். காரணம் என்ன? நான் ஒரு இலக்கியகர்த்தாவாக இருந்ததே காரணம். அரசாங்கத்தையும் தலைவர்களையும் தெளிவாக விமர்சித்து- கண்டித்து ஒரு நாடகம் எழுதி நூலாக நான் வெளியிட்டிருக்கிறேன். தலைவர்களும் அரசாங்கமும் இரண்டு வரிசைகளில். அரசாங்கத்தின்மீது எவ்வளவு குற்றங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு குறைபாடுகளை நான் தலைவர்கள் மத்தியிலும் காண்கிறேன். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்ற போர்வையில்- அதாவது, மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு மக்களிடம் பெற்ற பணத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டு தலைவர்கள் எல்லாம் சுகமாக வாழ்கிறார்கள்.  

அவர்கள் உருப்படியாக ஒன்றுமே செய்வதில்லை. வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள். தலைவர்களைப் பற்றி நான் எவ்வளவோ கூற விரும்புகிறேன். எல்லோரைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதை எல்லாம் சொல்ல இப்போது நேரமில்லை. இப்படி நான் இருந்தால் அரசாங்கம் என்னைச் சும்மா விடுமா? என்னை ஒரேயடியாக நெருக்கியது. பேசாமல் தற்கொலைகூட செய்து கொள்ளலாம் போலிருந்தது. ஏன் இப்படி எல்லாம் தோன்றுகிறது என்றால், அந்த அளவுக்கு இருந்தது போலீஸ் காவலில் நான் இருந்த நிலை! அதற்குப் பின் என்ன நடந்தது தெரியுமா? இடையில் நான் இன்னொரு சுவையான விஷயம் கூறுகிறேன். தாங்க முடியாத வேதனை இருந்தாலும் நிமிர முடியாமல் இருந்தாலும். இதுவரை வாழ்க்கை உங்களுக்குக் கற்றுத் தந்தது என்ன?

இதுவரை... கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்தோடிவிட்டன அல்லவா? வாழ்க்கை எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது? நான் கூறுவது எதையும் பெரிதாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். சுருக்கமாகச் சொன்னால் என் கண்கள் மூலம் உலகத்தைப் பார்க்க வேண்டாம். எதற்கு இதைக் கூறுகிறேன் என்றால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அல்ல, உங்களின் அனுபவங்கள். இந்த உலகம்தான் எத்தனை பெரியது! இதில் அறுநூறு கோடியைவிட அதிகமாகவோ ஆயிரம் கோடியோ மக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு மனிதன் நான். நிலைமை இப்படி இருக்க, எனக்குச் சில அனுபவங்கள் இருக்கின்றன. மக்களுடன் நான் சிறிதாவது பழகி இருக்கிறேன். நான் மக்களை எப்படித் தரம் பிரிக்கிறேன் தெரியுமா? இந்த பூமியில் மொத்தம் இருப்பதே நூறுபேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள்- பெண்கள் எல்லாம் சேர்த்துத்தான்.

சுத்த முட்டாள்கள்            55

பயங்கர வன்முறையாளர்கள்  20

ஏமாற்றுப் பேர்வழிகள்        15

சோம்பேறிகள்                9

நல்லவர்                     1

இந்தப் பட்டியலில் நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்? உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் முட்டாள்தனம் இருக்கிறதா? வன்முறை எண்ணம் இருக்கிறதா? ஏமாற்றும் குணம் இருக்கிறாதா? சோம்பேறித்தனம் இருக்கிறதா? நன்மை செய்யும் குணம் இருக்கிறதா?

ஆனால், உலகத்தில் மொத்தம் இருப்பது நூறுபேர் மட்டும் இல்லையே!  இருந்தாலும் நீங்கள் மொத்தம் இதில் ஏதாவது ஒரு பிரிவைச் சேரவே செய்வீர்கள். என்னை இதில் எந்தப் பிரிவில் சேர்ப்பீர்கள்? உண்மையாகச் சொல்லப்போனால், மேலே கூறப்பட்ட எல்லா குணங்களும் என்னிடம் இருக்கின்றன- முட்டாள் தனம், வன்முறை, ஏமாற்றுத்தனம், சோம்பேறித்தனம், நன்மை செய்யும் குணம்- இத்தனையும் இருக்கும் எனக்கு வாழ்க்கை என்ன கற்றுத் தந்திருக்கிறது?

என் ஐந்தாவது உண்ணாவிரத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு இந்தக் கேள்விக்கான விடை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேதனைகளின் குளிர் காற்று. முடிவே இல்லாத ஆகாயம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களை இனி என்னால் பார்க்க முடியுமா? ஆனந்தத்துடன் கலந்து துக்கம். பரவாயில்லை.

வாழ்க்கை இதுவரை எனக்கு கற்றுத் தந்தது என்ன என்று கேட்டால்... இந்த உலகத்தில் வாழும் ஒரு மனிதன் என்ற நிலையில், ஒரு கலைஞன் என்ற நிலையில் இதுவரை வாழ்க்கை எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது. என் நூல்களில் இருக்கும் நானும் அதற்கு வெளியே இருக்கிற நானும்.. நான் கூறிவருவது... இல்லாவிட்டால் நான் கூறப்போவது... இந்த மகா பிரபஞ்சங்களும்- நானும்.. இந்த நிலை வரை நான் கூற வேண்டுமே!

எத்தனையோ கோடி வருடங்களாகிவிட்டன இந்த பூமியில் மனிதப்பிறவிகள் தோன்றி என்று வைத்துக் கொள்ளுங்கள். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பும் இங்கு வாழ்வு இருக்கவே செய்தது. இப்போது மனிதப்பிறவிகள் தவிர, இன்னும் பல உயிரினங்கள் இருக்கத்தானே செய்கின்றன! கண்ணுக்குத் தெரிவதும் தெரியாததும். வாழ்வு என்ற ஒன்றுக்குள் அணுக்களையும் புழுக்களையும் பூச்சிகளையும்கூட சேர்க்கத்தானே வேண்டும்! மிருகங்களையும் பறவைகளையும் பிராணிகளையும் மரங்களையும் நீர்வாழ் உயிரினங்களையும்கூட வாழ்வு என்ற பதத்திற்குள் அடக்கத்தானே வேண்டும்! நீர், காற்று, பூமி- இதில் உள்ள வாழ்க்கை- அதாவது மனிதப்பிறவிகளின் வாழ்வு போக- மீதி இருப்பவைகளின் வாழ்வு என்ற ஒன்றை நாம் எண்ண வேண்டுமா?  இல்லாவிட்டால் மறந்துவிட வேண்டுமா? மறக்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் கூட பல விஷயங்கள் இருக்கின்றன. நீங்களும் நானும் மற்ற எல்லாவற்றையும்கூட மறந்துவிட வேண்டியதுதான். எங்கோ அதிவேகத்தில் பறந்து கொண்டிருக்கின்ற பெரும் பெரும் பிரபஞ்சங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒருசிறு துளியான பூமியில் நாம் வாழ்கிறோம் என்பதைக்கூட மறந்துவிட வேண்டியதுதான். சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் பூமியையும் உங்களையும் என்னையும் மற்ற எல்லாவற்றையும் அனைத்தையும் படைத்த ஒரு கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற கருத்தைக் கூட மறந்துவிட வேண்டியதுதான். ஒவ்வொன்றின் படைப்பின் உத்தேசம் அல்லது படைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று நமக்குத் தெரியாது என்பதையும் நாம் அதை அறிவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறோம் என்பதையும்கூட மறந்துவிடுங்கள். இங்கு இருக்கும் ஒன்றுகூட தான் அழிந்துபோவதை விரும்புவதில்லை என்பதையும், இருந்தாலும் அழிந்து போகாமல் இங்கு எதுவுமே இல்லை என்ற உண்மையையும் மறந்துவிடுங்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்களும், நானும், ஏன்... இந்த பூமி கூட ஒவ்வொரு நிமிடமும் மரணத்தின் நிழலில்தான் என்ற உண்மையைக்கூட மறந்துவிடுங்கள். இருந்தாலும் நாம் தைரியசாலிகள்தான்- வீரர்கள்தாம். நாம் இந்த பூமியை ஒரு வசந்த பூமியாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு இனிமையான பாடல்களைக் கொண்டு ஆனந்த சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பூமியும் நட்சத்திரங்களும்- அனைத்துமே மனிதக்கூட்டத்தின் குடும்பச் சொத்தாகிவிட்டன. சரியா?

நாம் வாழ்க்கை என்று கூறுகிற- வேண்டாம்... நாம் பெரிய பிரிவைச் சேர்ந்தவர்களோ? இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இல்லாவிட்டால் நினைவில் வைத்துக் கொண்டுதான் கூறுகிறோம். வாழ்க்கை இதுவரை நமக்கு என்ன படிப்பினையைத் தந்திருக்கிறது என்று.

வாழ்க்கை என்ற அற்புதமான இந்த உயிரோட்டத்தில் எல்லா வாழ்க்கையையும் பொதுவாகப் பார்க்கிறபோது... இதில் உச்ச நிலை முட்டாள்தனம் உண்டு. பயங்கரமான வன்முறை உண்டு. கொடுமையான வஞ்சகம் உண்டு. பெரிய அளவில் சோம்போறித்தனம் உண்டு. அளவற்ற அன்பு உண்டு. போற்றத்தக்க தியாகமும் உயர்ந்த அளவில் கருணையும்.. இவை எல்லாமே வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான் என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்தது என்றும் கூறலாம். வாழ்வே நீங்கள்தான் என்றும் கூறலாம். இல்லாவிட்டால் நான் என்றும் சொல்லலாம். இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம்- வாழ்வு! மொத்தத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் எவற்றை எல்லாம் அடக்கியிருக்கிறது என்பதையும் கட்டாயம் நாம் தெரிய வேண்டுமா என்ன? இனியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என் எல்லா நூல்களையும் படியுங்கள்- வேண்டுமானால் அவை எல்லாவற்றையும் பரப்பி வைத்துவிட்டு அனைத்துக்கும் சேர்த்து ஒரு பெயர் வைக்க வேண்டுமென்றால்... என்ன பெயர் வைக்கலாம்? வாழ்வு இதுவரை எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது? இதை இப்போது தெரிந்து கொண்டு என்ன கிடைக்கப்போகிறது? நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? ஆயிரம் கோடி ஆண்களும்- பெண்களும் கூடத்தான். பெரிய தமாஷான விஷயம்தான். மனித இனத்திற்கு வாழ்வு இதுவரை என்ன கற்றுத் தந்திருக்கிறது?

யார்- எதற்கு நினைக்க வேண்டும்?

நினைத்துப் பார்ப்பதுகூட மகிழ்ச்சியை அல்ல துக்கத்தை, வேதனைகளை. தமாஷான ஒரு விஷயம்தான்!

5

ப்போது நான் சொல்ல வந்தது... ஆமாம்... ஐந்தாவது உண்ணாவிரதம். அதில் ஒரு சுவையான விஷயம் இருக்கிறது. அது என்னவென்று கூறுவதற்கு முன்பு நான்காம் உண்ணாவிரதத்தைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

நான்காவது உண்ணாவிரதம் பன்னிரண்டு நாட்கள் நடந்தது. அப்போது என் வழக்கை எடுப்பதாகக் கூறி எடுக்கவும் செய்தார்கள். நீண்ட காலத்திற்குக் கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது இன்றைய சிறை அல்ல அன்று. பொதுவாக மனித சமுதாயத்திற்கு என்னவோ ஒரு நோய் பிடித்திருக்கிறது. நான் கூறுவது- போரைப்பற்றி. இதுவரை நடந்த எல்லா போருமே கடைசிப் போர்தான். இதுவும் அதேமாதிரி கடைசிப் போர்தான். இன்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்- அதாவது, போரில் மரணம் அடைந்தவர்களும் வேறு விதத்தில் மரணத்தைத் தழுவியவர்களும் போக மீதி இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி குறிப்பிட்ட ஒரு நேரத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்று நினைத்தால்.. அதற்கான சரியான நேரம் இப்போதுதான் என்றால்... என் நண்பரே, நான் அதில் சேர மாட்டேன்.

ஏன் தெரியுமா? நான் வாய்விட்டுச் சிரித்தால் பல பிரச்சினைகள் வந்துவிடும். அதனால், மெதுவாக புன்னகைக்க மட்டும் செய்கிறேன். எதற்காக என்றால் என் வயிறு முழுவதும் கூர்மையான கருங்கற்கள் இருப்பதுபோலவும் இதயத்தை முடிச்சுப்போட்டு முறுக்குவது போலவும் தோன்றுகிறது எனக்கு. இந்த நேரத்தில் குஞ்ஞம்மா வந்தால்.. அவள் இந்தக் கதையைத் தெரிந்தால் என்ன கூறுவாளோ? ஏன் அந்த ரசிகர், தொழிலாளிகளின் தலைவர், திரைப்பட நடிகர், நாட்டிய மங்கை.. இவர்கள் எல்லாம் என்ன சொல்வார்கள்? கதை முழுவதையும் படித்து முடிக்கிறபோது நீங்களும் என்ன கூறுவீர்கள்? வாழ்க்கை ஒவ்வொன்றும் ஒரு கதைதானே! துக்கமில்லாத துக்கம்தானே மரணம் என்பது!

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel