மரணத்தின் நிழலில்... - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6369
அது இருந்தால் போதும். தேநீர் அருந்தி முடித்துவிட்டால் ஒரு சிகரெட் இல்லை என்றால் ஒரு பீடி. எல்லாம் முடிந்தால், இரண்டு அல்லது மூன்று மணிநேரம் அமர்ந்து எழுதலாம். இடையில் அவ்வப்போது கொஞ்சம் தேநீர், சிகரெட், பீடி இருந்தால் மிகவும் நல்லது. ஆனால் இந்த சுகத்தேவைகள் எங்கு கிடைக்கும்? நான் எழுத்தாளன் ஆன பிறகு... ஓ... இதை ஏன் நான் கூறுகிறேன்?
இன்று காலையில், சரியாகச் சொல்வது என்றால் மதிய நேரத்தில் படுத்திருந்த பாயை விட்டு எழுந்து குளித்து முடித்தேன். முகத்தைச் சவரம் செய்தேன். அதற்குப் பிறகு ஆடைகள் அணிந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது. சாதாரண ஒரு தேநீர் கிடைக்க ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக நான் வெளியே கிளம்பினேன். அப்போது பூமியே பயங்கரமாகக் குலுங்குவதாகவும் கட்டிடங்கள் அடியோடு இடிந்து என் தலையில் விழுவதாகவும் உணர்ந்தேன். ஆனால், உண்மையில் பூமி குலுங்கவும் இல்லை. கட்டிடங்கள் இடிந்து விழவும் இல்லை. தலைக்குள்ளே ஒரு மின்னல். வயிற்றில் ஏதோ நெருப்பு பிடித்த மாதிரி ஒரு எரிச்சல். நான் கூனிக்குறுகிப் போய்விட்டேன். இந்தக் கோலத்தில்தான் ஆடிக் கொண்டிருக்கும் இந்தச் சாய்வு நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது? இதயமே வெடித்துவிடுவது போலிருந்தது. கனமான ஏதோ ஒன்று என்னை அழுத்துவதுபோல் இருந்தது. சுற்றிலும் முள் கம்பிகள். முனையில் ஈயத்தால் ஆன ஒரு உருண்டை வேறு. பூமி உருண்டையா? மனதில் தோன்றும் எண்ணங்கள் சரிதான். ஆனால், இந்தக் கடுமையான வேதனை... இது எப்படி நடந்தது?
நினைத்துப் பார்க்கிறபோது சிரிப்புதான் வந்தது. அழ வேண்டிய விஷயம் இது. ஆனால் அழுகையை நிறுத்திக் காலம் அதிகம் ஆகிவிட்டது. எதற்காக அழ வேண்டும்? முதலாவது இந்தப் போர். இரண்டாவது இந்தப் பஞ்சம். இருந்தாலும் அழலாம். ஆனால் கண்ணில் வழியும் நீர் துடைத்து ஆறுதல் வார்த்தைகள் கூற இங்கு யார் இருக்கிறார்கள்? அப்படியானால் சிரிக்கவல்லவா வேண்டும்? என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருப்பதால், கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்த உடனே நான் சிரிக்கத் தொடங்கிவிடுகிறேன். இடையில் துக்கமும் தோன்றாமல் இல்லை. இதை எழுதி முடிப்பதற்கு முன்பே நான் மரணத்தைத் தழுவி விடுவேனோ? அப்படி என்றால் எங்கு நான் செல்கிறேன்.
ஆமாம்... நேற்று தேதி என்ன. நான் நேற்று என்று கூறுவது கோடிக்கணக்கான ஆண்டுகள் மறைந்து கிடக்கிற நேற்றை. என்ன செய்வது? இப்படித்தான் தோன்றுகிறது. மே மாதம் பதினேழாம் தேதி என்று வைத்துக் கொள்ளுங்கள். வருடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து... அல்லது இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து... பதினாறோ அல்லது நாற்பத்து இரண்டோ...? ஒருவேளை ஐம்பத்து இரண்டாக அது இருக்கலாம். குஞ்ஞம்மாவிடம் நான் ஐம்பத்து இரண்டு என்றுதான் கூறியிருந்தேன். அப்படியென்றால்... சரிதான்... என் வயதைப் பற்றிய விஷயமே அது. நேற்று அந்த ஆள் என் வயதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அந்த தங்கப் பற்கள்! என்ன சொல்வது! அதற்கென்று சொந்தமான ஒரு பிரகாசம் இருக்கவே செய்கிறது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது மாதிரி எனக்குப் படுகிறது. அந்த மனிதரைக் கொன்றுவிட்டு, அந்தப் பற்களை என்ன செய்வது? அந்தப் பற்களுடனே அவரை பூமிக்குள் புதைத்து மூடுவது சரியான செயலா?
இப்போது உடலில் ஒரு சுகம் தெரிகிறது. சுகம் உண்டாகி இருக்கிறது என்று அதற்கு அர்த்தமில்லை. நாட்டு நடப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சுகம் என்று கூறத் தோன்றுகிறது. அதாவது... எனக்கு நானே பச்சையாகப் பொய் பேசுகிறேன் என்பது எனக்கே தெரியும். என்ன செய்வது? இருந்தாலும் கதையைத் தொடர்கிறேன். அதைக் கூறி முடிப்பதற்கு முன்பே ஏதாவது பெரிதாகச் சம்பவித்தால்... ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு கூறவா?
குஞ்ஞம்மாவுக்கு ஏதாவது பிரியமாகக் கொடுக்க வேண்டும் என்று மனதில் ஒரு ஆசை. பூச்சட்டிகள் நான்கை அவளுக்குப் பரிசாகத் தர எண்ணுகிறேன். ஷெல்ஃபில் இருக்கிற புத்தகங்களைக்கூட அவள் எடுத்துக் கொள்ளட்டும். என் பெட்டியையும் படுக்கையையும், பெட்டிக்குள் நான் எழுதி வைத்திருக்கின்ற நாவல்களையும் என்னை அடக்கம் செய்பவர்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடே. இந்தச் சாய்வு நாற்காலியையும் ஸ்டூலையும் இந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரருக்குத் தரலாம் என்றிருக்கிறேன். நான் எழுதப் பயன்படுத்தும் இந்தப் பேனாவை யாருக்கும் கொடுக்க இஷ்டமில்லை. இதை என்னோடு சேர்த்தே புதைக்கவேண்டும். என் உடலை நீரோடு மிதந்துபோக விடுவதோ, பூமிக்குள் புதைப்பதோ, நெருப்பில் எரிப்பதோ... எதை வேண்டுமானாலும் செய்யலாம். இல்லாவிட்டால் பறவைகளுக்கு இரையாக்கலாம். அப்படிச் செய்வதுதான் எனக்கும் விருப்பம். ஃபார்ஸி நண்பரின் நினைவுக்கு... அமைதி கோபுரத்தில்- டவர் ஆஃப் ஸைலன்ஸ்... ஹம்மோ...! என் விழிகள் ஏதோ பயங்கர வெளிச்சத்தை எதிர்நோக்கியதுபோல் உணர்ந்தேன். கால் பெருவிரல்களுக்குள்ளே ஓடும் நரம்புகள் வழியாக இரண்டு தீப்பந்தங்கள் இதயத்தை நோக்கி வேகமாக நகர்வதையும் உணர முடிந்தது. நான் வளைந்து சுருண்டு போகிறேன். என்னால் நிமிர முடியவில்லை. நிமிர்ந்தால் வாடிப்போன செடிபோல நான் ஒடிந்து விழுந்துவிடுவேன் என்பது நிச்சயம். மெல்ல எழுந்து நிற்க முயற்சித்தால் என்ன? மரணமே! அச்சமும் இல்லை. அச்சம் இல்லாமலும் இல்லை. அமைதி. இருந்தாலும் மரணம் என்றால் என்ன?
நான் சோதித்துப் பார்த்தேன். நிச்சயமாக முடியாது. என் எல்லா நரம்புகளும் பொடிப்பொடியாக நொறுங்கிப்போகும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பது முழுமையடையாமலே போய்விடும். என்ன எழுதுகிறேன்? இதைக்கூட இன்னொருவர் கதை என்று என்னால் எழுத முடியும். ஆனால் உண்மை இதுதான். நீண்ட காலம் நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். இதுவும் புதிய ஒரு செய்தி அல்ல. முன்பும் நான் பல முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். ஐந்து முறை. நான்கு முறை பல வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கிறேன்.
முதல் தடவை விரதம் இருந்தபோது எனக்கு பதினெட்டு வயது. நல்ல தைரியமுள்ளவனாகவும் லட்சிய மனம் கொண்ட இளைஞனாகவும் அன்று இருந்தேன். மனிதர்களை நல்லவர்களாக்க முயற்சித்தவர்களில் நானும் ஒருவன். அன்று என்னைப்போன்ற பலரும் இந்த மாதிரி இருந்தார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும். அன்று எங்களுக்கு பெரிதாக வேலை ஒன்றும் கிடையாது. தலைமை தாங்கியவர்களுக்கு இருந்தது. நல்ல செயல்கள் பலவும்கூட அவற்றில் இருந்தன.