ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
நான் ஒரு பட்டாளக்காரன். எனக்கு முன்னால் எவ்வளவோ ஆட்கள் இறந்து விழுந்திருக்கிறார்கள்! எனக்கு மேலே குண்டுகள் சத்தத்துடன் பாய்ந்து சென்றிருக்கின்றன. எனக்கு அருகில் துப்பாக்கிகள் சீறியிருக்கின்றன. அப்போதெல்லாம் நெஞ்சு மிகவும் திடத்துடன் இருக்கும்.
இந்த வேதனை கலந்த பாடல்கள் என்னைப் பிடித்து நிறுத்துகின்றன. நான் சரஸ்வதியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். ஏதோ கனவைக் கண்டு கொண்டு உறங்கிய என்னை அவளுடைய கிளியைப்போன்ற கொஞ்சல் கண் விழிக்கச் செய்தது. பல சம்பவங்களும் நிறைந்த இந்த உலகம் என்னவென்று தெரியாமலேயே மரணமடைவது என்பது எவ்வளவு மோசமான விஷயம் என்பதை நினைத்து இப்போது பயப்படுகிறேன். அதைவிட அவளைப் பற்றி நினைக்கும் போது என்னுடைய நெஞ்சின் இடது பக்கம் வெடிப்பதைப்போல இருக்கிறது.
"ஆவாஸ் தே கஹாம் ஹை... துனியா மேரீ வஹாம் ஹை...''
இன்று இது பழைய பாடல். எனக்கோ என்றுமே புதியது. ஓ! இப்போது அவளுடைய கிளியைப்போன்ற கொஞ்சல் எங்கே போயிருக்கும்? எங்கே இருந்தாலும்... யெஸ், இதோ நான் கேட்கிறேன். அவள் பேசிக் கொண்டிருக்கிறாள். இது அவளுடைய குரல்தான்...
பிறகு... பப்பன் கே தின் புலா ந தேனா என்று நான் எவ்வளவோ முறைகள் பாடி விட்டேன்! இரவு ஒன்பதரை மணிக்குப் பிறகு லக்னவ்
வானொலி அந்தப் பாடலை தினமும் ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த காலத்தில் தூங்குவதற்காக படுத்த நான் ஒலி பெருக்கிக்கு முன்னால் எழுந்து கூறுவேன்!
"பப்பன் கே தின் புலா ந தேனா... "
இன்று யாரைக் கூறி அந்த ஆரம்ப வரிகளைப் பாடுவது?
இதையெல்லாம் எதற்காகக் கூறினேன்? கூறிவிட்டேன். இல்லை... நான் நினைத்துப் பார்க்கிறேன். பட்டாளக்காரன். ஒத்துக் கொள்கிறேன். எனக்கும் மனிதனுக்கு இருக்கக்கூடிய ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், மனிதனின் மாறிக் கொண்டிருக்கும் மென்மையான உணர்வுகளை நானும் அனுபவிக்கிறேன் என்பதையும் தினமும் கூற வேண்டியதிருந்தது. இல்லாவிட்டால் இன்னொரு ஆளைப் பற்றி எழுதக் கூடிய இந்தக் குறிப்பில் என்னுடைய விஷயங்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லையே!
இவை எதுவும் அன்மோலக் ராமிற்குத் தெரியாது. அதனால் "இந்த பயங்கரமான இரவு வேளையை நான் எப்படி கழிப்பது?" என்ற அர்த்தத்தைக் கொண்ட ஆரம்ப வரிகளைப் பாடியபோது அவன் விஷயத்துடன் கேட்டான்: "பாடுறது சரி... அர்த்தம் தெரியுமா?''
எனக்கு அப்படி கேட்டது சிறிதும் பிடிக்கவில்லை. என்னுடைய இனிய வேதனைகளை ஒரு மனிதன் போர்வையால் மூடுவதா? எனினும், அந்த மனிதனிடம் பேசலாமே என்ற இன்னொரு ஆசையுடன் பதில் சொன்னேன்: "கொஞ்சம்...''
"என்ன கொஞ்சம்? நீங்கள் மதராஸி... இல்லை... மலையாளி. எது வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்தியின் உள்ளடக்கம் உங்களுக்குப் புரியாது. இந்த அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் எந்தக் காலத்திலும் புரியவே புரியாது...''
அவனுடைய முகத்தில் வெறுப்பும் கிண்டலும் தெளிவாகத் தெரிந்தன. மனதிற்குள் இருப்பதை எந்தச் சமயத்திலும் மறைத்து வைப்பதற்கு அன்மோலக்கால் முடியாது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவன் பேசும்போது முகம் முழுவதும் இதயம் வந்து பரவி விடுகிறது.
பிறகு, புரிந்தது. மொழி என்பது கூற நினைக்கும் விஷயத்திற்கான ஒரு வழி. கூற நினைக்கும் விஷயம் இதயத்திற்குச் சொந்தமானது. முதலில் அனுபவிக்க வேண்டும். அனுபவித்து உணர்ந்ததை வெளியில் கூற வேண்டும். அனுபவித்து உணர்ந்தவனுக்குத்தான் அந்தப் பாடலின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டு ரசிக்க முடியும் என்பது அன்மோலக் கூற நினைத்த விஷயம். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், என்ன மொழியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அனுபவித்து உணர்ந்தவனுக்கு அதிலிருக்கும் உள்ளடக்கத்தை ரசிப்பதற்கு முடியும். அனுபவித்த உணர்வுதானே? அறிவு அல்ல.
ஆச்சரியம் உண்டானது. இந்த கேடு கெட்ட மனிதன் எப்படி பேசுகிறான்? எனினும், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு அவன் முயற்சிக்கவில்லை. ஒருவேளை, அவனே அந்தப் பாடலில் மூழ்கிவிட்டிருக்க வேண்டும். நானும் அதைப் பற்றி அந்த அளவிற்கு கவனம் செலுத்தவில்லை. ஒருவன் தன்னையே மறந்து விடக்கூடிய அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இன்னொருவன்மீது கவனம் செலுத்த முடியாது. அன்மோலக் ராம் பாடலின் அர்த்தத்தைக் கூறினான். ஆனால், விளக்கம் அல்ல. அவன் அனுபவித்த உணர்ச்சிகளை அவன் விளக்கிக் கூறினான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவனுடைய துடித்துக் கொண்டிருந்த இதயத்தில் அலையடித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகள் அந்த பரந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட
கன்னங்களிலும் மெல்லிய, சிறிய உதடுகளிலும் உயிர்ப்பற்ற கண்களிலும் தெரிவதை நான் கண்டேன்.
என்னுடைய பொறுமையும் அக்கறையும் அன்மோலக்கிற்குப் பிடித்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அப்போது தான் அவன் என்னை நெருக்கமாகத் தெரிந்து கொண்டிருக்கிறான். எது எப்படி இருந்தாலும், அப்போதிருந்து அவன் என்னுடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.
அன்மோலக்கிற்கு இடையில் அவ்வப்போது எதைப்பற்றியோ ஞாபகம் வரும். உடனே அமைதியாக உட்கார்ந்துவிடுவான். அது ஒரு வகையான சமாதி நிலைதான். ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. பிறகு கூறுவான்: "மேரே நஸரோ மெ ஸப் லால்லால் நஸராதா ஹை.''
கூறிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் அதே உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குச் சென்று விடுவான். கண்கள் பிரகாசமாகும். கன்னங்கள் சிவக்கும்.
"பாருங்க... நான் இதோ பார்க்கிறேன். என் கண்களில் அனைத்தும் தெரிகின்றன. இந்த உலகம் முழுவதும் லால்லால்தான்.''
உலகம் முழுவதும் எப்படி சிவப்பாகத் தெரிகிறது என்று எனக்கு இதுவரை புரியவில்லை. மனித இயல்பைப் பற்றி மிகவும் குறைவாக மட்டுமே அறிந்திருக்கும் எனக்கு அது புரியவில்லை. பல நேரங்களிலும், ஆரம்பத்திலிருந்து இருக்கும் அவனுடைய வார்த்தைகளையும் செயல்களையும் பிரித்தெடுத்துப் பார்க்கிறேன். பிறகு இந்த சிவப்பு நிறம் தெரிவதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கிறேன். ஒரு காரணமும் கிடைக்கவில்லை. அது மன நோயாக இருக்கலாம்.
தொடர்ந்து அவன் மிகுந்த விரக்தியடைந்த மனிதனாக ஆகி விடுவான். எதற்காக வாழவேண்டும் என்று கேட்பான். இறப்பதற்கு முடியவில்லை. அவனுக்கு கோபம் வரும். புகை வண்டி தண்டவாளத்திலிருந்து அவனை போலீஸ்காரர்கள் தூக்கி எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.