ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
க்வார்ட்டர்ஸில் பெரும்பாலும் அகதிகள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது சொந்தமென்று கூறுவதற்கு வீடோ குடிசையோ கிடையாது. அரசாங்கத்தின் நல்ல மனம் காரணமாக இங்கே வந்து வசிக்கிறார்கள். கணவர்கள் ராணுவத்தில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்த இடத்தில் இருந்த ஏதாவது முகாமில் இருந்திருக்கலாம். பிறகு... எங்கெங்கோ போய் விட்டார்கள். அங்கு க்வார்ட்டர்ஸ் இல்லாமல் போயிருக்க வேண்டும் அதனால் குடும்பங்கள் எங்களுக்கு எதிரில் இருக்கும் கட்டிடத்தில் வசித்துக் கொண்டிருக்கின்றன.
அங்கே இருக்கும் சுறுசுறுப்பான பெண் பிள்ளைகள் சைக்கிளில் பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறார்கள். வருகிறார்கள். பால் வாங்குவதற்காகப் போகிறார்கள். வருகிறார்கள். மார்க்கெட்டிற்குச் செல்கிறார்கள். நடப்பதற்காகச் செல்கிறார்கள்... அவர்கள் போவதை எங்களுடைய கட்டிடத்திற்குள் படுத்திருக்கும் பட்டாளக்காரர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். பெருமூச்சு விடுகிறார்கள். சில நேரங்களில் முணுமுணுக்கிறார்கள்.
"ஜிலேபி போறதைப் பாரு...''
"நீயும் போ.''
"எனக்குத் தேவையில்லை.''
"எனக்குத் தெரியும்.''
"உன் பார்வை சேமியாவிற்குப் பின்னால்தானே?''
"கொஞ்சம் பேசாம இருடா.''
"லு... யாருக்கும் தெரியாது.''
"கொழுக்கட்டை சொல்லியிருப்பான்.''
"சுப்பையா!''
"என்ன சொன்னே?''
"யாத் ரஹ்!''
சுப்பையாவிற்கும் மதன்லாலுக்கும் இடையே சண்டை அதிகமாகிறது.
துடைப்பத்தைப்போல உயரமாகவும் மெலிந்து போயும் இருக்கும் சுப்பையாவிற்கு மூன்றாம் எண் க்வார்ட்டர்ஸில் இருக்கும் மெலிந்து, மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும் பெண் பிள்ளைமீது ஈடுபாடு இருக்கும்போல... அவளுடைய பெயர் தெரியாது. அதனால் சேமியா என்று அழைக்கிறான். உண்மையாகக் கூறப் போனால், அந்த இளம் பெண்ணுடன் சுப்பையா சற்று உரையாடியது கூட இல்லை. எனினும் அவளுக்குத் தன்மீது காதல் இருக்கிறது என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறான். இருக்கிறது என்று மற்றவர்களிடம் வாதமும் செய்தான். காரணம் என்னவென்றால், சேமியா சமையலறையின் ஜன்னல் வழியாக அவனைப் பார்த்துக் கொண்டு நிற்பதுண்டு. இடையில் பார்க்க நேர்ந்தால், முகத்தைக் குனிந்து கொள்வாள். எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கின்றன.
சுப்பையாவால் நீண்டு, முதுகை நிமிர்த்திப் படுக்க முடியாது. கட்டிலுக்கு நீளம் போதாது. சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் அவன் கண் விழித்தவுடன், சோம்பல் முறிப்பான். அப்போது அவனுடைய மெலிந்து போன கால்கள் கொசு வலைகளுக்கு வெளியே நீண்டு காட்சியளிக்கும். சோம்பல் முறித்தவாறு கொசு வலையை உயர்த்தி முகத்தைத் துடைத்துக் கொண்டே அவன் தாழ்வான குரலில் அழைப்பான்: "ஓ... சேமியா...”
சேமியா சமையலறையின் மூலையில் இருக்கும் முற்றத்தில் உட்கார்ந்திக்கிறாள். கரி போட்டு எரிக்கப்படும் அடுப்பில் நெருப்பை
எரிய வைத்து புகைக்கு மத்தியில் ஊதிக் கொண்டும் இருமிக் கொண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டும் இருக்கிறாள். அவள் துப்பட்டாவின் முனையால் கண்களைத் துடைப்பதற்காக முகத்தை உயர்த்துகிறாள்.
ஓ! அதோ பார்க்கிறாள். சுப்பையா அவளை நினைப்பான். அவனுடைய இதயம் நிறைந்துவிடும்.
"என் சேமியா... என்ன?''
"பேசாம இரு... சுப்பையா...''
மதன் லாலுக்கு கோபம் வருகிறது.
"து தோடா சோனே நஹி தோகே?''
"தானு கீ ஹோந்தோரெ?''
அரைகுறை பஞ்சாபியில் சுப்பையா சண்டை போடுவான்.
தொடர்ந்து மதன்லால் கூறக் கூடிய பதில் மிகவும் ஆபாசம் நிறைந்ததாக இருக்கும். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் இதுதான். இப்போது மதன்லாலுக்கு என்ன என்று ஒரே வார்த்தையில் அவன் கூறி முடித்துவிடுவான். தொடர்ந்து "சுபாஸபேரெ”. சுப்பையா சேமியாவை அழைத்துக் கொண்டே கண் விழிப்பதைக் கேட்பதற்கான மன நிலையில் மதன்லால் இல்லை. அவள் சுப்பையாவின் அருகில் வர போவதில்லை. அதனால் கூறுவான்: "கொழுக்கட்டையைக் கூப்பிடுடா, கழுதை.''
கொழுக்கட்டை ஐந்தாம் எண்ணில் இருப்பவள். தடித்து கொழுத்துப்போய் இருக்கும் அந்த இளம் பெண்ணுக்கு எலி வாலைப் போன்ற தலை முடியே இருக்கும். அவள் கருப்பு நிற நூலை கூந்தலுடன் சேர்த்துக் கட்டியிருப்பாள். கட்டிலால் தாங்க முடியாத
அளவிற்கு தடிமனாக இருப்பாள். மதன்லாலுக்கு கொழுக்கட்டையை மிகவும் பிடிக்கும். அவள் பல நேரங்களில் வராந்தாவின் சுவருக்கு அருகில் பின்பக்கமாக சாய்ந்து கொண்டு நின்றிருப்பாள்-. யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல. தன்னையே முழுமையாக மறந்து விட்டதைப்போல... நீண்ட நேரமாக அதே இடத்தில் நின்று கொண்டிருப்பாள். மதன்லாலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் பேச்சு. உண்மைதான் என்று அவன் ஒத்துக் கொள்ள மாட்டான். கொழுக்கட்டை மிகவும் தாமதமாகத்தான் கண் விழிப்பாள். தூக்கத்திலிருந்து எழுந்து வரும்போது அவளுடைய ஆடையும் தலைமுடியும் மிகவும் அலங்கோலமாக இருக்கும். அவள் வெளியே வந்து சற்று பார்த்த பிறகுதான் தான் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது என்பது மதன்லாலின் சட்டமாக இருந்தது. மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்வதைப் பார்த்து, அவன் மிகவும் கோபப்படுவான்.
சுப்பையாவும் மதன்லாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, வெளியே சென்றிருந்த தனராஜ் "பேரக்”கிற்குள் நுழைந்து வருவான். உடனே பெருமாள் அழைப்பான்: "லில்லி!''
தனராஜ் வளர்க்கும் நாயின் பெயர் அது. எல்லாரின் ஆதரவுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் லில்லி மீது தனராஜுக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அவன் நியாயம் கூறுவான். லில்லியின் தாய் அருகில் இல்லாமலிருந்தது. ராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்து திருப்பத்தில் திரும்பினான். க்யாஸைக் குறைவாகவே வைத்திருந்தான். பாலத்திற்குக் கீழே இருந்து மிகப் பெரிய சத்தம். இறங்கிப் பார்த்தான். ஓ! பச்சைக் குட்டிகளை கட்டெறும்புகள் சூழ்ந்திருக்கின்றன. எல்லாவற்றையும் தூக்கி எடுத்தான். கண்கள் திறக்கப்படாமல் இருந்தன. அவை துடித்துக் கொண்டிருந்தன. எறும்புகளைக் கையால் கிள்ளி எடுத்தான். இடையில் இரண்டு குட்டிகள் இறந்து விட்டன.
இன்னொன்று பெண் குட்டி. அதை இருக்கையில் வைத்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தான். பால் கொடுத்து வளர்த்தான்.
லில்லி தனராஜின் கட்டிலுக்குக் கீழேதான் உறங்கும். கட்டிலிலேயே படுக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாம். மெஸ்ஸுக்கு பால் வண்டி வந்து விட்டால், லில்லி கண் விழிக்கும். கட்டிலின் காலில் தட்டி, சத்தம் உண்டாக்கும். தலையணையில் கைகளை எடுத்து வைத்து அடிக்கும். முனகும். முரண்டு பிடிக்கும். தனராஜ் கண் விழிப்பான். லில்லியுடன் சேர்ந்து மெஸ்ஸுக்குச் செல்வான்.
லில்லிக்கு நல்ல அறிவு இருந்தது. சல்யூட் அடிக்கவும் "ஷேக் ஹேண்ட்” செய்யவும் தெரியும்.
தனராஜ் "பேரக்”கிற்குத் திரும்பி வரும்போது, பெருமாள் தூக்கத்திலிருந்து கண் விழித்திருப்பான். லில்லியைக் கொஞ்சாமல் பெருமாள் எழுந்திருக்க மாட்டான். அவன் கொஞ்சுவான். கொஞ்சிக் கொண்டே பெருமாள் அழைப்பான்:
"லில்லி...''
நாய் வாலை ஆட்டும்.
"இங்கே வா.''