ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
கண்களுக்கும் வெள்ளை நிறம் இருப்பதைப்போல தோன்றியது. மஞ்சள் நிறம் கலந்த கண்மணிகள் கண்களின் ஓரம் வரை உருண்டு நகர்ந்து கொண்டிருந்தன.
காலடிச் சத்தம் காதில் விழுந்ததும், அவன் கண்களைத் திறந்தான். மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். பசை ஒட்டப்பட்ட தாளால் ஆன பூவிதழ்களை பிரித்து எடுப்பதைப் போல சுருக்கங்கள் விழுந்த கண் இமைகள் வலிய நகர்ந்து கொண்டிருந்தன.
"ஹானா நஹி ஹாயெம்கே?''
"பாயிஸாப்!''
அவன் முனகினான். மூட்டுகள் நொறுங்கித் தளர்ந்து போய் விட்டதைப்போல கால்களை அசைத்தான். மிகுந்த வேதனை உண்டாயிருக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லையும் அதன் முழுமையான உணர்ச்சிகளுடன் அனுபவித்த உணர்வு வெளிப்பாட்டுடன் அவன் கூறினான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவன் உரையாடவில்லை. தன்னுடைய சொற்களை அவனே அனுபவிக்கிறான்.
"நான் சாப்பிடவில்லை.''
"ஏன்?''
"பாயிஸாப்...''
அவனுக்கு உடல் நலமில்லை., சாப்பிடுவதற்கு ஆசையில்லை. ஏன்.. ஆசை உண்டாகவில்லை. அதைச் செய்யக் கூடாது...
"எப்போதும் இப்படித்தானா?''
"எப்போதும் என்றால்...?''
அவன் தத்துவங்களைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கினான். மனிதன் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டானே! இயற்கையையே எடுத்துக் கொள்வோம். குளிர், வெப்பம், மழை.,.. மனிதனும் அதேமாதிரிதான். ஒரு காலத்தில் அவனும் ஒரு ஜவானாக இருந்தான். எந்த மாதிரி என்றால், இதோ நிற்கும் என்னைவிட நல்ல தடிமனாக...
ஏதோ பிரச்சினை உண்டாகியிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நான் சாப்பிடுவதற்குச் செல்லலாம் என்ற நிலை உண்டானது. ஓ... உண்மையாகவே தேவைப்படுபவர்கள் உண்ண வேண்டும். உறங்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும்.
"என்ன ஓய்வு?''
அங்கு அவன் கோபித்தான்.
"போர் வீரர்களான... வீழ்ச்சியின் வாசற்படி வரை வந்து சேர்ந்து விட்ட போர் வீரர்களான நமக்கு...''
நான் நடந்தபோதும் அவன் படுத்துக் கொண்டே கூறிக் கொண்டிருந்தான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், தன்னுடைய சொற்களையே அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.
அதற்குப் பிறகு, அன்மோலக் ராமிடம் நேரடியாகப் பேசுவதில்லை. எப்போதும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். கடந்த பதினொரு வருடங்களாக ஆயிரக்கணக்கான ஆட்களை எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், அப்படிக் கூறுவதே தவறு. மனிதனை அறிவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். இதயத்தின் உள்ளே இருக்கும் அறைகள் மிகவும் ஆழமானவை. எனினும், கடந்த பதினொரு வருடங்களுக்கு நடுவில் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்தேன்.
நட்புணர்வு நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் இதயங்களுடன், என்றென்றைக்குமாக கலந்து விட்டிருந்தேன். ஒன்றும் இரண்டும் கூறி தவறியபோது, எதிரியின் வயிற்றில் ரத்தம் பீறிட வைத்த போக்கிரிகளுடன் நண்பனாகப் பழகினேன். எப்போதும் ரத்த உறவுகளைக் கூறி அழுது கொண்டிருக்கும் பதைபதைப்பான இளைஞர்களின் முடிவற்ற பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுடனெல்லாம் இருந்திருந்தாலும், ஒரு சிறிய மாதிரிக்கு முன்னால் இப்போது இருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது.
அன்மோலக்கைப் பற்றி பல விஷயங்களும் கேள்விப்பட்டிருக்கிறேன். புதிய ஒரு மனிதனைப்பற்றி லைசன்ஸ் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பேசலாம். அவன் காட்டுத் திருடன்... திருடன் அல்ல... தனி பைத்தியம்.. பைத்தியமல்ல... அவனுக்கு வெப்ப நோய் இருக்கிறது... வெப்ப நோய் இல்லை... ஏதாவதொன்று சரியாக இருக்கலாம். ஏதாவதொன்று தவறாக இருக்கலாம். மனிதர்கள் விஷயங்களைக் கூறும்போது, கன்னத்தில் விரல்களை வைத்துக் கொண்டிருக்கும் வழக்கமில்லை.
"பேரக்”கின் வாழ்க்கை முறைக்கு மாறுதல் எதுவும் இல்லை. சாயங்கால வேளையில் குளித்து முடித்து அவனவன் தன்னுடைய சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு "பேரக்”கின் மேற்குப் பக்க வராந்தாவில் உடலை வளைத்துக் கொண்டு நின்றிருப்பார்கள். தெற்கு வடக்காக நடந்து கொண்டிருப்பார்கள். எல்லாருடைய கண் பார்வையும் குடும்ப க்வார்ட்டர்ஸை நோக்கியே இருக்கும்.
வெளியே சமையலறையின் சுவருடன் சேர்ந்திருக்கும் கரி அடுப்பில் தாயும் மகளும் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருப்பார்கள். காற்று வாங்க வேண்டும் என்பதற்காக யாராவது துப்பட்டாவின் முனையால் வீசிக் கொண்டிருப்பார்கள்.
"பார்த்தாயா?''
சுப்பையா சந்தோஷத்தில் திளைத்திருப்பான். சேமியா அவனைப் பார்த்திருக்கிறாள். கையை அசைத்து அழைக்கிறாள். அவனுடைய நாக்கு வரண்டு போய் விடும். தடுமாறித் தடுமாறி ஒரு முனகல் பாட்டு பாடுவான்.
கொழுக்கட்டை எப்போதும் ஓய்வெடுக்கும் நிலையிலேயே இருப்பாள். வெளியே போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் அவள் எப்போதும் மல்லாக்க படுத்திருப்பாள். பல நேரங்களில் தலையை உயர்த்தி வைத்துக் கொண்டிருப்பாள். மதன்லாலைப் பார்த்தவுடன் எழுந்து நிற்பாள் என்பது பொதுவான பேச்சு. அவன் கடந்து செல்லும்போது, எப்படி இருந்தாலும் அவள் எழுந்து நிற்க வேண்டியதிருக்கும். அவளுக்கு மதன்லால் மீது காதல்...
இருட்டு பரவியுடன் சாளரத்தின் வழியாகவும் திறந்து கிடக்கும் கதவுகள் வழியாகவும் நுழைந்து வரும் ஒளி வெள்ளத்தில் சில்க் ஆடைகளின் நிழல்கள் ஆங்காங்கே மறையத் தொடங்கும். வெளியே நடந்து கொண்டிருக்கும் ஆட்களின் உதட்டில் திரைப்படப் பாடல்கள் சீட்டியடிக்கப்பட்டுக் கேட்கும்.
எங்கிருந்தோ "பேரக்”கிற்குள் நுழைந்து வந்தவுடன், திகைப்படைந்து நின்று விட்டேன். அன்மோலக் ராம் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் "கிட் பாக்”ஸின்மீது சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். பெட்டியை வாசலுக்கு நேராக இழுத்துப் போட்டு, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவன் க்வார்டடர்ஸையே பார்த்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில்- அவன் இன்ப உணர்வில் மூழ்கி விட்டிருக்க வேண்டும். காலடிச் சத்தம் கேட்கவேயில்லை. கண் இமைகள் கீழ்நோக்கி இருப்பதாகத் தோன்றியது.
வராந்தாவில் ஒலி பெருக்கி பாடிக் கொண்டிருந்தது. பாட்டின் தாளத்திற்குத் தலையை ஆட்டியவாறு அவன் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மெல்லிய உதடுகள் விரிந்து சிரிப்பை வெளிப்படுத்தின. ஒருவேளை இப்போது அழுதாலும் அழலாம்.
சற்று நேரம் நின்று, ஒலிபெருக்கி பாட்டின் ஆரம்ப வரிகளை மீண்டும் ஒலிக்கிறது:
"நாசோ சிதாரே... அப் சாந்த் நிகல் நேவாலா ஹை...'' - இலங்கை வானொலி பழைய பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்க வேண்டும். காதலனின் வருகையால் உண்டான சந்தோஷத்தில் தன்னையே மறந்து அவள் பாடுகிறாள். அன்மோலக் ராம் மெதுவாக முழங்காலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் நிறைந்திருந்தன. அவனுடைய இதயம் அழுது கொண்டிருந்தது...
அன்று இரவு தூங்குவதற்காகப் படுத்தபோது, முழுமையான பேரமைதியில் யாரோ முனகுவது காதில் விழுந்தது.
"கோன் ஹை?''
ஒரு கேள்வி உயர்ந்தது.
"பாயிஸாப்..''
அன்மோலக் ராம் கூறினான்:
"ஸோ ஜாவோ.''