ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
அன்று பகல் முழுவதும் அவனைப் பார்க்கவே முடியவில்லை. இரவு சாப்பிட்டு முடித்து கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அன்மோலக் ராம் ஆடி ஆடி நடந்து கொண்டே உள்ளே வந்தான். கைகளை வீசியவாறு வந்தான். அந்த அளவிற்கு சந்தோஷத்துடன் இதற்கு முன்பு அவனைப் பார்த்ததில்லை. கிடைக்க வேண்டியது எதுவோ கிடைத்து விட்ட சிறு குழந்தையைப்போல அவன் வந்தான்.
"பாயிஸாப்!''
"என்ன?''
எனக்கு அறுநூறு ரூபாய் வரை கிடைக்கும்.''
"அப்படியா?''
"அறுநூறு ருபாய்...''
அவன் ஆச்சரியத்துடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். உள்ளங்கையை விரித்து முழங்காலில் வைத்தான். பிறகு பேசவில்லை. அமர்ந்து அமர்ந்து முகத்தின் இயல்பே மாறிவிட்டது. அது சமாதி நிலை. எதையும் பார்க்கவில்லை. கேட்கவில்லை.
அன்மோலக் ராம் விரைவிலேயே போகப் போகிறான். எனக்கு அவனைப் பற்றி எதுவுமே தெரியாது.
சுய உணர்வு வந்தபோது அவன் வழக்கம்போல தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்.
"பிறகு... பிறகு... நான் வளையல் வியாபாரம் ஆரம்பிப்பேன்... வளையல் வியாபாரம் ஆரம்பிப்பேன்!''
முணுமுணுப்பதற்கு மத்தியில் அவன் கண்களைத் திறந்தான். ஏதாவது காட்டைத் தேடிப் போக வேண்டும் என்று மதியத்திற்கு முன்னால் உறுதியான குரலில் கூறிய அன்மோலக்தான் அது.
சிறிது சிறிதாக அவன் கண்களை அகல விரித்தான். அந்தக் கண்கள் நிறைந்திருந்தன. அவனுடைய மெல்லிய உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.
"ஃபிர் மை ஜப் தக் இன்கா ஹாத் மேரா ஹாத்மே லே கர்...''
அவனுடைய வார்த்தைகளை அப்படியே கூறும்போது தவறாக வந்துவிடும். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்குத் தெரியாதே!
அன்மோலக் ராம் கூறுகிறான்: வளையல் வியாபாரத்தை ஆரம்பிப்பான். பிறகு சிறு குழந்தைகளின் சதைப் பிடிப்பான கைகளைத் தன்னுடைய கையில் எடுத்து வருடி, வளையல் அணிவிப்பான். அவனுடைய கண்களில் இருந்து இரண்டு துளி வெப்பமான கண்ணீர் அந்தக் கையில் விழும். அப்போது கள்ளங்கபடமற்ற தன்மை ததும்பிக் கொண்டிருக்கும் விழிகளை உயர்த்தி அவர்கள் அவனைப் பார்ப்பார்கள். ஓ! அன்று வாழ்க்கை முழுமையானதாக ஆகும்.
அன்மோலக் ராம் அழுதுகொண்டிருந்தான். அவனுடைய மஞ்சள் நிறத்தைக் கொண்ட அகலமான கன்னங்கள் வழியாக அடர்த்தியான கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் தேம்பித் தேம்பி அழுதான்.
அதை எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. சற்று கேட்டுப் பார்க்கலாமா? இனி தன்னைப் பற்றிய தகவலைக் கூறுவானா?
"அன்மோலக்...?''
கண்ணீரில் பிரகாசித்துக் கொண்டிருந்த கண்கள் என் பக்கம் திரும்பின.
"என்ன அன்மோலக்?''
"பாயிஸாப்!''
தொண்டை தடுமாறியது.
"அன்மோலக்!''
"உங்களுக்குத் தெரியாது!''
"என்ன?''
"என்னால் கூறுவதற்கு முடியாது. நினைத்துப் பார்ப்பதற்கு சக்தி இல்லை. ஓ... என் நெஞ்சு வெடித்து விடும்போல இருக்கிறது. தெரிகிறதா? கிரு கிரா கிரு கிரா... என்று வெடிக்கிறது. நான் எப்படித் தாங்குவேன்?''
அப்போதும் அவன் அழுது கொண்டிருந்தான். தேம்பிக் கொண்டிருந்தான். ஏதாவது கூற வேண்டும். எதைக் கூறுவது?
அதே கண்ணீருடன் அன்மோலக் ராம் சொன்னான்: "மனிதன் எப்படித் தகர்ந்து போகிறான் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன். மனிதனைப் பற்றி நான் நினைத்திருந்த எல்லா கருத்துக்களும் சூறாவளிக் காற்றில் சருகுகள் பறப்பதைப்போல பறந்து போய் விட்டன.
இன்றுவரை என்னுடன் பழகக் கூடிய நண்பர்களிடம் எனக்கு வெறுப்புத்தான் இருக்கிறது. அதில் நியாயம் இருக்கிறது. வெறுப்பை அளிப்பது எதுவோ, அதைத்தான் அவர்கள் செய்வார்கள். நாற்றமெடுப்பது எதுவோ, அதைத்தான் கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு இளம் பெண் நடந்து போய் விடக்கூடாது. அவர்கள் காதுகளில் விழுகிற மாதிரி மற்றவர்கள் தங்களின் இரத்த உறவுகளைப் பற்றி பேசக்கூடாது. இவர்கள்தான் என்னுடைய நண்பர்கள் என்று என் இளம் வயது நண்பர்களிடம் கூற முடியாது.
என்னைப் பற்றி என்னிடம் இருந்த கண்மூடித்தனமான மதிப்பைப் பற்றி நான் சற்று கவலைப்படுகிறேன். இன்னொரு வகையில் கூறுவதாக
இருந்தால் கவலை எதை அளிக்கிறது? என்னுடைய குருட்டுத்தனமான மதிப்பீட்டை இப்போதிருந்து அழிப்பதற்கு முயற்சிக்கட்டுமா?
மனிதன் மதிப்புடன் பிறந்தான். அந்த மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவனுக்கு முடியவில்லை. ஒன்று இல்லையென்றால் இன்னொன்று. பொருத்தமான காரணங்களை எப்படிப்பட்ட பிச்சைக்காரனின் வாழ்க்கையிலும் பார்க்க முடியும் என்பதை இப்போது நான் உறுதியுடன் நம்புகிறேன். அதனால் சுப்பையாவின் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ராயலஸீமாவைப் பற்றிய விஷயங்கள்... கிராமத்தை விட்டுச் சென்ற குடும்பம்... கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. தனராஜின் இளம் வயது கதைகளைக் கேட்கும்போது, அவரவர்கள் தங்களுடைய இளம் வயது காலத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்...
மிகையோ குறைவோ இருந்தாலும், அவர்கள் என்னை மாதிரிதான் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். அவர்கள் ஆசைகளை வளர்த்தார்கள். எங்களுடைய ஆசைகள் என்ன ஆயின என்று யாருக்காவது தெரியுமா? இல்லையா? வேண்டாம்... கூறட்டுமா? நாங்கள் இறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.''
எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- எழுத வேண்டியதை மறந்து விடுகிறேன்.
அன்மோலக் ராமிற்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.
அன்பான மனைவி, பிரியமான குழந்தைகள்.
பனியும் குளிர் வெயிலும் நிறைந்த சிம்லாவில் அவன் குடும்பத்துடன் சந்தோஷத்துடன் இருந்தான். போதும் என்றே தோன்றாத இனிமையான நிமிடங்கள். அன்று அவனுக்கு வாழ்க்கை நிறைகுடமாக இருந்தது. இடையில் குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்தான். புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரிக்கு மேலே சுவரில் ஆணி அடித்து புகைப்படத்தைத் தொங்கவிட வேண்டும். அவன் ஆணி, சுத்தியல் ஆகியவற்றுடன் அலமாரிக்கு மேலே ஏறி நின்று கொண்டிருக்கிறான்.
தாய் வராந்தாவில் இளைய குழந்தைக்கு பட்டு ஆடை தைத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தைகள் அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் சாலையில் இறங்கியதை தாய் பார்க்கவில்லை. இளைய குழந்தை சாலையின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு சிறிய கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
அப்போது தூரத்தில் காரின் ஹார்ன் சத்தம்!
மூத்த பெண் தங்கையைத் தூங்குவதற்காக சாலையின் ஒரு பகுதிக்கு வேகமாகச் செல்வதை இறுதியாகத் தாய் பார்த்தாள். பிறகு மின்னலைப் போல அங்கு வந்தது கருப்பு நிற கார்.
பயங்கரமான ஒரு கூச்சல் கேட்டது. அன்மோலக் அலமாரிக்கு மேலே இருந்து உடனடியாகத் திரும்பிப் பார்த்தான்.
என் குழந்தைகள்!
அவர்களைப் பிடிக்க வேண்டுமே என்ற ஆவலுடன் தாய் சாலையை நோக்கிப் பாய்ந்தாள்.
மின்னலைப் போல அவன் எல்லாவற்றையும் பார்த்தான்.
குழந்தைகள்.
அவர்களின் அன்னை.
அவர்களுக்கு இடையில் காரின் மின்னல் வெளிச்சம். வேறு எதுவுமே அவனுக்கு ஞாபகத்தில் இல்லை. சுய உணர்வு வந்தபோது மருத்துவமனையில் இருந்தான்.
என் குழந்தைகள்!
அடுத்த வார்டில் குழந்தைகளின் தாய் இருந்தாள். பார்க்க வேண்டுமா?
என் குழந்தைகள்!
கண்ணீருடன் அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்றாம் எண்ணைக் கொண்ட வீட்டின் திறந்துவிடப்பட்டிருந்த கதவு வழியாக வெளியே பாய்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் பட்டாடையின் மின்னல் ஒளி தெரிந்தது. அன்மோலக் சற்று தேம்பினான்.
"அவள் இருந்திருந்தால், இதோ பாருங்க! இந்த அளவிற்குப் பொன்னைப்போல இருந்திருப்பாள்! பாருங்க.. நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாபு! என்ன இனிமையான வார்த்தைகள்! எனக்கு உணர்ச்சி வசப்படத் தோன்றுகிறது. இனி யாரும் என்னை அழைக்க மாட்டார்கள். பாபு...''
பிறகு அவன் என் பக்கம் திரும்பவில்லை. குவார்ட்டர்ஸிலிருந்து சாயம் தேய்க்கப்பட்ட கண்ணாடிகளின் வழியாக வண்ணமயமான வெளிச்சம் தெரிந்தது.
ஒரு மனிதனை பாதத்திலிருந்து தலை வரை படித்து விட்டோம் என்ற தேவையற்ற தற்பெருமையுடன் இந்தக் குறிப்பை முடிக்கவில்லை. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை அவர்களுடைய சூழ்நிலைகளில் நின்று கொண்டு பார்க்க வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன்.