ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
யாரோ சுட்டிக் காட்டினார்கள். அவன் நடக்கும்போது கால்கள் தளர்ந்து போய் இருப்பதைப்போல தோன்றின. உடல் நடுங்குகிறதோ என்று தோன்றியது. நிக்கரும் பனியனும் அணிந்திருந்தான். நல்ல தடிமனான உடம்பு. உடல் மஞ்சள் நிறத்தில் இருந்தது. வெளிறிப்போய் காணப்பட்டான்.
"பாயிஸாப்... இதர் பைட்தாஹை?''
"என்ன? பைட்டோ!''
அவனுடைய தொண்டை தடுமாறுகிறதோ என்பதைப்போல தோன்றியது. ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்திக் கூறியபோது, உள்ளங்கையில் வைத்து எடையையும் ஓட்டத்தையும் பார்க்கிறான் என்பதைப்போல தோன்றியது.
அமர்ந்தவுடன் அன்மோலக் ராம் கேட்டான்: "பாயிஸாப்.... க்யாகர்னா ஹை தரா து பத்தாவோ?''
யாரோ சிரித்தார்கள். பேசக்கூடிய முறையைப் பார்த்து சிரித்திருக்கலாம். "மூன்றரை வயதை அடைந்திருக்கும் உங்களுடைய தம்பி கேட்பதைப் போல இருக்கிறது!''
யாரோ அருகிலிருந்த ஆளின் காதில் கூறினார்கள்: "நான் என்ன செய்யணும்?''
இன்னொரு ஆள் முணுமுணுத்தான்.:
"எப்படி அதை எடுப்பது?''
"இரண்டு கைகளாலும் எடுக்கணுமா?''
அன்மோலக் ராம் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டு குவியலாகக் குவிக்கப்பட்டிருந்த குண்டுகளில் இருந்து ஒன்றை எடுத்தான். சாயத்தை எடுக்கும் ஓவியனின் முக வெளிப்பாட்டுடன் விரல்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு பார்த்தான்.
அவனுடைய தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. இடையில் நரை விழுந்திருந்தது. முகம் அகலமாக இருந்தது. நெற்றியிலும் கன்னங்களிலும் சிறு சிறு பருக்கள் இருந்தன. வட்டமான கண்கள் கலங்கிக் காணப்பட்டன. கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. கண்மணிகள் உயிர்ப்பே இல்லாமல் சாம்பல் நிறத்தில் இருந்தன.
குண்டை கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அவன் உட்கார்ந்திருந்தான். எதையோ நினைத்திருக்க வேண்டும். அவனுடைய கன்னம் கோணிக் கொண்டும் சுருங்கிக் கொண்டும் இருந்தன. இறுதியில் அவன் சொன்னான்:
"தும் ஹெம், பேடா, கோயி துஸ்மன் நஹி மிலா?''
கூர்மையாக, செல்லமாக, அவன் ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்திக் கூறியபோது எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டு
உட்கார்ந்திருந்தார்கள். அன்மோலக்கின் கண்கள் நிறைந்து கொண்டிருந்தன. சிரிப்பு வலிய ஓரத்தில் வெளிப்பட்டது. கன்னங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
"இன்ஸான், இன்ஸான்கோ மார்னா நஹி சாஹியே!''
அப்போது நினைவில் வந்த தத்துவத்தைப்போல, அவன் சொன்னான்: "மனிதன் மனிதனைக் கொல்லக் கூடாது என்று....''
எல்லாரும் சிரித்தார்கள்.
"பிறகு, நமக்கு வேலை இல்லை.''
"என் குழந்தைகள் பட்டினி கிடக்கும்.''
"வாழ்ந்து பிரயோஜனமில்லை.''
"டேய்... வாழ்ந்து பிரயோஜனமில்லை என்றில்லை. பிறகு, வாழ முடியாது...''
"பாயிஸாப்!''
"க்யோம்?''
"ஆமாம்... இப்போது எனக்கு என்ன சொல்ல வேண்டுமென்பது ஞாபகத்திற்கு வருகிறது. எனக்கு சற்று உடல் நலக்குறைவு இருக்கிறது. நீங்க மன்னிக்கணும். எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். தேவையான இடத்திற்கு தலை ஓட மாட்டேன் என்கிறது. இடையில் வாழ முடியவில்லை என்று தோன்றுகிறது. பாயிஸாப். உங்களுடைய பெயர் என்ன? ஹ்ஹா! சகாதேவன். ஹா... மைனே கஹா, பாயிஸாப்.. நீங்க சொன்னபோது எனக்கு ஞாபகத்தில் வந்தது. நினைத்துப் பார்ப்பது, நினைப்பதை மறந்து விடுவது... அது ஒரு சாபம்தான். உடல் நலக் கேடுதான். என்னுடைய தலை சரியாக இல்லை. இந்த குண்டுகள் இருக்கின்றனவே! குண்டைச் செலுத்துபவன்
வெறும் கருவிதான். குண்டு துளைத்து நுழைய வேண்டிய மார்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு குண்டைப் பார்த்தால் பயம். ஒரு நாள் குண்டு வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் வாழ முடியாத நம்மை அழைத்து தருகிறார்கள். இந்தா... ஒரு ஐம்பது குண்டுகளைக் கையில் வாங்கிக் கொள். பன்டோலியத்தை மார்பில் விடாமல் பிடித்துக் கொள். பிறகு... உன்னை எதிர்பார்த்து அந்தப் பக்கம் எதிரி அமர்ந்திருக்கிறான். அவனைச் சுட்டுத் தள்ளு... என்ன ஒரு கேவலமான செயல்! அந்தப் பக்கத்தில் இருக்கும் மனிதனும் என்னைப் போன்றவன்தான். வாழ முடியவில்லை. அப்படியென்றால் இதோ... நீயும் கையில் வாங்கிக் கொள். அவர்கள் ஒருவரையொருவர் கொன்று கொள்கிறார்கள். சாக வேண்டிய மனிதன்- மனிதனல்ல- அவன் மேலே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். டே! சுடு... டே! செத்துமடி...! அவன் சந்தோஷப்படுகிறான். என்ன ஒரு தந்திரம் என்பதைப் பார்... பாயிஸாப்...'' "ஆப் கா ஸுப் நாம் க்யா ஹை?''
க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் கேட்டான்: "உங்களுடைய பெயர் என்ன?''
"ஜி... ஆங்ஜி, மேரோ நாம்...ஆப் மூதே புச்சரஹே ஹை? ம்ஹா மேரே நாம்...''
ஒவ்வொரு சொல்லையும் அவன் நிறுத்தினான். சுவாசம் விடுவதற்காக என்பதைப்போல மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டும் கண்களைச் சிமிட்டிக் கொண்டும் இருந்தான். அவனுடைய கண் இமைகள்கூட சுருக்கங்கள் விழுந்து காணப்பட்டன.
"சரி... அன்மோலக் ராம். ஆப் சலே ஜாயியே!''
க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் சொன்னான்: "பிறகு... அன்மோலக் ராம், எங்கே போக வேண்டும் என்று தெரியுமல்லவா?''
எழுந்தபோது அவன் முழங்காலில் கையை ஊன்றினான். உடல் நன்றாகவே நடுங்கிக் கொண்டிருந்தது.
"படி படி... ஆப் கீ படி மெஹர் பானீ...'' எழுந்திருப்பதற்கு மத்தியில் அவன் நன்றி கூறினான்.
"ம்.. எங்கே போக வேண்டுமென்று தெரியுமல்லவா? அது போதும். கட்டிலில் போய் படு. என்ன? இனிமேல் ஒரு வேலையும் செய்ய வேண்டாம். தெரியுதா? குழாய் திறந்திருக்கும். இங்கு எப்போதும் நீர் கிடைக்கும். தெரியுதா? நடக்க முடியவில்லையென்றால், குளியலறைக்குச் செல்ல வேண்டாம். வராந்தாவிலேயே அதோ குழாய் இருக்கு. சரியா?''
"து கிதெ ரஹனால ஹை?''
மதன்லால் கேட்டான்: "த்தா, பாயிஸாப், ஜீமை, ஆப் முத்தே புச்ரஹே ஹை? மை ஸிம்லாத...''
அவன் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. வாடிய வாழை மரத்தைப்போல அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
"அவன்தான் கில்லாடி''
"நம்பர் ஒன்!''
"என்ன?''
"நம்பர் ஒன் கில்லாடி!''
"இப்படி எவ்வளவு பேர் கம்பெனியில் இருக்கிறார்கள்?''
"நீ என்ன மோசமா?''
"அவன் சொன்னது புரிஞ்சிதா?''
"பிறகு நீதானே பட்டாளத்தின்..''
"சுப் சாப்...''
"நான் கேட்கிறேன்- அவன் சொன்னது உங்களுக்குப் புரிஞ்சதா?''
புதிதாகப் பார்க்கும் எந்தவொரு ஆளிடமும் உடனடியாக நெருங்கி விடக் கூடாது என்பது புரிந்திருக்கிறது. பல வேளைகளிலும் அவர்களிடமிருந்து விலகி ஓடுவதற்கு முயற்சிக்க வேண்டும். எனினும், மரியாதை என்ற ஒன்று இருக்கிறதே! அதனால் அம்முனிஷ்யன் சோதனை முடிந்தவுடன், அன்மோலக் ராமைச் சற்று பார்த்தேன். தூக்கத்தில் இருந்திருக்க வேண்டும். கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். கண்கள் பாதி மூடியிருந்தன. கண்களின் ஓரங்களில் வாடிய தெச்சுப்பூக்களைப்போல சுருக்கங்கள் விழுந்திருந்தன.