ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
பெருமாள் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கொசு வலைக்குக் கீழே இரண்டு கைகளையும் நீட்டுவான். தனராஜுக்கு அது பிடிக்காது.
"லில்லி!''
ராஜ் கோபத்துடன் நின்று கொண்டிருப்பான்.
"போகாதே!''
நாய் ராஜின் முகத்தையே பாசத்துடன் பார்க்கும்.
"இங்கே வா மகளே.''
"போகாதே...''
"லில்லி...''
"போகாதே...''
"உனக்கென்னய்யா? நான் அதைக் கூப்பிடக் கூடாதா?''
"நான் வளர்க்கும் இந்த நாய்...''
"உனக்குச் சொந்தமா?''
"உனக்கு என்ன வேணும்?''
"ஷேக் ஹேண்ட்...''
"ஃப்பூ...''
"என்னய்யா... காலம் காத்தால நீ மனஷனைத் திட்டுறே?''
லில்லி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும். தனராஜும் பெருமாளும் மோசமான வார்த்தைகளால் சண்டை போட்டுக் கொண்டிருப்பதற்கு மத்தியில் சுப்பையா தன்னுடைய நீளமான விரல்களால் சொடக்கு போட்டுக் கொண்டே நாயை அழைப்பான்.
"ஷேக் ஹேண்ட்!''
நாய் மூன்று கால்களில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையை கட்டிலின்மீது தூக்கி வைக்கும். சுப்பையா கையைச் சொறிந்து கொண்டே படுத்திருப்பான்.
"ஆய் ரெ பட்டே... கைஸா ரத்தீரெது?''
மதன்லால் காரித் துப்புவான்.
"சல்...''
அவன் வேகமாக எழுந்து நாயிடம் நெருங்குவான்.
"நிகல் ஜா! இதர்ஸே நிகல்... சுபா ஸபேரெ...''
என்னவொரு மோசமான மனிதன்! மனிதனாக இருந்தால், அடக்கமும் பணிவும் இருக்க வேண்டும். சிறிதளவாவது இருக்க வேண்டும். இந்த கேடுகெட்ட செயல்கள் இந்த அளவிற்கு வெளிப்படையாகவும் வெளிச்சத்திலும்? காரித்துப்ப வேண்டும்போல இருந்தது. அறையின் ஓரத்து மூலையில் படுத்திருக்கும் எனக்கு இறங்கி ஓட வேண்டும்போல இருந்தது.
நான் இங்கு வந்து மூன்று வருடங்களாகி விட்டன. இந்த பங்களாவைப் போன்று காட்சியளிக்கும் "பேரக்”கில் பல இடங்களிலும் இருந்திருக்கிறேன். எல்லா இடங்களிலிருந்தும் இடம் மாறியிருக்கிறேன். என்னுடன் இருந்தவர்கள் எல்லாரும் இடத்தை விட்டே போய் விட்டார்கள். அதற்கு பதிலாக புதிய ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். கேடு கெட்ட செயல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மிகவும் குறைவான வேலையும் நல்ல உணவும் சந்தோஷம் நிறைந்த தங்குமிடமும்.... பலவற்றுடன் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு இந்த புதிய இறக்குமதிகளுக்குப் பிறகு சிறிய சிறிய தொந்தரவுகள் வந்து சேர்ந்தன. வெளியே போகும்போது அவுட் பாஸும் அடையாள அட்டையும் வேண்டும். சாயங்காலம் எட்டு மணிக்கு ஆட்கள் கணக்கெடுப்பு இருக்கிறது. தினமும் பி.டி.யும் பரேடும் ஆரம்பமாகி விட்டது. வாரத்தில் ஒரு நாள் பேரக் இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மிகவும் முக்கியமான விஷயங்கள் தான். எங்களைப் போன்ற பழைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன நிம்மதி இல்லாத நிலைமை இருந்தது. மனதில் கவலைதான். ஏனென்றால் இவை எதுவுமே இல்லாமல் எவ்வளவோ சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். புதிதாக ஒவ்வொரு ஆள் வரும் போதும், புதிதாக ஒவ்வொரு சட்டத்தையும் உண்டாக்க வேண்டியதிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் புதிய ஆள் வரும்போது, உடனடியாகப் பார்க்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. புறப்படுவதற்கு முன்பே, கம்பெனியிலிருந்து அறிவித்திருப்பார்கள். இதில் ஒரு ஆளுக்கும் திருப்தி இல்லை. கம்பெனியில் வைத்து கவனிக்க முடியாத போக்கிரிகளையும், எப்போதும் உடல் நலக்கேடு பற்றிய ரிப்போர்ட்டிற்காக அலைந்து கொண்டிருக்கும் நோயாளிகளையும் வேலையே தெரியாத காக்கா பிடிக்கக் கூடிய மனிதர்களையும் டிட்டாச்மென்டிற்கு அனுப்பி விடுவது... எனினும், வண்டி வரும் நேரமாகி விட்டால், காத்திருப்போம். அவனுக்காக மெஸ்ஸில் சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கும். கட்டில் தயார் பண்ணி வைக்கப்பட்டிருக்கும்.
அம்முனிஷ்யன் சோதனை நடக்கும்போதுதான் அன்மோலக் ராம் வந்தான். க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் ஸ்டோருக்கு முன்னால் வராந்தாவில் போர்வையை விரித்தோம். குண்டுகள் நிரப்பப்பட்ட பன்டோலியன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் இஞ்சியைக் குவித்து வைத்திருப்பதைப்போல "த்ரீ நாட் த்ரீ” குண்டுகளைக் குவித்து குவியலாகச் சேர்த்து வைத்திருந்தோம். போர்வையின் ஓரத்திலும் மூலையிலும் வட்ட வடிவில் சப்பணம் போட்டு அமர்ந்திருந்த நாங்கள் ஒவ்வொரு குண்டும் தயாரிக்கப்பட்ட வருடத்திற்கேற்றபடி பிரித்து எடுத்து மீண்டும் அடுக்கி பன்டோலியன்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தோம். கணக்கு எடுத்துக் கொண்டிருந்தோம்.
"நைன்டீன் ஃபார்ட்டி...''
"கிதர்?''
"என்னிடம்!''
"ஃபார்ட்டி டூ இருக்கிறதா?''
"எவ்வளவு வேணும்?''
"இரண்டு!''
"பிறகு?''
"எறிய வேண்டாம்!''
"ஒய்?''
"வெடித்து விடும்!''
"ஹ... ஹ... ஹ...''
"ஒய்?''
"எவ்வளவு பழையது?''
"எங்கெல்லாம் போயி வந்ததாக இருக்கும்?''
"யாருடைய பன்டோலியத்திலெல்லாம் அவை இருந்திருக்கும்?''
"எனக்குத் தெரியும்.''
"என்ன?''
"சுப் சாப் காம் கரோ.''
"தெரிஞ்சிக்கோ.''
"பேசுறப்போ வேலை நடக்காது!''
"அவன் பேசட்டும்!''
"இந்த குண்டை வெடித்த ஆளுக்கு வீர சக்கரம் கிடைத்தது!''
"இது பாகிஸ்தானிலிருந்து வந்தது!''
"எப்படி?''
"பிடிக்கப்பட்ட ஆளிடமிருந்து கைப்பற்றி இருந்தால்....?''
"பிணத்தின் நெஞ்சில் இருந்த...''
"அப்படியா? அப்படியென்றால் இந்தியாவில் முன்பு இருந்ததாக இருக்க வேண்டும்.''
"எப்படி?''
"பங்கு போட்டு எடுத்த சமயத்திலேயே...''
"ஹ... ஹ... ஹ....''
"பார்... இதற்கு மேலே ஒரு நட்சத்திரம்!''
"அசோக சக்கரம் கிடைத்த ஆளுடையதாக இருக்க வேண்டும்.''
"இல்லைப்பா.''
"பிறகு?''
"லிபியா...''
"கோஹிமாவாக இருக்கக் கூடாதா?''
"இருக்காது?''
"க்யோம் ஜி?''
"மைனே கஹா!''
"அப்படியா?''
"சுப் சாப் அப்னா காம் கரோ!''
"பாருத் கோயி காதா நஹி!''
"இஸ்ஸெ துஸ்மன் மாரா ஜாதா ஹை!''
"ஓ!''
"என்னடா?''
"எங்கே நிஷான் எடுப்பது?''
"அய்யோ!''
"ஆமா...''
"ஒரு நிஷான்வாலா!''
"அவனுடைய கை நடுங்கும்.''
"சங்கு துடிக்கும்.''
"நான் முதல் முறையாக விசையை அழுத்தியது...''
அது ஒரு கதையாக இருந்தது. எதிரியை எதிர்பார்த்துக் கொண்டு பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து இருந்ததிலிருந்து அவன் ஆரம்பித்தான். கூறிமுடித்தபோது அடுத்த ஆள் தன்னுடைய அனுபவங்களைக்கூற ஆரம்பித்தான். அவர்களுக்கு கூறி முடிக்க முடியாத அளவிற்கு விஷயங்கள் கூறுவதற்கு இருந்தன.
அப்போதுதான் அன்மோலக் ராம் அங்கு வந்தான். அவன் வந்து சேர்ந்து எவ்வளவோ நேரமாகிவிட்டது. புதிய ஆள் வரும் விஷயத்தை எல்லாரும் மறந்து போய் விட்டிருந்தார்கள்.
"பாயிஸாப்.... மேஜர்ஜீனே ஹுக்கும்தியா...''
அவர்கள் புதிய குரலைக் கேட்டு முகங்களை உயர்த்தினார்கள். அவன் வந்தான். பொருட்கள் அனைத்தையும் கட்டிலில் வைத்தான்.
க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் ஸ்டோருக்கு முன்னால் போகும்படி ஹவில்தார் மேஜர் சொல்லியிருந்தார். இடம் எது என்று தேடிக் கொண்டிருந்திருக்கிறான். இறுதியில் பேச்சுச் சத்தத்தைக் கேட்டு வந்திருக்கிறான்.
"பாயிஸாப்.... நான் எங்கே இருக்க வேண்டும்?''