ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
தேவையான அளவிற்கு அவனைப் பல விஷயங்களைப் பற்றியும் பேச வைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அதனால் ஒரு வார்த்தைகூட பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றிருந்தேன்.
அவன் பலவற்றையும் சொன்னான். மேலே இருப்பவர்கள் திறமை கொண்டவர்களை அறிந்து கொள்வதில்லை. ஒத்துக் கொள்வதில்லை. அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இது எந்தச் சமயத்திலும் நல்லதல்ல. ஆலிவர் க்ராம்வெல்லிடமிருந்து ஆரம்பிக்கலாம்.
அவரவர்களுடைய திறமைகள் செயல்முறைக்கு வருவதற்கு நடைமுறையில் இருக்கும் சட்டம் அனுமதிக்காத நிலை இருக்கும் போது, தைரியம் கொண்ட மனிதன் அதே சட்டத்தை வைத்துக் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கிறான். தகுதி கொண்டது வாழும். மனிதன் அடைந்து கிடப்பதற்கு பிறந்தவன் அல்ல. அவன் நெருக்கி... நெருக்கி... நெளிந்து எழுந்திருப்பான். உயர்வான்.
ஒரு வகையில் கூறுவதாக இருந்தால், அது உண்மையாக இருக்கலாம். ஒரு விஷயம்- எதைப் பற்றிப் பேசும்போதும், அன்மோலக் ராமிற்கு தெளிவான உட்கருத்து தெரியும்.
அவனுக்கு உடல் நலமில்லை. உடல் நலமில்லை என்றால், மன ரீதியான சோர்வு என்று டாக்டர் கூறுகிறார். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், மன ரீதியான தளர்ச்சி என்று அதைக் குறிப்பிடலாமா? ஆனால் எழுந்திருக்க முடியாத நிலை உண்டாகும். படுத்த இடத்தில் படுத்துக் கொண்டே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அறையைச் சுத்தம் செய்பவருக்கு பணம் தருவதுதான் எப்போதும் நடக்கக் கூடியது. இப்போது நிலைமை பரவாயில்லை. சிறிது நடக்கலாம். தலையணைக்கு அடியில் எப்போதும் ஊன்று கோலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். தனக்கே தெரியாமல்
இடையில் படுத்திருக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்க முடியாத நிலை உண்டாகும். எப்போது என்று தெரியாது. அது இனிமேலும் வரும். ஓய்வு மட்டும் போதும் என்று டாக்டர் கூறுகிறார். மன அமைதியின் காரணமாக மாற வேண்டும் என்பதே உண்மை. அதனால் "பேரக்"கிற்கு அனுப்பி வைத்தார்கள். கம்பெனி கமாண்டர் இன்ஸ்பெக்ஷனுக்கு வரும்போது, அன்மோலக் ராம் கட்டிலில் தளர்ந்து போய் படுத்திருந்தான். எழுந்திருக்க முடியவில்லை. மேஜர் ஸாபிற்கு கோபம் அதிகமானது.
"ஹூ திஸ் டாம் இடியட் ஈஸ்?''
"பட்டே!''
அன்மோலக் உரத்த குரலில் கத்தினான். தலையணைக்கு அடியில் இருந்து ஊன்றுகோலை எடுத்தான். மேஜரின் பின் பாகத்தில் அடித்தான்.
"என்ன சொன்னாய் நாயே? நான் இந்தியா என்ற இந்தப் மிகப் பெரிய நாட்டின் ஒரு குடிமகன். பட்டாளத்தில் ஒரு ஜவான். உனக்கு தெரியாதா? எனக்கு இப்போது முடியாத நிலை...''
மறுநாள் அன்மோலக் ராமிற்கு டிட்டாச்மென்டிற்குப் போவதற்கான உத்தரவு வந்து சேர்ந்தது.
ஓய்வு நேரம் முழுவதும் அவன் "கிட்பாக்"ஸிற்கு மேலே உட்கார்ந்திருப்பான். இன்னும் சொல்லப்போனால் எப்போதும் ஓய்வு நேரம்தான். அவன் எதற்கும் போவதில்லை. யாரும் அவனை அழைப்பதில்லை. இரவு அதிக நேரமாகி விளக்கை அணைப்பதல்லாமல், அவன் தூங்கச் செல்வதில்லை. அவனுக்கு உறக்கம் என்பதே இல்லை. எப்போதும் "கிட் பாக்"ஸின் மீது உட்கார்ந்து கொண்டு குடும்ப க்வார்ட்டர்ஸ்களையே பார்த்துக் கொண்டிருப்பான்.
யாரையும் தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் இல்லை. குழந்தைகள் அந்தப் பக்கமாக கடந்து செல்லும்போது, உதடுகளைக் கடிப்பான். அழுகிறானோ என்று தோன்றும். இல்லை... கண்களுக்கு உயிர்ப்பு வந்து சேர்ந்திருப்பதைப்போல இருக்கும். சிரிக்க வேண்டும்போல தோன்றும். அந்த நிமிடமே ஒட்ட வெட்டப்பட்ட தலையில் கைகளைக் கொண்டு தடவுவான். முதலில் மெதுவாக... தொடர்ந்து அழுத்தி... அழுத்தி... தலையே சுற்றுவதைப்போல இருக்கும். பற்களைக் கடிப்பதைக் கேட்கலாம். முகம் முழுவதும் சுருங்கி இருண்டு போய் இருப்பதைப் பார்க்கலாம். அவன் கட்டிலில் சாய்ந்து படுப்பான்.
இடையில் எனக்கு ஒரு தவறு உண்டானது. வராந்தாவில் ஒலி பெருக்கி பாடிக் கொண்டிருந்தது. பாடலின் ஆரம்ப வரி இப்போது நினைவில் இல்லை. இதுவரை பகலாக இருந்தது. எப்படியோ என்னுடைய நேரம் நகர்ந்து விட்டது! இதோ வண்ணமயமான சாயங்கால நேரம் வந்துவிட்டது! காதலனைப் பற்றிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்படி நினைத்து... நினைத்து... உட்கார்ந்து கொண்டிருக்க முடிந்தால்...? இல்லை... மாலை மறைந்து... மறைந்து போகும். இருள் வரும். பயங்கரமான அடர்ந்த இருட்டு வரும். நான் இந்த பயங்கரமான இரவு நேரத்தை எப்படிக் கழிப்பேன்? இதுவோ வேறெதுவோதான் பாடலின் உட்கருத்து. சிறிது நேரம் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னவென்றே தெரியாமல் அந்த ஆரம்ப வரிகளை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
என்னை பிடித்து நிறுத்தக் கூடிய வேதனை கலந்த பாடல்கள் வேறும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது எனக்கு சரஸ்வதியின் ஞாபகம் வரும். எனக்கு உன்மீது காதல் இருக்கிறது என்று நான் அவளிடம் கூறவில்லை. எனக்கு சங்கரன்மீது காதல் இருக்கிறது என்று அவள் என்னிடமும் கூறவில்லை. எங்களுக்கிடையே காதல் இருக்கிறது என்று அவளுடைய வீட்டில்
இருப்பவர்களுக்குத் தெரியும். அவளுடைய தாய் மூத்த அண்ணனின் திருமணத்தைப் பற்றியே என்னிடம் பேசுவாள். அண்ணி நல்லவளா? என்ன படித்திருக்கிறாள்? பழகுவதற்கு இனியவளா? அப்பாவின் பொதுவான அறிவுரை ஒன்றே ஒன்றுதான்: "மணி மேக்ஸ் தி மேன்!''
என்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு உலகம் தெரியாது. வெறுமனே எதையாவது உருப்படியற்ற விஷயங்களைச் செய்து கொண்டு நடந்து திரிகிறேன். சன்னியாசம், வேதாந்தம், யாசகம்... இவை எதுவும் வாழக்கூடிய மனிதனுக்கு பொருத்தமானவை அல்ல. அவளுடைய தந்தையின் பொது அறிவுரையின் அர்த்தம் இதுதான். "பணத்தை சம்பாதி.. சரஸ்வதியை எடுத்துக்கோ... "
இரண்டே இரண்டு முக்கிய வழிகள்தான் இருக்கின்றன.
ஒன்று: சரஸ்வதியை மறந்து விட்டு எங்கேயாவது போய் விடுவது. இரண்டு: எதைச் செய்தாவது பணத்தைச் சம்பாதிப்பது.
சரஸ்வதியை மறப்பதா?
உலகத்தைத் தெரிந்து கொள்ளாதவனுக்கு பட்டாளம்தான் கதி. பட்டாளத்தில் சேர்ந்து முதல் விடுமுறையில் நான் சென்றபோது, அவள் இறந்து கிடந்தாள்.
அவள் இறந்து விட்டாள் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. பேருந்து அவர்களுடைய வீட்டைக் கடந்து சென்றபோது முற்றத்திலும் திண்ணையிலும் ஆட்கள் இருப்பதைப் பார்த்தேன். அவளுடைய தந்தை ஊரில் பெரிய மனிதர். யாரோ பஞ்சாயத்து விஷயமாக வந்திருக்க வேண்டும்.
வீட்டிற்குச் சென்றவுடன், நண்பர்கள் பார்ப்பதற்காக வந்தார்கள்.
"சரஸ்வதி இறந்து விட்டாள்.''
"எந்த சரஸ்வதி?''
"அரவிந்தனின் சகோதரி.''
அதற்குப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. அந்த நிமிடமே சாய்ந்து கீழே விழுந்து விட்டேன். அன்றுதான் நான் நிலைகுலைந்து போனேன்.