ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6383
"நாம் இதையும் எடுத்துக் கொண்டு போவோம். குடித்து விட்டால், பிறகு... தனியாகப் படுத்திருக்க முடியாது. வா... எழுந்திரு!''
"நண்பரே! "
"என்ன?''
"நீங்க போங்க...''
"வரலையா?''
"இல்லை!''
"ஹச்சா?''
அவன் அழுத்தமாகச் சொன்னான்: "உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். பணம்தானே? இதோ... இந்த கவர் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். பயமா? நான் உங்களுடன் இருக்கிறேன். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய பிரச்சினையா? நமக்கு இடையே என்ன தனிப்பட்ட விஷயம் இருக்கிறது?''
இயல்பாகவும் உற்சாகத்துடனும் எதையோ பாடிக் கொண்டே அன்மோலக் ராம் திரும்பி வந்தபோது, நான் படுத்து விட்டிருந்தேன். "பேரக்"கை அடைந்த பிறகும், அவன் பாடலை நிறுத்தவில்லை.
"என்ன... இந்த அளவிற்கு குஷி?''
தாமோதரன் பிள்ளை கேட்பது காதில் விழுந்தது.
"ஓ... மேரா தோஸ்த்!''
அன்மோலக் ராமின் தொண்டை இடறியது.
"க்யா பதாவும்?''
"பதாவோ து ஸஹி.''
"ம்ஹா.... தோஸ்த்!''
அவன் பிள்ளையின் கட்டிலை நோக்கி நடந்தான். மிகவும் மெதுவான குரலில் அவன் பேசினான். எனினும், என்னால் இந்த அளவிற்கு யூகிக்க முடிந்தது.
அன்மோலக் ராம் விலைமாதர்கள் இருக்கும் தெருவிற்குச் சென்றிருக்கிறான். இடையில் மிலிட்டரி போலீஸ் பிடித்து விட்டது. "உன் நம்பர் என்ன குழந்தை?'' என்று ஒரு கேள்வி.
"என்ன நம்பர்?''
"உன் நம்பர் என்ன?''
"என் ஊரில் மனிதனுக்கு நம்பர் கிடையாதே! இங்கே இருக்குதா? இங்குள்ள மனிதர்களுக்கு எப்போதிருந்து நம்பர் போட ஆரம்பித்தார்கள்? என் ஊரில் கழுதைகளுக்கு நம்பர் இடுவார்கள்!''
"ஆனால், நீ பட்டாளத்தைச் சேர்ந்தவனாச்சே?''
"அரே வா!''
அவர்கள் பேந்தப் பேந்த விழித்தார்கள். அங்கிருந்து தட்டுத் தடுமாறி நேராக வீட்டிற்குச் சென்ற அவன் கூறிய விஷயங்கள் எனக்கு தெளிவாகக் கேட்கவில்லை. தேடிப் பிடித்து தொகை எவ்வளவு என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறான். இறுதியாக அறைக்குள் நுழைந்திருக்கிறான். ஆனால், அவனுடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து போய் இருந்திருக்கிறது. "இன்னொரு முறை வா" என்று அவள் கூறியிருக்கிறாள்.
தாமோதரன் பிள்ளை என்னவோ கேட்டிருக்க வேண்டும். நன்றாகவே ஏமாந்து விட்டோமோ என்ற நினைப்புடன் அன்மோலக் ராம் கூறுவதைக் கேட்டேன்.
"ஒவ்வொரு ஆசையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தையின் தந்தையாக ஆக வேண்டும். பாபு! என்ன ஒரு இனிமையான வார்த்தை! அதற்குத் தகுதி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் சென்றேன். எவ்வளவு
வருடங்களாகி விட்டன! இல்லை... நான் முற்றிலும் தகர்ந்து போய் இருக்கிறேன். விழுந்து கிடக்கும் நாற்றமெடுத்த சாக்கடையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு என்னுடைய உடல் தகர்ந்து போய் விட்டிருக்கிறது. இன்று எனக்கு அது தெளிவாகத் தெரிந்து விட்டது...''
இடைக்காலத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சிறிய சிறிய சம்பவங்களைப் பற்றி எழுதிய இந்தக் குறிப்பு மிகவும் நீண்டு போய் விட்டது. எழுத வேண்டியதை தெளிவாக எழுதி விட்டேன் என்ற பெருமை இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், எனக்கு அந்த அளவிற்குப் புரியவில்லை. அதனால் முடிப்பதற்கு முயற்சிக்கிறேன்.
அன்மோலக் ராமின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதை மட்டும் அவன் கூறவில்லை. சற்று கூறு என்று கேட்கவில்லை. ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து கதை கூறக்கூடிய ஆளல்ல. பிறகு எதற்குக் கேட்கப் போகிறேன்?
அவன் சிம்லாவிலிருந்து வந்தவன். மாவட்ட மருத்துவ அதிகாரியின் கம்பவுண்டராக இருந்திருக்கிறான். இதை மட்டும் எப்படியோ கூறியிருக்கிறான். மற்ற எதைப் பற்றியும் கேட்கவில்லை. கூறவில்லை.
அன்மோலக் ராம் வெறும் ஒரு விடுகதையாகவே இருந்தான். ஆனால், இடையில் விடுதலைக்கான உத்தரவு வந்தது. தேவைப்படுபவர்கள் போகலாம். விருப்பமிருந்தால், அலுவலகத்திற்குச் சென்று பெயரைத் தர வேண்டும்.
"பேரக்" முழுமையாக ஒளி குறைந்ததைப்போல ஆகிவிட்டது. எல்லாருடைய முகங்களும் வாடிவிட்டன. மனதிற்குள் கவலை உண்டானது.
"எங்கே செல்வது?''
"என் ஊரில் மூன்று வருடங்களாக மழை இல்லை.''
"நான் ஒரு வெற்றிலை, பாக்கு கடை ஆரம்பிக்கப் போகிறேன்.''
"போகாத குறைதான். சீக்கிரமா போ...''
"என் வீட்டில் பதினொரு கிண்ணங்கள் பரிமாற வேண்டும். சம்பாதிப்பது நான் மட்டுமே!''
"என் வீடு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது!''
"என்ன?''
"ராயலஸீமா என்று கேள்விப்பட்டதில்லையா?''
யாருக்கும் பட்டாளத்தை விட்டுப் பிரிந்து போகும் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், அப்படிப்பட்ட ஒன்றைப்பற்றி இன்று வரை அவர்கள் நினைத்துப் பார்த்ததே இல்லை.
அன்மோலக் ராம் பெருமூச்சு விட்டுக் கொண்டே ஓடியவாறு கட்டிடத்திற்குள் வந்தான்.
"பாயிஸாப்!''
வந்தவுடன் பெட்டியின்மீது உட்கார்ந்து கொண்டு அவன் அழைத்தான். அவனுடைய முகத்தில் ஆர்வம், சந்தோஷம் ஆகியவற்றின் பொன் நிற நிழல் பரவி விட்டிருந்தது.
"அன்மோலக் ராம் போகப் போகிறான். அன்மோலக் ராம் போவான். ஒன்று, இரண்டு, மூன்று... ஐந்து நாட்கள். இல்லாவிட்டால் ஆறு. இந்த நெரித்துக் கொண்டிருக்கும் குகைக்குள் இருந்து அன்மோலக் எழுந்து குதிப்பான். அதற்குப் பிறகு...''
அவன் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தான். முகத்தின் வெளிப்பாடு பேசிக் கொண்டிருந்த விஷயத்திற்கேற்ப மாறிக் கொண்டிருந்தது. இடையில் பணத்தைப் பற்றிய கணக்குகளைப் போட்டான். பன்னிரண்டு வருடங்களுக்கு மூன்று, பன்னிரண்டை மூன்றால் பெருக்கினால் முப்பத்தாறு. பாரா குணா சத்தீஸ்... பிறகு இந்த வருடத்திற்கான விடுமுறை எடுக்கவில்லை. எங்கே போவது? யாரைப் பார்ப்பதற்கு?
அங்கு அவன் நிறுத்தினான். முகம் முழுவதும் நீல நிறமாக ஆகி விட்டதை நான் பார்த்தேன். பிறகு... கண்களில் உயிர் இல்லை. கண்மணிகள் உருண்டு உருண்டு மேல் நோக்கி ஏறிக் கொண்டிருந்தன. மூளைக்குள் நடக்கக் கூடிய ஏதோவொன்றைப் பார்ப்பதற்காக இருக்க வேண்டும்.
அப்போது அவனிடம் எதையும் பேசக் கூடாது.
நீண்ட நேரம் அமர்ந்திருந்து விட்டு, அவன் கேட்டான்: "காட்டைத் தேடிப் போகட்டுமா?''
"என்ன?''
"நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏதாவது காட்டிற்குச் சென்று வாழலாமா என்று நினைத்தேன்.''
நான் எதுவும் பேசவில்லை.
"ம்... என்ன ஒரு வாழ்க்கையாக இருக்கும்? பழங்கள், கிழங்குகள், அருவிகள்... சுதந்திரமான வாழ்க்கை... மரநிழலில் ஒரு குடிசை... பழங்கள், கிழங்குகள், அருவிகள்...
திடீரென்று அவன் எழுந்து நடந்து கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்: