ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
இப்படித்தான் சம்பவம்: தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் விடுமுறை எடுத்தான். பாதையின் ஒரு ஓரமாக நடந்தான். பாதை உயர்ந்து இறங்கக் கூடிய இடத்தில் ஒரு பெரிய திருப்பம் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் மேடுகள். மேட்டை வெட்டி தாழ்த்தித்தான் பாதையே போட்டிருக்கிறார்கள். அங்கு இருந்து கொண்டு தூரத்திலிருந்து வரும் வண்டியின் சத்தத்தைக் கேட்டான். தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்தான். தண்டவாளங்கள் பயங்கரமாக ஓசை உண்டாக்கின. இறுதியில் கன்னத்தில் அடித்ததைப்போல இருந்தது. மூளை சத்தம் போட ஆரம்பித்தது. அவனே ஒரு பயங்கரமான சத்தமாக ஆனான். கண் விழித்துப் பார்த்தபோது வெளிச்சம் இருந்தது. ஆட்களின் நடமாட்டம் இருந்தது. பார்த்தான். காவல் நிலையம்.
மேட்டிலிருக்கும் வளைவில் பல நேரங்களிலும் தற்கொலை சம்பவங்கள் நடப்பதுண்டு. அதனால் தேவையற்ற நேரங்களிலெல்லாம் வண்டி கடந்து செல்வதற்கு முன்னால் போலீஸ் ரோந்து சுற்றுவார்கள்.
சிக்கிக் கொண்டான்.
ஆனால், சுய உணர்வுடன் அவன் பேசினான். இப்படிப்பட்ட காரணங்களுக்காக எனக்கு வாழ்வதற்கு விருப்பமில்லை. நியாயம் என்று படுகிறதா? உங்களில் ஒருவன் என்று வைத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள் என்று கூறுங்கள். இறப்பதற்கு சட்டம் அனுமதிக்க மாட்டேன் என்கிறது. வாழ்வதற்கு அனுமதிக்கக் கூடிய சட்டம்
இருக்கிறதா? இருக்கிறதே! வாழ அனுமதிக்கக் கூடிய சட்டம் என்றால், குடிமகன்களுக்கு எல்லா வகைகளிலும் சந்தோஷமும் அமைதியும் வாழ்க்கை மீது பிரியமும் உண்டாகின்றன- சரிதானே? முதலாவதாக வாழ்க்கைமீது பிரியம் இருக்க வேண்டும். எவ்வளவு அருமையான வார்த்தைகள்! வாழ்க்கையை நேசிப்பது... தகராறு இன்னொரு இடத்தில்தான். இன்றைய சட்டப்படி அவரவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மீதுதான் அக்கறை. அதனால்தான் சுய நலத்தில் தொடங்கி சொத்துக்களைக் குவிப்பது, கள்ளச் சந்தை ஆகியவை உண்டாகின்றன. இன்னொருவனுக்கு வாழ முடியாமல் போகிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அவரவர்களுடைய வாழ்க்கை என்ற விஷயத்தை மறந்து விட்டு சமூகத்தின் வாழ்க்கை, நலம், அமைதி என்று வரும்போது, அதற்கு சட்டம் இருக்கிறதா? இப்போது தலைக்கு தெளிவு இருக்கிறது அல்லவா? சரி... அப்படியென்றால், தொலைந்து போ. நல்லது நடக்கிறது. அந்தவகையில் சிறைக்குள் நுழையாமல் தப்பித்தாகி விட்டது. அதற்குப் பிறகு தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. இறக்கவில்லை. இறக்க இயலாது.
சனிக்கிழமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புதன் கிழமை. ஏனென்றால், அன்று நான் குடித்திருந்தேன். சனிக்கிழமையும் புதன் கிழமையும் மெஸ்ஸில் மாமிசம் உண்டு. மாமிசம் இருக்கும் நாளன்று ரம் தருவார்கள்.
குடிப்பதைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது. முன்பு குடிக்கவில்லை என்று கூறியிருக்கிறேன். இப்போது குடிக்கிறேன். அதற்குப் பிறகு ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பெட்டியின் மீதோ கட்டிலிலோ வந்து அமர்வார்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா எதிர்ப்புகளையும் சந்திப்பதற்கு நெஞ்சுக்கு தைரியம் இருக்கிறது. எந்த எதிர்ப்பும் புல்தான். பாதையில் இருக்கும் தடைகள் சாதாரணமானவை. எது
வேண்டுமானாலும் வரட்டும். வாழ வேண்டும். எதைப் பற்றியெல்லாமோ நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். குடித்து விட்டால் அப்படித்தான்.
அப்போது அன்மோலக் ராம் வந்தான். அவன் விழ இருந்தான். கையில் கண்ணாடிக் குவளை இருந்தது. குவளைக்கு இரண்டு நிறங்கள் இருந்தன. அடியில் இருந்த பாதி வரை வைலட். பாதிக்கு மேலே வெள்ளை. ஓ... ரம் கொண்டு வருகிறான்.
குவளையை பெட்டியின்மீது வைத்து விட்டு, அவன் கட்டிலில் குத்த வைத்து உட்கார்ந்தான். நீண்ட பெருமூச்சு விட்டான். முகம் மிகவும் சிவந்து காணப்பட்டது. கண் இமைகள் கனத்துப்போய் தொங்கிக் கொண்டிருந்தன. கண்கள் கலங்கியிருந்தன.
கட்டிடத்திற்குள் குடிக்கக்கூடாது என்பது சட்டம்.
"அன்மோலக்!''
நான் தாழ்ந்த குரலில் அழைத்தேன். விருப்பமில்லாததைப்போல அவன் முகத்தை உயர்த்தினான். உடல் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.
"நடைமுறையில் இருக்கும் உத்தரவைப் படிக்கவில்லையா?''
நான் மனதில் வைத்திருக்கும் விஷயத்தை அன்மோலக் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சற்று கூர்ந்து பார்த்து விட்டு, அவன் தன்னுடைய போக்கிலேயே உட்கார்ந்திருந்தான். கீழ்ப்படிவதற்கு எனக்கு விருப்பமில்லை.
"மைனே கஹா ஜி. ஸ்டாண்டிங் ஆர்டரைப் படிக்கலையா?''
"இருக்கலாம். அதனால் உனக்கு என்ன?''
"சரியில்லை என்று தோன்றுகிறது!''
"அது உன்னுடைய காரியமில்லை!''
"என்னுடைய காரியம்தான்!''
"அதை வைத்துக் கொண்டே நடந்து திரி...''
"அப்படி நடந்து திரிய முடியாது என்றால்...?''
"பிறகு?''
"நீ இங்கே குடிக்கக் கூடாது!''
"அப்படியா?''
அவன் வேகமாக எழுந்தான். பற்களையும் உதட்டையும் கடித்துக் கொண்டே நின்றான்.
"ஹச்சா ஜி!''
சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் உரத்த குரலில் கத்தினான். அந்த கண்களில் நெருப்பு பரவுவதை நான் பார்த்தேன்.
"க்யா ஸமஸ்தே ஹோ சங்கர்?''
அவள் உள்ளங்கைகளை சேர்த்து வைத்து பிசைந்து கொண்டே நின்றான். நெற்றியில் சுருக்கங்கள் தெளிவாக தெரிந்தன. புருவங்கள் நடுங்கின. பற்களை நெரித்துக் கொள்வதற்கு மத்தியில் ஆவேசத்துடன் கூறினான்:
"யாத்ரக்! து மெ பீஸ் கர் இஸ் மிட்டீமெ மை மிலா ஸக்தாங்ஙம். க்யா கஹா தும்னெ?''
அவன் தரையில் செருப்பால் அழுத்தி மிதித்தான். என்னை அடித்து உதைத்தான். மிதித்து விடப் போவதைப்போல கையை விரித்து வைத்துக் கொண்டு முஷ்டியைச் சுருட்டிக் கொண்டு நின்றான். ஒருவேளை என்மீது எந்த நிமிடத்திலும் பாய்ந்து விழலாம்.
அது பரவாயில்லை. எனக்கு பலமான சந்தேகம் இருந்தது. எனினும் அது நல்லதல்ல. சிறிது நேரம் நினைத்து விட்டு திருப்பி அடித்தேன்.
"அன்மோலக், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள். வீட்டை விட்டுக் கிளம்பி வரும்போது திரும்பி வருவேன் என்று நான் யாரிடமும் வாக்குறுதி அளிக்கவில்லை. என்னை எதிர்பார்த்து யாரும் இல்லை. நீ என்ன நினைக்கிறாய்?''
அப்போதைய என்னுடைய குணமும் நடந்து கொண்ட விதமும் எப்படி இருந்தனவோ? அன்மோலக் அதே இடத்தில் நின்று கொண்டு சிரித்து விட்டான்.
"வாரே தோஸ்த்... தும் இத்னா பேகெஸ் ஹோகயே ஹோ?''
அவன் முற்றிலும் தளர்ந்து போய் காணப்பட்டான். தொடர்ந்து ஒரு சொற்பொழிவு ஆற்றினான்! நமக்குள் என்னவெல்லாம் பேசிக் கொள்கிறோம். நீ என்னுடைய தோழன்! நீதான் என் தோழன்! வா... நாம் போகலாம். நான் போகிறேன். இதோ.. என்னிடம் முன்னூற்று நாற்பத்திரெண்டு ரூபாய் இருக்கிறது. இதை வைத்துக் கொள்.''
சட்டையின் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு கவரை எடுத்து அவன் என் மடியில் எறிந்தான்.