ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
கனமான சுவரையும் உறுதியான மேற்கூரையையும் கொண்ட இந்த போர்வீரர்கள் தங்கியிருக்கக் கூடிய கட்டிடத்திற்கு ஒரு பங்களாவிற்குரிய மதிப்பு இருந்தது. வெளியே இருக்கும் கருவேப்பிலை, நாவல் மரங்களின் நிழல் படர்ந்திருக்கும் சாலையின் வழியாக நடந்து செல்லும்போது நீங்கள் சற்று பாருங்கள். ஓ... சுவாரசியமற்றதாக இருக்கும்... வெறுப்பைத் தரக் கூடியதாக இருக்கும்.
சுருக்கங்கள் விழுந்த பச்சை நிற ஆடைகள், தொள தொளவென்றிருக்கும் பேண்ட், நிறம் மங்கலாக இருக்கும் தொப்பி ஆகியவற்றுடன் ஆடிக் கொண்டே நடக்கும் பட்டாளக்காரர்கள் படுத்திருப்பது பங்களாவைப்போன்று காட்சியளிக்கும் இந்த "பேரக்”கிற்குள்ளா? அவன் நாற்றமெடுத்த நிலையில் இருப்பான். வியர்வையும் தூசியும் இருக்கும் அவனுடைய உடம்பில் பேனும் ஈரும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும். அவனுடைய கறுத்த முகத்தில் வியர்வை வற்றி உப்புக் கோடு தெரியும். எனினும், அவன் படுத்திருக்கும் இந்தக் கட்டிடத்திற்கு ஒரு பங்களாவின் மரியாதைக்குரிய தோற்றம் இருக்கும்.
கட்டிடத்தின் விசாலமான அறைகளிலும் வராந்தாவிலும் ஒழுங்குபடுத்தப்பட்டு பளபளப்பு உண்டாக்கப்பட்ட பாறைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அகலமான, அழகான வராந்தாவின் வெளிச் சுவரை நோக்கி பிரதான சுவரில் இருந்து செங்கற்களால் ஆன கனமான மேற்கூரை இறங்கி வந்து கொண்டிருந்தது. கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் அங்குள்ள சூழல் எப்போதும் ஒளி குறைந்த நிலையிலேயே காணப்படும். கோடை காலத்தில் வானமும் பூமியும் ஒன்றோடொன்று சந்தித்துக் கொள்வதைப்போல தூசிப் படலம் உயர்ந்து காட்சியளிக்கும். வெப்பக் காற்று சற்று வீசினால் கூட போதும், மணல் உதிர்ந்து மேலே வரும். கட்டிடத்தின் சுவரும் மேற்கூரையின் சட்டங்களும் தூசியால் மூடப்படும். அதனால் வாரத்தில் ஒரு நாள் அடித்துச் சுத்தம் செய்வோம். விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையின் பாதி நேரம் அந்த வேலையில் செலவாகிவிடும். பங்களாவைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் போர் வீரர்கள் குடியிருக்கும் கட்டிடத்தின் மதிப்பை விட்டுவிட முடியாது.
சில நேரங்களில் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும் கதவுகளின் ஓரங்களிலோ கட்டிலின் பலகைகளிலோ ஒரு இடைவெளியிலோ கரையான் அரித்த அடையாளங்கள் தென்படும். பழமையை அறிவிக்கும் ஒரே ஒரு "நிஷான்” அதுதான். அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. வேகமாக தூசியைத் துடைக்கும்போது உள்ளங்கையில் படும்போதுதான் நாங்கள் அதை கவனிப்போம்.
இந்தக் கட்டிடம் எந்த அளவிற்குப் பழமையானது என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இரண்டு பக்கங்களிலும் சுவர் மேற்கூரையுடன் சேரக்கூடிய மேல் மூலையில் கட்டிடம் கட்டப்பட்ட வருடம் கறுப்பு வண்ணத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. யாரும் பார்ப்பதில்லை. பலரும் பார்த்திருக்கமாட்டார்கள். மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கலாம். பழமையைப் பற்றி எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? சில நேரங்களில் நினைத்து விடுகிறோம். இந்தக் கால இடைவெளியில் இதற்குள் எவ்வளவு பேர் வந்தார்கள்... வாழ்ந்தார்கள்... போனார்கள். தேவையற்ற சிந்தனைகள் உண்டாகலாம். ஒரு விஷயம் உண்மை. அன்றும் இன்றும் இந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் ராணுவ வீரர்கள் தங்களின் ஒவ்வொரு
ஆசைகளையும் நம்பிக்கைகளையும் மனதிற்குள்ளேயே வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பட்டாளத்தைச் சேர்ந்தவன் மனிதன்தான் என்பதை ஒப்புக்கொள்வதாக இருந்தால், காலம் காலமாக இருக்கும் ஒரு தத்துவத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். மனித இனம் மேலும் மேலும் வளர்கிறது. மண்ணுக்குக் கீழே செல்கிறது. எனினும், மனிதனுக்கென்றே இருக்கக் கூடிய சந்தோஷங்கள் மறையாமல்... மறையாமல்... நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கின்றன.
தத்துவங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றின்மீது எனக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். பெரிய பெரிய விஷயங்களைக் கூற வேண்டும். ஒரு காலத்தில் நான் தலை முடியை வளர்த்துக் கொண்டு பாதி துறவு கோலத்தில் நடந்து திரிந்திருக்கிறேன். ஒரு சிறிய தாகூர்! பிறகு மொட்டை அடித்துக் கொண்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து, துறவியாக ஆவதற்கு ஆசைப்பட்டேன். பைபிளையும் பகவத் கீதையையும் படித்தேன். வேதாந்தம் என்னை பட்டாளம் வரை கொண்டு போய் விட்டது என்று கூறலாம். தொடர்ந்து நானே ஒரு மன்னிப்பை அளித்துக் கொண்டு தீவிரமான நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். அதாவது- இங்கு எப்படி வந்தேனோ, அப்படியே திரும்பவும் செல்ல வேண்டும். எனக்கு என்ன ஆனது? எனக்குத் தெரியாது. நான் இப்போது நன்கு புகைக்கிறேன். சிகார், சிகரெட், பீடி... சில வேளைகளில் வீசி எறியப்பட்ட துண்டுகளையும் பொறுக்கி, ஆராய்ந்து பார்த்து விட்டு, வாசனை பிடித்து விட்டு, பிடித்திருந்தால் மீண்டும் பற்ற வைக்கிறேன். பிடிக்காமல் இருக்க முடியாது. முழு பீடியையும் அல்ல. புகைக்க வேண்டும். துண்டுகளைப் பொறுக்குகிறேன். உறுதியான என்னுடைய கருத்தைக் கூறுவதாக இருந்தால், மிகவும் முக்கியமான
சூழ்நிலையில், முதல் தடவையாக நான் குடித்தேன். அன்று நண்பர்கள் தாங்கி எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள். இப்போது ஐந்தோ ஆறோ பெக் குடித்துவிட்டு, பூமி மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தாலும் தளர்ந்த நிலையில் நடந்து போய்விடலாம்... சொல்லப்போனால், இப்போது குணம் மாறிவிடவில்லை... தவறுக்காக வருந்துவதில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
பங்களாவைப் போன்று காட்சியளிக்கும் எங்களுடைய கட்டிடத்திற்கு எதிரில், பங்களாவைப் போன்று இருக்கும் இன்னொரு கட்டிடத்தில் குடும்பங்களுக்கான க்வார்ட்டர்ஸ் இருக்கின்றன. அந்த நல்ல கட்டிடத்திற்குள் இருக்கும் அறைகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும், மரியாதை காரணமாக அவற்றைப் பற்றிப் பேசக்கூடாது. வரிசையாக அறைகள் இருக்க வேண்டும். மேற்குப் பகுதியில் திறந்த வராந்தா இருக்கிறது. கிழக்குப் பக்க வராந்தாவை ஒட்டிய சுவருக்கு அருகில் அறைகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பிறகு... எங்களுக்கு எதிரில் தள்ளிக் கொண்டு நின்றிருக்கும் சதுர அமைப்பில் அமைந்த சமையலறைகள்... அகலமான மேற்கூரையைக் கொண்ட அந்த சமையலறைகளுக்கு புகை வண்டி நிலையங்களில் இருப்பதைப்போன்ற பெரிய சதுரப் பெட்டிகளின் தோற்றம் இருக்கும். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்- அவற்றுக்கு சதுர அமைப்பில் இரும்பு வலைகள் கொண்ட கதவு இல்லாத ஜன்னல் இருக்கின்றன. உள்ளே நகர்ந்து கொண்டிருக்கும் சில்க் ஆடைகளின் மினுமினுப்பையும் அது மறைவதையும் இங்கிருந்தே பார்க்கலாம். சில நேரங்களில் வளையல்களின் சத்தங்களையும் கேட்கலாம். வெறுமனே வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக இருக்காது. எங்களுக்கும் சற்று மரியாதை இருக்கிறது. அதனால் கட்டில்களை கதவுக்கு நேராக இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்திருப்போம்.