ஊஞ்சல் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7133
“எனக்கு உங்கள் யாருடனும் எந்தவொரு பிணைப்பும் இல்லை. என் விஷயங்களில் தேவையில்லாமல் யாரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை'' - நான் சொன்னேன்.
தலையை உயர்த்தி வைத்துக்கொண்டே நான் சாயங்காலம் உண்ணித்தானின் வீட்டிற்குச் சென்றேன். வழியில் கூட்டமாக நின்றிருந்த இளைஞர்கள் என்னை என் காதில் விழுகிற மாதிரி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். ”கண்மூடித்தனமாக அடித்துதான் இவனுடைய விளையாட்டை நிறுத்த முடியும்'' - ஒரு இளைஞன் சத்தம் போட்டுச் சொன்னான். நான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் உண்ணித்தானின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். என்னைத் தாக்குவதற்காக பண்பாட்டைப் பாதுகாப்பவன் என்று தங்களுக்குத் தாங்களே கூறிக்கொண்டு செயல்படும் சிலர் ஆயத்தம் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர் என்ற தகவலை என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரான ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் கூறினார். காவல்துறையின் பாதுகாப்பை எனக்காக ஏற்பாடு செய்து தர தனக்கு சிரமம் இல்லாமல் முடியும் என்றும் அவர் சொன்னார்.
முன்பு எப்போதும் வந்திராத ஒரு தைரியம் எனக்கு வந்து சேர்ந்திருப்பதை நான் உணர்ந்தேன்.
“எனக்கு காவல்துறை பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. அவர்கள் என்னைத் தாக்கட்டும்.நானும் ஒரு கை பார்க்காமல் இருப்பேனா?'' -நான் கேட்டேன். ஓமனாவிடம் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை சொன்னேன். எதிரிகள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் என்றைக்கு அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து கோபத்தைத் தணிப்பதற்காக நகைகளையும் பணத்தையும் திருடிச் செல்வார்கள் என்பதை யாராலும் கூற முடியாது.
“என் நகைகளையும் பணத்தையும் உங்களுடைய வீட்டிற்குக் கொண்டு செல்லுங்கள்.அதற்குப் பிறகாவது நான் மன நிம்மதியுடன் இரவு வேளையில் உறங்கலாம் அல்லவா?'' - அவள் சொன்னாள்.
“அது வேண்டாம்'' - நான் சொன்னேன்.
“நான் உங்களுக்குச் சொந்தமானவளாக ஆன நிலையில், என்னுடைய அனைத்து சொத்துக்களும் உங்களிடமே இருக்கட்டும். இனி என்னைப் பாதுகாத்துக் காப்பாற்ற வேண்டியபொறுப்பு உங்களுக்குத்தான்'' -அவள் என் கரங்கக்குள் இருந்து கொண்டு சொன்னாள்.
அன்று நான், அவளுடைய கணவன் சட்ட விரோதமாகச் சம்பாதித்து வைத்திருந்த எட்டு லட்சம் ரூபாய்களையும், முந்நூறு பவுன் நகைகளையும் என்னுடைய வீட்டிற்கு மிகவும் பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டேன். திரும்பி வரும்போது அவள் சொன்னாள்:
“அதிகம் தாமதம் ஆகாமல் நீங்கள் என்னையும் வீட்டிற்குக் கொண்டு போகணும்.''
நான் அவளுடைய கண்களையே பார்த்தேன். உள்ளுக்குள் காதல் இருப்பதைப் போல நடித்துக்கொண்டு நான் சொன்னேன்:
“ஓமனா...இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாகக் காத்திரு. நோயாளியான ஒரு ஆளை வேதனைப்படுத்தி, நாம் நம்முடைய ஆனந்த மாளிகையைக் கட்டுவது நல்லதல்ல.''
அவளுடைய கண்கள் நிறைவதை நான் ஆனந்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய கையில் தொங்கிக் கொண்டிருந்த தோல் பையின் கனம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதைப்போல எனக்குத் தோன்றியது.
“சாயங்காலம் வர்றேன்'' -நான் உரத்த குரலில் சொன்னேன்.
அதற்குப்பிறகு நான் அந்த சாபம் பிடித்த வீட்டிற்குள் நுழையவே இல்லை. வேலுப்பிள்ளை மூலம் அவள் கொடுத்தனுப்பிய கடிதங்களை வாசிக்காமலேயே நான் கிழித்தெறிந்தேன். இறுதியில் பொறுமையை இழந்த நான் அந்தக் கிழவனிடம்சொன்னேன்:
“எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. இனி நான் அங்கே வருவது அந்த அளவுக்கு நல்லது இல்லை என்று எஜமானி அம்மாவிடம் சொல்லு.'' அவளை எங்கே சந்தித்து விடப் போகிறேனோ என்று பயந்து, நான் என்னுடைய நடையைக் கூட நிறுத்திவிட்டேன். என்னுடைய வேலைக்காரர்களுக்கு சந்தேகம் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் தன்வந்தரம் தைலம் வாங்கி, அதை நான் கால்களில் தேய்த்துத் தடவினேன். ஒரு முழங்காலில் துணியால் ஒரு கட்டையும் நான் கட்டிவிட்டேன்.
“முழங்காலில் தாங்க முடியாத வேதனை. சிறிதுகூட நடக்க முடியாது'' - நான் என்னைப் பார்க்கவந்தவர்களிடம் கவலையுடன் கூறினேன். நெருங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த பல குடும்பத் தலைவர்களும் குடும்பத்துடன் என்னைப் பார்ப்பதற்கு வர ஆரம்பித்தார்கள். சிறிய அரிசி, மரவள்ளிக்கிழங்கு, பழம், ஊறுகாய் போன்ற பரிசுப் பொருட்கள் என்னுடைய வீட்டில் வந்து நிறைந்தன. என்னைப் பற்றித் தாறுமாறாக செய்திகளைப் பரப்பிவிட்ட பெண்கள் உண்மையிலேயே அப்போது தான் பரிதாபம் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த அளவிற்கு அப்பாவியாக இருக்கும் ஒரு திருமணம் ஆகாத மனிதனைப் பற்றி மோசமாக நாம் பேசி விட்டோமே என்று நினைத்ததால் இருக்க வேண்டும் - அவர்கள் ஒவ்வொருவரும் எதுவும் பேசாமல்இருந்தார்கள். என்னை கவனமாகப் பார்த்துக்கொள்வது என்பது அவர்களுடைய அன்றாடச் செயல்களில் முக்கியமான ஒரு விஷயமாக மாறியது.
உண்ணித்தானின் வீட்டிலிருந்து ஒரு சூறாவளி வேகமாகப் புறப்பட்டு வருமோ என்ற பயத்துடன் இருந்த எனக்கு அங்கேயிருந்து அச்சப்படும் விஷயங்கள் எதுவும் வராது என்பது காலப்போக்கில் புரிந்தது. தன்னுடைய நகைகளைப் பற்றியோ வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தைப் பற்றியோ ஓமனா யாரிடமும் கூறவில்லை. அந்த குடும்பத்தின் பொருளாதார நிலை படிப்படியாகக் குறைந்துகொண்டு வந்தது.அவ்வளவுதான். அந்த தம்பதிகளைப் பற்றி மிகுந்த கூச்சத்துடன் பேச மட்டுமே பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஒரு நாள் சந்தைக்குச் சென்று விலை குறைவான மீனை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த ஓமனாவை என்னுடைய வேலைக்காரன் பார்த்ததாகக் கூறினான்.
“இப்போது வேலைக்கு யாரும் இல்லை. சம்பளம் கொடுப்பதில்லை. பிறகு யார் வேலைபார்ப்பார்கள்?'' என்னுடைய வேலைக்காரன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான்.
“அவர்களிடம் வேண்டிய அளவிற்குப் பணம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேனே!'' - நான் கேட்டேன்.
“அந்தப் பெண் மோசமான வழிகளில் சம்பாதித்த பணம். இப்போது யாரும் அந்த அம்மாவைத் தேடிப் போவதில்லை. பிறகு எப்படி இரண்டு நேரமும் சோறு வைக்க முடியும்?''
நான் பரிதாபத்தை வெளிப்படுத்தியவாறு தலையைக் குலுக்கினேன்.
என் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் சமூகம் சுமத்தவில்லை. திருமணமாகாத ஒரு நல்ல மனம் கொண்ட மனிதனை சிறிது காலம் வசீகரித்து, தான் கூறியபடி நடக்கச் செய்ததற்கும் பாவச் செயல்களைச் செய்யும்படி தூண்டியதற்கும் சமூகம் ஓமனா உண்ணித்தானை தண்டிக்கத் தீர்மானித்தது. அவளைச் சந்திக்கும்போது பார்க்கவில்லை என்று நடித்து முகத்தைத் திருப்பிக் கொள்ளும்படியும், அவளை எந்தவொரு விருந்திற்கும் திருமண நிகழ்ச்சிக்கும் அழைக்காமல் இருக்கவேண்டும் என்றும் சமுதாயத் தலைவர்கள் தங்களுடைய பெண்களுக்கு உத்தரவு போட்டார்கள். கவலை நெருப்பில் வெந்து வெந்து அவள் சாகட்டும். ஆனால், அந்த கவலை நெருப்பு மெதுவாக மட்டும் எரியட்டும்...