ஊஞ்சல் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7133
“அப்பா உறங்கிவிட்டார். உன் பேச்சைக் கேட்டு அப்பா உறங்கி விட்டார்'' – அவள் சொன்னாள். அவள் ஒரு வெள்ளை நிற ஃப்ராக் அணிந்திருந்தாள். அவளுடைய கைகளும் கால்களும் மெலிந்தவையாக இருந்தாலும், கவிழ்ந்து படுத்திருந்தபோது ப்ளவ்ஸூக்கு மேலே இருந்த ஓரங்கள் வெளிக்காட்டிய மார்பகங்கள் முழுமையானவளர்ச்சி அடைந்தவை என்பதை ஒரு அதிர்ச்சியுடன் நான் தெரிந்து கொண்டேன்.எனக்கு உடனடியாக அந்த வீட்டை விட்டுக் கிளம்பி, வேறு எங்கேயாவது போக வேண்டும் போல இருந்தது. கிராமத்தில் நான் அதுவரையில் பார்த்துப் பழகியிருந்த ஆட்களுடன் எந்தவொரு ஒற்றுமையையும் டாக்டரிடமோ அவருடைய வளர்ந்திருக்கும் மகளிடமோ இருப்பதாக என்னால் காணமுடியவில்லை. என்னுடன் என் தந்தை சென்னைக்கு வராததைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, எனக்கு சமாதானமும் சந்தோஷமும் உண்டாயின. அன்று ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது.சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கேயே தங்கிவிட்டு, திங்கட்கிழமை லயோலா கல்லூரிக்குச் சென்று இன்டர்மீடியட்டில் மாணவனாகச் சேரலாம் என்றுபணிக்கர் சொன்னார். “நான் உன்கூட வரணுமா?'' – அவர் கேட்டார். கேள்விகேட்ட குரலின் கனமும் கம்பீரமும் என்னை பரபரப்பு அடையச் செய்தன.
“வேண்டாம்... நான் தனியாகப் போய்க் கொள்கிறேன்'' - நான் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.
அப்போது அந்த இளம்பெண் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
“நான் உன்கூட வரலைன்னா, உனக்கு அட்மிஷன் கிடைக்காது சிவசங்கரா'' – பணிக்கர் சொன்னார்.
“சிரமமா இருக்காதா?'' - நான் கேட்டேன்.
பணிக்கர் ஒரு கோணலான புன்சிரிப்பை முதல் தடவையாக எனக்குப் பரிசளித்தார்.
“சிரமம் உண்டாகும். சரிதான். என் நோயாளிகள் வந்து மருத்துவமனையில் காத்திருப்பார்கள். ஆனால், உன் தந்தை கடிதம் எழுதினால், அதன்படி நடக்காமல் என்னால் இருக்க முடியாதே! எங்களுக்கிடையே இருக்கும் உறவைப் பற்றி உனக்குத் தெரியும் அல்லவா?''
ஏதோ ஒருசில தகவல்கள் தான் எனக்குத் தெரியும். ஆனால், நான் தலையைக் குலுக்கினேன்.
“உன் அப்பா என் தாயின் முதல் கணவரின் மருமகன்'' – பணிக்கர் சொன்னார். பிறகு தமாஷாகத்தான் ஏதோ கூறிவிட்டதைப்போல நினைத்து, உரத்த குரலில் சிரித்தார்.
“கேள்விப்பட்டிருக்கேன்'' - நான் மெதுவான குரலில் சொன்னேன்.
“உன் வாயில் கட்டிய பல் எதுவும் இருக்குதா சிவசங்கரா? நீ பேசுறது எதுவும் சரியா புரியவே இல்லையே!'' - பணிக்கர் சொன்னார்.
அந்த இளம்பெண் அதற்குப் பிறகும் சிரித்தாள். பணிக்கர் அவள் பக்கம் பார்வையைச் செலுத்தினார்.
“எழுந்துபோய் எதையாவது படி ராஜு உனக்கு நாளைக்கு கணக்குத் தேர்வு இருக்குல்ல?'' -பணிக்கர் சொன்னார். “என்னுடைய மகள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள்.கணக்கில் எப்போதும் தோற்று விடுவாள். ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பாள். சிவசங்கரா, இவளுடன் உள்ளே போ. சமையலறையில் தேநீரும் பலகாரமும் வாங்கி சாப்பிடலாம். என்னுடைய மனைவி இறந்துவிட்டாள் என்ற விஷயம் உனக்குத் தெரியுமல்லவா? இங்கு உணவு எடுத்துக்கொண்டு வந்து தருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், முழுப்பட்டினிதான் கிடக்கணும். பசி எடுக்குறப்போ சமையலறைக்குள் சென்று சமையல்காரனிடம் உணவு வேண்டும் என்றுசொன்னால் போதும்'' - பணிக்கர் சொன்னார்.
சமையலறையை நோக்கி நடக்கும்போது அந்த இளம்பெண் இரண்டு தடவை என் பக்கம் திரும்பிப் புன்சிரிப்பைத் தவழ விட்டாள்.
“நான்தான் ராஜ்யலட்சுமி'' - அவள் சொன்னாள்.
“ராஜலட்சுமி... அப்படித்தானே?'' நான் கேட்டேன். அவள் தலையை ஆட்டினாள் - மறுப்பது மாதிரி.
“இல்லை.... ராஜ்யலட்சுமி. ராஜ்யத்தின் லட்சுமி!''
“குழந்தை வீட்டின் லட்சுமியாக இருந்தால் போதாது. ராஜ்யத்தின் லட்சுமியாக ஆகணும். அப்படித்தானே?'' - நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.
டாக்டர் பணிக்கரின் மிகுந்த கம்பீரத்திற்கு மத்தியில் அன்பான ஒரு தந்தை இருக்கிறார் என்பதை நான் படிப்படியாகப் புரிந்து கொண்டேன். தன்னுடைய மகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பணிக்கரின் கண்கள் மழையில் நனைந்த மலர்களைப் போல ஆவதை நான் பல தடவை பார்த்துவிட்டேன். ராஜு என்று அவளை அழைக்கும்போது, அந்த அழைப்பில் தன்னுடைய வாழ்க்கைமீது கொண்ட ஆசை முழுவதையும் அவர் வெளிப்படுத்தினார்.
கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கிய பிறகு, எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நான் பணிக்கர் மாமாவைப் பார்ப்பதற்காகச் செல்ல ஆரம்பித்தேன். அவருக்கு சம வயதில் உள்ள விருந்தாளிகள் இருந்ததால், ஒன்றோ இரண்டோ வார்த்தைகள் பேசுவதற்கு மட்டுமே என்னால் முடிந்தது. நோயாளிகளும் மதிய உணவு நேரம் வரை அவரை வந்து பார்த்தார்கள். நான் ராஜுவின் படிப்பு அறையில் இருந்து, அவளுக்கு கணக்கு சொல்லித் தர முயல்வதிலோ அவளுடைய பொய் கதைகளைக் கேட்டு ரசிப்பதிலோ ஈடுபட்டிருந்தேன். தன்னுடைய பிரியத்திற்குரிய வகுப்பு ஆசிரியையின் அழகைப்பற்றியும், ஆடை அணியும் முறையைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அவளுக்குப் போதும் என்றே தோன்றாது. சிறுவயதிலேயே தன்னுடைய தாயை இழந்துவிட்டதாக இருக்கலாம் - அந்த இளம்பெண் எப்போதும் ஒரு தாயைத் தேடிக் கொண்டிருந்தாள்.ஏதாவதொரு நடுத்தர வயதைக் கொண்ட பெண் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துவிட்டால், ராஜு விரலைக் கடித்துக்கொண்டு அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பார்வைக்கான அர்த்தம் என்ன என்று நான் கேட்டபோது, அவள் சொன்னாள்:
“இப்போ என் தாய் உயிருடன் இருந்திருந்தால், இந்தப் பெண்ணைப் போல பார்ப்பதற்கு இருப்பாங்க இல்லையா? தலை முடி கொஞ்சம் நரைத்திருக்கும். உடல் சற்று தடிமனாக....''
அந்த நிமிடங்களில் ராஜுவை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆழமான ஆசை எனக்குத் தோன்றியது. அவளைக் கட்டிப்பிடித்து, அவளுடைய கன்னங்களை முத்தமிட, அவளை நான் என்றென்றும் காதலிப்பேன் என்று கூற.... ஆனால், ஆணாகப் பிறந்துவிட்டேன் என்ற காரணத்தால் அப்படிப்பட்ட ஆசைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். அவள் வளர்ந்து கொண்டிருந்தாள்.நானும்.
ஒரு கோடை காலத்தில் வீட்டிற்குத் திரும்பியபோது என் தாயிடம் பணிக்கர் மாமாவின் மகளைப் பற்றி நான் தேவைக்கும் அதிகமாகவே கூறிவிட்டேன். என் தாய்க்கு என் விருப்பங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக இல்லை.
“படித்து தேர்ச்சி பெறட்டும். பிறகு நாம் அந்தக் கல்யாணத்தை அங்கேயே நடத்திடுவோம்'' - என் தாய் புன்னகைத்துக்கொண்டே சொன்னாள்.
நான்அதிர்ச்சியடைந்துவிட்டேன். டாக்டர் பணிக்கர் என்ற லட்சாதிபதியின் ஒரே மகளைத் திருமணம் செய்து கொள்ள வறுமையில் உழலும் நான் விருப்பப்படுவதா?எந்தக் காலத்திலும் ஆசைப்படக் கூடாது.
“அம்மா, என்ன பைத்தியக்காரத்தனமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க? அவங்க யாரென்று உங்களுக்குத் தெரியாதா?