ஊஞ்சல்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7133
நான் ஐம்பத்தெட்டாவது வயதில் வேலையை உதறி எறிந்துவிட்டு, ஒரு நடுத்தரமான நகரத்தில் போய்த் தங்கியபோது என்னுடைய பழைய நண்பர்கள் எனக்கு கவலை நிறைந்த கடிதங்களை எழுதினார்கள். நான் எந்த வழியில் நேரத்தை நகர்த்துவேன் என்று கேட்டார்கள். முடிந்தவரையில் சீக்கிரம் ஒரு டென்னிஸ் க்ளப்பில்சேர்ந்து, பல வருடங்களுக்கு முன்னால் விளையாடத் தெரிந்திருந்த அந்த விளையாட்டில் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஈடுபடும்படி அவர்களில் சிலர் எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். நகரத்தில் இருந்த பிரிட்டிஷ்கவுன் சில் நூலகத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும்...
தொழில் நிறுவனங்களில் ஒன்றின் இயக்குனராக இருக்க சம்மதம் என்று உயர்ந்த வட்டாரத்தில் இருப்பவர்களிடம் அறிவிக்க வேண்டும். இவை எதற்கும் தயாராக இல்லையென்றால், வயதான - கன்னிப் பெண்ணான ஒரு டாக்டரையோ பேராசிரியரையோ சீக்கிரமாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...
நான்அந்தக் கடிதங்களுக்கு பதில் எழுதவே இல்லை. எனக்குத் தனிமையில் இருப்பதுதான் பிடித்திருந்தது. வாழ்க்கையில் அன்று வரை கிடைக்காததும், இனிமையானதுமான தனிமை.... தனிமை என்ற லட்சியத்தை மனதில் வைத்திருந்ததுதான் காரணமாக இருக்க வேண்டும் - நான் திருமண ஆலோசனைகள் ஒவ்வொன்றையும் வேண்டாம் என்று மறுத்தேன். ராஜ்யலட்சுமி என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தால், நான் தனிமை என்ற நிரந்தரக் கனவை எப்போதோ விட்டெறிந்திருப்பேன். காரணம்- பதினெட்டு வயதிலிருந்து இருபத்து மூன்று வயது வரை நான் அந்த இளம்பெண்ணின் காந்த வளையத்தில் கட்டப்பட்டிருந்தேன்.சுயமாகச் சிந்திக்கவும் முடிவு எடுக்கவும் முற்றிலும் முடியாத அடிமையாக மட்டுமே நான் இருந்தேன். ராஜ்யலட்சுமி என்னை அல்லாமல் வேறொரு ஆணைக் கணவனாகத் தேர்வு செய்வாள் என்று நான் அப்போது எப்படி எதிர்பார்ப்பேன்? சென்னையில் லயோலா கல்லூரியில் சேர்வதற்காகச் சென்றபோது, என் கையில் இருந்த பச்சை நிற இரும்புப் பெட்டியில் இரண்டு சட்டைகளும் இரண்டு பேண்ட்டுகளும் இருந்தன. துணிகளுக்கு அடியில் என் தந்தை தந்த இருநூறு ரூபாய்களும், ஒரு நண்பருக்கு எழுதிய கடிதமும் மட்டுமே இருந்தன. என் தந்தையின் நண்பர் ஒரு டாக்டர். அவர் சென்னையில் நான் தங்குவதற்குத் தன் வீட்டில் ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுப்பார் என்று என் தந்தை என்னிடம் கூறியிருந்தார்.ஹாஸ்டலுக்குத் தர வேண்டிய தொகையாவது அந்த வகையில் மிச்சப்படுத்தலாமே...ஆனால், டாக்டர் பணிக்கர் கடிதத்தை வாசித்த உடனே மிடுக்கான குரலில்என்னிடம் சொன்னார்:
“சிவசங்கரா, நீ நேராகப் போய் ஹாஸ்டலில் சேர்வதுதான் நல்லது. உன் கூட இருந்து படிப்பதற்கு சம வயதைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அப்படிப் படித்தால் மட்டுமே நல்ல ரேங்க் வாங்கித் தேர்ச்சி பெற முடியும்.
டாக்டர் தன்னுடைய விசாலமான வீட்டில் என்னைச் சிறிது காலத்திற்காவது தங்கச் செய்வார் என்று என் தந்தை எதிர்பார்த்திருந்தார். அந்த வருடத்தின் நெல் விவசாயம் பெரிய அளவில் மழை பெய்ததால், மூழ்கி நாசமாகிவிட்டது. அதனால் நெல் விற்று கிடைக்கக்கூடிய தொகை என் தந்தைக்குக் கிடைக்கவில்லை. என் தந்தையும் பணிக்கரும் ஒரு காலத்தில் என் அப்பாவுடைய தந்தையின் வீட்டில் தங்கித்தான் உயர்நிலைப்பள்ளிக் கல்வியையே நிறைவு செய்திருக்கிறார்கள். அப்போது தங்களுக்கிடையே உண்டாகிவிட்டிருந்த மனரீதியான நெருக்கம் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும் என்று விவசாயியாக இருந்த என் தந்தை நினைத்தார். பணிக்கர் நாகரீகப் போக்கு கொண்டவராகவும், அந்தப் பகுதியில் வாழும் நடுத்தர மனிதர்களிலேயே மிகவும் வசதி படைத்த மனிதராகவும் இருந்தார். நீல சில்க் ட்ரெஸ்ஸிங் கவுன் அணிந்து, ஒரு புகையிலை பைப்பை எரிய வைத்து தன் உதடுகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு, வாசலில் உட்கார்ந்திருந்த அவரைக் கண்டவுடன் என் உள்ளங்கைகள் பதைபதைப்பாலும் பயத்தாலும் திடீரென்று வியர்த்தன. நான் மரியாதையுடன் கைகளைக் கூப்பினேன். உட்காருமாறு அவர் சைகை செய்த பிறகும், நான் தூணில் சாய்ந்து கொண்டு நின்றேனே தவிர, உட்காரவில்லை.
“சிவசங்கரா, தூணில் சாய்ந்து நின்றால், உன்னுடைய தலையில் இருக்கும் எண்ணெய் முழுவதும் அந்தத் தூணில் ஒட்டிக் கொள்ளும்'' - பணிக்கர் சொன்னார். அவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார் என்று தவறாக எண்ணிக்கொண்டு நான் உரத்த குரலில் சிரித்தேன். பிறகு அவருடைய முக வெளிப்பாட்டைப் பார்த்த பிறகுதான், நான்அவர் விளையாட்டாக எதையாவது கூறி மற்றவர்களைச் சிரிக்கச் செய்பவர்களில் ஒரு ஆள் அல்ல என்பதே புரிந்தது. என்னுடைய உள்ளங்கைகள் மேலும் வியர்த்தன.என் முழங்கால்கள் ஒன்றோடொன்று உரசுவதைப் போலவும், என் கணுக்கால்களில் வியர்வைத் துளிகள் வழிந்து கொண்டிருப்பதைப் போலவும் நான் உணர்ந்தேன். நான் தலையைக் குனிந்து கொண்டு ஒரு பீடத்தின் மீது உட்கார்ந்தேன்.
“அது தேநீர் கொண்டு வந்து வைக்கப்படும் "டீப்பாய்". நீ அதில் உட்கார்ந்தால், அதன் கால்கள் உடைந்துவிடும்'' – பணிக்கர் மிடுக்கான குரலில் சொன்னார்.ஒவ்வொரு வார்த்தையையும் கூறி முடித்தவுடன், பணிக்கர் தன்னுடைய பைப்பை மீண்டும் ஒருமுறை கடித்து, அதில் இருக்கும் நெருப்புப் பொறிகளைப் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நாகரீக உலகத்தின் முன்மாதிரியாக நான் அந்த நடுத்தர வயது மனிதரை அன்று பார்த்தேன்.
“அப்பாவைப் பற்றி சிறப்புச் செய்திகள் என்ன? நலமாக இருக்கிறாரா? வயலும் நிலமும் எவ்வளவு இருக்கு? சுமார் முப்பது ஏக்கர் இருக்குமா?'' – பணிக்கர் என்னிடம் கேட்டார். என்னிடம் அந்தக் கேள்விகளைக் கேட்கும் வேளையில் நிழலில் விழுந்து கிடந்த அந்தக் கண்கள் என் முகத்தில் பயணிக்கவே இல்லை. அவை அந்த வீட்டின் முன் பக்கத்திலிருந்த தோட்டத்திலும் வலது பக்கத்திலிருந்த டென்னிஸ் மைதானத்திலும் அலட்சியமாகத் தாவி விளையாடிக் கொண்டிருந்தன.
“அப்பா நலமாக இருக்கிறார். கொஞ்சம் நெல் விவசாயம் இருக்கு. ஐந்து ஏக்கர் பூமியும்... பிறகு கொஞ்சம் வாழை மரங்களும் இருக்கு. அப்பாவே இரண்டுநேரங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து எல்லாவற்றுக்கும் பாய்ச்சுவார்.''
நான்உற்சாகத்துடன் கூறிக் கொண்டிருந்த தகவல்கள் எதையும் டாக்டர் பணிக்கர் கவனிக்கவே இல்லை என்று எப்படியோ எனக்கு அந்த நிமிடத்தில் புரிந்தது.அவருடைய கண்கள் தூக்கத்தில் இருப்பதைப் போல மூடியிருந்தன. அப்போது பைப், கையில் இருந்து எடுக்கப்பட்டு மேஜை மீது இடம் பிடித்திருந்தது. என்னுடைய பரபரப்பைக் கண்டதால் இருக்க வேண்டும் – அதுவரையில் என்னுடைய கவனத்தில்படாமல் ஒரு பூச்சட்டிக்குப் பின்னால் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சலில், பாதி கால்களைக் காட்டியவாறு கவிழ்ந்து படுத்திருந்த ஒரு இளம்பெண் திடீரென்று என்னைப் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.