ஊஞ்சல் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7133
என் இதயம் ஒரு ஆள் இல்லாத ஊஞ்சலாக ஆனது. முப்பத்தாறு வருடங்கள் ஒரு வங்கி அதிகாரியாக ஒரு மிகப்பெரிய நகரத்தில் வாழ்ந்த நான், அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முக்கியத்துவம் குறைவான ஒரு நகரத்தில் வீடு ஏற்பாடு செய்து வாழ ஆரம்பித்த பிறகுதான் ராஜுவின் முகம் நினைவுகளிலும் மங்கலாக இருக்க ஆரம்பித்தது.
டென்னிஸ் விளையாடுவதற்காக நான் ஒரு க்ளப்பில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆனால், மது அருந்துபவர்கள் மட்டுமே அந்த க்ளப்பிற்கு வருகிறார்கள் என்பதைப் பார்த்தபோது, அதற்குப் பிறகு அங்கு நான் போகவேயில்லை. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு நடப்பது என்றாகிவிட்டது. காலை நேரத்திலும் சாயங்காலத்திலும் நான் தனியாக நடக்கச் செல்வேன். தெரு நாய்களின் தொந்தரவு இருக்கும் என்று வேலைக்காரர் கள் கூறியதால், ஒரு கொம்பை எடுத்துக் கொண்டு நான் நடப்பதற்காக வெளியே செல்வேன். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கூட்டமாகச் சேர்ந்து ஆறரை மணிக்கு நடப்பார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதனால் ஆறரைக்கு முன்பே நான் நடையை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். என்னுடைய சிறுவயதிலிருந்தே இருக்கக்கூடிய ஆசையான தனிமைக்கு இடைஞ்சல் உண்டாவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.முதலில் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் என் வீட்டிற்கு வந்து, என்னை உணவிற்கும் தேநீருக்கும் தங்களுடைய வீடுகளுக்கு அழைத்தார்கள். நான் எங்கும் போகாததால், காலப்போக்கில் அவர்கள் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
பனிவிழுந்தால் இருமல் வர ஆரம்பித்துவிடும் என்று நான் பயந்து, அதிகாலைவேளையில் தலையில் ஒரு உரோம மஃப்ளரை அணிந்து கொள்வேன். அதைப் பார்க்கும் சைக்கிளில் பால் கொண்டு செல்பவர்கள் என்னைக் கண்டு சிரிப்பார்கள்.பாதையின் ஓரத்தில் இருக்கும் சிறிய கடைகளில் பீடிக் கட்டுகளுக்கும் சோடா புட்டிகளுக்கும் பழக்குலைகளுக்கும் பின்னால் இருந்தவர்கள் என்னை "துரையே! " என்று அழைத்தார்கள். யாருடனும் நெருங்கிப் பழகாமல், யாருடைய பகையையும் சம்பாதிக்காமல் நான் அந்தப் பகுதியில் வாழ ஆரம்பித்தேன்.என்னுடைய உடல் நலம் நல்ல நிலையில் இருந்தது. தலைமுடியில் இருந்த நரைமட்டுமே, வயது அறுபதை நெருங்கிவிட்டது என்பதை எனக்கு ஞாபகப்படுத்தியது.என் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உறவினர்கள் ஒரு திருமண ஆலோசனையுடன் வந்தார்கள். சொந்தத்தில் நிலம் வைத்திருக்கும் ஒரு ஆசிரியை. வயது நாற்பத்தைந்து. பார்ப்பதற்கு ஒரு இரண்டாம் தர அழகி.... நான் உரத்த குரலில்சிரித்தேன். உறவினர்களுக்கு பழவங்காடி கணபதியையும், ஸ்ரீபத்பநாபனையும், கவடியார் அரண்மனையின் வெளிவாசலையும் சுற்றிக் காட்டிவிட்டு, அவர்களை நான் கிராமத்திற்கே திரும்பவும் அனுப்பி விட்டேன்....
“முன்பு காதலித்த பெண் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தால், அவளைத் திருமணம் செய்து கொள்வாயா சிவா?'' - என் சகோதரியின் கணவர் கேட்டார்.
நான் பதில் கூறவில்லை.
“ராஜ்யலட்சுமியை உண்ணித்தான் என்றைக்கோ உதறிவிட்டான். அவன் வேறு கல்யாணம் பண்ணியாச்சு'' - அவர் தொடர்ந்து சொன்னார்.
“அப்பு அத்தான், இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?'' - நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
“நாங்கள் குருவாயூருக்கு பஜனைக்குப் போயிருந்தோம். மகரத்தில்.... ஆளே மாறிப் போய் இருந்தாள். பாவம்....! உன்னைப் பற்றி விசாரித்தாள். கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டவுடன் அவளுக்கு ஆச்சரியமாயிடுச்சு'' –அப்பு அத்தான் சொன்னார்.
என் இதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது.
“இப்போ எங்கே இருக்கிறாள்?'' - நான் என்னுடைய குரல் பதறாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவாறு கேட்டேன்.
“சென்னையில் இருக்க வேண்டும். அங்கு யாரும் இல்லையே! டாக்டர் இறந்து பத்தோ பன்னிரண்டோ வருடங்கள் கடந்து விட்டன'' -அப்பு அத்தான் சொன்னார். சென்னைக்கு செல்லவேண்டுமா என்று நான் என்னிடமே கேட்டுக் கொண்டேன். அவளுக்கு இனிமேல் இன்னொரு மனிதனுடன் திருமண வாழ்க்கை வாழ எதிர்ப்பு இருக்காதா? சந்தோஷமானஒரு திருமண வாழ்க்கையை என்னால் இந்த வயதில் அவளுக்கு அளிக்க முடியுமா? நல்ல உடல் நலமும் இளமையும் என்னிடம் இருந்த காலத்திலேயே என்னால் அவளைக் கவர முடியவில்லை. மீண்டும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்கக்கூடிய அந்தப்பயணம் தேவையற்ற ஒன்று என்று நான் இறுதியில் தீர்மானித்தேன். ஆனால், பல நேரங்களிலும் நான் ராஜுவிற்குக் கடிதங்கள் எழுதினேன். அந்தக் கடிதங்களைஅலமாரியில் வைத்துப் பூட்டி வைத்தேனே தவிர, அவற்றை அஞ்சல் பெட்டியில் போடுவதற்கான தைரியம் எனக்கு இல்லவே இல்லை. ஒருமுறை நான் அவளைப் பார்த்தாலும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் குருவாயூருக்கு ஏகாதசிக்கு முந்தின நாள் சென்றேன். பாஞ்சஜன்யம் என்ற பெயரைக் கொண்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான சத்திரத்தில் தான் நான் அறை எடுத்தேன். காலையிலும் மதியநேரத்திலும் சாயங்கால வேளையிலும் நான் குருவாயூர் கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகச் சென்றேன். என் கண்கள் ராஜுவை மட்டும் தேடின. பகவானின் விக்ரகம் ஒருமுறை கூட என்னுடைய பார்வையில் படவே இல்லை. அவள் எப்படி இருப்பாள்? தடிமனாக இருப்பாளா? அவளுடைய சுருண்ட தலைமுடி நரைத்திருக்குமா?என்னைச் சுற்றி சென்று கொண்டிருந்த பெண்களை நான் வெட்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருக்கும் ராஜுவின் சாயல் இல்லை. ராஜுவின் சாயல் ராஜுவிற்கு மட்டும்தான். அவளுடைய முகத்தின் தனிச்சிறப்புகளை நான் நினைத்துப் பார்த்தேன். வலது பக்கக் கன்னத்தில் சிரிக்கும்போது மட்டும் தெரிகிற ஒரு குழி.... மூக்கிற்கும் மேலுதடுக்கும் நடுவில் ஒரு சிறியமச்சம்... பிறகு வேறு எதுவும் எனக்கு ஞாபகத்தில் வரவில்லை. காலம் ஒருமூடு பனியைப் போல வந்து அவளையும் மூடிவிட்டிருக்கிறது.
குருவாயூர் கோவிலில் நான் ஒரு பெண்ணின் குரலைக் கேட்டேன்.
“குட்டனை வந்து குப்பையை எடுக்கச் சொல்லு, மாலதி.''
ராஜுவின் குரலுடன் அந்தப் பெண்ணின் குரலுக்கு நெருங்கிய ஒற்றுமை இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் அவளை நோக்கி வேகமாக நடந்தேன். அய்யோ..... அவள் ராஜு அல்ல. அவள் பதைபதைப்புடன் என்னையே உற்றுப் பார்த்தாள். ஒரு பெண் அதிகாரி! நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். "ராஜு..... ராஜு..... என் ராஜு...”- நான் கடவுளின் பெயரைக் கூறுவதைப் போல முணுமுணுத்தேன். பெண்கள் கிண்டலாக என்னையே வெறித்துப் பார்த்தார்கள். ஒரு மாலை நேரத்தில் வானம் தெளிவாக இருந்தபோது நான் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு நடப்பதற்காக வெளியே கிளம்பினேன். நான் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். மலையின் வழியாக - செந்தூரம் அணிந்த மணப்பெண்ணின் நெற்றியில் இருப்பதைப்போல - ஒரு சிவப்புப் பாதை மேல் நோக்கி ஏறிப்போய்க் கொண்டிருந்தது.