ஊஞ்சல் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7133
அதன் வழியாக நடக்கும்போது, இரண்டு பக்கங்களிலும் தெருநாய்களின் சிறுநீர் நாற்றம் வரும் இடங்களையும் கொடிகளையும் பூச்செடிகளையும் நான் பார்த்தேன். அடைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளையும். யாரும் உள்ளே வாழவில்லை என்று தோன்றும் பெரிய மாளிகையையும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட சுவர்களையும் நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். திடீரென்று வானம் இருண்டது. பனியைப் போல இருட்டு என்னுடைய பாதையில் பரவியது. தொடர்ந்து கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. என் சட்டை,ட்ரவுசர் அனைத்தும் நனைந்தன. நான் குளிரில் நடுங்க ஆரம்பித்தேன். அருகில் பார்த்த இரும்பு கேட்டைத் தள்ளி திறந்து நான் காலியாகக் கிடந்த ஒரு கார் ஷெட்டிற்குள் போய் நின்றேன். இடிச் சத்தமும் மின்னல் வெளிச்சமும் என்னை பயமுறுத்தின. மின்சாரக் கம்பிகள் எங்கேயாவது காற்றில் விழுந்து, நடந்து செல்வதற்கு மத்தியில் நான் அதை மிதித்து விடுவேனோ? விபத்து நிகழுமோ? நான்நனைந்த கண்ணாடியைக் கழற்றி என்னுடைய உள்ளங்கைகளால் அதைத் துடைப்பதற்கு ஒருவீணான முயற்சியை நடத்தினேன். என் ஆடைகளும் சட்டையின் பாக்கெட்டிற்குள்ளிருந்த கைக்குட்டையும் முழுமையாக நனைந்துவிட்டிருந்தன.நனைந்த கண்ணாடியின் வழியாகப் பார்த்த போது, எல்லா ஆடைகளும் தெளிவற்றுத் தெரிந்தன. நான் எப்படி வீட்டை அடைவேன்?
நான் சிந்தனையில் மூழ்கியிருக்கும்போது, குடையுடன் ஒரு வயதான மனிதன் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். ஆடைகள் அணிந்திருந்ததை மட்டும் வைத்துப் பார்த்தால் அவன் ஒரு வீட்டு வேலைக்காரன் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியும். போதாக் குறைக்கு கை விரல்களில் கரி படிந்திருந்தது. அவன் சிவப்பு நரம்புகள் நிறைந்த கண்களுடன் என்னைப் பார்த்தான். என் முகத்துடன் தன் முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டு அந்தக் கிழவன் கேட்டான்: “யாரு?''
“என்பெயர் சிவசங்கரன் நாயர். மலையின் அடிவாரத்தில் புதிதாக வீடு வாடகைக்கு எடுத்து வசிக்கிறேன். பம்பாயில் இருக்கும் ஒரு வங்கியில் இவ்வளவு காலம் வேலை பார்த்தேன்.''
என்னுடைய நீளமான விளக்கம் அந்த ஆளுக்குப் பிடித்திருந்தது. ஒரு அரைப் புன்னகையை உதட்டில் வலிய வரவழைத்துக் கொண்டு அவன் சொன்னான்:
“வாங்க...உள்ளே வந்து உட்காருங்க. மழை நின்ற பிறகு போகலாம். உள்ளே எஜமானி அம்மாவும் எஜமானும் இருக்காங்க. அறிமுகமாகிக் கொள்ளலாம்.''
நான் அதற்குப் பிறகு தயங்கிக் கொண்டு நிற்காமல் அவனுடைய குடைக்குக் கீழே அந்தவீட்டின் வாசலை நோக்கி நடந்தேன். "நாய்கள் இருக்கின்றன. கவனம்" என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை கதவுக்கு அருகில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்ப்பதை கவனித்ததால் இருக்க வேண்டும்- வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த இல்லத்தரசி சொன்னாள்:
“பயப்படவேண்டாம். நாய்கள் இல்லை. அது எப்போதோ தொங்க விடப்பட்ட அறிவிப்புப் பலகை.அப்போது எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஒரு கறுப்பு நிற அல்சேஷன். அது இறந்து பத்தோ பதினைந்தோ வருடங்கள் கடந்துவிட்டன. அமெரிக்காவில் இருந்து வந்து ஒரு வருடம் ஆனபோது, அந்த நாய் இறந்துவிட்டது.''
என்னை வீட்டில் ஓய்வெடுக்க அனுமதித்ததற்கு நான் நன்றி சொன்னேன்.
“நனைந்த ஆடைகளை மாற்றலாம். நான் என் கணவரின் வேட்டியையும் சட்டையையும் கொண்டு வந்து தர்றேன்'' - அவள் சொன்னாள்.
“வேண்டாம்...''என்று நான் நான்கைந்து தடவை திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆனால், அவள்நல்ல மனதுடன் வற்புறுத்தியபோது, நான் அவள் தந்த ஆடைகளுடன் குளியலறைக்குள் சென்றேன். அவளுடைய கணவருடன் அறிமுகமாகி, அவருக்கும் நன்றி கூற நான் விரும்பினேன். என்னுடைய நனைந்த துணிகளைப் பிழிந்து சுருட்டி, குளியலறையைவிட்டு நான் வெளியே வந்தபோது, இல்லத்தரசி என்னிடம் சொன்னாள்:
“நனைந்த ஆடைகள் இங்கேயே இருக்கட்டும். துவைத்துக் காய வைத்து வேலுப்பிள்ளை மூலம்நான் வீட்டிற்குக் கொடுத்து அனுப்புறேன். சரியா?'' -அவன் என்னுடைய நிர்வாணமான மார்பைப் பார்ப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
“அது சிரமமான விஷயமாச்சே? நான் கொண்டு போயிடுறேன்'' -நான் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.
வீட்டின் நாயகி சிரித்தாள். அவளுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருந்தது. நடுத்தரவயதில் இருப்பவர்கள் அந்த அளவிற்கு இளமை ததும்பும் ஒரு சிரிப்பைச் சிரிக்கமுடியும் என்று, நான் அதைக் கேட்காமல் இருந்திருந்தால் எந்தக் காலத்திலும் நம்பியிருக்க மாட்டேன். முதிர்ச்சி தெரியாத ஒரு சிரிப்பு அது. இளமையான வயதில் இருப்பவர்கள் மட்டுமே சிரிக்கக் கூடிய சிரிப்பு. ஒரு பதினான்கு வயது இளம்பெண்ணின் சிரிப்பு.
“என்ன சிரமம்? இங்கு தேவைப்படுற அளவுக்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். சலவை செய்வதற்கும் தேய்ப்பதற்கும் என்றே ஒருத்தியை வச்சிருக்கோம்'' – அவள் சொன்னாள்.
நாங்கள் இருவரும் சேர்ந்து முன்னறையை நோக்கி நடந்தபோது, நான் சக்கரங்கள் உருளும் சத்தத்தைக் கேட்டேன். வீட்டின் தலைவிக்கு மூன்று சக்கரங்கள் உள்ள சைக்கிளை ஓட்டக்கூடிய சிறு குழந்தைகள் இருக்கிறார்களோ? நான் என்னைச் சுற்றி கண்களை ஓட்டினேன்.
“என் கணவர்...போலியோ பாதித்ததால், கால்கள் தளர்ந்து போய் விட்டன. பத்து இருபது வருடங்களாகவே இதே நிலைதான். நாட்டு மருத்துவம், சித்த வைத்தியம், யுனானி என எல்லாவகை சிகிச்சைகளும் செய்து பார்த்தாகிவிட்டது. எந்தவிதப் பலனும்உண்டாகவில்லை'' - வீட்டின் நாயகி சொன்னாள்.
அந்த நிமிடத்தில் நான் அதிர்ஷ்டமில்லாத அந்த மனிதனைப் பார்த்தேன். உள்ளே செல்லும் ஒரு கதவுக்கு அருகில் தன்னுடைய சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவன் என்னைத் தன் தலையை இரண்டு முறை தாழ்த்திக் கொண்டு வரவேற்றான்.வேலுப்பிள்ளை தள்ளிவிட, அந்த நாற்காலி முன்னோக்கி நகர்ந்தது. அவன் ஒரு கோணலான சிரிப்பை என்னைப் பார்த்து வெளியிட்டான். நான் கைகளைக் கூப்பினேன்.
“என் பெயர் சிவசங்கரன் நாயர். நான் மலையின் அடிவாரத்தில் இருக்கிறேன். மழையின் காரணமாக இங்கு வந்து சிக்கிக் கொண்டேன்'' -நான் சொன்னேன்.
வீட்டின் தலைவன் எதுவும் சொல்லவில்லை.
“பேசக்கூடிய ஆற்றலும் இல்லாமல் போய்விட்டது'' - இல்லத்தரசி சொன்னாள்.
“பிறகு இங்கு யார் இருக்கிறார்கள்? உதவிக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?'' - நான் கேட்டேன். வீட்டின் நாயகி சிரித்தாள்.
“பிள்ளைகளா? எங்களுடைய திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்திற்குள் அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்'' - அவள் சொன்னாள்.
அதற்குப்பிறகு அவளுடைய முகத்தைப் பார்ப்பதற்கே எனக்கு சங்கோஜமாக இருந்தது. என் முகம் சிவப்பதைப் போல எனக்குத் தோன்றியது. என் காதுகளும் கை விரல்களும் கால் விரல்களும் சூடாவதைப் போலவும் எனக்குத் தோன்றியது. நான் அந்த வீட்டைத் தேடி வந்திருக்கக்கூடாது.