
காதல் என்ற ஒன்று எனக்கு அவசியம் வேண்டும் என்று நான் ஏங்கித் திரிவதை உன்னால் உணர முடிகிறதா? கீ என்னை விட வயதில் மூத்தவள். அவளுக்கும் காதல் அனுபவம் இருக்கிறது. அந்த ஒரே காணத்திற்காகத்தான் நான் அவளை பெரிதும் விரும்பினேன். அவள் ஒன்றுமே தெரியாதவள் அல்ல. நானும்தான். தன்னுடைய பழையக் காதலையே இன்னும் மனதில் நினைத்துக் கொண்டு, புதிய காதலை மறுப்பதாக இருந்தால், அது அவளின் சொந்த விஷயம். அவள் தன்னுடைய பழைய வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு என்னை வேண்டாமென்று ஒதுக்கினால் இனிமேலும் என்னுடைய நேரத்தையும், என்னுடைய முழு சக்தியையும் அவளுக்காக ஒதுக்க நான் தயாராக இல்லை. நான் அப்படி நடக்கவும் கூடாது. நான் அவளைக் காதலிக்கிறேன். அதற்காக என்னையே நான் இழக்கவோ, தேவையில்லாத மனக் குழப்பங்களுக்கு ஆளாகவோ நான் விரும்பவில்லை. நான் இப்போது தேடுவது ஒரு வகையான கிரியா ஊக்கியை, நெருப்பின் ஒரு பொறியை. அதைத்தான் நான் காதல் என்கிறேன். இரண்டு ஆன்மாக்களுக்கிடையே இருக்கும் காதலை நான் சொல்லவில்லை.
அந்தப் பெண் என்னை ஏமாற்றவில்லை. எல்லாப் பெண்களையும் ஏமாற்றுக்காரிகள் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதன் எவ்வளவு பெரிய தவறு செய்கிறான் என்பதை நான் உணர்கிறேன். சரியாக எதையுமே புரிந்து கொள்ளாமல் அவன் எப்படி அப்படி சொல்லலாம் என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பெண் என்னிடம் நன்றாக நடந்து கொண்டாள். என்னிடம் அவள் மிகவும் பாசத்துடன் பழகினால். சொல்லப் போனால் இதை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றே. தியோ, உனக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏதாவது இருக்கும் என்று உண்மையிலேயே நான் சந்தேகப்படுகிறேன். அப்படி இருப்பதுகூட நல்லதுதான்.
நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய பணத்தை செலவழித்து விட்டோமோ என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அப்படி செலவழிக்கும் அளவிற்கு என்னிடம் என்ன பணம் கொட்டியா கிடக்கறது? நான் அவளைப் பார்த்து சொன்னேன் - ‘இங்க பாரு, எனக்கு நீ இருக்கே. உனக்கு நான் இருக்கேன்றதைக் காண்பிக்கிறதுக்காக மது அருந்தணும்னு ஒண்ணும் அவசியமில்லை. என் கையில் என்ன இருக்கோ அதை நான் உன் கையிலே தர்றேன்’னு. அப்படி ஒருவேளை அவளுக்காக நான் கொஞ்சம் அதிகமாக செலவழித்திருந்தால், நிச்சயம் அவள் அதற்குத் தகுதியானவளே. நாங்கள் இருவரும் அமர்ந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினோம். அவளுடைய வாழ்க்கை, அவளுக்கு இருக்கும் பொறுப்புகள், வாழ்க்கையில் அவளுக்கிருக்கும் கஷ்டங்கள், அவளின் உடல்நிலை - எல்லா விஷயங்களையும் அவளுடன் நான் மனம்விட்டு பேசினேன். சொல்லப் போனால் மெத்த படித்த பேராசிரியரைப்போல் இருக்கும் கஸினைவிட அவளுடன் உரையாடிக் கொண்டிருப்பதில் நான் இன்பம் கண்டிருக்கிறேன். நான் சொல்லும் இந்த விஷயங்களை வைத்து நான் எந்த அளவிற்கு அன்பு வயப்பட்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளலாம். நான் கொண்டிருக்கும் அந்த அன்பை முட்டாள்தனமான பாதைகளில் போய் வீணடிக்க விரும்பவில்லை. மாறாக மிகவும் மனத்தெம்புடனும், தெளிவான மன நிலையுடனும், நல்ல உடல் நிலையுடனும் என்னை நான் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படியென்றால் மட்டுமே என்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியும். இந்த கோணத்தில் கீ மீது நான் கொண்டிருந்த காதலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவளுக்காக நான் என்னை துக்கத்தில் மூழ்கடித்துக் கொள்ள தயாராக இல்லை. நான் என்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டேன். என்னை தேவையில்லாமல் அதிர்ச்சிக்கு ஆளாக்கி செயலற்ற தன்மையுடன் இருக்க நான் விரும்பவில்லை. பாதிரியார்கள் எங்களைப் பாவம் செய்தவர்கள் என்று குறிப்பிடலாம். பாவத்தில் கருத்தரித்தவர்கள் என்றும், பாவத்தில் பிறந்தவர்கள் என்றும் சொல்லலாம். அடடா, அப்படி அவர்கள் சொன்னார்களென்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஒரு மனிதன் காதலிப்பது பாவமா? காதலுக்காக ஏங்குவது பாவமா? காதல் என்ற ஒன்று இல்லாமல் வாழ முடியாமல் இருப்பது பாவமா? காதல் இல்லாத வாழ்க்கைதான் எனக்கு பாவமானதாகவும் ஒழுங்கற்ற ஒன்றாகவும் படுகிறது.
மத சம்பந்தப்பட்ட பல கொள்கைகளை சொல்லி வாழ்க்கையிலிருந்து தனிமைப்படுத்தி என்னை வாழ வைத்த அந்த நிமிடங்களுக்காக உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். அப்போதிருந்தே அதைவிட சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மனதில் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் நிமிடத்தில், நீ மட்டும் தனியாக இல்லாமல் உனக்குத் தெரிய வரும்போது அதுவே உன்னை உலகத்தை மேலும் அதிகமான நட்புணர்வுடன் பார்க்குமாறு செய்யும். பாதிரியார்கள் மிகவும் விரும்பக்கூடிய சர்ச் மதில்களையும் மத நூல்களையும் விட நட்புணர்வு கொண்டதாக உலகம் அந்த நிமிடத்தில் உனக்குத் தோன்றும். அவள் இருக்கக்கூடிய அந்த அறை மிகவும் சிறியதுதான், எளிமையானதுதான். சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் வெள்ளை தாள் சாம்பல் வர்ணத்தில் தோற்றம் தரும். எனினும், சார்டின் வரைந்த ஓவியத்தைப்போல அந்த அறை எனக்குக் காட்சித் தரும். மரத்தால் ஆன தரைப்பகுதியில் ஒரு பாய் விரிக்கப்பட்டிருக்கும். அதற்கு மேல் ஒரு பழைய படுக்கை விரிப்பு இருக்கும். அறையின் ஒரு பகுதியில் ஒரு சாதாரண மண்ணெண்ணெய் அடுப்பு இருக்கும். சாமான்களை வைக்கும் ஒரு அடுக்கு, ஒரு பெரிய எளிமையான படுக்கை - மொத்தத்தில் ஒரு வேலை செய்யும் பெண்ணின் வீடு எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் அந்த வீடு. மறுநாள் காலையில் அவள் துணி துவைக்கும் தொட்டிக்கு அருகில் நின்றிருந்தாள். அவள் அங்கு நின்றிருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. கருப்பு நிற பாவாடையிலும் அடர்த்தியான நீல வர்ண மேலாடையிலும் அவள் எந்த அளவிற்கு அழகான ஒரு பெண்ணாக என் கண்களுக்குத் தோன்றினாளோ அதே மாதிரிதான் இப்போது தான் அணிந்திருக்கும் ப்ரவுன் அல்லது சிவப்பு கலந்த சாம்பல் வர்ண ஆடையிலும் எனக்கு அழகாகத் தெரிந்தாள். அவள் அப்படியொன்றும் இளமையானவள் இல்லைதான். சொல்லப் போனால் கீயின் வயதையொத்தவளாக அவள் இருக்கலாம். அவளுக்கும் குழந்தை இருக்கிறது. ஆமாம் - வாழ்க்கை அனுபவம் அவளுக்கும் இருக்கவே செய்கிறது. அவளின் இளமை அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்காக அவளை ஒரு வயதான பெண் என்றெல்லாம் குறிப்பிட வேண்டுமா என்ன?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook