
சுராவின் முன்னுரை
1978- ஆம் ஆண்டு கேரளத்தில் ‘மலையாள நாடு’ என்ற பெயரில் அருமையான ஒரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. நான் அந்தப் பத்திரிகையின் நிரந்தர வாசகன். வி.பி.ஸி. நாயர் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் ‘மலையாள நாடு’ பத்திரிகையைப் படிப்பதென்றால் அப்படியொரு வெறி எனக்கு. அந்தக் காலகட்டத்தில் எம். முகுந்தன், காக்கநாடன் என்று பலரும் அதில் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஓ.வி. விஜயனின் (O.V.Vijayan) ஒரு தொடர் கதை பிரசுரமாகிக் கொண்டிருந்தது. கதையின் பெயர் : தர்ம புராணம். இந்திரா காந்தியின் அவசர காலச் சட்டம், கேரளத்தின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்று பல விஷயங்களையும் அதில் கடுமையாக அவர் சாடி எழுதியிருந்தார். அரசியல் பின்னணியில் உயிரோட்டத்துடன் - ‘பொலிட்டிக்கல் சட்டயர்’ பாணியில் எழுதப்பட்ட அந்தத் தொடர்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஓ.வி. விஜயனின் பாகுபாடற்ற, தெளிவான அரசியல் பார்வையும், அரசியல்வாதிகளின் போலி முகத்தைக் கிழித்தெறியும் ஆவேசமும், அரசியலில் கலந்திருக்கும் பொய் - பித்தலாட்டங்களையும், முரண்பாடுகளையும் மக்களிடம் கட்டாயம் சொல்ல வேண்டும் என்ற அவரின் உயர்ந்த நோக்கமும் - என்னைக் கவர்ந்த அம்சங்கள்.
‘தர்ம புராணம்’ பிரசுரமான காலத்தில் அதற்கு முன்பு தான் எழுதிய ‘கஸாக்கின்றெ இதிகாசம்’ நாவலுக்காக மிகப்பெரிய அளவில் ஒரு பெயரைச் சம்பாதித்திருந்தார். ஓ.வி. விஜயன். கேரளப் பத்திரிகைகளும் இலக்கிய வாசகர்களும் அவரின் அந்தக் கதையைத் தலையில் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். இலக்கிய வேட்கை கொண்ட மனிதர்களை எங்கு, எப்போது சந்தித்தாலும் பேச்சுக்கு நடுவே ‘கஸாக்’கின் பெயர் கட்டாயம் இடம் பெறும்.
பேராசிரியர் கெ.எம். தரகன் என்பவர் எழுதிய ‘மலையாள இலக்கிய வரலாறை’ப் படித்தேன். அதில் ஓ.வி. விஜயனைப் பற்றி நிறைய அவர் எழுதியிருந்தார். குறிப்பாக ‘கஸாக்கின் இதிகாச’த்தைப் பற்றி பல பக்கங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. கேரளத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் யாருடன் பேச நேர்ந்தாலும், ‘ஓ.வி. விஜயனைப் படிச்சிருக்கீங்களா? ‘கஸாக்கின் இதிகாச’த்தைப் படிச்சிருக்கீங்களா ? என்று கேட்பார்கள். இப்படியொரு பெயரைப் பரவலாக எல்லோரிடமும் ஓ.வி. விஜயன் பெற்றிருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்க ஒரு விஷயம்.
விஜயன் எந்த நேரம் பார்த்தாலும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நபர் அல்ல. தன் இலக்கிய வாழ்க்கையில் அவர் மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால், அவர் எழுதிய ஒவ்வொன்றும் பேசப்படக்கூடியவை. அதனால்தானோ என்னவோ, கடந்த எத்தனையோ ஆண்டுகளாக அவர் எல்லா இடங்களிலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார். மலையாளத்தின் மிகச்சிறந்த பத்து புதினங்கள் என்றொரு பட்டியல் போட்டால், அதில் கட்டாயம் ஓ.வி.விஜயனின் ‘கஸாக்கின்றெ இதிகாசம்’ இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
சொல்லப்போனால் - அரசியல் பின்னணியில் கதைகள் எழுதிய எழுத்தாளர் மலையாள இலக்கியத்திலேயே விஜயன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதற்கு ஒரு காரணம் - டெல்லியில் ஆங்கில நாளிதழ்களில் கார்ட்டூனிஸ்ட்டாகவும், காலம்னிஸ்ட்டாகவும் அவர் பணிபுரிந்தபோது சந்தித்த மனிதர்கள், பெற்ற அனுபவங்கள்.
விஜயனுக்கென்று மலையாள இலக்கிய உலகில் தனியான ஒரு மதிப்பு இருக்கிறது - மரியாதை இருக்கிறது. அவர் ஒரு தனிமை விரும்பி. எந்தவிதமான சர்ச்சைகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. துறவு மனதுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் விஜயனை எல்லோரும் விரும்புவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?
ஓ.வி.விஜயனின் தனித்துவமே - அவரின் மொழி நடை. தனக்கென்று ஒரு பிரத்யேக மொழி நடையை அவர் தன் படைப்புகளில் கையாள்கிறார். கஷ்டமான - அதே சமயம், வித்தியாசமான வாக்கியங்களை அவர் சர்வ சாதாரணமாகத் தன்னுடைய படைப்புகளில் பயன்படுத்துவதைப் பார்க்கிறபோது, நமக்கே வியப்பாக இருக்கும். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி இவரின் பேனா முனையில் வந்து விழுகின்றன என்று மூக்கில் விரல் வைக்கத் தோன்றும்.
விஜயனின் இலக்கியப் படைப்புகளைத் தமிழில் அடுத்தடுத்து மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கேன். அதற்கு ஒரு வெள்ளோட்டம்தான் இந்தச் சிறிய நூல். ஓ.வி.விஜயனுக்கு சில வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் பெரிய இலக்கியப் பரிசான ‘எழுத்தச்சன் விருது’ வழங்கப்பட்டது. இதையொட்டி ‘மாத்ருபூமி’ வார இதழ் ஓ.வி.விஜயனைப் பற்றி பல முக்கிய மனிதர்கள் எழுதியிருந்த கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அவற்றின் தமிழ் வடிவமே இந்நூல். இந்தக் கட்டுரைகளில் ஒன்று எழுத்தாளர் எம். முகுந்தன் எழுதியது. ஒரு எழுத்தாளர் - தன் சமகால இன்னொரு எழுத்தாளரை மனம் திறந்து பாராட்டி எழுதுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! எம். முகுந்தன் அதைச் செய்திருக்கிறார். அந்த நல்ல மனதிற்காகவே முகுந்தனை நாம் பாராட்டலாம். இதுபற்றி அப்போது புதுடில்லியில் இருந்த எம். முகுந்தனுடன் தொலைபேசியில் நான் பேசினேன். விஜயனைப் பற்றி மனப்பூர்வமாகப் பாராட்டி அவர் எழுதியிருந்ததற்காக நான் கொண்ட மகிழ்ச்சியை அவரிடம் சொன்னேன். நான் சொன்னதற்கு மிகவும் சந்தோஷப்பட்டார் முகுந்தன். ஒரு எழுத்தாளர் ஒரு விருதைப் பெறுகிறார் என்றால், அதை முழுமையாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது பத்திரிகைகளின் கையில்தான் இருக்கிறது. அதை ‘மாத்ருபூமி’ செவ்வனே செய்திருக்கிறது. இதுதான் வாழும் காலத்தில் ஒரு பத்திரிகை ஒரு இலக்கியப் படைப்பாளிக்குக் காட்டுகிற மரியாதை. நம் தமிழ் பத்திரிகைகள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.
இந்நூலில் ஓ.வி.விஜயனுடன் நடைபெற்ற ஒரு சிறு உரையாடலும் இடம் பெற்றிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்த ‘மலையாள மனோரமா’வின் மலரொன்றில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் அது.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட மாத்ருபூமி, மலையாள மனோரமா இதழ்களை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
‘ஒ.வி.விஜயன் ஓர் அறிமுகம்’ (O.V. Vijayan – Or Arimugam) என்று நான் மொழி பெயர்த்த இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook