ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 2
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 6789
தேடி வந்த விருது
- எம். முகுந்தன்
ஓ.வி.விஜயனுக்கு எழுத்தச்சன் விருது கிடைத்திருக்கிறது. ஒரு மொழியால், மனிதனைப் போல சந்தோஷப்பட முடியும் என்றால், மலையாள மொழி இந்த நிமிடத்தில் மிகவும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கும். விஜயனைப் போன்ற ஒரு எழுத்தாளன் கவுரவிக்கப்படுகிற போது, அதனால் பெருமைப்படுவது விஜயனுக்கென்று இருக்கின்ற வாசகர்கள் கூட்டமும் சேர்ந்துதான்.
மலையாள மொழியில் பரிசுகள் கிடைக்கும்போது மட்டும் நாம் நினைத்துப் பார்க்கிற சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெறும் பரிசுகள் மூலம் ‘இதோ நான் இங்குதான் இருக்கிறேன்’ என்று அவர்கள் உரத்த குரலில் கைதூக்கிக் கூறி தாங்கள் இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்வார்கள். இவ்வாறு அவ்வப்போது பரிசுகளும், விருதுகளும் கிடைப்பதாலும், அவர்கள் உரத்த குரலில் தாங்கள் இருப்பதைச் சொல்லிக் கொள்வதாலும்தான் நம்முடைய எழுத்தாளர்களில் பலரை இன்னும் நாம் மறக்காமல் இருக்கிறோம். தங்களின் படைப்புகளின் மேன்மைத்தனத்தால் அல்ல - மாறாக, விருதுகள் கிடைப்பதாலும், சர்ச்சைகளாலும் மட்டுமே பெரிய எழுத்தாளர்கள் என்ற அங்கியை அணிந்து கொண்டிருக்கும் சிறிய எழுத்தாளர்கள் பலரும் மலையாளத்தில் இருக்கிறார்கள்.
பெரிய விருதுகளுக்குப் பின்னால் இதற்காகச் செய்யப்பட்ட கடுமையான முயற்சிகளும், சில குறுக்கு வழிகளைக் கையாண்டிருக்கும் தகவல்களும் கூட நமக்குச் சில வேளைகளில் தெரியவரும். அத்தகைய எந்தவிதமான முயற்சிகளும் இல்லாமலேயே - மிகவும் அபூர்வமாக என்றுகூடக் கூறலாம்- சில விருதுகள் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன. விஜயனுக்குக் கிடைத்திருக்கும் விருது அத்தகைய ஒன்றே. ஒரு குழந்தை மெல்ல மெல்ல எட்டு வைத்து நடந்து வருவது மாதிரி எழுத்தச்சன் விருது விஜயனைத் தேடி வந்திருக்கிறது. ஓ.வி.விஜயன் இன்று மலையாளத்தில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா விருதுகளுக்கும் உயரத்தில் நின்று எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் என்று எல்லோரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அப்படி நம்புவதைத்தான் நானும் விரும்புகிறேன்.
சமீப காலமாக விஜயனைப் பற்றி சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருவதையும் நாம் கவனிக்காமல் இல்லை. எழுத்தச்சன் விருது விஜயனுக்குக் கிடைத்திருப்பது குறித்த தேவையில்லாத சர்ச்சைகள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்று மொழி மீது அக்கறை கொண்டிருக்கும் மனிதர்கள் விரும்புவது நியாயமான ஒன்றே. காரணம் - தானே உண்டாக்கிக் கொண்ட நோய்களாலும், தானே வரவழைத்துக் கொண்ட முதுமையாலும் பீடிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எழுத்தாளனைப் பற்றி இனி எதற்குத் தேவையில்லாத சர்ச்சைகள்?
ஏற்கனவே நிலவி கோலோச்சிக் கொண்டிருந்த அமைப்புகளின் அஸ்திவாரத்தை விஜயன் எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமலும், மவுனமாக இருந்தும் ஆட்டிப்படைத்த ஒரு காலம் இருந்தது. அன்று விஜயனைப் பற்றி எந்தவித சர்ச்சையும் எழுப்பாமல் அமைதியாக இருந்த நாம் இன்று எதற்கு விஜயனை அவரின் தியான நித்திரையில் தொந்தரவு செய்ய வேண்டும்?
எழுத்தச்சன் விருது இது போன்ற சில கேள்விகள் எழுப்ப நம்மைத் தூண்டுவதென்னவோ உண்மை.
சில எழுத்தாளர்களுக்கு நாம் விருதுகள் வழங்குகிறபோது அந்த எழுத்தாளர்களுக்கு அல்ல - அந்த விருதுகளுக்குத்தான் பெருமை வந்து சேர்கிறது. தவறான நபர்களுக்கு விருதுகள் போய் சேர்கிறபோது, அந்த விருதுக்குக் கொஞ்சம் கூடப் பெருமையே இல்லாமல் போகிறது. எல்லா இடங்களிலும் அரசியல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த முயலும்போது, எப்படி அந்த அரசியல் பலவீனமாகிப் போகிறதோ, அதேபோன்று அரசியல் முலாம் பூசிக்கொண்டு கொடுக்கப்படும் விருதுகளும் கிட்டத்தட்ட கொஞ்சம் கூட மதிப்பே இல்லாமல் போய்விடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வருடத்திற்கான எழுத்தச்சன் விருது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவருக்கு முறையாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்கிறேன்.
சமீப காலமாகப் பலவித சந்தேகங்களுக்கும் இடம் தரும் வகையில் தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டு ஒரு இருட்டு உலகத்தைச் சமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜயன். இந்த எழுத்தச்சன் விருது ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயன்மேல் ஒரு பிரகாசத்தைப் பாய்ச்சி விட்டிருக்கிறது என்பது உண்மை. இந்த விருது மூலம் விஜயனின் இலக்கியப் படைப்புகளை மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து பார்ப்பதற்கு ஒரு சூழ்நிலை உண்டாகியிருக்கிறது என்று கூட கூறலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்தப் பரிசு தந்ததன் மூலம் இயற்கையாகவே உருவாகி இருப்பது குறித்து மகிழ்ச்சியே. பன்முகத்தன்மை கொண்ட விஜயனைப் போன்ற ஒரு எழுத்தாளனை முழுமையாக நாம் பார்க்க வேண்டுமென்றால், முதலில் நம் பார்வையை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அப்போதுதான் நம்மால் அவரைப் புரிந்து கொள்ள முடியும். ‘கஸாக்கின் இதிகாசம்’ அதன் பிரகாசத்தை மிகப் பெரிய அளவில் நம் கண்கள் மீது பாய்ச்சியதன் விளைவு - நம்மில் பலரும் அதன் தாக்குதல் தாங்க முடியாமல் குருடர்களாகிப் போனோம். அதன் தொடர்ச்சியாக - விஜயனின் படைப்பு உலகத்தின் வெளிச்சம் குறைந்த பாதைகளில் இறங்கிச் செல்வதற்கான தைரியம் நமக்கு இல்லாமல் போனது. விஜயனை ‘கஸாக்கின் இதிகாசம்’ எழுதிய எழுத்தாளர் என்று மட்டுமே பார்த்து அதோடு நிறுத்திக் கொண்டதுதான், நாம் செய்த மிகப்பெரிய தவறு. விஜயனின் இலக்கிய ஆக்கங்களைக் குறித்து பேசப்பட்ட பல விஷயங்களில் பெரும்பாலும் பேசப்பட்டது விஜயனின் மொழி பிரயோகத்தைப் பற்றித்தான். இருந்தாலும், வரும் தலைமுறைகள் விஜயன் என்ற இந்த எழுத்தாளனை நினைக்கும்போது, அவர்கள் மனதில் ஞாபகம் வரப்போவது விஜயன் ஒரு புதிய மொழியை உண்டாக்கியவர் என்பது அல்ல. பலவித எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் வாங்கிக் கொண்டு தன் படைப்புகள் மூலம் விஜயன் வளர்த்துக் கொண்டு வந்த இலட்சியங்கள் - எண்ணங்கள் மொழிக்குள் சிக்கிக்கொண்டு காணாமல் ஒன்றும் போகவில்லை. விஜயனின் மொழிநடை மீது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவரின் மன எண்ணங்களும், சித்தாந்தங்களும் காலத்தைக் கடந்து நிலைபெற்று நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.
மாறுபட்ட மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியப் படைப்பு நவீன இலக்கியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக பொதுவாக உலக அளவில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மலையாளத்திலும் இந்தப் போக்கு நவீன இலக்கிய கால கட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பமாகி படிப்படியாக வளர்ந்தும் வந்தது. அதற்குக் காரணம் - விஜயனும் கஸாக்கும் என்று சொன்னால் கூடத் தப்பில்லை. இதன் விளைவு - மொழி மீது கொண்ட வெறியின் காரணமாக நவீனத்துவத்தின் மையத்திலிருந்து பல்வகைப்பட்ட சர்ச்சைகளும், விவாதங்களும் எழும்ப ஆரம்பித்தன. அதன் காரணமாகத்தான் இருக்க வேண்டும்- இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதன் தொடர்ச்சியாக நடக்கும் ஆராய்ச்சிகள், மலையாளத்தில் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
பல மொழிகளிலும், நல்ல எழுத்தாளர்களும், பெரிய சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். இனியும் பலர் இருப்பார்கள். இருந்தாலும், ஒரே நேரத்தில் ஒரு நல்ல எழுத்தாளனாகவும், பெரிய ஒரு சிந்தனாவாதியாகவும் ஒரே ஆள் இருப்பது என்பது அவ்வளவு சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்றல்ல. நம்மிடம் இருக்கும் நல்ல எழுத்தாளர்களில் பெரும்பாலனவர்கள் மோசமான சிந்தனையாளர்கள் என்ற உண்மையை நாம் பொதுவாக ஒத்துக் கொள்ள தயங்குகிறோம். தெளிவான பார்வையும், ஆழமான சிந்தனையும், தீவிரத்தன்மை கொண்ட மொழி மூலம் அதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும் கைவரப்பெற்ற ஒரே எழுத்தாளர் விஜயனாகத்தான் இருக்க முடியும். எழுத்தச்சன் விருது விஜயனைத் தேடி வந்திருப்பதால் நாம் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமே இல்லை.
கடந்த முப்பது வருடகாலமாக இலக்கியங்கள் படிப்போர்கள் மத்தியில் பேசப்பட்டும், சர்ச்சைகள் செய்யப்பட்டும் வந்திருக்கிறார் ஒரு திகம்பரனைப்போல தான் உண்டு தன் உலகம் உண்டு என்றிருக்கும் விஜயன். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு என் அலுவலகத்தின் கஃபேட்டேரியாவில் அமர்ந்து நானும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றும் இ.பி. உண்ணியும் விஜயனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் விஜயனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கும் ஒரு பழைய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தோம். சென்னையில் விஜயன் சாலையொன்றைக் கடப்பதற்காக பதைபதைப்புடன் நின்று கொண்டிருக்கிறார். தொடர்ந்து வாகனங்கள் படுவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சாலையைக் கடப்பதற்கு, விஜயனுக்கு மிகவும் பயம். நேரம் கடந்து கொண்டே இருந்தது. இருந்தும் விஜயனால் சாலையைக் கடக்க முடியவில்லை. கடைசியில் இந்தப் பிரச்னைக்கு விஜயனே ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு ஆட்டோவை அழைத்து, அதில் உட்கார்ந்து சாலையின் மறுபக்கம் போய்ச் சேர்வது. இதுதான் விஜயனின் திட்டம். சாலையைக் கடந்து செல்வதற்காக ஒரு ஆட்டோவை வாடகைக்குப் பிடித்த ஒரு மனிதர் உலகத்திலேயே விஜயன் மட்டும்தான் இருக்க முடியும்.
சொல்லப்போனால் விஜயனிடம் இருக்கும் ஒரு நோய் - பயம். வாகனங்களையும், எட்டுக்கால் பூச்சிகளையும் பார்த்தால் விஜயனுக்கு மிகவும் பயம். அதே நேரத்தில் உலக கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டை விமர்சிக்கவும், நெருக்கடி நிலைக் கால கட்டத்தில் இந்திரா காந்தியை விமர்சிக்கவும் அவர் கொஞ்சம்கூட பயந்ததில்லை. எட்டுக்கால் பூச்சியைப் பார்த்துப் பயப்படக்கூடிய விஜயனுக்கு நெருக்கடி நிலையைப் பார்த்துப் பயமில்லை. சாலையில் வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிற பஸ்ஸைப் பார்த்துப் பயப்படக்கூடிய விஜயனுக்கு கேரளத்தில் பலம் பொருந்திய மார்க்சிஸ்ட் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்துக் கொஞ்சம் கூட பயமில்லை.
மனம் திறந்து கூறக்கூடிய அளவிற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் விஜயன் என்ற எழுத்தாளனிடம் இருக்கின்றன. அதிகார வர்க்கத்தை விட்டு விஜயன் என்றுமே ஒதுங்கியே இருந்தார். பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளின் கார்ட்டூனிஸ்ட் என்ற நிலையிலும், தொடர்ந்து கட்டுரைகள் எழுதுபவர் என்ற நிலையிலும் டெல்லியில் விஜயன் நினைத்திருந்தால், மிகப்பெரிய தொடர்புகளைச் சர்வ சாதாரணமாக ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கொஞ்சம்கூட கவனமே செலுத்தாமல் சாணக்யபுரியில் இருக்கும் தன்னுடைய பழைய வீட்டில் தான் வளர்க்கும் பூனைக்குட்டியை மடியில் வைத்து அன்புடன் தடவியவாறு தன்னுடைய எண்ணங்களுடனும், பயங்களுடனும் விஜயன் தன் வாழ்க்கையின் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். விஜயன் அரசாங்கத்தின் எந்தக் கமிட்டியிலும் உறுப்பினர் இல்லை. வெளிநாடுகளுக்கு இதுவரை இவர் போனதே இல்லை. டெல்லியில் இருக்கும் எழுத்தாளர்கள் கூட அதிகாரத்தையும் பல அமைப்புகளையும் கைப்பற்றிக் கொண்டு பந்தாவாக உலா வருகிறபோது, ஒரு கதர் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு, சிறிய அளவில் உணவு உண்டு, மகாத்மா காந்தியையும் விட எளிமையான ஒரு வாழ்க்கையை டெல்லியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் விஜயன்...
சிந்தனையிலும், எழுத்திலும் மட்டும்தான் விஜயன் ஒரு கணக்குப் பார்க்காத தாராள மனம் கொண்ட மனிதர்.
ஞானபீடத்தையும் தாண்டி விஜயன் மிகவும் முன்னால் போயிருக்கிறார். அதனால் ஞானபீடத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
தன்னுடைய நோய்களுடனும், பயங்களுடனும் இனியும் நீண்ட நெடுங்காலம் விஜயன் நம்முடன் வாழ வேண்டும். காரணம் - விஜயனின் எண்ணங்களும் மன ஓட்டங்களும் நமக்குக் கிடைத்திருக்கும் கொடைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவை நமக்கு அவசியமும் கூட.