ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 6
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 6789
ஓ.வி.விஜயனின் அரசியல் பார்வை
- பி.கெ. ராஜசேகரன்
மலையாள இலக்கியத்திற்கும் அதை நாளும் வளர்த்துக் கொண்டிருக்கும் மலையாள மக்களுக்கும் காலத்திற்கேற்ற ஒரு சிகிச்சை என்றுதான் ஓ.வி.விஜயனின் படைப்புகளின் பங்களிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். 1960- க்குப் பிறகுள்ள கேரள கலை வரலாற்றை விட்டு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கூட விஜயன் என்ற நபரை ஒதுக்கி வைத்துவிட்டு நம்மால் பார்க்கவே முடியாது. நாவலிலும், சிறுகதையிலும் விஜயன் கொண்டு வந்த புதிய மொழியும், அழகுணர்வும், அவற்றின் தாக்கமும் இப்போது கேரள இலக்கியத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். முன்பு மலையாள இலக்கியத்தில் விளங்கிக்கொண்டிருந்த போக்கிற்கு எதிராக விஜயன் எழுத்தில் காட்டிய புதுமையும், துணிச்சலும் இன்று இலக்கியத்தை எந்த அளவுக்கு உயர்த்திக் கொண்டு போயிருக்கிறது என்பதையும் நாம் காணத் தவறக்கூடாது. விஜயனின் படைப்புகள் மீது ஏறி நின்றுகொண்டுதான் எல்லா மலையாள இலக்கிய அமைப்புகளும் பல புதுமைகளுக்கும் இங்கு பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருக்கின்றன. என்றாலும், தன்னுடைய பன்முக ஆற்றலால் விஜயன் உயர்த்திப் பிடித்த பதாகை இலக்கிய ஆராய்ச்சியுடனோ, நிறுவனங்களின் விருப்பு வெறுப்புக்களுடனோ எல்லை கட்டி நின்றுவிடவில்லை. விஜயன் தன் படைப்புகள் மூலம் செய்ய நினைத்த புதுமைப் போக்குகளை இங்குள்ள அமைப்புகள் முழுமையாக ஏற்றுக்கொண்டன என்று கூறுவதற்கில்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டன என்று சொல்வதே பொருத்தமானது. தன்னுடைய ஆழமான படைப்பு வாழ்க்கையில் எழுதிய நாவல்களிலும், சிறுகதைகளிலும் ஓரளவுக்கு விஜயன் தான் நினைத்ததைச் செயல் வடிவில் காட்ட முடிந்தது.
அரசியல் சிந்தனையாளர், ஆங்கில நாளிதழ்களில் அரசியல் செய்திகளை எழுதக்கூடிய மனிதர் என்ற முறையில் விஜயன் சந்திக்க நேர்ந்த விஷயங்கள்தான் இவரின் நாவல்களிலும் சிறுகதைகளிலும் இவரின் கார்ட்டூன்களிலும் வெளிப்பட்டன. புதிய அரசியல் கண்ணோட்டத்துடன் இவர் இலக்கியத்தில் பதித்த முத்திரைதான் விஜயனின் இலக்கிய வாழ்க்கையிலேயே இவரின் பெயர் இன்றுவரை நிலைத்து நிற்பதற்கான காரணம். விஜயனுக்கு ஏற்பட்ட அனுபவங்களையொத்த அனுபவம் மலையாளத்தில் மிகக் குறைந்த எழுத்தாளர்களுக்கே கிடைத்திருக்கிறது. அதுவரை மலையாள இலக்கியத்தில் நிலவிக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளும், அதைத் தொடர்ந்து நம்பப்பட்டுக் கொண்டிருந்த கருத்துக்களும் விஜயன் எழுத ஆரம்பித்த பிறகு வெகுவாக மாற்றம் பெற்றன எனலாம். தார்மீக இலட்சியங்கள் இல்லாத நிலையையும், அதைப் பொருட்படுத்தாமல் மார்தட்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் மேம்போக்குத் தனத்தையும், சமூகத்தின் போலித்தனத்தையும் தன்னுடைய படைப்புகளில் தோலுரித்துக் காட்டினார் விஜயன். விஜயனின் இந்த அரசியல் பார்வையையும், சமூகத்தின் பால் கொண்ட அக்கறையையும் இவரின் நாவல், சிறுகதை, கார்ட்டூன் - எல்லாவற்றிலும் நம்மால் காண முடியும். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், அரசியல் அங்கத எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர், அரசியல் விமர்சகர் - என்ற நிலையில் விஜயன் வெளிப்படுத்தும் எண்ணங்களும் சிந்தனைகளும் கடந்தகால - நிகழ்கால இந்திய, கேரள சமூகத்தோடு முழுமையான தொடர்பு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தார்மீகக் கண்ணோட்டத்துடன் தன் படைப்புகளில் விஜயன் எழுப்பும் அரசியல் சார்ந்த கேள்விகள் சிந்தனையைத் தூண்டக்கூடியன. விஜயன் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு இலக்கியமும், சமூகமும் எந்த அளவுக்கு ஒத்திசைவோடு இருந்திருக்கின்றன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம். சந்தை வியாபாரத்தால் படு வேகமாக அமைப்பு ரீதியாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற கேரள மணண்ன் இலக்கியமும், சமூகமும் இந்தப் பிரச்சனையை எப்படி நேர்கொள்கின்றன என்பதுதான் கேள்வி. எந்தக் காலத்திலும் சமூகத்தின் பால் அதிகாரம் செலுத்துவதிலும் அதே நேரத்தில் முக்கிய இழையாக ஓடிக் கொண்டிருப்பதிலும் பிரதான பங்கு வகிக்கும் இந்த அமைப்புகள் தமக்கென்று ஒரு பாதையைப் போட்டுக் கொண்டு சுதந்திரமான சிந்தனைகளையும் எண்ணங்களையும் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. விஜயனின் அரசியல் பார்வையும், இலக்கிய வாழ்க்கையும் கூட இந்த அமைப்புகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில் சொல்லத் தயாராகவே இருக்கின்றன.
மதம், ஆன்மீகம் - இவற்றோடு சம்பந்தம் கொண்டு விஜயன் எழுதும் படைப்புகளின் பரிணாமத் தன்மையைப் பார்த்து நிலவி வரும் ‘இந்துத்துவ’ வாதத்துடன் இவரின் படைப்புகளைச் சேர்த்துப் பார்ப்பதால் உண்டாகும் எதிர்ப்புகளை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். விஜயன் என்ன சொல்கிறாரோ அதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அவர் கூறுவதில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து எடுத்து கையில் வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. இந்தப் போக்கிற்கு மறுபக்கத்தில்தான் விஜயனின் நூல்கள் தத்துவார்த்தமான பல கேள்விகளையும் எழுப்புகின்றன. ஒரு வளர்ந்த சமூகம் என்ற நிலையில் உள்ளே நுழைந்து பார்க்கவும், உள்ளே இருக்கும் மறைபொருள்களைத் தெரிந்து கொள்ளவும், தார்மீக நரகங்களை நேருக்கு நேராகச் சந்திக்கவும் நம்மை விஜயனின் நூல்கள் தூண்டுகின்றன எனலாம். அதற்காக தன் படைப்புகளில் விஜயன் தான் கண்டறிந்த முடிவுகளை படிப்போர்கள் மீது திணிப்பதில்லை. மாறாக, தான் எழுதும் விஷயங்கள் மீது உண்டாகும் சந்தேகங்களையும், தொடர்ச்சியாக வரப்போகிற சாத்தியங்களையும் விஜயன் வெறுமனே கோடிட்டுக் காட்டுவார். அவ்வளவுதான். மதம், ஆன்மீகம், வர்க்கம், பாலுணர்வு, கம்யூனிசம், அதிகாரம், அரசியல், முதலாளித்துவம், போர், மனித வாழ்க்கை - இப்படிப் பல விஷயங்களைப் பற்றியும் தன் படைப்புகளில் கேள்வி எழுப்புகிறார் விஜயன். அதனால் தானோ என்னவோ நமது காலகட்டத்தின் தீவிர தியானம் கொண்ட சிந்தனையாளராக விஜயன் மாறி வலம் வருகிறார்.
நம்முடைய காலத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும், அது அதிகார வர்க்கத்துடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. அமைப்பு என்ற குடையின் கீழ் வந்த மதம், அரசியல், முதலாளித்துவம் - எல்லாவற்றிற்கும் பின்னால் அதிகாரம் என்ற ஒன்று மறைந்திருக்கவே செய்கிறது. விஜயன் இந்த உண்மையைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இவர் எழுதிய அரசியல் கட்டுரைகளிலும் சரி... விஜயன் இந்த விஷயங்களை மிகவும் தெளிவாக அலசி ஆராய்ந்து உண்மை நிலவரம் என்னவென்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ‘தர்மபுராணம்’ உட்பட்ட நாவல்களிலும், ‘அரிம்பாற’, ‘எண்ணெய்’ போன்ற கதைகளிலும் விஜயன் ஒரு ஆழமான ஆராய்ச்சியே நடத்துகிறார் என்றுதான் கூறவேண்டும். மதத்தையும், ஆன்மீகத்தையும், அரசியலையும் அலசிப் பார்த்து, அவற்றுக்கிடையே இருக்கும் நுண்ணிய பிணைப்பைக் கண்டுபிடித்து ‘கஸாக்கின் இதிகாசம்’, ‘குருசாகரம்’, ‘பிரவாசகனின் வழி’ போன்ற கதைகளில் விஜயன் எழுதியிருப்பதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
அரசியல் சிந்தனைக்கு புதிய ஒரு மொழியை விஜயன் தந்தார் என்பது உண்மை. சாதாரணமாக அரசியல் கட்டுரையைப் பத்திரிகையில் எழுதும் ஒரு ‘காலம்னிஸ்ட்’ என்ற நிலையில் இருந்து பல மடங்கு முன்னால் போய் அதில் இடம் பெறும் செய்தியையே சுதந்திரமான வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த முயற்சிக்கும் விஜயனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பத்திரிகையாளரின் கூர்மையான பார்வையும், அரசியல் சிந்தனையாளரின் நீதி உணர்வும், தத்துவவாதியின் சுதந்திரமான நிலைப்பாடும் விஜயனின் படைப்புக்களில் நாம் தரிசிக்கலாம். அதிகார வர்க்கத்துடன் தொடர்புபடுத்தி தன் காலகட்டத்தின் அரசியல் விவகாரங்களை பார்க்கும் போக்கை ஆரம்ப காலத்திலிருந்து விஜயன் எழுதிய அரசியல் கட்டுரைகள் எல்லாவற்றிலும் நம்மால் தெளிவாகக் காண முடியும். அரசியல் பற்றிய ஒரு தெளிவான பார்வைக்கு விஜயனின் கட்டுரைகள் பாதை வகுத்துக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை. தான் சந்திக்க நேரும் பல நிகழ்ச்சிகளை உள்ளே நுழைந்து பார்த்து பின்னர் நமக்குப் புரியக்கூடிய ஒரு தெளிவான வடிவத்துடன் தன்னுடைய கட்டுரைகள், கதைகள் பலவற்றிலும் விஜயன் கூறவே செய்திருக்கிறார். ‘கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு தன்னுடைய பயத்தைப் பற்றி மட்டுமே சொல்லத் தெரியும்’ என்று விஜயன் எழுதுகிறார் (அந்தனும் அகலங்கள் காண்பவனும், 2001), மதமும் கம்யூனிசமும் முதலாளித்துவமும் உள்ளிட்ட எல்லா அதிகார அமைப்புகளையும், படர்ந்து எரியும் நெருப்புக்கு முன்னால் நின்று பார்க்கும் குழந்தையின் அரசியல் பார்வையை ‘இந்திரப்ரஸ்தம் (1985)’, சந்தேகியுடெ சம்வாதம் (1988)’, ‘கோஷ யாத்திரையில் தனியெ (1987)’, ‘ஒரு சிந்தூரப்பொட்டின்றெ ஓர்ம்ம (1987)’, ‘குறிப்புகள் (1988)’, ‘வர்க்க சமரம் ஸ்வத்வம் (1988)’ ‘ஹைந்தவனும் அதி ஹைந்தவனும் (1988)’, ‘அந்தனும் அகலங்கள் காண்பவனும் (2001)’ போன்ற தன்னுடைய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜயன்.
மதத்தையும், கம்யூனிசத்தைப் பற்றியும் விஜயன் எழுதிய கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் தான் இவருக்கு நிறைய விரோதிகள் உண்டானார்கள். இந்து மதத்தைப் பற்றி விஜயன் எழுத, தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘இந்துத்துவம்’என்ற வாதத்துடன் அதை ஒப்பிட்டு பலரும் நோக்க... இதனால் எத்தனையோ பிரச்னைகள்! தன்னுடைய நாவல்களில் பிற்காலத்தில் விஜயன் வெளிப்படுத்திய ஆன்மீக தரிசனத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு எழுந்த விமர்சனங்களை அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. 1980-இல் ஆர்.எஸ்.எஸ். ஸைப் பற்றி இவர் எழுதிய கட்டுரையில் விஜயன் சொல்கிறார்: ‘‘நாம் கொஞ்சம் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்து மதத்தின் புராதன அம்சத்தைப் பற்றிப் பேசுபவர்கள் நவீன கால கட்டத்திற்கேற்ற பார்வையுடனும் இந்த விஷயத்தை அணுக வேண்டும். அதுவே நல்ல ஒரு அம்சமும் கூட. கிறிஸ்தவ நம்பிக்கைகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் கீழடங்கி அமைப்பை அதன் போக்கில் செயல்பட விட்டதன் விளைவு - கிறிஸ்தவ மதமும், மேற்கத்திய நாடுகளும் நவீன கால கட்டத்திற்குள் சர்வ சாதாரணமாக நுழைந்து நடை போட முடிந்தது. அந்த மாதிரி சுதந்திரமாக நாம் விடாததன் விளைவு - இன்று நாம் ஈரானிலும் பாகிஸ்தானிலும் காணும் சோக நாடகங்கள். நாடகத்தின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பைப் பார்த்து திருப்திப்படுவதாக இருந்தால், பாலாசாஹிப் தேவரஸ்ஸைப் பின்பற்றினால் போதும். இந்தியா ஆர்யாவர்த்தமல்ல. ஏகப்பட்ட பரிணாமத் தளங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் இது. இந்து மதம் ஒரு மதமும் அல்ல. சைவ வைஷ்ணவ பிரிவுகளைக் கொண்ட ஒரு நாகரீகத்தின் அடையாளம் அது. அத்துடன், அதற்குள் பல கோத்திரங்கள்… இன்னும் பல இத்தியாதிகள். அதனால் கொமேனி பாணியில் இந்து ஃபண்டமென்டலிஸம் உண்டாக்க முயற்சி பண்ணுவது பெரிய விபத்துக்களுக்கு பாதை வகுத்துக் கொடுத்த மாதிரி இருக்கும்.’’ 1992-ல் விஜயன் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெளிவாகக் கூறுகிறார் : ‘‘இந்திரப்ரஸ்தத்தில் காவி உடை தரித்த சன்னியாசிகளைப் பார்க்க நான் பிரியப்படுகிறேன். அதே நேரத்தில் நம்முடைய அரசியல் கொடி மரத்தில் காவிக் கொடி பறந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அது நடக்கிற பாரதம் நான் பிறந்த நாடுமல்ல!’’ விஜயனின் கட்டுரைகள் எல்லாவற்றிலும் பொதுவாக நிலவும் விவேகத்தை மனப்பூர்வமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, அவரைப் பரவலாக விமர்சிக்கத் தொடங்குவார்கள். இதுவரை அதுதான் நடந்திருக்கிறது. இதே கதைதான் இந்திய இடதுசாரி விஷயத்திலும் கம்யூனிசம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நடந்தது. இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிற ஜனநாயகத்தையும், மனிதத் தன்மையையும் அதிகரித்து வருகிற ஸ்டாலினிஸ்ட் மனோபாவத்தையும் மிகவும் அதிகமாக எழுதிய அரசியல் சிந்தனையாளர் விஜயன்தான். அவர் மீது எதிர்ப்புகள் உண்டாக இதைவிட வேறு என்ன பெரிய காரணம் வேண்டும்?
தன்னுடைய அரசியல் சிந்தனையில் விஜயன் உயர்த்திப் பிடித்த விஷயங்கள் எவ்வளவோ. விஜயனின் இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு மக்கள் மத்தியில் ஒருவித வெளிச்சத்தை உண்டாக்கியது. கம்யூனிசமும் மதம் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தங்களுக்குள் வெளியே தெரியாமல் வைத்துக் கொண்டிருக்கும் முரண்பாடுகளையும், இடதுசாரி - வலதுசாரி கட்சிகளுக்குள் இருக்கும் மக்கள் விரோத போக்குகள், பதவி வெறி போன்றவற்றையும், மூன்றாம் உலக நாடுகளின் உண்மைத் தன்மையையும் தெளிவாக படிப்பவர்களுக்கு வரைந்து காட்டும் விஜயனின் அரசியல் சிந்தனை உண்டாக்கிய தாக்கம், கேரளத்தின் வளர்ந்து வரும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அது ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானதல்ல. இந்த சுதந்திரச் சிந்தனையின் விளைவாக பலரின் வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் தான் ஆளானது குறித்து விஜயன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நம்முடைய மக்களுக்கு இத்தகைய அரசியல் சிந்தனை அவசியம் கூட என்பதை பல தடவைகள் விஜயன் வலியுறுத்திக் கூறுகிறார். இலக்கியத்தை ஆக்கபூர்வமான - நல்ல அம்சங்கள் மூலம் செழிப்படையச் செய்திருக்கும் இந்த அணுகுமுறையால்தான் நாவலாசிரியர், கதாசிரியர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர் என்று பல விஜயன்களை ஒரே தளத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.