ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 5
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 6789
எழுத்துக்கள் மூலம் ஒரு தீர்த்த யாத்திரை
- எம். தாமஸ் மாத்யு
கேரளத்தில் ஒரு எழுத்தாளனின் சராசரி ஆயுள் காலம் பத்து வருடங்கள்தாம். சில நேரங்களில் அதிகபட்சம் பதினைந்து வருடங்கள் வரை அது நீளலாம். அவர்களின் இலக்கிய வாழ்க்கை இந்தக் கால அளவிற்குள் முடிந்து போனால் கூட, அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வாழ்க்கை முடிந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? கர்மமே கண் என வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஏதாவது பேசுவார்கள். சிலர் உரத்த குரலில் பேசுவார்கள். வேறு சிலர் இதையே அடக்கி வாசிப்பார்கள். இப்படிப்பட்ட வசைகளுக்கு ஆளானவர்கள் கேரளத்தில் நிறையவே இருக்கிறார்கள். பத்து வருடங்களிலோ, பதினைந்து வருடங்களிலோ இலக்கிய வாழ்க்கையிலிருந்து அஸ்தமனம் ஆனவர்கள், அதையும் தாண்டி ஒளி வீசிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துப் பல விதத்திலும் பேசுவார்கள். இத்தகைய வசைபாடலுக்கு ஆளானவர்களில் ஒருவர்தான் ஓ.வி.விஜயன்.
குமாரனாசானுக்குப் பிறகு இந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கு ஆளான வேறொரு எழுத்தாளர் இருப்பாரா என்பது சந்தேகமே. ‘கஸாக்கின் இதிகாசம்’ நூலைப் பற்றி எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன! எத்தனை நூல்கள் அதைப் பற்றிப் பிரசுரமாயின!
இது எதனால் நடந்தது? மலையாளிகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நாவல் ‘கஸாக்கின் இதிகாசம்’. அந்த நூல் எழுப்பிவிட்ட - வார்த்தையால் சொல்ல முடியாத உணர்வு அலைகள் எவ்வளவோ! உலகில் மாறி வரும் புதிய மாற்றங்களைத் தொட கொஞ்சம் கூட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தும் ஒரு குக்கிராமத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டி, அதைத் தான் சமைத்திருக்கும் பிரபஞ்சத்திற்குள் கொண்டு சென்ற ஒரு படைப்பாளியின் நிறைவைத்தான் நாம் ‘கஸாக்கின் இதிகாச’த்தில் தரிசித்தோம். நாம் அங்கு அகத்தில் காணும் உண்மைகளைத் தனித்தனியாகப் பிரித்து வைத்து அடுக்கி பார்த்தால் ஆயாசம்தான் நமக்குத் தோன்றும். ஒருபோதும் வாழ்க்கை ஓட்டத்தின் நிகழ்ச்சிகளில் தன்னைச் சங்கமித்துக் கொள்ள விரும்பாத அப்புக்கிளி இந்த இதிகாச உலகத்தின் ஒரு தூண் என்று கூட கூறலாம். நம்பிக்கையின்மைக்குக் கீழே பட்டுப் போகாமல் கிடக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சமூக அமைப்பும், அதிகார அமைப்புகளும்... எல்லாமே ‘கஸாக்கின் இதிகாச’த்தில் உயிரோட்டத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றன. ‘இருந்தாலும் நீ என்னை மறந்திட்டியே, தங்கச்சி!’ என்று அழுகையினூடே உகாதியில் வழிபிரிந்து போனவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பின் பரிணாமத்தில் மெய்மறந்து நிற்கிறபோது... ‘கஸாக்’கின் கதை மாந்தர்களின் துக்கத்தையும், சந்தோஷத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடன் நம்மையும் இணைத்துக் கொள்ளும் அற்புத நிகழ்ச்சி நம்மையும் அறியாமலே நிலவவும் செய்கிறது. கூமன்காவில் ரவியோடு சேர்ந்து நாமும் பஸ்ஸை விட்டு இறங்குகிறபோது, விஜயன் மந்திரங்களை உச்சரிப்பது போல, பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ‘கஸாக்கின் இதிகாச’த்தை ஒரு காவியத்தின் உயரத்திற்கு இழுத்துச் சென்று சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கிறது. கலையின் மந்திர சக்தியை நாம் காணும் புதிய உலகத்தில் உணர்கிறோம்.
பலவித விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடம் தந்து, வெளிவந்த கால கட்டத்தில் பரவலாக எல்லோராலும் பேசப்பட்ட நாவல் ஓ.வி.விஜயனின் ‘தர்மபுராணம்’. ஆபாசங்களின் மொத்த உருவமாக மாறி மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அதிகார பீடத்தையும், அதில் நாம் பங்கு சேர்கிறபோது, நாம் சந்திக்க நேரிடுகிற பிரச்னைகளையும் கேளிக்கைக்கு இடமாகும் பல விஷயங்களையும் ‘தர்ம புராண’த்தில் உயிரோட்டத்துடன் விளக்கியிருந்தார் விஜயன். இப்புதினத்தில் விஜயன் காட்டியிருந்த வேகத்தையும், உண்மையின் பறைசாற்றலையும் பார்த்து - சொல்லப் போனால் - விமர்சகர்களே அஞ்சினார்கள். வைக்கம் முஹம்மது பஷீரின் ‘சப்தங்கள்’எந்த அளவுக்கு நடுக்கத்தை விமர்சகர்கள் மத்தியில் உண்டாக்கியதோ அதைவிட நூறு மடங்கு அதிக நடுக்கத்தையும், ஆச்சரியத்தையும் ‘தர்ம புராணம்’ உண்டாக்கியது என்பது சத்தியமான உண்மை. இத்தகைய கலைப்படைப்புகள் இந்தியாவைப் பொறுத்தவரை சாதாரணமாக நாம் காணக்கூடியது அல்ல. நமக்கு அதிகம் பழக்கமில்லாத ஒன்றே இது. கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் மட்டும் இந்த அரசியல் பின்னணிக் கதையை விஜயன் கொண்டு செல்லாமல், அங்கத நடையில் இதை முழுக்க முழுக்க எழுதியிருந்தார். இதுதான் ‘தர்மபுராண’த்தின் தனித்துவம். இருட்டுக்கு நடுவில் மறைந்து கிடக்கும் உண்மைகளை நம்மால் பார்க்க முடியாமல் இருந்தால் ‘இந்தா பார்த்துக்கொள்’ என்று சொல்லி, நம்மை தெளிவான கண்களால் பார்க்க வைத்தார் விஜயன் என்று கூடச் சொல்லலாம்.
நாட்டில் உள்ள அவலங்களையும், அழுக்குகளையும், ஆபாசங்களையும், பொய் - பித்தலாட்டங்களையும் கொஞ்சம் அதிகமாகவே எழுதி விட்டதாலோ என்னவோ, தன் பேனாவிற்கு ஒரு கங்கா ஸ்நானம் வேண்டும் என்று விஜயனே நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதன் விளைவு - அவரின் ‘மதுரம் காயதி’. தன்னில் நிறைந்து ததும்பும் ஆத்மீக அனுபவத்தை - ஒரு சங்கீதம் இழையோடும் இனிய மொழியில் விஜயன் இந்நாவலில் வெளிப்படுத்தும் அழகு இருக்கிறதே! அப்பப்பா... அதை வார்த்தைகளால் எப்படிப் பாராட்டுவது! பிரபஞ்சத்தையே ஒரே ஒரு சங்கீத சிற்பமாகக் கொண்டு வர விழையும் அவரின் உள் மன எண்ணத்தை நம்மால் உணர முடிகிறது.
தலைமுறை தலைமுறையாக சாபம் அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தின் பின்னணியில் - அந்தக் குடும்பத்தில் நேரும் படிப்படியான மாற்றங்களை - வரலாற்றுப் பார்வையுடன் நாவலில் சித்தரிக்கும் அதே வேளையில் உலகம் எங்கே இவ்வளவு வேகத்தில் பாய்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் விஜயன் நமக்குக் காட்டாமல் இல்லை. எவ்வளவு பெரிய வெற்றிக்கு அடியிலும் மறைந்திருக்கும் ஒரு உண்மையை மனிதனால் பகுத்தறிய முடிகிறதா? அவன் அதை உணர்கிறானா? எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, தான் ஒன்றுமே இல்லாத, ஒரு கண்ணுக்குத் தெரியாத துகள் என்பதை உணர்ந்து மனிதன் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தருணம் இருக்கிறதா? இவ்வாறு ஓ.வி.விஜயன் அளவுக்கு தன் படைப்பில் கனமான விஷயங்களை வேறொரு மலையாள எழுத்தாளர் கையாண்டிருக்கிறாரா? இல்லை என்பதுதான் பதில்.
இதுதான் ஓ.வி.விஜயன் தான் வாழும் உலகமும் காலமும் எப்படி இங்கு இந்த நிமிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறது என்பதைக் கூர்மையான வரலாற்றுப் பார்வையுடன் அறிந்து அதை தன் எழுத்தின் மூலம் நமக்கு அவர் தெளிவாகக் காட்டுகிறார். அந்த எழுத்துக்களில் கேலி இருக்கிறது, கிண்டல் இருக்கிறது, மென்மையான மனித அன்பின் குளுமை இருக்கிறது, காலம் காலமாகப் பரிணமித்து வரும் அறிவின் விசாலமுண்டு. இவற்றையும் தாண்டி, எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விடவில்லை என்ற நம்பிக்கையும், பிரகாசமும் அதில் இருக்கிறது.