ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 7
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 6789
என் அண்ணன் ஓ.வி.விஜயன்
- ஓ.வி. உஷா
ஒரு எழுத்தாளராக இருப்பது என்பது எவ்வளவு இக்கட்டான ஒன்று என்பதை எப்போதாவது என் அண்ணன் ஓ.வி.விஜயனைப் பற்றி எழுத வேண்டும் என்ற சூழ்நிலை உண்டாகிறபோது நான் உணர்கிறேன். அந்த மாதிரியான நேரங்களில் எனக்கே மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். குடும்பம் என்று வருகிறபோது விஜயன் என்னுடைய அண்ணனாக இருக்கலாம். ஆனால், அவரின் எழுத்துக்களைப் படிக்கிற வாசகி என்று வருகிறபோது, என்னைவிட நூறு பேர்க்காவது என் சகோதரருடன் நெருங்கிய உறவு இருக்கும். ‘கஸாக்கின் இதிகாச’த்தைப் பல தடவை திரும்பத் திரும்ப படித்தவர்களையும், அந்நாவலின் பல பகுதிகளை மனப்பாடம் மாதிரி ஒப்பிக்கக் கூடியவர்களையும் நானே பார்த்திருக்கிறேன். இலக்கியத்தின் மீது தீவிர காதல் கொண்டவளும், இலக்கிய மாணவியுமாக நான் இருந்தாலும், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பட்டியலில் முன் வரிசையில் என்னுடைய அண்ணன் பெயர் இருந்தாலும் எனக்கு அவரின் படைப்புகள் மனைப்பாடமாகவெல்லாம் தெரியாது. என் சகோதரரின் கார்ட்டூன்கள் ஒவ்வொன்றையும் கொஞ்சம் கூட மறக்காமல் பசுமையாக ஞாபகத்தில் வைத்திருக்கிற பலரையும் நான் பார்த்திருக்கிறேன். என் அண்ணனின் திறமையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. அரசியல் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது என் சகோதரர் கார்ட்டூன் வரைவதை நிறுத்தி நீண்ட காலத்திற்குப் பிறகுதான். அதாவது - மிக சமீபத்தில். அதனால்தான் சொல்கிறேன் என் அண்ணனின் அரசியல் கட்டுரைகளைப் பற்றிக் கருத்து கூறும் அளவிற்கு எனக்குத் திறமை போதாது என்று. இருந்தாலும், அண்ணனைப் பற்றி எழுதுகிற போது, அண்ணனுக்கும் அவரின் வாசகர்களுக்கும் நியாயமானவளாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நான் ஞாபகத்தில் கொண்டிருக்கிறேன்.
இருந்தாலும் சொல்கிறேன்- அண்ணனுக்கு எழுத்தச்சன் விருது தேடி வந்திருப்பது கொஞ்சம் கூட எதிர்பாத்திராத ஒரு சூழ்நிலையில்தான் என்பதை இங்கு ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த விருது கிடைத்ததற்காக அண்ணன் மிகவும் சந்தோஷம் கொண்டார். என்றாலும், இந்தச் செய்தியை அறிந்தபோது அவர் இலேசாகச் சிரித்தார். அவ்வளவுதான். வீடுதேடி வந்து கூடிய பத்திரிகை நண்பர்களைப் பார்த்து ‘ஐ ஆம் வெரி ஹேப்பி’ என்று சொன்னார். அமைச்சரிடம் ‘நான் இதற்குத் தகுதியானவன்தானா?’ என்று எழுதிக் காண்பித்தார். (வாய் திறந்து பேசுவதில் அண்ணனுக்கு பிரச்னை இருக்கிறது.)
ஒரு எழுத்தாளன் என்ற முறையில் தன்னுடைய இடம் எது என்பதை அண்ணன் மனதில் அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘இந்த விருதுக்கு நான் தகுதி உள்ளவன்தானா?’ என்று தன்னைக் குறித்து அவருக்கு சந்தேகம் வந்திருக்குமா? இப்படியொரு கேள்வியை அவரைக் கேட்க வைத்த உணர்வுதான் எது? எது எப்படியோ, இந்த விருது கிடைத்ததில் அண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியே.
விருதுகள் பொதுவாக மிகவும் தாமதமாகத்தான் அண்ணனைத் தேடி வந்திருக்கின்றனவா? சிலர் அப்படி ஒரு அபிப்ராயம் சொல்லி, நான் கேட்டிருக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், வாழும் காலத்தில் நூல்கள் பிரசுரம் செய்யப்படாமலும் யாருக்கும் தெரியாமலே கூட பலரும் இறந்து போயிருக்கிறார்கள். இப்படி மண்ணுக்குள் மறைந்துபோன எத்தனையோ பெரிய எழுத்தாளர்கள் இலக்கிய வரலாற்றில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறபோது, அண்ணன் ஒரு பாக்யவான் என்றுதான் சொல்லவேண்டும். ‘கஸாக்கின் இதிகாசம்’ இருபத்தெட்டாவது பதிப்பை எட்டியிருக்கிறது. அண்ணனின் மற்ற நூல்களும் புதிய பதிப்பில் இறங்கி இருக்கின்றன. விருதுகள் வந்து சேர்வதற்கு முன்பே, இலக்கிய அபிமானிகளும், வாசகர்களும் அண்ணனை இதயபூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தன் மேல் அளவற்ற அன்பும், மதிப்பும் வைத்திருக்கிற பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருப்பதை விட ஒரு எழுத்தாளனுக்குப் பெரிதாக என்ன வேண்டும்?
விருதுகளைப் பற்றிய சிந்தனை அண்ணனை ஒருபோதும் தீண்டியதை நான் பார்த்ததில்லை. இப்போது திரும்பிப் பார்த்தால், எத்தனையோ பெரிய விருதுகள் அவருக்குக் கிடைக்கவே செய்திருக்கின்றன. முதன்முதலாகக் கிடைத்த விருது பல வருடங்களுக்கு முன்பே அண்ணனைத் தேடி வந்தது. அது டில்லியில் இருந்தபோது அண்ணனுக்குக் கிடைத்தது. சக்கரியா, எம். முகுந்தன் உள்ளிட்ட டில்லியில் இருந்த மலையாள எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து அண்ணனுக்கு வெள்ளி முலாம் பூசிய ஒரு சிங்கத்தின் உருவத்தைப் பரிசாகத் தந்தார்கள். அதை வாங்குகிறபோது அண்ணனுடன் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அப்போது இல்லை. ‘கஸாக்கின் இதிகாச’த்திற்காகக் கிடைத்த அந்தப் பரிசை அண்ணன் மட்டும்தான் தனியே வீட்டிற்குக் கொண்டு வந்தார். அடுத்து அவருக்குக் கிடைத்தது ‘ஓடக்குழல்’ விருது. அதுவும் ‘கஸாக்கின் இதிகாச’த்திற்குத்தான். விருதினைப் பெறுவதற்காக அண்ணன் டில்லியில் இருந்து கேரளத்திற்கு வந்திருந்தார். அப்போதும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அவருடன் இல்லை.
‘ஓடக்குழல்’ விருதிற்குப் பிறகு, பதினேழு வருடங்கள் கழித்து, அண்ணனுக்கு இன்னொரு விருது கிடைத்தது. ‘குரு சாகரம்’ என்ற நாவலுக்காகக் கிடைத்த விருது அது. 1990-இல் மத்திய - மாநில சாஹித்ய அகாடெமி விருதுகளும் 1991-இல் வயலார் விருதும் ‘குரு சாகரம்’ நாவலுக்குக் கிடைத்தன. மத்திய அரசாங்கத்தின் விருது கிடைத்தபோது, அண்ணன் டில்லியில் இருந்தார். மாநில விருதை அண்ணன் சார்பில் திருச்சூர் சாஹித்ய அகாடெமி ஹாலில் வைத்து நான்தான் வாங்கினேன். 1992-இல் ‘கஸாக்கின் இதிகாச’த்திற்கு ‘முட்டத்து வர்க்கி விருது’ கிடைத்தது. சங்ஙனாசேரி எஸ். பி. கல்லூரியில் அதற்கான விழா நடந்தது. 1990-ல் எம்.பி. போள் விருது, ‘தலைமுறைகள்’ நூலுக்குக் கிடைத்தது. அதற்கான விழா கோட்டயத்தில் நடைபெற்றது. 2000-இல் சமஸ்த கேரள சாஹித்ய பரிஷத் விருது அண்ணனைத் தேடி வந்தது. இந்த வருடம் சாஹித்ய அகாடெமி ஃபெல்லோஷிப், டோம்யாஸ் விருது போன்றவை. தொடர்ந்து இப்போது எழுத்தச்சன் விருது அண்ணனைத் தேடி வந்திருக்கிறது. சமூகத்தின் அங்கீகாரங்கள் என்ற முறையில் எல்லா விருதுகளும் கிடைத்திருப்பது குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இருந்தாலும் எழுத்தச்சனின் பெயரில் விருது கிடைத்திருப்பது இன்னும் ஒரு படி அதிக சந்தோஷத்தை எங்களுக்குத் தந்திருக்கிறது. ஓ.வி.விஜயன் என்ற இந்த எழுத்தாளரை கேரளம் தன்னுடன் பிணைத்துக் கொண்டுவிட்டது என்றுதான் இதற்கு அர்த்தம். அதற்கு அடையாளம்தான் தொடர்ந்து அண்ணனுக்குக் கிடைத்து வந்திருக்கும் இந்தப் பரிசுகளும், விருதுகளும்.