நீ எங்கே? என் அன்பே ! - Page 16
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by chitralekha
- Hits: 8686
“நீ இங்கே எவ்வளவு நாளா வேலை பார்க்கற?” வேலம்மாவைப் பார்த்து குணாளன் கேட்டார்.
“நாலு வருஷமா வேலை பார்க்கறேன்ங்க. இப்ப எனக்குக் கொஞ்சம் தள்ளாமை. அதான் எம் பொண்ணையும் கூட்டிட்டு வந்துடறேன். கூட மாட ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு.”
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும். சரியா?”
“சரிங்க ஐயா.”
“நிரஞ்சன் ஊருக்கு கார்ல புறப்பட்டுப் போனதை நீ பார்த்தியா?”
“நான் சமையல் கட்டுக்குள்ள இருந்தேனுங்க. அவர் கூட வேற யாரும் போனாங்களா இல்லையான்னு தெரியாதுங்க.”
“நீ இங்கேயே தங்கி வேலை பார்க்கறியா? இல்லை, உன் வீட்டுக்குப் போயிட்டு வருவியா?”
“வீட்டுக்குப் போயிட்டுதாங்க வருவேன். காலையில ஆறு மணிக்கெல்லாம் வந்துட்டு ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். இப்ப பெரியம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சோமு ஐயா இங்கேயே தங்கிக்கச் சொன்னார். அதனால இங்கேயே தங்கறேன்.”
குணாளன் கேட்பதையும், வேலம்மா பதில் சொல்வதையும் மாறி மாறி பார்த்து நகத்தைக் கடித்துக் கொண்டு நின்ற லஷ்மியிடம் திரும்பினார் குணாளன்.
“நிரஞ்சனை கடைசியா நீ எப்போ பார்த்த?” லஷ்மி தலையை சாய்த்து யோசித்தாள்.
“அவர் ரூமை பெருக்கி அள்ளப் போனேன்.”
“அப்போ அவர் கூட வேற யாரும் இருந்தாங்களா?”
“யாருமே இல்லை. ஐயா மட்டும் பாட்டு கேட்டுகிட்டு இருந்தார்.”
“நீங்க ரெண்டு பேரும் போகலாம். மிஸ்டர் சோமு. நிரஞ்சனோட பெரியம்மாவைப் பார்க்கணும்.”
“வாங்க சார்.” சோமு பெரியம்மா படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். குணாளனைத் தொடர்ந்தான் செபாஸ்டியன்.
கவலையுடன், தூக்க மருந்தின் சோர்வும் சேர்ந்துகொள்ள மிகவும் அயர்ச்சியான முகத்துடன் தளர்ந்திருந்தாள் பெரியம்மா.
“அம்மா, உங்க மகன் நிரஞ்சனைக் காணோம்னு சோமு புகார் குடுத்திருக்கார். பணத்துக்காக யாராவது அவரைக் கடத்திட்டுப் போயிருப்பாங்களோன்னு நாங்க சந்தேகப்படறோம். யாராவது உங்களைப் போன்லயோ, லெட்டர் போட்டோ மிரட்டி பணம் கேட்டாங்களா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க.”
“நாங்க போலீஸ்ங்கறதுனால பயப்படாதீங்க. உண்மையைச் சொன்னாத்தான் உங்க மகனை சீக்கிரமாக் கண்டுபிடிக்க முடியும்.”
“பணம் என்னய்யா பெரிய பணம்? அதை எவனாவது கேட்டுத் தொலைச்சாக் கூட குடுத்துட்டு என் பையனை மீட்டுக்கலாம். அப்படியும் கூட ஒண்ணும் இல்லையே. ஒண்ணுமே புரியாம கண்ணைக் கட்டி காட்டில விட்டாப்ல இருக்கய்யா” பெரியம்மா அழ ஆரம்பித்தாள்.
“சரிம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க வீடு முழுக்க சோதனை போடணும்.”
குணாளன் நகர்ந்தார். சோமு ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்றான்.
கான்ஸ்டபிள்களைக் கூப்பிட்டான் செபாஸ்டியன்.
“மிரட்டல் கடிதம் எங்கயாவது சிக்குதான்னு பாருங்க.”
“எஸ் சார்.” கான்ஸ்டபிள்கள் நகர்ந்தனர்.
“இதுதான் சார் நிரஞ்சனோட அறை. சோமு காட்டினான்.”
குணாளன், செபாஸ்டியன் இருவரும் உள்ளே சென்றனர். நான்கு பேர் தாராளமாக படுத்துக் கொள்ளக் கூடிய பெரிய கட்டில், அதன் மீது சொகுசான மெத்தை, ஸ்டீரியோ, டிஸ்க்பிளேயர், காசெட் பிளேயர், டி.வி. வீடியோ அனைத்தும் இணைக்கப்பட்டிருந்த சாதனம் கட்டிலின் மிக அருகே இருந்தது. ஏராளமாக வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த படுக்கை அறையைத் தாண்டியதும் ஒரு சிறு அறை. அலங்கரித்துக் கொள்ளும் அறை. ஆளுயரக் கண்ணாடிகள். சுவரில் பதித்த அலமாரிகள். வண்ண விளக்குகள். அவற்றையே ஒட்டி நவீன குளியலறை.
செபாஸ்டியன் குளியலறைக்குள் சென்று பார்த்துவிட்டு அடுத்த அறைக்கு வந்தான். அங்கே குணாளன் கையில் ஒரு டைரியையும், சில புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
“செபாஸ்டியன், இந்த டைரியில ஒரு அட்ரஸ் இருக்கு. அட்ரஸ்க்கு உரிய பேர் சுனிதான்னு எழுதி இருக்கு.”
“பெண்ணோட அட்ரஸா?”
“ஆமா, இங்க பாருங்க. போட்டோ கூட இருக்கு. இவர் கூட சினிமாவுல நடிக்கற பொண்ணா இருக்குமோ? நான் சினிமா அதிகம் பார்க்கறதில்லை. அதனால எனக்குத் தெரியலை.”
“இந்தப் பொண்ணு சினிமாவுல ஆக்ட் பண்ணதில்லை சார்.”
“அப்போ? இது எப்படி நிரஞ்சன்கிட்ட வந்திருக்க முடியும்?”
“அதுதான் சார் தெரியலை. சோமுகிட்ட கேட்டுப் பார்ப்போம்.”
“இதைத் தவிர வேறு தடயம் எதுவும் கிடைக்கலையா சார்?”
“இல்லை. வாங்க போய் சோமுவை விசாரிப்போம்.”
இருவரும் வெளியில் வந்தார்கள். சோமு அறைக்கு வெளியே காத்திருந்தான்.
அவன் அவசர அவசரமாகப் போய் நின்றது போல் இருந்தது. இத்தனை நேரம் ஒட்டுக் கேட்டிருப்பானோ என்ற சந்தேகம் குணாளனுக்கு ஏற்பட்டது.
“மிஸ்டர் சோமு, இந்த போட்டோவுல இருக்கற பொண்ணு யார்?”
“இது... இது... சார்...”
“லுக் மிஸ்டர், போலீஸ்கிட்ட எதையும் மறைக்க நினைக்காதீங்க.”
“சார்... நிரஞ்சனுக்கு பொண்ணுங்கன்னா கொஞ்சம் சபல புத்தி உண்டு. படப்பிடிப்பு இல்லாத நாள்கள்ல வெளியூருக்கு என்னைத் தவிர்த்துவிட்டுப் போறதுக்குக் காரணமே இதுதான். இதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. நிரஞ்சன் என்கிட்ட இதுபத்தின மேட்டர் பேசவும் மாட்டார்.”
“அப்போ, அன்னிக்கு மகாபலிபுரம் போறதா சொல்லிட்டுப் போனதும் இதுக்காகத்தானா?”
“அது எனக்குத் தெரியாது சார். மூணு மாசம் தொடர்ந்து வொர்க் பண்ணினார். அதனால ரொம்ப மென்ட்டல் டென்ஷனா இருக்கு. உடம்புக்கும் ரெஸ்ட் வேணும்னுதான் என்கிட்ட சொன்னார்.”
“மகாபலிபுரம் போறப்ப எத்தனை நாள்ல திரும்பறதா சொல்லிட்டுப் போனார்?”
“இருபத்தியெட்டாந்தேதி ஷூட்டிங் இருக்குன்னு அவருக்குத் தெரியும். முந்தின நாளே வந்துடறதா உறுதியா சொல்லிட்டுத்தான் போனார்.”
செபாஸ்டியன் கோபமாக குறுக்கிட்டான். “ஏன் சோமு, புகார் குடுத்தப்பவும் அதுக்கப்புறமும் நிரஞ்சனோட இருந்த விளையாட்டு புத்தியை என்கிட்ட ஏன் சொல்லலை? தகவல்களை மறைச்சா அவரை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?”
“சார் அது வந்து... நிரஞ்சன் ஒரு டாப் ஸ்டார். தமிழ் நாட்டில் ரொம்ப பிரபலமானவர். அவரைப் பத்தி உள்ள இமேஜ் ஸ்பாயில் ஆயிடுமேன்னுதான் இந்த விஷயத்தை... உங்க கிட்ட மறைச்சட்டேன். ஐ அம் சாரி சார்.”
“வேற எந்த விஷயத்தையும் மறைச்சிருந்தா இப்பவே சொல்லிடுங்க.”
குணாளனின் குரலில் கடுமை கலந்திருந்தது.
“மறைக்க மாட்டேன் சார். எங்க நிரஞ்சனை சீக்கிரமா கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க சார். ப்ளீஸ்.” சோமுவின் பேச்சில் ஒரு பாவ்லா இருப்பதைப் போல தோன்றியது குணாளனுக்கு.
“செபாஸ்டியன், நிரஞ்சனோட போட்டோ ஒண்ணு வாங்கிட்டு வாங்க. தோட்டக்காரன் கிட்ட ஏதாவது விஷயம் சிக்குதான்னு பார்க்கலாம். சோமு, தோட்டக்காரனைக் கூப்பிடுங்க.”
தோட்டக்காரன் தலையில் கட்டி இருந்த முண்டாசை அவிழ்த்தபடியே வந்தான். போலீஸ் என்ற பயத்தில் அதிகமாக குனிந்து கும்பிடு போட்டான்.