பேர் சொல்லும் பிள்ளை - Page 29
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8159
38
டாக்டர் கனகதுரையின் அறைக்குள் பிரசாத் நுழைந்தான்.
"ஹலோ, பிரசாத் வாங்க வாங்க."
"என்ன டாக்டர் இவ்வளவு ஃப்ரீயா இருக்கீங்க! பேஷண்ட்ஸ் யாருமே இல்லையே?" பிரசாத் கேட்டதும் கனகதுரை சிரித்தார்.
"கூட்டமே இல்லாததுனால மனோதத்துவ ரீதியா பாதிக்கப் படாதவங்களே கிடையாதுன்னு அர்த்தம் இல்லை பிரசாத். உடல்ரீதியா வியாதி வந்துட்டா, உடனே டாக்டர்கிட்ட போற இந்த மக்கள், மனநலம் பாதிக்கப்பட்டது தெரிஞ்சாலும் அலட்சியமா இருந்துடறாங்க. தங்களோட மனநிலை பாதிப்புனாலதான் குடும்பத்துல பிரச்சனைகள்ன்னு தெரிஞ்சாலும் கூட சைக்யாட்ரிஸ்டை பார்க்க வர்றவங்க ரொம்ப குறைவு. 'தங்களை பைத்தியம்னு மத்தவங்க நினைச்சுடுவாங்களே’ங்கற தவறான கருத்து பரவலா இருக்கு. ஆனா இப்பக் கொஞ்சம் எஜுகேட் ஆகி இருக்காங்க. அதெல்லாம் சரி. நீங்க என்ன திடீர்னு என்னோட க்ளினிக்குக்கு வந்திருக்கீங்க? பிஸியான தொழிலதிபராச்சே?"
"அ...அ… அது வந்து டாக்டர்... என்னோட பெர்ஸனல் விஷயமா உங்ககிட்ட..."
மேற்கொண்டு எதுவும் பேசாமல் தயக்கமாக தவிப்புடன் காணப்பட்ட பிரசாத்தை கூர்ந்து கவனித்தார் டாக்டர் கனகதுரை.
"என்ன விஷயம் பிரசாத்? ஏன் இந்த தயக்கம்? நான் என்ன உங்களுக்கு அன்னியனா? பல வருஷ கால நண்பன்தானே? சொல்லுங்க. எனி ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க பிரசாத்."
"டாக்டர்.. நான்.. எனக்கு மனசே சரி இல்லை டாக்டர்."
"பிஸினஸ் பிராப்ளமா?"
"இல்லை டாக்டர்..."
"தொழில் போட்டியினால பிரச்சனையா?"
"இல்லை டாக்டர்..."
"பின்னே குடும்பத்துல, ஐ மீன்... உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஏதாவது..."
"சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்லை டாக்டர். எங்க அப்பா... அவர், எனக்கு ஆண் குழந்தை பிறக்கலைன்னா அவரோட சொத்துக்கள் எதுவுமே எனக்குக் கிடையாதுன்னு சொல்லி இருக்கார். எனக்கும் ரெண்டாவதா பிறந்ததும் பொண்ணாயிடுச்சு. அதனால அவர் சொன்னபடி எனக்கு எதுவுமே எழுதி வைக்காம இறந்தும் போயிட்டார்."
"உங்க அப்பா இறந்துட்டாரா? எனக்கு நீங்க சொல்லவே இல்லியே?"
"த்சு... மனசுக்குள்ள ஏகப்பட்ட உளைச்சல். அதான் உங்களுக்கு சொல்லாம விட்டுப்போச்சு..."
"உயில் எழுதி வச்சிருக்காரா?"
"ஆமா டாக்டர். எல்லாம் முடிஞ்சது. அவர் எனக்குக் கல்யாணம் ஆனதில இருந்து இதையே சொல்லிக்கிட்டு இருந்தார். சொன்னபடியே செஞ்சும் முடிச்சுட்டாரு. அவரோட இந்த பிடிவாதத்துனால...." மேலே பேசத் தயங்கினான் பிரசாத்.
"சொல்லுங்க பிரசாத். என்ன விஷயம்?"
"அவரோட வறட்டுப் பிடிவாதத்துனால என் மனநிலை பாதிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன் டாக்டர்."
"ஏன்? எதை வச்சு நீங்களாவே இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தீங்க?"
"வந்து.. அது வந்து டாக்டர்.. ராத்திரி நேரத்துல தூக்கமே வர்றது இல்லை. படுக்கையில இருந்து எழுந்து போய் ஹால் சோபாவில உட்கார்ந்துடறேன். அந்த சமயத்துல என் மனசுல அலை அலையா நினைவுகள் மோதுது. என் குழந்தை கவிதா மேல நான் உயிரையே வச்சிருக்கேன். ஆனா இந்த மாதிரி சமயத்துல மட்டும் எனக்கு அந்த பிஞ்சுக் குழந்தை மேல ரொம்ப வெறுப்பா இருக்கு. நானா என் குழந்தையை இப்படி வெறுக்கறேன்னு எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு. அதிர்ச்சியாவும் இருக்கு. சில சமயம் பயமாவும் இருக்கு டாக்டர். ஏன் டாக்டர் எனக்கு இப்படி?"
"உங்களை மீறி, உங்களுக்குள்ளேயே தனியா ஒரு ட்ராக் அதாவது நினைவலைகள் போய்க்கிட்டிருக்கு. இதுக்கு சப்-கான்ஷியஸ் மைண்ட்ன்னு (Subconscious mind) சொல்றதுண்டு. உங்களோட சப் கான்ஷியஸ் மைண்ட்தான் உங்க இயல்புக்கு மாறான விஷயங்களை சிந்திக்க வைக்குது."
"இதுக்கு என்ன காரணம் டாக்டர்?"
"ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பிரச்சனையா எடுத்துக்கிட்டு அதைப் பத்தியே யோசிச்சிக்கிட்டிருந்தா, சில பேருக்கு இப்படி ஆகறது உண்டு. இப்படி தங்களோட இயற்கையான குணத்துக்கு மாறுபட்ட சிந்தனைகள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். இதை கவனிக்காம அலட்சியமா விட்டுட்டா பாதிப்புகள் அதிகமா இருக்கும். நல்ல வேளை, நீங்க என்கிட்ட வந்திருக்கீங்க.."
"டாக்டர், எந்த பாதிப்பும் ஆகறதுக்குள்ள என்னை இந்த பிரச்சனையில இருந்து மீட்டுடுங்க டாக்டர் ப்ளீஸ்."
"கவலைப்படாதீங்க பிரசாத். சரி பண்ணிடலாம். உங்க அப்பாவோட சொத்துக்கள் உங்களுக்குக் கிடைக்காததுனால ஏமாற்றம் அடைஞ்சிருக்கீங்க. இந்த ஏமாற்றத்துக்குக் காரணம் உங்க மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அதோட பிரதிபலிப்புதான் உங்க சப்-கான்ஷியஸ் மைண்ட் தேவையற்ற சிந்தனைகளை உருவாக்குது."
"நீங்க சொல்றது கரெக்ட் டாக்டர். என் மனசை அப்பிடியே ஸ்கேன் பண்ணிப் பார்த்தது மாதிரி சொல்றீங்களே. உண்மையிலேயே எனக்கு சொத்துக்கள் இல்லாம பண்ணிட்ட எங்க அப்பா மேலயும், அதுக்குக் காரணமான என் குழந்தை மேலயும் எனக்குக் கோபம் அதிகமா வருது. ஆனா நான் என் குழந்தை மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன். சில சமயங்கள்ல மட்டும்தான் இப்படி ஆகுது டாக்டர். என்னோட இந்த மனநிலையில இருந்து, என்னை நீங்கதான் டாக்டர் காப்பாத்தணும். என் குழந்தையை நான் வெறுக்கக்கூடாது. இந்த பிரச்சனையில் இருந்து நான் விடுபடணும். உங்களைத்தான் டாக்டர் நம்பி வந்திருக்கேன்."
"நான் என்னோட ட்ரீட்மெண்ட்டை நம்பறேன். நிச்சயமா என்னோட ட்ரீட்மெண்ட் உங்களை குணமாக்கிடும். மாத்திரைகள் எழுதித் தரேன். மூணு மாசம் தொடர்ந்து சாப்பிடுங்க. ராத்திரியில தூக்கம் நல்லா வரும். சப் கான்ஷியஸ் மைண்ட் தோற்றுவிக்கிற மாறுபட்ட எண்ணங்கள் நாளடைவில் மறையும். தியானம் பண்ணுங்க. தியானம் பண்ணத் தெரியாதுன்னா பழகிக்கோங்க. யோகா கூட ரொம்ப நல்லது. ஒரு மாசம் கழிச்சு மறுபடியும் வாங்க. இடைப்பட்ட நேரத்துல எந்த ப்ராப்ளம் வந்தாலும் உடனே இங்கே வந்து என்னைப் பாருங்க" பேசிக் கொண்டே மாத்திரைகளின் பெயரை எழுதி பிரசாத்திடம் கொடுத்தார் டாக்டர்.
"தாங்க் யூ டாக்டர். நான் கிளம்பறேன்."
"ஓ.கே. விஷ் யூ ஆல் த பெஸ்ட்."
அவனுக்குக் கை குலுக்கி விடை கொடுத்தனுப்பினார் டாக்டர்.
39
"இதுதான் இன்ஸ்பெக்டர் நடந்தது. இந்த மருந்துச் சீட்டு நான் பிரசாத்துக்கு எழுதிக் குடுத்ததுதான். அவர் இந்த மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிட்டாரா என்னன்னு தெரியலை. சாப்பிட்டிருந்தா இந்த அளவுக்கு அவருடைய மனநிலை பாதிச்சிருக்காது. மறுபடியும் அவர் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை."
"அப்படின்னா, பிரசாத் தன்னோட சுய உணர்வுல திட்டமிட்டு குழந்தையைக் கொலை செய்யலைன்னு சொல்றீங்களா டாக்டர்?" இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் கேட்டதும் ஆணித்தரமாக ஆமோதித்தார் டாக்டர்.
"யெஸ் இன்ஸ்பெக்டர். பிரசாத், அவரோட குழந்தையை தன் உணர்வு இல்லாத சப்-கான்ஷியஸ் மைண்ட்லதான் கொலை செஞ்சிருக்கார். இதை உறுதியா என்னால சொல்ல முடியும்."