பேர் சொல்லும் பிள்ளை - Page 26
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8159
32
ராயபுரம் வந்தனர் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும். போலீசைக் கண்டதும் அங்கங்கே வெட்டி வம்பு பேசிக் கொண்டிருந்தவர்கள் நைஸாக நழுவினார்கள். டீக்கடையில் 'நான் ஆணையிட்டால்’ எம்.ஜி.ஆரின் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டு இருந்தது. டீக்கடை அருகே நின்றிருந்த ஒரு பெரியவரின் அருகே சென்றார் கார்த்திக்.
"ராயபுரம் ரங்கன் யாரு?" கார்த்திக் கேட்டார்.
"ரங்கனா? அதோ அந்த மரத்தடியில காசு வச்சு சீட்டாடிக்கிட்டிருக்கான். முகத்தில் பெரிய மரு இருக்கும். போய் பிடிங்கய்யா." பெரிசு பதவிசாகப் பேசியது.
ரங்கன் இருந்த இடம் நோக்கி நடந்தான் கார்த்திக்.
போலீஸைப் பார்த்ததும், குடித்திருந்த சாராயத்தின் போதை தெளிந்தவனாய் ரங்கன் எழுந்தான்.
"என் கூட நட. “கார்த்திக்கைப் பின் தொடர்ந்தான் ரங்கன். அவனை அழைத்துக் கொண்டு ஜீப் அருகே நின்றிருந்த ப்ரேம்குமாரிடம் வந்தார் கார்த்திக்.
"ஸார், இவன்தான் ராயபுரம் ரௌடி ரங்கன்."
ப்ரேம்குமார் தன் விசாரணையைத் துவக்கினார்.
"நீதான் வேம்புலியை வளர்த்தவனாமே?"
"அ... ஆமா ஸார்."
"தொழிலதிபர் ராஜசேகரனின் மகன் பிரசாத்தை பழி வாங்கறதுக்கு திட்டம் போட்டுக் குடுத்தியாமே?"
"அ... அது... வந்து ஸார். ஆமா ஸார். ஆனா அவன் பண்றதுக்கு முன்னால வேற யாரோ அந்த வேலையை செஞ்சிட்டாங்க சார். இவன் மாட்டிக்கிட்டான் ஸார். வேம்புலி, பிரசாத் ஐயாவோட குழந்தையைக் கடத்தறதுக்காக உள்ளே போன சமயம், சின்ன முதலாளி பிரசாத் ஐயா, தலையில அடிபட்டு கிடந்திருக்காரு. குழந்தையையும் காணலை. அதனால பயந்து போய் ஓடியாந்துட்டான் ஸார் வேம்புலி."
"கடத்தலுக்கும், கொலைக்கும் என்ன தண்டனைன்னு தெரியுமா உனக்கு? பழி வாங்கறியா பழி? நீ சொன்னதெல்லாம் நிஜம்ங்கறதுக்கு என்ன சாட்சி?"
ரங்கனால் இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. மௌனமாக இருந்தான்.
"அவன் ஓடி வந்ததும் போலீசுக்கு வந்து சொல்லி இருக்கலாம்ல?"
"தப்பு செய்ய திட்டம் போட்ட நாங்களே எப்படி ஸார் போலீசுக்கு சொல்லுவோம்? நான் சொன்னதெல்லாம் நிஜம் ஸார். இந்த தடவை எங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்க ஸார். இனிமேல இந்த மாதிரி பழி வாங்கற வேலையெல்லாம் செய்ய மாட்டேன் ஸார்."
"சரி, சரி, ஜீப்ல ஏறு."
"ஐயோ என்னை விட்டுடுங்க ஸார். ஏதோ ஒரு கோபத்துல பழி வாங்கணும்னு நினைச்சேன். மன்னிச்சிடுங்க ஸார்."
"அதெல்லாம் முடியாது. கேஸ் கோர்ட்டுக்குப் போய் ஜட்ஜ் தீர்ப்பு சொன்ன பிறகுதான் வெளியே விடறதா என்னன்னு தெரியும். புரிஞ்சுதா?"
"புரிஞ்சுது ஸார்."
ரங்கனை ஏற்றிக் கொண்டு போலீஸ் ஜீப் புறப்பட்டது.
ரங்கன், தங்களுடன் ஜீப்பில் இருந்ததால் கார்த்திக் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான்.
"என்ன ஸார்? ரங்கன் சொல்றதும் வேம்புலி சொல்றதும் ஒரே மாதிரி விஷயமா இருக்கு? இத வச்சு பார்க்கும்போது இவங்க சொல்றது நிஜம்தான்னு தோணுது? அப்ப குழந்தை கடத்தலும், குழந்தையைக் கொன்னு குப்பைத் தொட்டியில போட்டதும் யார்? ஒண்ணும் புரியலையே ஸார்?"
"ஆமா. எதுவுமே புரியாம உண்மையின் கண்ணை கட்டிவிட்ட மாதிரிதான் இருக்கு. சரவணன் சொல்றதும் நிஜம்னு ஆந்திரத்து கோடீஸ்வரர் ராகவேந்திர ராவை விசாரிச்சப்ப தெரிஞ்சுடுச்சு. திட்டம் போட்டவங்க யாரும் செய்யாம வேற ஒரு நபர் இதில சம்பந்தப்பட்டிருக்கான். அந்த நபர்தான் குற்றவாளி."
"அந்த நபர் யாரா இருக்கும்னு உங்களால யூகிக்க முடியுதா ஸார்?"
"ம்... அன்னிக்கு லாயர் நீலகண்டன் சேலத்துல இருந்து போன் பண்ணினார்ல? பிரசாத்தோட குழந்தை கேஸ் விஷயம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க போன் பண்ணினதா சொன்னார். அப்ப, அவர் சொன்ன சில தகவல்கள் என் மூளைக்குள்ள கம்ப்யூட்டர் பதிவு மாதிரி ஆகி இருக்கு."
"அப்படி என்ன ஸார் சொன்னார்?"
"ராஜசேகரனோட நெருக்கமான நண்பர் நீலகண்டன். ஃபேமிலி டாக்டர் மாதிரி ஃபேமிலி லாயரும் கூட. ராஜசேகரன் அவரோட ஒரே மகன் பிரசாத்துக்கு சொத்து எதுவும் எழுதி வைக்கலைங்கற தகவலைச் சொன்னார்."
"இதே தகவலைத்தான் பிரசாத்தும் அவரோட மனைவி ஸ்வர்ணாவும் நம்பகிட்ட சொன்னாங்களே ஸார்?"
"அவங்க சொல்றதுக்கு முன்னாலயே நீலகண்டன் என் கிட்ட சொல்லிட்டார். அந்த தகவலை ஒதுக்கி வச்சுட்டுத்தான் காளி, வேம்புலி, சரவணன், வாசு இவங்களை என்கொய்ரி பண்ணினேன். இப்ப அந்தத் தகவல் குறிச்சு ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பார்க்கணும். லாயர் நீலகண்டன் எனக்கு மறுபடியும் போன் பண்ணினார். பிரசாத்தோட குழந்தையைக் கொலை பண்ணினது யார்னு தெரிஞ்சுக்கணும்னு கேட்டார்."
"அவருக்கு ஏன் சார் அவ்வளவு ஆவல் இந்த விஷயத்துல? அது சரி, அந்த நீலகண்டன், கேஸ் பத்தின விஷயத்தை பிரசாத்துக்கே போன் போட்டுக் கேட்டிருக்கலாமே?"
"நீங்க சொன்ன இதே பாயிண்டைத்தான் நானும் லாயர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்ன பதில்தான் இந்தக் கேஸை கொஞ்சம் நகர்த்துது. ஆனா, நான் நினைக்கறது எந்த அளவுக்கு சரியா இருக்கும்னு இனி போகப் போகத்தான் தெரியும்."
"சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க ஸார்."
"அவசரப்படாதீங்க கார்த்திக். சொல்றேன். ராஜசேகரன் அவரோட சொத்துக்களை தருமத்துக்கு எழுதி வச்சதுல பிரசாத்துக்கு பயங்கர கோபம். உயிலை எழுதின லாயர்ங்கற முறையில நீலகண்டனோட கடமைதான்னு பிரசாத்துக்கு புரிஞ்சாலும் நீலகண்டன் மேலயும் அவனுக்கு கோபம்தான். வெறுப்பும் கூட. இதனால அவர் பல முறை பிரசாத்துக்கு போன் செஞ்சப்பல்லாம் லைனை கட் பண்ணி இருக்கான். விடாப்பிடியா அவர் போன் பண்ணினப்ப 'உங்க கூட பேச விரும்பலை, இனிமேல் உங்களுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது’ன்னு சொல்லிட்டு லைனை கட் பண்ணிட்டானாம். அதுதான் அவர் கடைசியா பிரசாத்துக்கு போன் பண்ணினது. அதுக்கப்புறம் அவரும் அவனுக்கு போன் போடலையாம்."
"அப்பாவோட சொத்து தனக்கு இல்லைங்கறதுல எந்த வருத்தத்தையும், கோபத்தையும் பிரசாத் வெளிக்காட்டவே இல்லையே ஸார்?"
"ஆமா. கடுகளவு கூட ரியாக்ஷன் இல்லைதான். ஆனா லாயர் மேல அவன் காட்டின அந்தக் கோபமும், எரிச்சலும் ஒரு வகையில எனக்கு சந்தேகத்தைக் கிளப்புது. அது மட்டும் இல்ல... பிரசாத்தோட பங்களாவுல பெண் குழந்தை படங்களோ, ஓவியங்களோ, விளையாட்டு சாமான்களோ இல்லை. என்னோட சந்தேகம் இன்னொன்ணு. ராஜசேகரனைப் போலவே பிரசாத்துக்கும் பெண் குழந்தைன்னாலே பிடிக்கலையோன்னு. அதாவது, சொத்துக்கள் கிடைக்காததுக்கு அதுதானே காரணம்?"
"ஸார்... அப்படின்னா பிரசாத்....?"
"ஆமா கார்த்திக். பிரசாத் மேல எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கு.