பேர் சொல்லும் பிள்ளை - Page 30
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8159
"பிரசாத், தன் மனைவியையும், குழந்தையையும் உயிருக்குயிரா நேசிச்சிருக்கார்ன்னு எங்களுக்கும் தெரிய வந்துச்சு. விசாரணையைப் பொறுத்த வரைக்கும் அவரோட நார்மல் நடவடிக்கைகள் இதை நல்லாவே தெளிவு படுத்தி இருக்கு. கார்த்திக், டாக்டர் நம்பகிட்ட சொன்னதையெல்லாம் எழுத்து மூலமா ரிப்போர்ட் வாங்கிக்கோங்க."
டாக்டரின் விரிவான விளக்கம் அடங்கிய ரிப்போர்ட்டைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் புறப்பட்டனர்.
"டாக்டர் ரீத்திகா சொன்ன தகவல்களும் இப்ப டாக்டர் கனகதுரை சொன்ன தகவல்களும் பிரசாத்தை குற்றவாளின்னு நிரூபிக்கிற அழுத்தமான சாட்சிகளா இருக்கு. நாம இப்ப பிரசாத்தை கைது செய்யறதுக்கு வேண்டிய ஏற்பாட்டுடன் அங்கே போகலாம்."
"ஓ. கே. ஸார்."
இருவரும் பிரசாத்தின் பங்களாவிற்கு சென்றடைந்தனர்.
40
"பிரசாத்! உங்க தலையில அடிபட்டதும், நீங்க மயக்கமானதும் அப்பட்டமான பொய் நாடகம். இதற்கான ஆதாரங்களை நரம்பியல் நிபுணர் டாக்டர் ரீத்திகா குடுத்திருக்காங்க. சைக்யாட்டிரிஸ்ட் டாக்டர் கனகதுரையும் சில நம்பகமான தகவல்களை கொடுத்திருக்கார். குப்பைத் தொட்டிக்கிட்ட கிடைச்ச ஷு தடயங்கள் உங்க வெளிநாட்டு ஷு தடயங்கள்தான். இது தெரிஞ்சு நீங்க, ஷுக்களை மறைச்சுட்டீங்க. உங்க குப்பைக் கவர் பத்தின என்கொய்ரியிலயும் எங்களுக்கு சாதகமான தகவல் கிடைச்சது. இது எல்லாத்தையும் விட இரண்டு டாக்டர்கள் கொடுத்த மெடிக்கல் சம்பந்தப்பட்ட தகவல்கள்தான் உங்களை ஆதாரங்களோட பிடிக்க எங்களுக்கு வலுவான காரணங்களா அமைஞ்சுடுச்சு. இதுக்கும் மேல உண்மையை மறைக்க மாட்டீங்கன்னு நம்பறேன்."
"ஆமா இன்ஸ்கெ்டர், நான்தான் என்னோட ரெண்டு குழந்தைகளையும் கொலை செஞ்சேன். இதுக்குக் காரணம் பெண் சிசு பத்தி எங்கப்பா கொண்டிருந்த வெறுப்புதான். அவர் எனக்கு எந்த சொத்தும் இல்லாம நடுத்தெருவுல நிக்கற அளவுக்கு ஆக்கினதுக்குக் காரணம் பெண் குழந்தைதானேங்கற ஆத்திரமும், வெறியும் என் இதயத்துல நிரந்தரமாயிடுச்சு. அதோட விளைவு? என் குழந்தைகளைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. அதுங்களைப் பார்க்கற ஒவ்வொரு நிமிஷமும் என் அப்பாவோட கடுமையான விதிமுறைகள்தான் ஞாபகம் வந்துச்சு. அதனால ஏற்பட்ட வெறுப்பை எப்படியாவது மாத்திடணும்ன்னுதான் டாக்டர் கனகதுரையை சந்திச்சு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிடாம விட்டுட்டேன். அதன் விளைவுதான் என் குழந்தைகளை நான் இழந்துட்டேன்."
"சுயமா சம்பாதிப்பேன், உழைப்பேன்னு சவால் விட்டுப் பேசினீங்க? அதெல்லாம் நாடகந்தானா?" ப்ரேம்குமார் கேட்டதும், வெறித்த பார்வை மாறாமல் தன் வாக்கு மூலத்தைத் தொடர்ந்தான் பிரசாத்.
"எங்க அப்பா, சின்ன வயசுல கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்தார். ஆனா நான் பிறக்கும்போதே பணக்கார சூழ்நிலையில பிறந்தேன். வளர்ந்தேன். இதனால சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கமாயிட்டேன். என்னால கீழ்மட்ட வாழ்வை ஏத்துக்க முடியலை. நான் பெரியவனா ஆனப்புறம் எங்க இன்டஸ்ட்ரீஸை நிர்வாகம் பண்ணினேன். பலபேர் என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கினாங்க. நான் மத்தவங்ககிட்ட கைநீட்டி சம்பளம் வாங்க முடியுமா? பஞ்சு மெத்தையில படுத்த நான், பாயில படுத்துத் தூங்க முடியுமா? பால் பழம் சாப்பிட்டு பழகிய நான் பழங்கஞ்சியைக் குடிக்க முடியுமா?
“அரண்மணை மாதிரி பங்களாவை விட்டுட்டு ஆறடிக்கு ஆறடி ரூம்ல வாழ முடியுமா? ஒரு முதலாளியான நான் தொழிலாளி ஆக முடியுமா? விதம் விதமான கார்கள்ல உலா வந்த நான், என் கால்கள் வலிக்க நடக்க முடியுமா? களைப்புன்னா என்னன்னே தெரியாத நான் உழைச்சுப் பிழைக்க முடியுமா? சுகவாசியாவே வாழ்ந்து பழகிட்ட என்னால, அந்த சுகங்களைக் கொடுத்த எங்கப்பாவோட பணம், சொத்துக்கள் இவை இல்லாம வாழ முடியுமா? இதுக்கெல்லாம் காரணமான என் குழந்தைங்க மேல எனக்கு வெறுப்புதான் வளர்ந்துச்சு. என் மனநிலையும் பாதிச்சுடுச்சு. மனநிலை பாதிச்சதுனாலதான் என்னோட குழந்தைகளை நானே கொலை செய்யும்படி ஆயிடுச்சு. என்னோட இந்த நிலைக்குக் காரணம் எங்க அப்பா... எங்க அப்பா..." ஆவேசமாகக் கத்திய பிரசாத், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தான்.
"என்னோட திட்டத்தை செயல்படுத்தறதுக்கு முன்னால, காளியை மாத்திரை வாங்கிட்டு வரச் சொல்லி வெளியே அனுப்பினேன். அந்த சமயத்துல வேம்புலி, வேலையை முடிச்சுட்டு போயிட்டான்னு நான் நினைச்சது தப்பா போச்சு. அவன், தோட்டத்துல எந்தப் பக்கமோ இருந்திருக்கான். மாத்திரை வாங்கறதுக்காக வெளியே போன காளி திரும்பி வந்தபிறகு வேம்புலி அவனை மயங்க வச்சானா அல்லது காளி போறதுக்குள்ளயே மயங்க வச்சுட்டானான்னு எனக்குத் தெரியலை. பங்களா காம்பவுண்டுக்குள்ள யாருமே இல்லைங்கற தவறான கணிப்புல, ஒரு தகப்பன் செய்யக் கூடாத கொடூரமான செயலை நான் செஞ்சுட்டேன். மனநிலை பாதிச்சுடுச்சுன்னு தெரிஞ்சும், டாக்டரைப் பார்த்து ட்ரீட்மென்ட் பத்தி பேசினதுக்கப்புறமும் நான் அலட்சியமா இருந்துட்டேன். என் தலையில நானே அடிச்சுக்கிட்டு ஏற்படுத்தின காயமும், மயக்க நாடகமும் இந்த முறை என்னை ஏமாத்திடுச்சு. ஸ்வர்ணாவுக்கு என் மனநிலை பாதிப்பு பத்தி எதுவும் தெரியாது. நான் என் குற்றத்தை ஒப்புக் கொள்றேன்" நீளமாக பேசி முடித்த பிரசாத், ஸ்வர்ணாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் தலை குனிந்தான். தகுந்த ஆதாரங்களோடு பிடிபட்ட அவனது கைகளில் விலங்கு பூட்டப்பட்டது.
41
கோர்ட்டில் தீர்ப்பு வழங்கும் நாள்.
ஜட்ஜ் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.
"சந்தேகத்தினால் போலீஸின் பிடியில் இருக்கும் சரவணன், தவறு செய்ய திட்டமிட்டிருந்தபோதும் அதைக் கைவிட்டு மனம் மாறி விட்டார் என்பதை ராகவேந்திரராவ் கொடுத்துள்ள சாட்சி நிரூபிக்கின்றது. எனவே சரவணன் குற்றவாளி அல்ல என்று இந்த கோர்ட் தீர்மானித்துள்ளது. சரவணனின் நண்பன் வாசு குற்றமற்றவர் என்று அறிவிக்கின்றேன்.
ரங்கனின் தூண்டுதலால், வேம்புலி பழி வாங்கும் எண்ணத்தில் பிரசாத்தின் குழந்தையைக் கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தான். பிரசாத் அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்த வேம்புலி பயந்து போய் ஓடி விட்டான் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. ஆகவே வேம்புலியை எச்சரித்து விடுதலை செய்கிறேன்.
எஃப்.ஐ.ஆர். குடுத்த மிஸ்டர் ராபர்ட் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகிறார். குழந்தையின் உடல் கிடந்தது பற்றி உடனே போலீசுக்குத் தகவல் சொன்ன அவரது கடமை உணர்வை பாராட்டுகிறேன்.
போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரசாத், பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் கனகதுரையின் மெடிக்கல் ரிப்போர்ட் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றது.