பேர் சொல்லும் பிள்ளை - Page 25
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8159
குழந்தை போனதில இருந்து எனக்கும், ஸ்வர்ணாவுக்கும் வாழ்க்கையே நரகமாயிடுச்சு. அந்த கொலைகாரன் யார்னு தெரிஞ்சு, அவன் தண்டனை அடையறதுலயாவது கொஞ்சம் ஆறுதல் கிடைக்குமே..."
"ஆனா நம்ப குழந்தை திரும்ப உயிரோட கிடைக்கவா போகுது?" ஸ்வர்ணா குழந்தையை நினைத்து கதறி கதறி அழ ஆரம்பித்தாள். பிரசாத்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் முயற்சித்தான்.
"ப்ளீஸ், ரெண்டு பேரும் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. கண்ட்ரோல் யுவர்செல்ஃப். கொலைகாரனைக் கண்டுபிடிக்க ரொம்ப தீவிரமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கோம். குழந்தையோட உடல் கிடந்த இடத்துல கிடைச்ச ஷு தடயங்களைப் பத்தின தகவல்களை விசாரிக்கப் போயிருக்கார் இன்ஸ்பெக்டர் கார்த்திக். அது மூலமா கண்டிப்பா கொலைகாரனைப் பத்தின விபரம் தெரியும். நான் கிளம்பறேன்."
"ஓ.கே. ஸார்." தளர்வான குரலில் விடை கொடுத்தான் பிரசாத்.
31
சரவணன் தலை குனிந்து நின்றிருந்தான்.
"அரை மணிநேரமா எதுவுமே பேசாம என்னை ரொம்ப எரிச்சல் படுத்தற. உண்மைகள் எல்லாத்தையும் உன் நண்பன் வாசு சொல்லிட்டான். நீ மௌனமா இருந்தா மட்டும் தப்பிச்சுடலாமா?"
ப்ரேம்குமாரின் குரலில் கோபம் அதிகமாக வெளிப்பட்டது.
தலை குனிந்திருந்த சரவணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. ப்ரேம்குமாரின் கோபம் தொனித்த குரலைக் கேட்டதும் பயத்தில் மேலும் அழுதான். தலை நிமிர்ந்தான்.
"இன்ஸ்பெக்டர் ஸார். சத்தியமா அந்தக் குழந்தையை நான் கடத்தலை சார். கொலை செய்யவும் இல்லை."
இதைக் கேட்டதும் மீண்டும் அதிக கோபத்திற்கு மாறினார் ப்ரேம்குமார்.
"ஒண்ணு, வாயை மூடிக்கிட்டிருக்க. இல்லைன்னா கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ற. இனி அடுத்த கட்டம் போலீஸ் மரியாதைதான்..."
அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரது கால்களில் விழுந்தான் சரவணன்.
"சத்தியமா நான் தப்பு பண்ணலை ஸார். ஆனா... தப்பு பண்ணனும்னு நினைச்சேன். என் ஃப்ரெண்டு வாசு புத்திமதி சொன்னப்ப அதைக் கேட்காம திட்டம் போட்டேன். என்னோட திட்டத்தின் முதல் கட்டமா பிரசாத் சாரோட பங்களாவுக்குப் போனேன். ஒரு நோட்டம் விட்டு வைக்கலாமேன்னு. பிரசாத் ஸாரோட வீட்டு அட்ரஸை டெலிபோன் டைரக்டரியில பார்த்துட்டு அங்கே போனேன். நான் போன சமயம் முகத்தோட முகம் தெரியாத இருட்டு. ஆனா பங்களாவுல இருந்து லைட் வெளிச்சம் வந்துச்சு. பிரசாத் சாரோட மனைவி, குழந்தையை கையில வச்சுக்கிட்டு நடந்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க கையில இருந்த குழந்தையைப் பார்த்ததும் என் மனசு மாறிடுச்சு. இந்த பச்சைக் குழந்தையையா நாம கடத்த நினைச்சோம்னு வேதனைப் பட்டேன். வெட்கப்பட்டேன். அப்பிடியே வந்த சுவடு தெரியாம நழுவிட்டேன். அப்பதான் என்னோட டெலிபோன் புக் காம்பவுண்டுக்குள்ளே விழுந்திருக்கணும். அதை நான் கவனிக்கலை. இதைத் தவிர வேற எந்த விஷயத்திலயும் அந்த குழந்தை கேஸ்ல எனக்கு தொடர்பு இல்லை இன்ஸ்பெக்டர்" கதறி அழுதான் சரவணன். மேலும் தொடர்ந்தான்.
"தப்பு செய்யணும்னு நினைச்சதுக்கே தண்டனை கிடைக்கும்ங்கறதை நான் உணர்ந்துட்டேன்."
"அப்படியே நீ சொல்றது உண்மைன்னே வச்சுக்கிட்டாலும் உன் ஃப்ரெண்டு வாசு சொன்னானே ரௌடிகள் கூடயெல்லாம் உனக்கு தொடர்பு இருந்ததுன்னு? அதுக்கு என்ன சொல்ற? பழைய அம்பாஸிடர் கார்ல யாரோ உன்னை வற்புறுத்தி கூட்டிட்டுப் போனாங்களாமே அதுக்கு என்ன சொல்ற?"
"சொல்றேன் ஸார். நான் எதையும் மறைக்காம சொல்றேன். பிரசாத் ஸாரோட குழந்தையைப் பார்த்தப்புறம் மனசு மாறிய நான், ஒரு பார்க்ல போய் உட்கார்ந்து இருந்தேன். யாரோ படிச்சுட்டு விட்டுட்டுப் போன மாலை நியூஸ் பேப்பர் பெஞ்சு மேல இருந்துச்சு. அதில பெரிசா ரூபாய் ஒரு லட்சம்ன்னு கட்டம் கட்டி போட்டிருந்த விஷயத்தை கவனிச்சேன். எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். ஒரு கோடீஸ்வரனின் மகன் இளைஞன். அவனுக்கு ஒரு சிறுநீரகம் பாதிச்சுடுச்சுன்னும், மாற்று சிறுநீரகம் குடுக்க முன் வர்றவங்களுக்கு ஒரு லட்சம் தரப்படும்னு விளக்கமா விளம்பரம் குடுத்திருந்தாங்க.
“அதைப் படிச்சதும் என்னோட சிறுநீரகத்தைக் குடுத்து ஒரு லட்ச ரூபாயை அடையலாமேன்னு முடிவு பண்ணினேன். அந்த விஷயமா அந்தக் கோடீஸ்வரரைப் போய் பார்த்தேன். பேசினேன். டாக்டர்கள் செஞ்ச எல்லா பரிசோதனைகளும் சரியா இருந்துச்சு. அந்தப் பையனுக்கு என்னோட சிறுநீரகம் பொருத்தமா இருக்கும்னு டாக்டர்கள் சொன்னாங்க. இதை எங்க வீட்டில எங்க அம்மா, அப்பா கிட்ட சொல்லலை... "
"அந்த கோடீஸ்வரர் பேர் என்ன?"
"அவர் பேர் ராகவேந்திரராவ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவரோட பையன் ராமோஜி ராவ். அவனுக்குத்தான் என்னோட சிறுநீரகத்தைக் குடுக்க முடிவு பண்ணினேன்."
"சரி, தப்பு செய்ய திட்டம் போட்ட நீ, மனசு திருந்தின பிறகு ஏன் வாசுவை சந்திக்கலை? சிறுநீரகம் குடுக்கறதைப் பத்தி ஏன் அவன் கிட்ட சொல்லலை?"
"அவன் எங்க அம்மா, அப்பாகிட்ட உடனே போய் சொல்லி இதைத் தடுத்துடுவான். அதனால அவனைப் பார்க்கறதைத் தவிர்த்தேன். தப்பு செஞ்சு, அதில கிடைக்கற பணத்துல பிஸினஸ் செய்யலாம்னு நினைச்ச நான் எந்தத் தப்பும் செய்யாம ஒரு லட்ச ரூபாய் கிடைக்குதேன்னு சந்தோஷப்பட்டேன்."
"நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே? ரௌடி ஒருத்தன் வந்து பேசினது, அந்த கார் விஷயம்...?"
"சிறுநீரகத்தைக் குடுக்கலாம்னு முடிவு பண்ணின நான் ஆபரேஷனுக்கு நாள் குறிச்சப்புறம் கொஞ்சம் பயந்துட்டேன். பெத்தவங்களுக்கும், நண்பனுக்கும் கூட தெரியாம ஆபரேஷன் பண்ணிக்கப் போறோமே, ஒரு வேளை ஆபரேஷன் தோல்வியாகி நான் இறந்துட்டா? அநாதையா சாகணுமேன்னு பயம் வந்துடுச்சு. ஒரே ஒரு தடவை ராகவேந்திர ராவ் கிட்ட மறுத்துப் பேசினேன். அவ்வளவுதான். அன்னில இருந்து அவரோட அடியாட்கள் என்னைப் பின் தொடர்ந்தாங்க. கண்காணிச்சாங்க. நான் எங்கேயாவது அவங்க கண்ல பட்டா உடனே கார்ல ஏத்திட்டுப் போய் ராகவேந்திர ராவ் கிட்ட விட்டுடுவாங்க. அவர் என்னை மிரட்டி அனுப்புவார். அதனாலதான் நான் ஓடி ஒளிஞ்சேன். வாசுவையும் சந்திக்கலை. நீங்க என்னை அடிச்சாலும், சித்ரவதை பண்ணினாலும் இதைத்தான் ஸார் திரும்பத் திரும்ப சொல்வேன். ஏன்னா உண்மையிலேயே நடந்ததும் இதுதான். இனி என்ன நடந்தாலும் சரி ஸார்..."
"சரி, அந்த ராகவேந்திர ராவோட அட்ரஸை இதில எழுதிக் குடு. என்னிக்கு ஆபரேஷன் நடக்க இருக்கு?"
"பதிமூணாம் தேதி ஸார்" ப்ரேம்குமார் கொடுத்த பேப்பரில் ராகவேந்திரராவின் அட்ரஸை எழுதிக் கொடுத்தான் சரவணன். கான்ஸ்டபிளுக்கு கண் அசைக்க, அவர் சரவணனை லாக்கப்பில் அடைத்தார்.