
அதில எக்ஸ்ரே படம், அதோட ரிப்போர்ட்ஸ், நிறைய ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாம் இருந்துச்சு. அதில இருந்த ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் கனகதுரை எழுதிக் குடுத்தது. அதை எடுத்துட்டு வந்துட்டேன்.
பேஸ்மென்ட்ல இருக்கறதுன்னாலயோ என்னவோ கொஞ்சம் இருட்டாவும் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னிக்கு, பிரசாத்தோட மனைவி கோயிலுக்குப் போயிருந்ததாகவும், அவங்க திரும்பி வந்தப்ப குழந்தையைக் காணோம்னும் சொன்னாங்கள்ல? அவங்க கோயிலுக்குப் போயிருக்கும்போது, பிரசாத் குழந்தையைக் கொன்னுருக்கணும். குழந்தையோட உடலை கீழ்த்தளத்துல, ஃப்ரிட்ஜுக்குள்ள மறைச்சுட்டு, பிறகு சந்தர்ப்பம் பார்த்து குப்பைத் தொட்டியில குப்பைக் கவர்ல சுத்தி போட்டிருக்கணும். ஃப்ரிட்ஜுல வச்சிருந்ததுனாலதான் குழந்தையோட உடல் முழுசும் அழுகிப் போகாம இருந்திருக்கு." ப்ரேம்குமார் சொல்ல சொல்ல பிரசாத்தின் மீதுள்ள சந்தேகம் கார்த்திக்குக்கும் வலுவானது. கூடவே குழப்பமும் தோன்றியது. அதன் விளைவாக ப்ரேம்குமாரிடம் தன் குழப்பம் எழுப்பிய கேள்வியைக் கேட்டான்.
"ஆனா ஸார்..., பிரசாத்தோட மனைவி கோயில்ல இருந்து திரும்பி வந்தப்ப பிரசாத் அடிபட்டு மயக்கமாகி கிடந்ததாகச் சொன்னாங்களே?"
"ஆமா.. அந்த ஒரு சிக்கலைத் தீர்க்கறதுக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். அடி பட்டதுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக பக்கத்துல அவங்களோட டாக்டர்கிட்ட போயிருக்காங்க. தலையில அடி பட்டதுக்கு பெரிய அளவுல ட்ரீட்மெண்ட் எதுவும் எடுத்த மாதிரி தெரியலை. அதனால அங்கே எடுத்த எக்ஸ்ரே, அதோட ரிப்போர்ட் இதை எல்லாம் எடுத்துக்கிட்டு, நியூரோ சர்ஜன் டாக்டா ரீத்திகாவைப் போய் பார்க்கணும். அவங்கதான் இன்னிக்கு நியூராலஜி டிப்பார்ட்மெண்ட்ல நம்பர் ஒன் நிபுணர். அது மட்டுமில்ல.. இவங்கதான் ஒரே பெண் நியூரோ சர்ஜன். அவங்களை பார்த்த பிறகு டாக்டர் கனகதுரையையும் பார்த்துடலாம். டாக்டர் கனகதுரையும் பிரபலமான சைக்யாட்ரிஸ்ட். இந்த ரெண்டு டாக்டர்களையும் நாம நேர்ல சந்திச்சு தகவல்களை சேகரிச்சா, நிச்சயமா இந்தக் கேஸ்ல இருக்கற முக்கியமான சந்தேகங்கள் தெளிவாகும்."
"மேடம், இதுதான் அந்த பிரசாத்தோட எக்ஸ்ரே. இது ரிப்போர்ட். கேஸைப் பத்தின எல்லா டீடெய்ல்சும் சொல்லிட்டேன். இனிமே நீங்க சொல்ற தகவல்கள், குற்றவாளின்னு நாங்க சந்தேகப்படற நபரை அவன்தான் குற்றவாளின்னு நிரூபிக்க உதவிகரமா இருக்கும்னு நம்பறேன்."
டாக்டர் ரீத்திகா, பிரசாத்தின் எக்ஸ்ரே, மற்றும் ரிப்போர்ட்களைப் பார்வையிட்டார். கேஸின் விபரங்களைக் கூர்மையாக கவனித்துக் கேட்டுக் கொண்டார்.
"இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், தன்னை யாரோ முகமூடிக்காரன் இடி இடிச்சது போல தலையில அடிச்சுத் தாக்கியதாகவும், தான் மயக்கமாயிட்டதாகவும் அந்த பிரசாத் சொன்னதாக சொன்னீங்க. எந்த ஒரு மனுஷனையும் மயக்கமாகற அளவுக்கு அடிச்சா, அவனுக்கு ஞாபக சக்தியே இருக்காது. அதாவது அவனோட மூளையில இருக்கற ஞாபகசக்திக்கான இயக்க செல்கள் செயல் இழந்துடும். அதுக்கப்புறம் அவனுக்கு நீண்டகால வைத்தியம் பண்ணினாத்தான் பழைய நினைவுகள் வர்றதுக்குக் கொஞ்சம் வாய்ப்பு இருக்கு. நினைவு வராமலே போகக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம். ஆனா இவன் என்னமோ, தான் தூங்கி எழுந்திருச்சது போலவும், முகமூடிக்காரன் தன்னைத் தாக்கிட்டு, குழந்தையைத் தூக்கிட்டுப் போனதாகவும் சொல்றது முட்டாள்தனமானது."
"இதுக்கு முன்னால அவனோட முதல் குழந்தை கேஸ்லயும் இதே போலத்தான் சொல்லி இருக்கான் மேடம்."
"ஒரு தடவை அடிபட்டாலே நினைவு திரும்பறது கஷ்டம். திரும்பவும் அடிபட்டு, உடனேயே நினைவு திரும்பி நடந்ததை எல்லாம் கரெக்டா சொல்றானாமா? கேலிக்குரிய விஷயம். நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம். நிச்சயமா அவன்கிட்ட தப்பு இருக்கு. முதல் குழந்தை கேஸ்ல அவன் போட்ட நாடகத்துல தப்பிச்சுட்டதால மறுபடியும் அதே நாடகம் ஆடி இருக்கான்னு நான் நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர்." ஆணித்தரமாக அடித்துச் சொன்னார் நரம்பியல் நிபுணர் டாக்டர் ரீத்திகா.
"தாங்க்ஸ் மேடம். நாங்க கிளம்பறோம்."
"ஓ.கே."
"உங்களோட தகவல்கள் நிச்சயமா எங்களுக்கு உதவியா இருக்கும் மேடம். தேங்க்யூ" இருவரும் டாக்டர் ரீத்திகாவின் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.
"பார்த்தீங்களா கார்த்திக். பிரசாத் கிட்ட தப்பு இருக்கு. தப்பு பண்ணியவன் குழந்தையோட தகப்பனா இருக்கறதால அவன்தான் குற்றவாளிங்கறதை நிரூபிக்கறதுக்கு, இன்னும் நமக்கு அழுத்தமான ஆதாரங்கள் வேணும். அந்த ஆதாரம் டாக்டர் கனகதுரையைப் பார்த்தப்புறம் கிடைக்கும்னு நான் நம்பறேன்."
"டாக்டர் ரீத்திகாவோட ரிப்போர்ட்டே நமக்கு நல்ல ரிசல்ட்தானே ஸார்?"
"நீங்க சொல்றது சரிதான். ஆனா கையில இன்னொரு தடயத்தை வச்சிருக்கோம். அதன் மூலமா இன்னும் வலுவான காரணங்கள் கிடைச்சா நமக்கு நல்லதுதானே?"
"அந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் இப்ப உங்க கையில இருக்கா ஸார்?"
"ஆமா. என்கிட்டதான் இருக்கு."
"அப்பிடின்னா இப்பவே நாம டாக்டர் கனகதுரையைப் போய் பார்த்துடலாமே?"
"நானும் அப்படித்தான் ப்ளான் பண்ணி இருக்கேன். நேரா இப்ப அங்க போயிடலாம்."
ஜீப் விரைந்தது.
மனோதத்துவ டாக்டர் கனகதுரையின் அறை. ஏ.ஸியின் 'ஹம்’ ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமும் இன்றி அமைதியாக இருந்தது.
தடிமனான புத்தகம் ஒன்றை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தார் டாக்டர். நடுத்தர வயது. தலையில் தென்பட்ட வழுக்கையை மறைக்க முயன்று தோல்வி அடைந்திருந்தார் என்பது தெரிந்தது. தங்க நிறக்கண்ணாடி ஃப்ரேம் மூக்கின் நடுவே உட்கார்ந்திருந்தது. சற்று இடுங்கிய கண்களும், குறுந்தாடியும் அவருக்கு ஒரு பிரத்தியேகமான இமேஜை உருவாக்கி இருந்தது.
'டக் டக்..’ அறைக் கதவை தட்டும் ஒலி கேட்டது.
"யெஸ் கம் இன்" டாக்டர் குரல் கொடுத்தார்.
ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் உள்ளே நுழைந்தனர்.
"ஹலோ டாக்டர்."
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரையும், கார்த்திக்கையும் பார்த்த டாக்டரின் விழிகள் விரிந்தன. புருவங்கள் கேள்விக்குறி அடையாளத்திற்கு உயர்ந்தன.
"வாங்க இன்ஸ்பெக்டர் உட்காருங்க."
இருவரும் உட்கார்ந்தனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், டாக்டர் கனகதுரை பிரசாத்திற்கு எழுதிக் கொடுத்திருந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை டாக்டரின் மேஜை மீது வைத்தார்.
"பிரபல தொழில் அதிபர் பிரசாத்தோட குழந்தை கொலை கேஸ் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்."
"என்ன?! பிரசாத்தோட குழந்தை கொலையா? மை காட்!" டாக்டர் கனகதுரையின் குரலில் அதிர்ச்சி வெளிப்பட்டது.
"நான் வெளிநாட்டுக்கு போயிட்டு நேற்று நள்ளிரவுதான் இந்தியா வந்தேன். அதனால எனக்கு எதுவும் தெரியாது." டாக்டரின் குரலில் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளும் ஆவல் தென்பட்டது.
ப்ரேம்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
"ஸோ, எங்க சந்தேகம் சரிதானான்னு தெரிஞ்சாகணும் டாக்டர்."
"பிரசாத் உங்க கிட்ட எதுக்காக வந்தார்? என்ன சொன்னார்? இதைப் பத்தின விவரம் எல்லாம் சொன்னீங்கன்னா எங்களுக்கு உதவியா இருக்கும் டாக்டர்."
டாக்டர் கனகதுரையின் நினைவில் பிரசாத் தன்னிடம் வந்து சென்ற நிகழ்ச்சி மனதில் நிழலாடியது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook