நிர்வாண நிஜம் - Page 6
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
விக்ரமை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம் – நடுரோட்டில்!
சுரா
1990-ல் சி.செல்வராஜ் என்ற நண்பர் என்னைத் தேடி வந்தார். வங்கியில் பணி புரிவதாகவும், யூனியனில் தான் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறினார். தமிழில் படமொன்றை தயாரிக்க தான் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்திலுள்ள வங்கிகளில் பணிபுரியும் தன்னுடைய நண்பர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட தொகையை 'ஷேர்' ஆக போட இருப்பதாகவும், அப்படிச் சேரும் தொகையை வைத்து படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் கூறினார்.
'படத்திற்கான கதையை முடிவு செய்து விட்டீர்களா?' என்று கேட்டதற்கு, 'சுவீடன் நாட்டு படம் ஒன்றை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்கிறோம். படத்தின் பெயர் 'தி மேன் ஹூ கேவ் அப் ஸ்மோக்கிங்'. படத்தின் கதை இதுதான்: கதாநாயகன் பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலிப்பான். காதலியின் தாத்தாவுக்கு சிகரெட் பிடிப்பவர்களைப் பிடிக்காது. காரணம்- சிகரெட் பிடித்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டவர் அவர். ஆனால், கதாநாயகனோ ஒரு செயின் ஸ்மோக்கர். தன் பேத்தியிடம் சொல்லி கதாநாயகன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால்தான் திருமணம் செய்து கொள்ள என் சம்மதம் கிடைக்கும் என்று கூறுகிறார். கதாநாயகனும் அதற்குச் சம்மதிக்கிறான். எனினும், இதற்கென சில ரகசிய புலனாய்வு அதிகாரிகளை ஏற்பாடு செய்து கதாநாயகன் புகை பிடிக்கிறானா என்பதை இரவும் பகலும் விழித்திருந்து கண்காணிக்கும்படி செய்கிறார் அந்தத் தாத்தா. இதற்கிடையில் கதாநாயகியைக் காதலிக்கும் இன்னொரு நபர் கதாநாயகன் திருந்தி விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறான். கடைசியில் வெற்றி பெறுவது யார்? அந்த மனிதரா? கதாநாயகனா? கதாநாயகன் புகை பிடிப்பதை நிறுத்தி, காதலியைக் கைப்பிடிக்கிறானா இல்லையா? இதுதான் அந்தப் படத்தின் கதை. தமிழில் இந்தப் படத்திற்கு 'என் காதல் கண்மணி' என்று பெயர் வைத்திருக்கிறோம்' என்றார்.
துணிப் பை ஒன்றைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வேஷ்டி கட்டிய கோலத்தில் எனக்கு முன்னால் அமர்ந்து, சிரித்துக் கொண்டே கதையைக் கூறினார் செல்வராஜ். ஆனால், கதையைக் கேட்டவுடன் 'இந்தக் கதையில் ஆழமாக ஒரு விஷயமும் இல்லையே! வெறும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதைப் பற்றி படமெடுத்தால் சுவாரசியமாக இருக்குமா? மனதைத் தொடும் விதத்தில் கதை, உணர்ச்சிகரமான காட்சிகள், இதயத்தில் ஆழமாகப் பதிகிற மாதிரியான சம்பவங்கள் எதுவுமே இல்லாவிட்டால் படம் எப்படி ஓடும்? கதையே இல்லாமல் கூத்தடித்திருக்கிறார்கள் என்று எல்லோரும் நினைக்க மாட்டார்களா? எனக்கு இந்தப் படம் வர்த்தக ரீதியாக நன்றாக வரும் என்ற நம்பிக்கை இல்லை' என்றேன் நான். அதற்கு செல்வராஜ், 'இல்லை நண்பரே! நீங்கள் சுவீடன் நாட்டு படத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இந்தக் கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். ஒரு ஃபிலிம் சொஸைட்டி இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டியபோது, நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். நிச்சயம் தமிழில் தயாராகும் இந்தப் படம் அருமையான ஒரு பொழுது போக்குப் படமாக இருக்கும்' என்றார்.
அதற்கு மேல் படத்தைப் பற்றி அவரிடம் நான் பேசவில்லை. சம்பந்தப்பட்ட சுவீடன் நாட்டு படத்தைத் தேடி புனே திரைப்பட ஆவணக் காப்பகத்திற்குச் சென்ற செல்வராஜ், அங்கு படங்களைப் பாதுகாத்து வைக்கும் பிரிவின் பொறுப்பாளராக இருந்த டி.ஜே.ஜாய் என்ற மலையாள இளைஞரைப் பார்த்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு மலையாளப் படத்தில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறார். செல்வராஜிடம், அவர் வந்த விஷயத்தைக் கேட்க, செல்வராஜ் கூறி இருக்கிறார். 'எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்த படம்' என்று ஜாய் கூற, அவரையே 'என் காதல் கண்மணி' படத்தின் இயக்குனராக அந்த இடத்திலேயே ஒப்பந்தம் செய்து விட்டார் செல்வராஜ். (செல்வராஜ் எந்த அளவிற்கு வெள்ளை மனம் கொண்டவர் என்பது தெரிகிறதா?)
படத்தின் கதாநாயகனாக இப்போதைய ‘சியான்’ விக்ரம், ஒப்பந்தம் செய்யப்பட்டார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஏதோ ஒரு விளம்பரப் படத்தில் விக்ரமைப் பார்த்த செல்வராஜ், அவரை நேரில் பார்த்து கதாநாயகனாக ஆக்கி விட்டார். கெனி என்ற விக்ரமின் சொந்தப் பெயரை 'வினோத்' என்று செல்வராஜ் மாற்றி வைத்தார். 'என் காதல் கண்மணி'தான் விக்ரமின் முதல் படம். விக்ரமிற்கு ஜோடியாக ஒரு கலாச்சேத்ரா மாணவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெயர் ஞாபகத்தில் இல்லை. வைரமுத்து பாடல்களை எழுத எல்.வைத்தியநாதன் இசையமைத்தார். எம்.எம்.ரெங்கசாமி படத்தின் ஒளிப்பதிவாளர்.
'என் காதல் கண்மணி' பல மாதங்களுக்குப் பின், எத்தனையோ சிரமங்களைக் கடந்து, வளர்ந்து முடிந்தது. சி.செல்வராஜ் ஜோல்னா பையுடன் 'தயாரிப்பாளர் பந்தா' எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதராக சிரித்த முகத்துடன் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பார்.
படத்தின் முதல் பிரதி தயாரானவுடன், எல்லோருக்கும் படத்தைப் போட்டுக் காட்டினார்கள். நானும் படத்தைப் பார்த்தேன். படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. மிகவும் போராக இருந்தது. நிச்சயம் படம் ஓடாது என்ற முடிவுக்கு அப்போதே நான் வந்துவிட்டேன். பல நண்பர்கள் போட்ட பணத்தில் இப்படியொரு அறுவைப் படத்தை செல்வராஜ் எடுத்து விட்டாரே என்று நான் வருத்தப்பட்டேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு, செல்வராஜ் கேட்டதற்கு உண்மையான என் கருத்தைச் சொன்னேன். நான் சொன்னதை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதை அவருடைய முகபாவனையிலிருந்தே நான் தெரிந்து கொண்டேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.
'என் காதல் கண்மணி' வியாபாரம் ஆகாமல், பலவித போராட்டங்களுக்குப் பிறகு, பல மாதங்கள் கடந்து ஒரு நாள் திரைக்கு வந்தது. ஆனால், ஒரு வாரமே ஓடியது. மிகப் பெரிய தோல்விப் படமாக அது அமைந்ததுடன், நண்பர் செல்வராஜை அது பல லட்சங்களுக்குக் கடனாளியாகவும் ஆக்கிவிட்டது. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் செல்வராஜின் முகத்தில் புன்னகை பறிபோனது. கடனை எண்ணி அவர் மனம் படாதபாடு பட்டது. அதுவரை அவர் பார்த்துக் கொண்டிருந்த வங்கி வேலை அவருக்கு இல்லாமற் போனது.
ஒரு நாள் அவர் பணி, பணம் எதுவுமே இல்லாத மனிதராக ஆனார். ஆர்வத்துடன் படவுலகிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த நல்ல மனிதருக்குக் கிடைத்த பரிசு இதுதான்! பலவித மனக் குழப்பங்களுடன் ஊரில் இருக்கும் தன் சகோதரியிடம் தொலைபேசியில் 'நான் நாளைக்கு அங்கு வருகிறேன்' என்று வடபழனி 100 அடி சாலையில் இருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்தில் பேசிவிட்டு வெளியே வந்த சி.செல்வராஜ் சாலையைக் கடக்கவும், ஒரு வாகனம் வேகமாக பாய்ந்து வந்து அவர்மீது மோதவும் சரியாக இருந்தது. விபத்து நடந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்துக்கு மத்தியில் பிணமாகிவிட்டார் செல்வராஜ். அப்போதும் அவரின் தோளில் எப்போதும் இருக்கும் அந்த ஜோல்னா பை இருந்தது. சிரிப்பை மட்டும்தான் காணோம். அது காணாமல் போய்த்தான் எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டனவே!
படமெடுக்க வந்த முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஒரு நல்ல மனிதரின் மரணம் இப்படியா நடுச் சாலையில் நடக்க வேண்டும்? இப்போது கூட செல்வராஜ் என்ற அந்த இனிய, புன்னகை தவழும் முகத்துடன் என்னுடன் உரையாடும் நண்பரை நினைக்கும் தருணங்களில், என்னையும் மீறி என் கண்களில் அரும்பும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.