நிர்வாண நிஜம் - Page 5
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
எல்லோரும் சாப்பிட்டார்கள்- சிவாஜி பட்டினி கிடந்தார்!
சுரா
நடிகர் திலகத்தின் நேரம் தவறாமையைப் பற்றி நான் சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பலர் சொல்லி கேள்வியும் பட்டிருக்கிறேன். நான் அதை நேரில் காணும் வாய்ப்பு 1991ஆம் ஆண்டு வாக்கில் எனக்குக் கிடைத்தது.
அப்போது சிவாஜி, தமிழக ஜனதாதளக் கட்சியின் தலைவராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங் பிரதம அமைச்சராக இருந்தார். அந்தச் சமயத்தில் 'முதல் குரல்' என்ற படத்தின் கதாநாயகனாக சிவாஜியை வி.சி.குகநாதன் ஒப்பந்தம் செய்திருந்தார். மாநிலம் முழுக்க பிரபலமான ஒரு பெரிய பத்திரிகையாளராக அதில் வருவார் சிவாஜி.
ஜார்ஜ் பெர்ணான்டஸை மனதில் வைத்து சிவாஜிக்கு அதில் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் காலை ஏழு மணிக்கு என்று குகநாதன் சொல்லியிருந்தார். படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று காலை ஆறரை மணிக்கே ஏ.ஆர்.எஸ். கார்டனுக்கு சிவாஜி வந்துவிட்டார். அவர் வந்தபோது அங்கு வேறு யாருமே வந்திருக்கவில்லை. சிவாஜி வந்து அரை மணி நேரம் கழித்துத்தான் மற்ற எல்லோருமே வந்தார்கள். அங்கு போன எனக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது, உண்மையிலேயே சிவாஜி மீது நான் கொண்ட மதிப்பு மேலும் பல மடங்கு அதிகமானது.
அன்று போலீஸ் ஸ்டேஷனுக்குள் படப்பிடிப்பு. லாக்அப்பில் அடைக்கப்பட்டிருக்கும் அர்ஜுனை விடுதலை செய்வதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிவாஜி கேட்டுக் கொள்வதைப் போல ஒரு காட்சி அன்று படமாக்கப்பட வேண்டும். அதற்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் 'பந்த்' என்பதால், போலீஸ் ஸ்டேஷன் செட் சரியாகத் தயாராகவில்லை. ஒரு கோணத்தில் சிவாஜியை வைத்து ஷாட் எடுத்தார்கள். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சுவருக்கு வண்ணம் பூசும் வேலை படுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஷாட் முடிந்து மேக்-அப் அறைக்குள் போனார் சிவாஜி. குகநாதனோ படு டென்ஷனாக இருந்தார். வண்ணம் பூசி முடிப்பதற்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகும். அது முழுமையாகப் பூசி முடிக்கப்பட்டு, காய்ந்து, படப்பிடிப்பு நடத்த தயார் நிலைக்கு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். 'அதுவரை சிவாஜியை வெறுமனே ஒப்பனை அறைக்குள் உட்கார வைத்தால் நன்றாகவா இருக்கும்? சிவாஜி ஒருவேளை கோபமாகிவிட்டால் என்ன செய்வது?' என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார் குகநாதன். பின்னர் என்ன நினைத்தாரோ, சிவாஜியின் ஒப்பனை உதவியாளரான திருக்கோணத்தை அழைத்து, ‘அண்ணன் தப்பா நினைச்சிடப் போறாரு. எப்படியாவது சமாதானம் பண்ணி வைங்க. அதற்குள் நான் இந்த வேலையை முடிச்சிடுறேன்' என்றார் குகநாதன்.
அதற்கு அந்த உதவியாளர், 'அண்ணன்தான் என்னை இங்கே அனுப்பி வைத்தார். நான் எங்கே கோபிச்சுடப் போறேனோன்னு குகநாதன் ஒழுங்கா வேலையைச் செய்யாம இருந்துடப் போறான். நான் சொன்னேன்னு அவன்கிட்ட போயி சொல்லு- ஒண்ணும் அவசரமில்ல; மெதுவா வேலையைச் செஞ்சா போதும். நாம அவன் பட வேலையைப் பார்க்கத்தான் வந்திருக்கோம். நேரம் ஆனால் கூட பரவாயில்லை- அதுவரை நான் பொறுமையா காத்திருக்கேன்' என்று அண்ணன் கூறி அனுப்பினார்’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் நான் மெய்சிலிர்த்துப் போனேன். ‘சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர்! எத்தனை இமாலய சாதனை புரிந்த மனிதர்! அந்த மனிதருக்குள் இப்படியொரு எளிமையும், தொழில் பக்தியும்- அதுவும் இந்த வயதில்!’ என்று ஆச்சரியத்தின் எல்லைக்கே நான் சென்றுவிட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. குகநாதன் எழுதியிருந்த வசனத்தைச் சற்று மாற்றி, கொஞ்சம் வார்த்தைகளைச் சேர்த்து பேசினார் சிவாஜி. உடனே குகநாதன், 'அண்ணே! நான் எழுதிய வசனம் கொஞ்சம் மாறிடுச்சுண்ணே' என்றார். அதற்கு சிவாஜி 'ஆமா... நான்தான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும் என்று சிறிது மாற்றினேன். நீங்க பிரியப்பட்டா, இன்னொரு டேக் எடுத்துக்கங்க. நீங்க எழுதின அதே வசனத்தை நான் பேசுறேன்' என்றார். 1969ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிவாஜி கதாநாயகனாக நடித்த 'எங்க மாமா' என்ற படத்திற்கு தன்னுடைய இளம் வயதில் வசனம் எழுதியவர் குகநாதன். அந்த குகநாதனை ஒரு டைரக்டர் என்று நினைத்து சிவாஜி கொடுத்த மதிப்பைப் பார்த்து, நடிகர் திலகத்தின் மீது எனக்கு அளவுக்கும் அதிகமான மரியாதை உண்டானது.
அநேகமாக 1990-ஆம் ஆண்டாக இருக்குமென்று எண்ணுகிறேன். இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜியைக் கதாநாயகனாக வைத்து 'படிக்காத பண்ணையார்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு வாஹினி ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டிருந்த அரங்கிற்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பார்ப்பதற்காகப் போனேன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர் திலகம் நடிப்பதைக் கண் குளிர பார்க்க வேண்டும் என்பதும் முக்கியமானதொரு காரணம். நான் சென்றது மதிய நேரம். எல்லோரும் வெளியே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சிவாஜியை மட்டும் காணோம். நான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பார்த்து ‘எங்கே சிவாஜி சார்?' என்று கேட்டேன். அதற்கு கே.எஸ்.ஜி. 'அந்தக் கூத்தை ஏன்யா கேக்குற? கதைப்படி சிவாஜி ஒரு பண்ணையாரா வர்றாரு. வயசான கெட்-அப். பெரிய மீசை. அதை பசை போட்டு ஒட்ட வச்சிருக்கு. அந்த மீசையை ஒவ்வொரு தடவையும் எடுத்து ஒட்டுறதுன்னா, அவருக்கு பயங்கரமா வலிக்குதாம். அதனால 'எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம். சாப்பிடணும்னா இந்த மீசையை எடுத்து மறுபடியும் ஒட்டணும். அப்ப உண்டாகுற வலியை என்னால தாங்க முடியல. ஒரேயடியா நான் ராத்திரி வீட்ல போயி சாப்பிட்டுக்குறேன்'னு சொல்லிட்டு ஃப்ளோர்க்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறார். அவரைத் தவிர, எல்லாரும் சாப்பிட்டுக் கிட்டு இருக்காங்க. இப்படியொரு நடிகரை உலகத்துல பார்க்க முடியுமாய்யா?' என்றார் என்னிடம்.
ஃப்ளோரின் கதவு வழியாக பார்த்தேன். உள்ளே இருட்டுக்குள் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு சிவாஜி மட்டும் தனியே அமர்ந்திருந்தார். அந்தக் கலைமேதையைப் பார்த்து கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருந்தது.
இன்று அந்த கலையுலக மேதை நம்மிடையே இல்லை. எனினும் அந்த பிறவிக் கலைஞனின் இத்தகைய இனிய நினைவுகளை நம்மால் மறக்கத்தான் முடியுமா?