நிர்வாண நிஜம் - Page 10
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் உயர்ந்த சிம்மாசனத்தில்!
அவர்களை உருவாக்கியவர் மண்ணுக்குக் கீழே!
சுரா
வடலூர் சிதம்பரம்- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் தயாரிப்பாளர் இவர். 'சட்டம் ஒரு இருட்டறை' திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது, அவர் எனக்கு அறிமுகம் ஆனார். திருச்சிக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிதம்பரம், வடலூர் சேஷசாயி தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் மூவாயிரம் தொழிலாளர்களின் சங்கத்திற்குத் தலைவராக இருந்தார்.
தொழிற்சங்கத் தலைவராக இருந்த வடலூர் சிதம்பரம், 1980-ஆம் ஆண்டு ஒரு நாள் சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். ‘நான் குடித்துக் கொண்டே இருப்பேன்’ என்ற திரைப்படத்திற்காக ஒரு விளம்பர பேனர் சர்ச் பார்க் பள்ளிக்கூடத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருக்க, அதை சிதம்பரம் பார்த்திருக்கிறார். அதில் ‘எழுதி, இயக்கி, தயாரித்தவர் கடலூர் புருஷோத்தமன்’ என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை பார்த்ததும், அதற்கு பதிலாக ‘வடலூர் சிதம்பரம்’ என்ற பெயர் இருந்தால் எப்படியிருக்கும் என்று சிதம்பரம் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கிறார்.
அவ்வளவுதான்.... அடுத்த நாளே தான் திரைப்படம் தயாரித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு சிதம்பரம் வந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, சென்னைக்கு வந்த சிதம்பரத்திற்கு ஒரு நண்பர் மூலம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு முன்பு 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்ற பெயரில் ஒரு படு தோல்விப் படத்தை இயக்கிய சந்திரசேகர், கைவசம் படமெதுவும் இல்லாமல் வெறுமனே வீட்டில் இருந்திருக்கிறார். திரையுலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களையும் தெரிந்திராத சிதம்பரம், நண்பர் சொன்னார் என்பதற்காக அடுத்தகணமே தான் தயாரிக்க இருந்த படத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகரை இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டார். அப்படி உருவான படம்தான் 'சட்டம் ஒரு இருட்டறை.'
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி, பல குற்றச் செயல்களையும் செய்யும் கதாநாயகன், எப்படி அவற்றிலிருந்து தப்பிக்கிறான் என்பது படத்தின் கதை. ஏற்கனவே திரைக்கு வந்த சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த விஜயகாந்த், அப்படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் மூவாயிரம் அடி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், சில விநியோகஸ்தர்களும், மீடியேட்டர்கள் சிலரும் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ஒரு பயத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். 'விஜயகாந்த் நடித்து திரைக்கு வந்த எந்தப் படமும் இதுவரை ஓடியதில்லை. அவரை வைத்து படமெடுத்தால் படம் எப்படி ஓடும்?' என்று அவர்கள் கூற, குழம்பிப் போய்விட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அடுத்த நிமிடமே தயாரிப்பாளர் சிதம்பரத்தை அழைத்த சந்திரசேகர், 'சார்... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. படம் 3000 அடிதான் படமாகி இருக்கு. எல்லாரும் விஜயகாந்தைப் போட்டால் படம் ஓடாதுன்னு சொல்றாங்க. நான் டைரக்ட் பண்ணின 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' படமே படுதோல்விப் படமா அமைஞ்சிருச்சு. இதுவும் ஓடாம போச்சுன்னா, என் வாழ்க்கையே பாழாயிடும். இது வரை செலவான பணத்தைப் பற்றி கவலைப்படாதீங்க. விஜயகாந்தைப் படத்திலிருந்து தூக்கிடுவோம். இப்போ 'ஒரு தலை ராகம்'னு ஒரு படம் பிரமாதமா ஓடிக்கிட்டு இருக்கு. அதுல ரவீந்தர்னு ஒரு நடிகர் ஏ ஒன்னா நடிச்சிருக்கார்- அவரை நாம கதாநாயகனாக போட்டு படமெடுப்போம். எதிர்காலத்துல அவர் ரஜினிகாந்த் மாதிரி வருவார்னு என் மனசுல படுது' என்று கூறியிருக்கிறார். அதற்கு சிதம்பரம் ஒத்துக்கொள்ளவில்லை. 'விஜயகாந்த்தைப் பற்றி மற்றவர்கள் ஆயிரம் சொல்லட்டும் சார். அடிப்படையில் அவர் ஒரு தமிழர். நல்லா டான்ஸ் ஆடுறார். சண்டைக் காட்சிகள்ல பிரமாதமா நடிக்கிறார். இன்னும் சொல்லப் போனால், நம்ம படத்துல அருமையான கதை இருக்கு. தமிழ்ல இதுக்கு முன்னாடி வராத கதை. இந்தக் கதைக்காவே படம் மிகவும் சிறப்பாக ஓடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. விநியோகஸ்தர்கள், இந்தப் படத்தை அவங்க விருப்பப்பட்டால் வாங்கட்டும். வாங்காத ஏரியாக்களுக்கு நானே சொந்தமா படத்தை ரிலீஸ் பண்றேன்' என்று திடமான குரலில் கூறியிருக்கிறார் சிதம்பரம். இந்த விஷயத்தை விஜயகாந்த்தின் அப்போதைய அலுவலகமாக தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருந்த ரோகிணி ஹோட்டல் அறையின் வாசலில் அமர்ந்து விஜயகாந்த், இப்ராகிம் இராவுத்தர், வடலூர் சிதம்பரம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது நான் அருகில் அமர்ந்திருந்து கேட்டேன்.
'சட்டம் ஒரு இருட்டறை' தயாரிப்பில் இருந்தபோது, ஆங்கிலம் தெரியாத சிதம்பரத்தை தந்திரமாக ஏமாற்றி, அந்தக் கதை வேற்று மொழிகளில் படமாகும்போது, அந்த உரிமை முழுக்க முழுக்க தனக்கு மட்டுமே என்றும், படத் தயாரிப்பாளர் சிதம்பரத்திற்கு அதில் சிறிதளவு கூட பங்கு கிடையாது என்றும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு, சிதம்பரத்தின் கையெழுத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கியிருக்கிறார். ஒப்பந்தத்தின் மதிப்பு தெரியாமல் சிதம்பரமும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஓடியதைத் தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் உரிமையை வாங்கி, படங்களைத் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். கன்னட, தெலுங்கு படங்களை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கியிருக்கிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ கதையை வேற்று மொழிகளுக்கு விற்றதன் மூலம் பல லட்சம் ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறார் சந்திரசேகர். அப்போதுதான் நயவஞ்சகமாக எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை ஏமாற்றிய விஷயத்தையே வடலூர் சிதம்பரம் புரிந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய படத்தை யார் யாரோ வேற்று மொழிகளில் எடுத்துக் கொண்டிருக்க, அதற்காக ஒரு பைசா கூட கிடைக்காமல் தான் எஸ்.ஏ.சந்திரசேகரின் குள்ளநரித்தனத்தால் ஏமாற்றப்பட்டு விட்டதை மனம் நொந்து பல முறை என்னிடம் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார் சிதம்பரம்.
‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தைத் தொடர்ந்து, கோமல்சுவாமிநாதன் 'செக்கு மாடுகள்' என்ற பெயரில் எழுதிய நாடகத்தை 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரில் வடலூர் சிதம்பரம் திரைப்படமாக தயாரித்தார். 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் தனக்கு வாழ்வு தந்த தயாரிப்பாளர் என்பதை மனதில் வைத்து, பணமே வாங்காமல் அந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்தார்.
தொடர்ந்து விஜயசாந்தியைக் கதாநாயகியாக வைத்து கே.விஜயன் இயக்கத்தில் 'நீறு பூத்த நெருப்பு' என்ற பெயரில் ஒரு படத்தை வடலூர் சிதம்பரம் தயாரித்தார். படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதில் சிதம்பரம் பல லட்சங்களை இழந்தார்.
அடுத்து மன்சூரலிகானைக் கதாநாயகனாகப் போட்டு 'ஜனா' என்ற படத்தை சிதம்பரம் தயாரித்தார். எட்டாயிரம் அடி படமாக்கப்பட்டுவிட்ட அந்தப் படம் பல பிரச்சினைகளால், அப்படியே நின்றுவிட்டது.
அதற்குப் பிறகு வடலூர் சிதம்பரம் படமெதுவும் எடுக்கவில்லை. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவருடைய 13 வயது மகள் எதிர்பாராத மரணத்தைத் தழுவ, மனக்கவலையில் மூழ்கிய சிதம்பரம் தன் மனைவி, மகனுடன் வளசரவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் ஒரு நாள் அவரை நான் தி.நகரில் பார்த்தேன். நரைத்துப்போன தாடியுடன் காட்சியளித்த சிதம்பரத்தைப் பார்த்தபோது, எனக்கு உண்டான கவலைக்கு அளவே இல்லை. இதற்கிடையில், சிதம்பரம் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த சேஷசாயி தொழிற்சாலை அதன் உரிமையாளர்களால் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வறுமையில் வாட ஆரம்பித்தார்கள். பலரின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. பலர் தற்கொலை செய்துக் கொண்டு மரணத்தைத் தழுவினர்.
இந்தச் சூழ்நிலையில் அந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த வடலூர் சிதம்பரம், அதற்காக ஒரு திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அந்தக் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கடந்த கால சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அவருடைய மகன் விஜய்யின் கால்ஷீட் கேட்டு சிதம்பரம் சென்றிருக்கிறார். ‘விஜய் படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் தருவதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறியிருக்கிறார் சந்திரசேகர். அந்த காலகட்டத்திலேயே அதே விஷயத்திற்காக விஜயகாந்தையும் சிதம்பரம் போய் பார்த்திருக்கிறார். அவரும் கையை விரித்துவிட்டார். தி.நகரில் நான் சிதம்பரத்தைச் சந்தித்தபோது, அவர் கூறி நான் தெரிந்து கொண்ட தகவல்களே இவை.
அதற்குப் பிறகு வருடங்கள் பல கடந்தோடிவிட்டன. எதிர்பாராத வகையில் வடலூரைச் சேர்ந்த ஒருவரை ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில் சந்தித்தேன். அவரிடம் வடலூர் சிதம்பரத்தைப் பற்றி கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்பே சிதம்பரம் மரணத்தைத் தழுவி விட்டார் என்பதையும், அவருடைய உடல் அடக்கம் சொந்த கிராமத்தில் நடந்தது என்பதையும் அவர் கூறி நான் தெரிந்து கொண்டேன். அந்தச் செய்தியை கேள்விப்பட்டதும், சில நிமிடங்களுக்கு என்னால் எதுவுமே பேச முடியவில்லை.
வடலூர் சிதம்பரத்தால் வளர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜயகாந்தும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தங்களின் வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்த அந்த மனிதரைச் சற்று கைகொடுத்து வாழ்க்கையில்
தூக்கிவிட்டிருக்கலாம் என்று அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், சிதம்பரமும் இன்று நல்ல நிலையில் இருந்திருப்பார். ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் படவுலகில் இருப்பவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாதோ?