நிர்வாண நிஜம் - Page 20
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
ரஜினியை வைத்து படமெடுத்த தயாரிப்பாளரின் கையில் இப்போது எதுவும் இல்லை!
சுரா
அழகன் தமிழ்மணி - திரைப்படம் மற்றும் மெகா தொலைக்காட்சித் தொடர்களின் முன்னணி தயாரிப்பாளர் இவர். அவரை எனக்கு 1979ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளில் ரிப்போர்ட்டராகப் பணியாற்றிய தமிழ்மணி நான் பார்க்கும்போது தி.நகர் மன்னா ரெட்டி தெருவில் ஒரு அலுவலகத்தை வைத்துக் கொண்டு, 'நயனதாரா' என்ற பெயரில் மாத நாவல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஜெயகாந்தன், சு.சமுத்திரம், சவீதா, ராஜேந்திரகுமார் என்று பலரும் அதில் நாவல்கள் எழுதினார்கள். நான் அதில் திரைப்பட விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தேன்.
ஒரு ஸ்கூட்டரில் தமிழ்மணியும் நானும் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திற்குச் சென்று கதாசிரியர் தூயவனுடன் பேசிக் கொண்டிருந்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த தாய்க்குப் பின் தாரம், தாயைக் காத்த தனயன், விவசாயி, தொழிலாளி, நல்ல நேரம் போன்ற பல படங்களைத் தயாரித்த தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திற்குள் நானா என்பதை நினைத்துப் பார்த்தபோது உடம்பெங்கும் சிலிர்த்தது.
ஒரு வருடம் நடந்த 'நயனதாரா' திடீரென்று நின்றுவிட, தமிழ்மணி 'சரணாலயம்' என்ற படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமன் தமிழ்மணிக்கு மிகவும் நெருக்கமானவர். கார்த்திக் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே, அவரை தமிழ்மணிக்கு நன்கு தெரியும். அதை வைத்து அகில இந்திய கார்த்திக் ரசிகர் மன்றத் தலைவராகச் சில வருடங்கள் தமிழ்மணி இருந்தார். நடிகை ஜீவிதாவிற்கு கால்ஷீட் பார்த்தார்.
திடீரென்று ஒரு நாள் படத் தயாரிப்பாளராகவும் தமிழ்மணி வடிவமெடுத்தார். அவர் தயாரித்த முதல் படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்.' தூயவனும் தமிழ்மணியும் சேர்ந்து அந்தப் படத்தைத் தயாரித்தார்கள். இன்று கதாநாயகியாக இருக்கும் மீனா குழந்தை நட்சத்திரமாக நடிப்பில் முத்திரை பதித்த படம். ரஜினிகாந்த் முக்கிய பாத்திரத்தில்- நடிகர் ரஜினிகாந்தாகவே படம் முழுக்க வருவார். கே.நட்ராஜ் படத்தை இயக்கினார். தமிழ்மணி தயாரிப்பாளராக வாழ்க்கையில் உயர்வு பெற்றிருப்பதைப் பார்த்து மனப்பூர்வமாக நான் சந்தோஷப்பட்டேன்.
அந்தப் படத்திற்குப் பிறகு தமிழ்மணி தான் மட்டும் தனியாக படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். அப்படித் தயாரான படம்தான் 'தர்மபத்தினி'. கார்த்திக்- ஜீவிதா இணைந்து நடித்த அந்தப் படத்தை அமீர்ஜான் இயக்கினார். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அந்தப் படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நடந்தது. அது- 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்ற தான் பாடி, இசையமைத்த பாடலுக்கு இளையராஜாவே வாயசைத்து நடித்ததுதான். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை இளையராஜா வேறு யாருக்குமே இன்றுவரை தந்ததில்லை.
கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து தமிழ்மணி அடுத்து தயாரித்த படம் 'சோலைக்குயில்'. இப்போது கார்த்திக்கின் மனைவியாக இருக்கும் ராகினிதான் அந்தப் படத்தின் கதாநாயகி.
தமிழ்மணி தயாரித்த அடுத்த படம் 'சித்திரைப் பூக்கள்'. வினோதினியை அதில் கதாநாயகியாக தமிழ்மணி அறிமுகப்படுத்தினார். பல வருடங்களுக்கு முன்பு கவியரசு கண்ணதாசனின் கீழ் தான் பத்திரிகையில் பணியாற்றிய விஷயத்தை ஞாபகத்தில் வைத்து, கவிஞரின் மகன் கண்மணி சுப்புவை அப்படத்தின் இயக்குநராக அமர்த்தினார். இளம் காதலர்களை வாழ்க்கையில் சேர்த்து வைக்கப் போராடும் முன்னாள் ராணுவ அதிகாரி பாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். அதில் இடம் பெற்ற 'மந்திரப்புன்னகை சிந்திடும் செல்வங்களே' என்ற கண்மணி சுப்பு எழுதிய பாடலை மறக்கத்தான் முடியுமா?
'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மட்டுமே தமிழ்மணி ஏதோ கொஞ்சம் சம்பாதித்தார். மீதி எந்தப் படத்திலும் அவருக்கு லாபம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. 'சித்திரைப் பூக்கள்' படத்தின் பிரிண்டுகளை விநியோகஸ்தர்களுக்குக் கொடுத்துவிட்டு, ஜெமினி லேப்பில் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் இரவு பத்து மணிக்கு நின்றிருந்த தமிழ்மணி இப்போதும் பசுமையாக என் ஞாபகத்தில் நிற்கிறார்.
'சித்திரைப் பூக்கள்' படத்திற்குப் பிறகு தமிழ்மணி படத்துறையில் இல்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு அவரை டி.வி. உலகம் இரு கரம் நீட்டி வரவேற்றது. 'மங்கை' என்ற மெகா தொடரை அவர் தயாரித்தார். சன் டி.வி.யில் தொடர்ந்து 400 நாட்கள் அத்தொடர் ஒளிபரப்பானது. மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தொடர் அது. பெண்கள் தங்கள் வேலையைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு அத்தொடரைப் பார்த்தனர்.
அதற்குப் பிறகு 'அம்மா' என்ற தொடரை தமிழ்மணி தயாரித்தார். அது சன் டி.வி.யில் 390 நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு 'அம்பிகை' என்ற மெகா தொடரையும், ‘அவளும் பெண்தானே’ என்ற மெகா தொடரையும் தமிழ்மணி சன் டி.வி.க்காக தயாரித்தார். மங்கை, அம்மா, அம்பிகை, அவளும் பெண்தானே ஆகிய தொடர்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜெமினி டி.வி.யில் ஒளிபரப்பாயின. இது தவிர நேரடியாக தெலுங்கில் 'அத்தம்மா' என்ற மெகா தொடரை தமிழ் மணி தயாரிக்க, 400 நாட்கள் அது ஜெமினி டி.வி.யில் ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு தெலுங்கில் 'அம்மாக்கோசம்' என்ற பெயரில் ஒரு மெகா தொடரை தமிழ்மணி தயாரிக்க, அது ஜெமினி டி.வி.யில் ஒளிபரப்பானது.
சினிமா துறையில் தமிழ்மணி சம்பாதிக்கவில்லை. ஆனால், சின்னத்திரை தமிழ்மணிக்கு பணத்தையும், புகழையும் நிறையவே அள்ளித் தந்தது. படங்கள் தயாரித்ததன் மூலம் உண்டான கடன்கள் அனைத்தையும் டி.வி. தொடர்கள் தயாரித்து தமிழ்மணி அடைத்தார். டி.வி. தொடர் தயாரிப்பாளர் என்ற முறையில் மிகவும் பிஸியாக இருந்த தமிழ்மணி அப்படியே இருந்திருக்கக் கூடாதா? பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தை இயக்கிய ஆர்.பாலுவை இயக்குநராகப் போட்டு ‘அன்பே உன் வசம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தமிழ்மணி தயாரிக்க ஆரம்பித்தார். புது கதாநாயகன் ஒருவர் அறிமுகமான அப்படத்தின் கதாநாயகியாக ‘சொல்ல மறந்த கதை’ ரதி நடித்தார். தினா இசையமைத்தார். அப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மொரீஷியஸ், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தமிழ்மணி நன்கு செலவு செய்து அப்படத்தைத் தயாரித்தார். அப்படம் தயாரிப்பில் இருந்தபோது, படத்தின் கதை என்ன என்று எத்தனையோ முறை தமிழ்மணி இயக்குநர் பாலுவிடம் கேட்பார். தமிழ்மணி அவ்வாறு கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும், ‘அண்ணே, இதை கதையாக கூறுவது என்பது முடியாத விஷயம். இது ஒரு ஃபீலிங்... உணர மட்டுமே முடியும்’ என்பார் பாலு. படம் முடிவடையும் நிலையை எட்டியபோது, ஒருநாள் தமிழ்மணி என்னிடம் ‘சுரா, பாலுவிடம் நான் படத்தின் கதை என்னவென்று கேட்கும்போதெல்லாம் அவன் கதையை கூற மாட்டேன் என்கிறான். இது ஒரு ஃபீலிங்... உணர மட்டுமே முடியும் என்று கூறுகிறான். நீயாவது அவனிடம் கதை என்ன என்று கேட்டு, என்னிடம் சொல்லு’ என்று கூறினார். படம் முடிவடையும் நிலையில், அப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் தன் படத்தின் கதை என்ன என்று கூட தெரியாத நிலையில் இருந்த அவலத்தை எங்கு போய் கூறுவது?
நான் இயக்குநர் பாலுவிடம் கதை என்ன என்று கேட்டதற்கு, தமிழ்மணியிடம் கூறிய அதே பதிலைத்தான் என்னிடமும் கூறினார். நான் அதை தமிழ்மணியிடம் கூறினேன்.
‘அன்பே உன் வசம்’ படம் முடிவடைந்து, ஒரு ஏரியா கூட வியாபாரம் ஆகவில்லை. தமிழ்மணியே தன் சொந்தப் பொறுப்பில் தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டார். படம் ஒரே ஒரு வாரம்தான் ஓடியது. அந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் தமிழ்மணிக்கு மிகப் பெரிய அடி கிடைத்தது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அவருக்கு நஷ்டமானது. பல லட்ச ரூபாய்களுக்கு அவர் கடனாளியாக ஆனார். படங்களைத் தயாரித்து பல லட்சங்களை இழந்து, அதை சின்னத்திரையில் தொடர்களைத் தயாரித்ததன் மூலம் சம்பாதித்து, மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி, சம்பாதித்த பணம் முழுவதையும் இழந்ததோடு மட்டுமில்லாமல் கடனாளியாகவும் ஆன தமிழ்மணியின் தலை விதியை நினைத்து நம்மால் வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும்? பட்ட கடன்களை அடைப்பதற்காக, தான் சென்னையில் வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்த நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலை தமிழ்மணிக்கு உண்டானது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்மணி, ‘மீன் கொத்தி’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் கதாநாயகனாக தமிழ்மணியின் மகன் அஜய் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.
பெரிய திரையில் இழந்ததை சின்னத் திரையில் சம்பாதித்து, மீண்டும் அதை பெரிய திரையில் இழந்து, தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்மணியின் தொடர் முயற்சி எனக்கு மிகவும் பிடிக்கிறது. இந்த முறையாவது அவர் இழந்த பணத்தைச் சம்பாதித்து நல்ல நிலைக்கு திரும்பவும் வர வேண்டும் என்று ஒரு நெருங்கிய நண்பன் என்ற முறையில் நான் விரும்புகிறேன்.
* * *
தொடரும்...