நிர்வாண நிஜம் - Page 19
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9005
அதன் விளைவாக மிகப் பெரிய கடனாளியாக ஆன சந்திரபாபு ஆசை ஆசையாக கட்டிய பிரம்மாண்டமான பங்களா ஏலம் விடப்பட்டது. கார், வீடு, பணம், நகைகள், சொத்து- எல்லாவற்றையும் சந்திரபாபு இழந்தார். தன் அண்ணன்படும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரின் தங்கை தற்கொலை செய்து கொண்டார். சந்திரபாபுவின் திருமண வாழ்க்கை முதலிரவு நாளன்றே முற்றுப்புள்ளி ஆனது. வாழ்க்கையே சோகமாகிப் போன சந்திரபாபு என்ற சாதனை புரிந்த நடிகர், கடைசியில் எதுமே இல்லாமல் ஒரு நாள் தன் உயிரை விட்டார்.
ராதாரவி 'தை மாசம் பூவாசம்' என்றொரு படத்தைத் தயாரித்தார். இது தவிர, வேறு இரண்டு படங்களையும் தயாரித்தார். ஒரு படம் கூட உருப்படியாக ஓடவில்லை. சொந்தத்தில் படங்களை எடுத்ததால் பல லட்சங்கள் கடனாளியாக அவர் ஆனார். வங்கியில் வாங்கியிருந்த கடனுக்கு அவரின் தந்தை எம்.ஆர்.ராதா பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தி சம்பாதித்து தேனாம்பேட்டையில் கட்டிய வீடு சில வருடங்களுக்கு முன்னால் ஏலத்தில் போக இருந்தது. பின்னர் அந்த வீடு ஏலத்தில் போகாத அளவில், ராதாரவி பார்த்துக் கொண்டார்.
மலேஷியா வாசுதேவன் படங்களுக்குப் பாடல்கள் பாடி சிறிது சிறிதாக தான் சம்பாதித்த பணத்தில் 'நீ சிரித்தால் தீபாவளி' என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அவரே படத்தை இயக்கினார். தான் படமொன்றைத் தயாரித்து, இயக்கப் போவதாக அவர் என்னிடம் ஒருமுறை கூறியபோது, ‘பட உலகத்தின் சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கவனமாக நடந்து கொள்ளுங்கள்’ என்று நான் கூறினேன். அவர் இயக்கிய அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதன் விளைவாக தன்னுடைய சொந்த வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை மலேஷியா வாசுதேவனுக்கு உண்டானது. வாடகை வீட்டில் குடியிருந்த அவரை பலமுறை நான் சந்தித்திருக்கிறேன். சொந்தப் படம் எடுப்பதற்கு முன்னால் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் காணப்பட்ட வாசு, மிகுந்த கவலை நிறைந்த முகத்துடனும், எதையோ பறி கொடுத்ததைப் போன்ற முக பாவனையுடனும் எப்போதும் காணப்படுவார். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
கடைசி காலங்களில் சாலிகிராமத்திலிருந்த தன்னுடைய வீட்டில் இருபத்து நான்கு மணி நேரமும் காவி உடை அணிந்து, சாய்பாபாவை வழிபட்டுக் கொண்டிருந்த மலேஷியா வாசுதேவனை நான் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். தன் மகன் யுகேந்திரனை ஒரு முன்னணி நடிகராக கொண்டு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால், அவருடைய அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. சிவாஜி, ரஜினி, கமல் என்று பலருக்கும் பின்னணி குரல் கொடுத்து பாடல்களைப் பாடிய மலேஷியா வாசுதேவன், பல வருடங்கள் படவுலகத்தில் பிஸியான மனிதராக இருந்தும், இறுதி காலத்தில் அவருடைய சம்பாத்தியம் என்று பெரிய அளவில் எதுவும் இல்லை. சொந்தத்தில் படத்தைத் தயாரிக்காமல் இருந்திருந்தால், மலேஷியா வாசுதேவன் என்ற அந்த நல்ல மனிதர் இறுதி வரை சந்தோஷமாகவே இருந்திருப்பார். மனக் கவலைகளுடனும், உடல் நலம் பாதிக்கப்பட்டும் அவர் மரணத்தைத் தழுவியபோது அவருக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
சொந்தத்தில் படத்தைத் தயாரிக்கும் ஆசை மெல்லிசை மன்னரையும் விட்டு வைக்கவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவரின் மகன்கள் சொந்தப் படங்கள் எடுக்கிறேன் என்று அழித்தார்கள். எம்.எஸ்.வி. உழைத்து சம்பாதித்த பணம் கண் மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போனது. எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா போன்ற பல படங்களுக்கு கதை- வசனம் எழுதியிருக்கும் பாலமுருகன் மாணிக்கத் தொட்டில், காம சாஸ்திரம் ஆகிய படங்களைச் சொந்தத்தில் தயாரித்தார். அந்தப் படங்கள் உண்டாக்கிய நஷ்டம் அவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சரிவை உண்டாக்கியது!
இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் 'முதல் பாடல்' என்ற பெயரில் சொந்தத்தில் ஒரு படத்தைத் தயாரித்தார். அது உண்டாக்கிய நஷ்டத்திலிருந்து மீண்டு வருவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. 'திரிசூலம்' படத்தை இயக்கிய கே.விஜயன் விஜயகாந்தை வைத்து 'தூரத்து இடி முழக்கம்' என்ற படத்தைத் தயாரித்தார். அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும். அந்தப் படத்தால் உண்டான கடனுக்கு பல வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வட்டி கட்டிக் கொண்டிருந்தார் விஜயன். நடிகர் மோகன் சொந்தத்தில் ஒரு படத்தைத் தயாரித்தார். அதில் மிகப் பெரிய தொகை அவருக்கு நஷ்டம். சன் டி.வி.யில் தொடர்கள் தயாரித்து படத்தால் உண்டான பள்ளத்தை அவர் சரி செய்தார்.
நடிகர் தேங்காய் சீனிவாசன் சிவாஜியைக் கதாநாயகனாகப் போட்டு 'கிருஷ்ணன் வந்தான்' என்ற படத்தைத் தயாரித்தார். அதில் அவருக்கு மிகப் பெரிய நஷ்டம். படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே முழுமையாக அவரால் பணம் தர முடியவில்லை. கவியரசு கண்ணதாசன் பல படங்களைச் சொந்தத்தில் தயாரித்திருக்கிறார். சில படங்கள் ஓடியிருக்கின்றன. பல படங்கள் ஓடாமல் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. சில படங்கள் பாதியிலேயே நின்று விட்டிருக்கின்றன. பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, இப்படித்தான் இழந்தார் கவிஞர். சரத்குமார் 'கண் சிமிட்டும் நேரம்', 'மிஸ்டர் கார்த்திக்', 'ரகசிய போலீஸ்' ஆகிய படங்களைத் தயாரித்தார். முதல் படத்தில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. அடுத்த இரண்டு படங்களிலும் அவருக்கு சில கோடிகள் நஷ்டம்!
பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் பாண்டியராஜனை வைத்து 'மாப்பிள்ளை மனசு பூப்போல' என்றொரு படத்தைத் தயாரித்தார். அதை முழுமையாக முடித்து விற்பனை செய்வதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே! அதை வார்த்தைகளால் கூற முடியாது. கவிஞர் மு.மேத்தா 'தென்றல் வரும் தெரு' என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அதை அவரால் விநியோகம் செய்யவே முடியவில்லை. பலவித சிரமங்களையும் தாண்டி வெளியிட்ட போது, படம் ஒரு வாரம்தான் ஓடியது. மு.மேத்தாவிற்கு அந்தப் படத்தைச் சொந்தத்தில் தயாரித்தது ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்தது.
நடிகை மனோரமா கே.எஸ்.அதியமானை இயக்குநராகப் போட்டு 'தூரத்துச் சொந்தம்' என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார். பல வருடங்கள் அவர் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஒரு மிகப் பெரிய தொகையை அதில் இழந்தார். 'சில்க்' ஸ்மிதா உடலைக் காட்டி சம்பாதித்த பல லட்சங்களையும் சொந்தத்தில் படமெடுக்கிறேன் என்ற முழுமையாக இழந்ததுதான் மிச்சம்! கடைசியில் அவர் மரணத்தைத் தழுவும் போது, அவர் கையில் எதுவுமே இல்லை.
படவுலகை 'கனவுலகம்' என்று தெரியாமலா சொன்னார்கள்? சொந்தத்தில் படமெடுக்க வந்து பல லட்சங்களை இழந்த எத்தனை நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களை நாம் பார்த்திருக்கிறோம்! கஷ்டப்பட்டு அவர்கள் சம்பாதித்த பணம் இப்படி காணாமல் போவதைப் பார்ப்பது என்பது உண்மையிலேயே தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றுதான். அதற்காக யாருமே தயாரிப்பாளராக மாறக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். தாராளமாக மாறலாம். ஆனால், அப்படி தயாரிப்பாளர்களாக மாறுபவர்களில் வெற்றி பெறுபவர்கள் சிலரே. தோல்வியடைந்தவர்கள்தான் அதிகம். அதற்குக் காரணம்-
'நல்ல ஒரு கலைஞன் எந்தக் காலத்திலும் வெற்றிகரமான ஒரு வியாபாரியாக ஆகவே முடியாது என்பதுதான்’- இந்த உண்மை இங்கு எவ்வளவு பேருக்குப் புரியும்!