நிர்வாண நிஜம் - Page 15
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9005
எம்.ஜி.ஆர். ஆட்டோ வாங்கிக் கொடுத்தார்! இயக்குநர் ஓட்டினார்!
சுரா
கார்வண்ணன்- எனக்கு இவர் அறிமுகமானது 1983ஆம் ஆண்டில். பிரபு கதாநாயகனாக நடித்த 'பிரியமுடன் பிரபு' என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக படவுலகிற்குள் நுழைந்திருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் கங்கைகொண்டான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் கார்வண்ணனும், நானும் ஒரு நாள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கார்வண்ணன் தான் இயக்கும் 'பாலம்' என்ற படத்தின் கதையை என்னிடம் கூறினார். கதையைக் கேட்டு நான் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். இரண்டு மணி நேரம் ஒரு பாலத்திலேயே நடக்கக் கூடிய கதையா? கார்வண்ணனை நான் மனம் திறந்து பாராட்டினேன். 'தமிழ்ப்பட உலகில் இது ஒரு மாறுபட்ட முயற்சி. நிச்சயம் படம் வெற்றி பெறும். உங்களுக்கு அருமையான ஒரு பெயரை இந்தப் படம் பெற்றுத் தரும்' என்றேன் நான். கார்வண்ணன் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார்.
அடக்கமே உருவமாக இருக்கும் கார்வண்ணனைப் பார்த்து நான் பல நேரங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்- எவ்வளவோ உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவரால் எப்படி இந்த அளவிற்கு அமைதியான மனிதராக இருக்க முடிகிறது என்று நான் வியந்திருக்கிறேன்.
'பாலம்' படம் திரைக்கு வந்தது. தமிழ்ப் படவுலகில் ஒரு வித்தியாசமான முயற்சி என்று பத்திரிகைகளும், மக்களும் பாராட்டினார்கள். கார்வண்ணனைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு பத்திரிகைகள் எழுதின. 'யார் இந்த கார்வண்ணன்?' என்று கேள்வி கேட்டன. முதல் படத்திலேயே மிகச் சிறந்த ஒரு பெயரைப் பெற்றார் கார்வண்ணன். தான் இயக்கிய ‘பாலம்’ படத்தில் ராகேஷ் என்ற புதுமுக நடிகர் ஒருவரை அறிமுகம் செய்திருந்தார் கார்வண்ணன். படத்தின் 14வது ரீலில் ஒரு ரகசியத்தை காவல்துறைக்கு தெரிவிக்கும் கதாபாத்திரத்தில் அந்த நடிகர் வருவார். அவர் வேறு யாருமல்ல- பின்னர் எத்தனையோ படங்களை தன்னுடைய 'ரோஜா கம்பென்ஸ்' பட நிறுவனத்தின் மூலம் தயாரித்த காஜாமைதீன்தான்.
மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கார்வண்ணனின் வீட்டிற்கு எப்போது போனாலும், பழைய ஆட்டோ ஒன்று நிரந்தரமாக வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருக்கும். அது பற்றி கேட்டதற்கு கார்வண்ணன் ‘அது எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்த ஆட்டோ' என்றார். நந்தனம் கலைக் கல்லூரியில் எம்.ஏ. முடித்துவிட்டு வேலை எதுவுமே கிடைக்காமல் ஒரு நாள் டிரைவ்- இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு முன்னால் இருக்கும் கத்தீடரல் சாலையில் கார்வண்ணன் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கார்வண்ணனைப் பார்த்தவுடன், தன்னுடைய வாகனத்தை நிறுத்தும்படி கூறியிருக்கிறார். (இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நந்தனம் கலைக் கல்லூரியில் ஒரு விழா நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கியிருக்கிறார். அங்கு எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த கார்வண்ணன், எம்.ஜி.ஆரின் கையில் பரிசு பெற்றிருக்கிறார். அப்போது தான் பார்த்த மாணவரான கார்வண்ணனின் முகத்தை பசுமையாக தன் ஞாபகத்தில் வைத்திருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.) தன்னுடைய உதவியாளரிடம் ‘அதோ... அங்கே சாலையில் ஓரத்தில் நடந்து செல்லும் அந்த இளைஞனை நான் அழைத்ததாக கூறி, இங்கே அழைத்து வா’ என்றிருக்கிறார். கார்வண்ணன் என்ன என்று புரியாமல் பதைபதைப்புடன் எம்.ஜி.ஆரை நோக்கி ஓடிவந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். தன்னுடைய காரின் பின் இருக்கையில் கார்வண்ணனை அமரும்படி கூறியிருக்கிறார். கார் கிளம்ப, போய்க் கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர். கார்வண்ணனிடம் ‘நீ இப்ப என்ன வேலை செய்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். கார்வண்ணன் ‘நான் இப்போது எந்த வேலையும் செய்யவில்லை. வேலை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர். ‘சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். கார்வண்ணன் ‘என் தந்தை வேலை செய்து எனக்கு சாப்பாடு போடுகிறார்’ என்று கூறியிருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, தன் விரலை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு ‘இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். கார்வண்ணன் பதில் எதுவுமே கூறாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். இதற்குள் கார் கடற்கரை சாலையை அடைந்துவிட்டது. கார்வண்ணனின் முகவரியை தன் உதவியாளர்களிடம் தரும்படி எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். கார்வண்ணன் முகவரியை கொடுத்ததும், அவரை அங்கேயே இறங்கக் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு, கார்வண்ணனின் இல்லத்தைத் தேடி ஒரு ஆட்டோ வந்திருக்கிறது. அவருக்காக எம்.ஜி.ஆர். அந்த ஆட்டோவை ஏற்பாடு செய்திருப்பதாக அப்போது அமைச்சராக இருந்த முத்துச்சாமி கூறியிருக்கிறார். கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்த யாரோ ஒரு மாணவனின் முகத்தை ஞாபகத்தில் வைத்திருந்து, அவனுடைய சிரமங்களைத் தெரிந்து, அவன் இதை வைத்தாவது ஒரு வருமானத்தை தேடிக் கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஒரு ஆட்டோவை தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சாதரணமாக யாரும் நினைத்துப் பார்க்கக்கூடிய ஒன்றா இது?
அந்த ஆட்டோவை சொந்தத்தில் ஓட்டிக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் கார்வண்ணன். எம்.ஜி.ஆரின் உருவம் கண்ணாடியில் வரையப்பட்ட கோலத்துடன் இருக்கும் அந்த ஆட்டோவை நான் பலமுறை மரியாதையுடன் பார்த்திருக்கிறேன்.
'பாலம்' படத்தைத் தொடர்ந்து கார்வண்ணன் இயக்கிய படம் 'புதிய காற்று'. முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் மூலம் காஜாமைதீனைத் தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தினார் கார்வண்ணன். 'புதிய காற்று' கதையை கார்வண்ணன் சொன்னார். லஞ்சம் வாங்குவதை வெறுக்கக் கூடிய கதாநாயகன். சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் அவன். யார் யார் லஞ்சம் வாங்குவதாகத் தெரிகிறதோ, அவர்களை அவன் தீர்த்துக் கட்டுகிறான். இதன் விளைவாக யாருமே லஞ்சம் வாங்க பயப்படுகிறார்கள். ஏன் லஞ்சம் வாங்க வேண்டும், வீணாக கதாநாயகனால் கொல்லப்பட வேண்டும் என்று நடுங்கி லஞ்சம் வாங்குவதையே அவர்கள் நிறுத்தி விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு புதிய காற்றை எப்படி அவன் நாட்டில் வீசும்படி செய்கிறான் என்பதுதான் 'புதிய காற்று' படத்தின் கதை. படம் திரைக்கு வந்து நன்றாக ஓடியது. அதில் முதலமைச்சராக நடித்த ஞானவேல் பின்னர் முன்னணி படத் தயாரிப்பாளராக மாறினார். கார்வண்ணனின் அந்த ‘புதிய காற்று’ படத்தைத்தான் பின்னர் இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசனைக் கதாநாயகனாகப் போட்டு 'இந்தியன்' படமாக 'உல்டா' பண்ணி எடுத்தார் என்பது வேறு விஷயம்.
அடுத்து கார்வண்ணன் இயக்கிய படம் 'மூன்றாம்படி' காமராஜரைப் போல் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு முதலமைச்சர்.... அதனால் பணம் எதுவும் சம்பாதிக்க முடியாத ஒரு அமைச்சர் அந்தப் பெரியவரைக் கொன்றுவிட்டு, தான் முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்து ஒரு நாள் வெடிகுண்டு விபத்தின் மூலம் முதலமைச்சரைக் கொன்றும் விடுகிறார். சி.பி.ஐ. எப்படி குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறது என்பதுதான் கதை. நல்ல கதையாக இருந்தாலும், என்ன காரணமோ தெரியவில்லை- அந்தப் படம் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது.
கார்வண்ணன் இயக்கிய நான்காவது படம் 'தொண்டன்'. முரளி கதாநாயகனாக நடித்த படம் அது. குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் சட்டம். சம்பளம் குறைவாக தந்து குழந்தைகளிடம் வேலை வாங்கும் தொழிலதிபர்களுக்கு எதிராக ஒரு சமூக சேவகர் போராடுகிறார். அதனால் கடுப்பாகி விடுகின்றனர் தொழிலதிபர்கள். அந்த சமூக சேவகரைத் தீர்த்துக் கட்ட திட்டமிடுகின்றனர். அவர்களின் முயற்சி பெற்றி பெற்றதா இல்லையா? என்பதுதான் 'தொண்டன்' படத்தின் கதை. சமூக சேவகராக நடித்தவர் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். கலைஞர், திருநாவுக்கரசு, வாழப்பாடி ராமமூர்த்தி, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் கூட படத்தில் வருவார்கள். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அதற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கடந்தோடி விட்டன. கார்வண்ணன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. வித்தியாசமான ரசனை கொண்ட அந்த இளைஞர் ஏன் இப்படி அமைதியாக ஒதுங்கி இருக்கிறார் என்று நான் மனதில் கவலைப்பட்டேன்.
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் கார்வண்ணன் என்னைக் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். நான் போய் அவரைப் பார்த்தேன். புதிதாக படமொன்றை இயக்கப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். புதிதாக இயக்க இருக்கும் படத்தின் பெயர் 'ரிமோட்' என்றார். படத்தின் கதையைச் சொன்னார். ஏ-ஒன் ஆக இருந்தது. மாறுபட்ட பாணியில் அமைந்த கதை. நல்ல விஷயத்திற்காக போராடும் முற்போக்கு சிந்தனை கொண்ட சில இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய கோரிக்கைகள் அரசாங்கத்திடமிருந்து நிறைவேற வேண்டும் என்பதற்காக, குற்றாலத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் கடத்திக் கொண்டு போய் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அவர்கள் இருக்கும்படி செய்கிறார்கள். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அந்தப் பயணிகளை விடுவிப்பதாக அரசாங்கத்திடம் கூறுகிறார்கள். அந்த இடத்திற்கு காவல்துறை, ஊடகம் அனைத்தும் வந்து குழுமி விடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? இதுதான் ‘ரிமோட்’ படத்தின் கதை. அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் நெப்போலியனிடம் நான் போய் பேசினேன். நெப்போலியன் ஒப்புக் கொண்டு நடித்தார். தொடர்ந்து மழை பெய்த நாட்களின்போது, அந்தப் படம் திரைக்கு வந்து மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.
பல வருட இடைவெளிக்குப் பிறகு கார்வண்ணன் தானே கதாநாயகனாக நடித்து ‘பாய்ச்சல்’ என்ற ஒரு படத்தை இயக்கி, திரைக்கு கொண்டுவர தயார் நிலையில் இருக்கிறார். யாருமே தொடுவதற்கு அஞ்சக்கூடிய ஒரு கதைக் கருவை அவர் அந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார். அதை கையாள்வதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும்!
தான் இயக்கிய படம் வெற்றி பெருகிறதோ இல்லையோ, தொடர்ந்து மாறுபட்ட கதைகளை மட்டுமே கையாண்டு, தன் திறமையை மட்டுமே நம்பி படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் கார்வண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதே நேரத்தில்- அவருக்குக் கிடைக்க வேண்டிய புகழ், உரிய அளவிற்கு படவுலகில் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது.