நிர்வாண நிஜம் - Page 16
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9005
சரத்குமார் அறிமுகப்படுத்திய இயக்குனர் இப்படியா இறக்க வேண்டும்?
சுரா
கலைவாணன் கண்ணதாசன்- கவியரசு கண்ணதாசனின் மகன் இவர். 1980-ஆம் ஆண்டில் திரைக்கு வந்த 'அன்புள்ள அத்தான்' என்ற படத்தில் கலைவாணன் கதாநாயகனாக நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷோபா. அந்தப் படத்தை இயக்கியவர் கண்ணதாசனின் இன்னொரு மகனான கண்மணி சுப்பு. படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அந்தப் படம் திரைக்கு வந்தபோது கவிஞர் உயிருடன் இருந்தார். ‘அன்புள்ள அத்தான்’ வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், கலைவாணன் ஒரு நடிகராக படவுலகில் பவனி வந்திருப்பார். படம் ஓடாததால், அவர் ஜி.என்.ரங்கராஜனிடம் உதவி இயக்குனராகப் போய் சேர்ந்துவிட்டார்.
ஜி.என்.ரங்கராஜனிடம் பல படங்களில் அவர் இணை இயக்குநராகப் பணியாற்றினார். அந்தக் கால கட்டத்தில் கவிஞர் மரணத்தைத் தழுவிவிட்டார். பிரபு கதாநாயகனாக நடித்த 'முத்து எங்கள் சொத்து' என்ற படத்தை ஜி.என்.ரங்கராஜன் இயக்க, அதில் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றினார் கலைவாணன். அந்தப் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வந்திருந்தார் சரத்குமார். அதற்கு முன்பும் கூட சரத்குமார் சிறிய பாத்திரங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். 'இப்படியே எவ்வளவு நாட்களுக்குத்தான் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பது? நாமே சொந்தத்தில் ஒரு படத்தைத் தயாரித்தால்தான் சரியாக இருக்கும்’ என்ற முடிவுக்கு அப்போது சரத்குமார் வந்திருந்தார். அங்கு கலைவாணனும் சரத்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
பல படங்களில் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றிய கலைவாணன், தனித்து ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளரைத் தேடி அலைந்து கொண்டிருந்த நேரமது. 'எனக்குச் சொந்தத்தில் படத்தைத் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில்தான் தற்போது நான் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். நான் தயாரிக்கும் படத்திற்கு நீங்கள்தான் டைரக்டர்' என்று சரத்குமார் கலைவாணனிடம் கூறினார்.
சொன்னதோடு நிற்காமல், அதைச் செயல் வடிவத்திலும் காட்டினார் சரத்குமார். தன் மகள் வரலட்சுமியின் பெயரில் 'வரலட்சுமி கிரியேஷன்ஸ்' என்று ஆரம்பிக்கப்பட்ட, சரத்குமாருக்குச் சொந்தமான பட நிறுவனத்தின் முதல் படம் 'கண் சிமிட்டும் நேரம்'. கார்த்திக்- அம்பிகா இணைந்து அந்தப் படத்தில் நடித்தார்கள். அம்பிகாவைக் கொலை செய்ய முயலும் இளைஞனாக கார்த்திக் நடிக்க, அதைத் தடுப்பதற்காக படம் முழுக்கப் போராடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் சரத்குமார் நடித்தார். சரத்குமார், கலைவாணன் இருவருமே எனக்கு அப்போதுதான் அறிமுகமானார்கள். இது நடந்தது 1988-ஆம் ஆண்டில்.
நல்ல உயரம், அகலமான நெற்றி, ஆஜானுபாகுவான தோற்றம், கவிஞரின் முகச் சாயல், கட்டைக் குரல், சிரித்த முகம், ஜாலியான பேச்சு- இதுதான் கலைவாணன். முதல் தடவை பார்த்தபோதே எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. முதல் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்த அந்தப் படம் பணப் பிரச்சினையால் அதற்கு மேல் வளராமல் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் அப்படியே நின்று விட்டது. படப்பிடிப்பு அதற்கு மேல் நடக்காமல் நின்று போனது குறித்து கலைவாணன் மிகவும் வருத்தப்படுவார். கவலையை மறந்து என்னிடம் சிரித்த முகத்துடன் அவர் பேசினாலும், மனதிற்குள் அவரிடம் இருந்த கவலையை என்னால் உணர முடிந்தது. ஒரு நாள் ஒரு மூட்டை நிறைய தேங்காய்களைக் கொண்டு வந்து அலுவலகத்திற்கு அருகில் இருந்த கோவிலில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரே எறிந்து உடைத்துக் கொண்டிருந்தார். சுமார் நூறு தேங்காய்கள் இருக்கும். 'என்ன இவ்வளவு தேங்காய்களை உடைச்சுக்கிட்டு இருக்கிறீங்க? ஏதாவது வேண்டுதலா?' என்று நான் கேட்டதற்கு, 'படத்தின் வேலைகள் அப்படியே நின்று விட்டன. அது மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேங்காய்களை உடைக்கிறேன்' என்றார் கலைவாணன்.
கோவிலில் தேங்காய் உடைத்ததாலோ என்னவோ, 'கண் சிமிட்டும் நேரம்' மீண்டும் வளர ஆரம்பித்தது. கார்த்திக்கின் கால்ஷீட் குளறுபடிகளையெல்லாம் மீறி அந்தப் படம் ஒரு நாள் முடிந்தது. கிட்டத்தட்ட ஒன்றேகால் ஆண்டுகள் அந்தப் படம் தயாரிப்பில் இருந்தது. படம் திரைக்கு வந்து நன்றாக ஓடியது. படத்தில் கலைவாணனுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
தொடர்ந்து சரத்குமாரின் அடுத்த சொந்தப் படமான 'மிஸ்டர் கார்த்திக்'கையும் (நேபாளத்தில் படப்பிடிப்பு), 'திருப்புமுனை' என்ற படத்தையும் கலைவாணன் இயக்கினார். இரண்டுமே படு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. முதல் படத்தில் இருந்த அக்கறையும், தொழில் பக்தியும், ஈடுபாடும் இல்லாமல் போய் ஒட்டுமொத்தமாக ஒரு மெத்தனப் போக்கு வந்து ஒட்டிக் கொண்டதாலேயே கலைவாணன் தோல்வியைத் தழுவியிருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை கலைவாணனிடம் பலமுறை நான் கூறவும் செய்திருக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'வா அருகில் வா' என்ற படத்தை கலைவாணன் இயக்கினார். ஒரு ஆங்கிலப் படத்தின் கதையை அடியொற்றி உருவாக்கப்பட்ட படம். ஒரு பொம்மை எப்படி நயவஞ்சகர்களைப் பழி வாங்குகிறது என்பதை ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் கலைவாணன் இயக்கி இருந்தார்.
'வா அருகில் வா' திரைக்கு வந்து நன்றாக ஓடியது. தொடர்ந்து அதே நிறுவனம் 'ரேகா எல்.கே.ஜி.' என்ற பெயரில் கலைவாணன் இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பித்தது. பேபி ஷாம்லி நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதே நேரத்தில் தன் சொந்தப் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து 'வெள்ளையம்மா' என்ற பெயரில் ஒரு படத்திற்கு பூஜை போட்டார் கலைவாணன். ரேகா எல்.கே.ஜி., வெள்ளையம்மா- இரண்டு படங்களுமே அதற்குமேல் வளராமலே நின்று விட்டன.
மாதங்கள் கடந்தோடின. கலைவாணன் இயக்கிய படங்களின் வேலைகள் நடக்காததால், அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. அதற்குப் பிறகு நான் கலைவாணனைப் பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகவில்லை. அவருக்குத் தெரிந்த நண்பர்களிடம் அவ்வப்போது அவரைப் பற்றி விசாரிப்பேன். 'முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்' என்று அவர்கள் கூறுவார்கள்.
இந்த நிலையில் ஒரு நாள் எனக்கு அந்த அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. கலைவாணன் 'ஹார்ட் அட்டாக்'கில் இறந்துவிட்டார் என்பதுதான் அது. நாற்பது வயது கூட ஆகாத நிலையில் ஒரு மனிதன் இறப்பது என்றால்...? பிணமாகப் படுத்திருந்த கலைவாணனை நான் சென்று பார்த்தேன். கலைவாணன் இறந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்று, அவர் நெருப்பில் எரிவது வரை பார்த்துவிட்டு நான் திரும்பி வந்தேன்.
தன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கலைவாணன் ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்திருந்தார். அந்தக் குடும்ப வாழ்க்கையில் கலைவாணனுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி உண்டாகவில்லை. தினமும் சண்டை, சச்சரவு, கருத்து வேறுபாடு, மோதல்கள்...
எங்களிடம் சிரித்துப் பேசினாலும், தினமும் தன் மனதிற்குள் கலைவாணன் அழுது கொண்டே இருந்திருக்கிறார். இது எதுவுமே எங்களுக்குத் தெரியாது. கசப்பான மண வாழ்க்கையும், படவுலகில் சந்தித்த ஏமாற்றங்களும் புகழின் உச்சிக்குப் போயிருக்க வேண்டிய ஒரு அருமையான கலைஞனின், நல்ல மனம் கொண்ட ஒரு இனிய நண்பரின் வாழ்க்கையைக் குறைந்த வயதில் பறித்துச் சென்றுவிட்டன என்பதை நினைக்கும்போது இப்போதும் கூட என் மனதில் இனம் புரியாத ஒரு வேதனை உண்டாகிறது.