நிர்வாண நிஜம் - Page 13
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9005
பிரபுவை கோழிப்பண்ணை அதிபராக்கிய இலக்கியவாதி!
சுரா
கங்கைகொண்டான்- இலக்கியவாதிகள் மத்தியில் பிரபலமான பெயர் இது. 'வானம்பாடி' கவிஞர்கள் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவர் எனக்கு அறிமுகமானது 1981ஆம் ஆண்டில். அப்போது அவர் 'கல்லுக்குள் ஈரம்' ராமநாதனைக் கதாநாயகனாகப் போட்டு 'கண்ணீரில் எழுதாதே' என்ற பெயரில் படமொன்றை இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் கதாநாயகியாக அப்போது பிஸியாக இருந்த வனிதா நடிகை நடித்தார். 'கண்ணீரில் எழுதாதே' திரைக்கு வந்து, மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.
வருடங்கள் கடந்தோடின. 1984ஆம் ஆண்டாக இருக்குமென்ற நினைக்கிறேன். கங்கைகொண்டானும், நானும் மீண்டும் சந்தித்தோம். 'பிரியமுடன் பிரபு' என்ற பெயரில் பிரபுவைக் கதாநாயகனாகப் போட்டு ஒரு படத்தை இயக்க இருப்பதாகச் சொன்னார். 'கோழி கூவுது' படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததன் காரணமாக- பிரபு நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பிரபுவின் கால்ஷீட் கங்கைகொண்டானுக்கு எப்படி கிடைத்தது என்று உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். பிரபலமான பல இயக்குநர்களும் பிரபுவின் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், பிரபுவை எப்படி கங்கைகொண்டான் மயக்கி கால்ஷீட் வாங்கினார் என்று நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
நான் அவரின் அலுவலகத்திற்குப் போகும் நேரங்களில், அவரின் நண்பரும் அசோசியேட் டைரக்டருமான ராஜேந்திரகுமார், கவிஞர் புவியரசு (இவர்தான் 'பிரியமுடன் பிரபு' படத்திற்கு வசனகர்த்தா) ஆகியோரும் கங்கைகொண்டானுடன் இருப்பார்கள். நாங்கள் அனைவரும் அமர்ந்து இலக்கிய விஷயங்கள் பலவற்றையும் பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். நான் அப்போது நிறைய மலையாள இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். அதை மனம் திறந்து பாராட்டுவார் கங்கை கொண்டான்.
'பிரியமுடன் பிரபு' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நாமக்கல்லில் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் என்பதால், படத்தின் கதாநாயகன் கோழிப் பண்ணையின் உரிமையாளர் என்றும், 24 மணி நேரமும் கோழிகளுடனே பொழுதைக் கழிப்பவர் என்றும் கதை பண்ணி வைத்திருந்தார் கங்கைகொண்டான். இது போதாதென்று- கங்கை அமரன் இசையமைத்த அந்தப் படத்தில் 'கூவுது காலை நேரம் கோழி' என்று கோழியைப் பற்றி ஒரு பாடல் காட்சி வேறு இருந்தது.
முழுப் படமும் முடிந்தது. பார்த்தவர்களுடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தில் கதையே இல்லை. ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை வைத்து கொண்டு, இரண்டே கால் மணி நேரம் ஒப்பேற்றி வைத்திருந்தார் கங்கைகொண்டான். படத்தைப் பார்த்தபோது எனக்கு கங்கைகொண்டான் மீது கோபம் உண்டானது. 'பிரபுவின் கால்ஷீட் கிடைத்தது எவ்வளவு பெரிய விஷயம்! அதை கங்கை கொண்டான் கொஞ்சம் கூட சீரியஸே இல்லாமல், இப்படி வீணாக்கி விட்டாரே!' என்று வருத்தப்பட்டேன். பிரபு கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் அந்தப் படத்தின் அனைத்து ஏரியாக்களும், தயாரிப்பில் இருந்தபோதே விற்பனை ஆகிவிட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பல லட்சங்களை இழக்கப் போவது உறுதி என்பது படத்தைப் பார்த்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது. படம் திரைக்கு வந்த பிறகு, உண்மையிலேயே அதுதான் நடந்தது. படம் இரண்டு வாரம் கூட ஓடவில்லை.
ஒரு வருடம் கடந்தோடியது. கங்கைகொண்டானிடமிருந்து அழைப்பு வந்தது. கன்னடப் படமொன்றைத் தமிழில் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். அந்தப் படத்தில் கார்த்திக்கைக் கதாநாயகனாகப் போட எண்ணியிருப்பதாக அவர் கூறினார். அப்போது கார்த்திக் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கார்த்திக் பார்ப்பதற்காக, ஒரு நாள் இரவு 10 மணிக்கு அவரின் வீட்டிற்கு அருகிலேயே இருந்த ‘காதம்பரி’ ப்ரிவ்யூ தியோட்டரில் அந்த கன்னடப் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. நாங்கள் பலரும் படத்தைப் பார்த்தோம். எங்கள் யாருக்கும் படம் பிடிக்கவில்லை. படம் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவிற்கு ‘போராக’ இருந்தது. கார்த்திக் நிச்சயமாக படத்தை ஒத்துக் கொள்ள மாட்டார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், கங்கைகொண்டானின் நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை- கார்த்திக் அந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டார்.
கார்த்திக் நடித்த அந்தப் படத்தை 'நேருக்கு நேர்' என்ற பெயரில் கங்கை கொண்டான் இயக்கினார். ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்குப் பிறகு படம் வளராமல் நின்று விட்டது.
அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து, கங்கை கொண்டான் புதிய படமொன்றை இயக்கும் வேலையில் இறங்கினார். படத்தின் பெயர் 'அடிமை விலங்கு'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரோஜா தேவி அந்தப் படத்தில் முக்கிய பார்த்திரத்தில் நடித்தார். நாமக்கல்லில் நடைபெற்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு நானும் சென்றிருந்தேன். 'அன்பே வா' பாணியில் தலையில் கர்ச்சீப் கட்டியவாறு சரோஜாதேவி வர, அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் திரள, சரோஜாதேவி அதைப் பார்த்து மனம் நெகிழ... உண்மையிலேயே அது ஒரு புதிய அனுபவம்தான்!
இருபத்தைந்து நாட்கள் 'அடிமை விலங்கு' படப்பிடிப்பு நாமக்கல்லில் நடைபெற்றது. அதற்குப் பிறகு பொருளாதாரப் பிரச்சினைகளால் அந்தப் படம் மாதங்கள் பல கடந்தும் வளரவே இல்லை. கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டருக்கு எதிரில் ஒரு தெருவில் இருந்த கங்கைகொண்டானின் அலுவலகத்தில் ஒரு நாள் நான் அவரைப் பார்த்தேன். ஏழெட்டு இளைஞர்கள் சூழ அவர் அமர்ந்திருந்தார். 'ஃபைனான்ஸ் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். தயாரானவுடன் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்' என்றார் கங்கைகொண்டான். நான் சொந்த விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு, ஐந்து நாட்களில் திரும்பி வந்தேன்.
சென்னை மண்ணில் கால் வைத்ததும், எனக்குக் கிடைத்த அதிர்ச்சியான செய்தி- கங்கைகொண்டான் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்பதுதான்! ஐந்து நாட்களுக்கு முன்னால் சிரித்த முகத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்த கங்கை கொண்டான் இறந்துவிட்டாரா? என்னால் நம்பவே முடியவில்லை.
படவுலகிற்குள் நுழைந்து தன்னுடைய முத்திரை என்று எதையும் பதிக்காமலே இந்த உலகைவிட்டு நீங்கிவிட்ட இலக்கியவாதியும் கவிஞரும், ஓவியருமான கங்கைகொண்டானை இப்போது நினைத்தாலும், என் மனதில் அளவற்ற வருத்தம் உண்டாகும்.